டி ஆர் பாலுவும் பச்சைத் தமிழர்தான். ப.சிதம்பரமும் பச்சைத் தமிழர்தான். வைகுண்டராஜன், பி ஆர் பி, வாசன், நடராஜன்.... இப்படி ஏராளமான பச்சைத் தமிழர்கள் பெரு முதலாளிகளாகவும் அதிகாரம் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். மத்திய மாநில உள்துறை வெளியுறவுத்துறை உயர் பதவிகளில் ஏராளமான பச்சைத் தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு தமிழன் என்ற உணர்வு 5% வந்தாலே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும். இன்றைக்கு தமிழ்நாட்டு வணிகம் நாடார்கள் கையிலே இருக்கிறது. பலமான ஊடகங்களும் அவர்கள் கையிலே இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் வராத இன உணர்வு ஏழைகளிடமும்; குடும்பத்தைக் காக்க போராடுபவர்களிடமும் மட்டும்தான் வரவைக்க வேண்டும் என்பதில் பயனில்லை.
பொதுவாக பணக்காரர்களுக்கும் முதலாளிகளுக்கும் ஜாதியில்லை, இனமில்லை, மொழி பிரச்சினையில்லை. இதில் நலன் இருந்தாலொழிய அவன் எதன் பின்னாலும் நிற்பதில்லை.
இலங்கையில் இனப் பிரச்சினை இருக்கிறது. இந்தியாவில் அது இல்லை. அது செயற்கையாக வரவைக்கப் படுகிறது. இங்கு இனப் பிரச்சினை தீவிரமானால்தான் பலருக்கும் சவுகரியம். உச்ச நீதிமன்றம் மட்டுமல்லாது இன்று இந்தியாவின் பல உயர் அதிகார பீடங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் கைவசம் உள்ளது. அவர்கள் இல்லாத இடமும் அவர்களின் தீவிர அடிமைகளிடம் உள்ளது. இதை மோதி மாய்ப்பது அவ்வளவு எளிமையானதல்ல.
நீதிபதிகளே கேவலமாக இருக்கும் நாடு எந்த லட்சணத்தில் இருக்கும்? இன வெறியால் ஆகப்போவது ஒன்றுமில்லை. இறுதியில் உள்நாட்டு யுத்தம்தான். புலிகளுடையது இனவெறி அல்ல. இனவெறிக்கு எதிரான போராட்ட நெறி. ஆனால் பிரபாகரன் ஏதோ இனவெறி தலைவனைப் போல இங்கே சித்தரிக்கப் படுகிறார்.
இனங்கள் மோதிக்கொள்வதில் பெரு முதலாளிகளுக்கு லாபம் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் எல்லா இனங்களும் தங்களுக்குள் மோதிக்கொள்ளாமல் இந்திய தேசியத்திற்கு எதிராக அணிதிரட்டுவதே பயன்மிக்கது. ஆனால் உளவுத்துறை அவ்வளவு சுலபத்தில் இதை நடக்கவிடாது. எல்லா இனங்களும் தங்களின் எல்லா பிரச்சினைக்கும் இன ஆதிக்கம்தான் காரணம் என்று திசை திருப்புவதும்கூட அதன் செயல்திட்டம்தான். கன்னட விவசாயிகளும் தமிழக விவசாயிகளும் எப்போதும் மோதுவதுதான் அரசியல்வாதிகளுக்கு லாபம். இது இனப்பகை அல்ல. பிழைப்புவாத தேர்தல் அரசியலின் நிழல்தன்மை. எந்தப் பிரச்சினை என்றாலும் இங்கு இப்படித்தான் இருக்க முடியும். மக்களை நேசிக்கும் தலைவர்களும் அமைப்புகளும் இல்லை. எல்லாமே அடையாளப்பூர்வமாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கும் மேலாக 500 ரூபாய் கொடுத்தால் யோசிக்காமல் வாக்களிக்கும் தமிழர்கள் இருக்கும்வரையில் நம் பிரச்சினைகளுக்கு வேறு யாரும் காரணமல்ல.
தனக்கு ஒரு ஒளிவட்டம் வேண்டும் என்பதற்காகவே இங்கு எல்லோராலும் அரசியல் நடத்தப்படுகிறது.
லாபமீட்டும் குறிக்கோள், ஆதாயம் இவைகளை மட்டுமே மையப்படுத்தி உலகம் இயங்குகிறது. இதில் இந்தியாவும் சரி, ஞானம் போதிக்கும் ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தாவும் சரி, யாருமே விதிவிலக்கல்ல.
முதலாளிகளின்; பணக்காரர்களின்; ஆதிக்க வகுப்பினரின் குடும்ப மகிழ்ச்சிக்காக இந்த உலகம் படைக்கப்பட்டுள்ளது. இன ஆதிக்கம் எல்லாமும் இதனுள் அடக்கம்தான்.
சமூக அநீதி என்ற ஒன்றின் அடிப்படையில் மக்களைத் திரட்டி போராட முனையாதவரையில் எல்லா அறிவும்கூட அக்கிரமக்காரர்களுக்கு சாமரம்தான்.
அவரவர் முன் ஜென்ம கர்மவினையே எல்லா துயரங்களுக்கும் காரணம். எல்லாம் கர்மாபலனே.
"நவகிரக சாந்தி பூஜை" (!....) ஒன்றே ஒரே வழி.
கிரகங்கள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. கிரகங்கள் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது.
எல்லா மக்களுக்கும் தலைமையேற்று வழி நடத்திச் செல்லும் ஒரு சிறந்த தமிழராக நாம் நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
உணர்ச்சிவசப் படுவதை தவிர்த்துவிட்டு, நிரந்தரமாக இப்பிரச்சினைகள் ஒழிய தொலை நோக்கோடு நாம் செயல்பட திட்டமிட வேண்டும்.
No comments:
Post a Comment