5.9.23

வெற்றிவேல் முருகன் ஜி

 உங்க கொள்கை என்ன ஜி?

கொள்கையா? அப்டின்னா?
அனைத்து பொதுமக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் என்னென்ன செயல்திட்டம் வெச்சிருக்கீங்க?
வட இந்திய மக்களுக்கு ராமன் ஜி
கேரள மக்களுக்கு ஐயப்பன் ஜி
தமிழக மக்களுக்கு முருகன் ஜி
மராட்டி மக்களுக்கு கணேஷ் ஜி
அவ்ளோதான் ஜி. இதுபோதாதாங்கிறன். இன்னும் இவங்களுக்கு என்ன வேணும்? எதுக்குங்கிறன்? இவாயெல்லாம் பொறக்குறதே நமக்கு சேவை செய்யத்தானே..! எதுக்கு கொள்கை மண்ணாங்கட்டி?

30.07.2020

சிறப்பு உயிரிகள்...

 


"இதில் நகைச்சுவை என்னவென்றால்..., சுய தேடல் இல்லாத; சுயமாய் எதையும் தேடிப் படிக்கவும் சிந்திக்கவும் திறனில்லாத; தன்னைச்சுற்றி வாழ்வோருக்கோ அல்லது பிறருக்கோ 10 காசுக்கும் பயனில்லாமல் பூமிக்கு பாரமாய் வாழும் சிறப்பு உயிரிகளும் பெரியார் எதிர்ப்பு பதிவுகளை பதிவதும் பகிர்வதும்தான்"

30.07.2020

தி.மு.க -விற்கு நன்றி...

ஹிந்துக்களின் பாதுகாவலர்கள் நாங்கள்தான் என்று சொல்லிக்கொண்டு கந்த சஷ்டிக்கு மட்டும் நீலி அக்கறைகாட்டி நடித்து இடப்பங்கீடு விவகாரத்தில் பல லட்சம் ஹிந்து இளைஞர்களின் எதிர்காலத்திற்கு வேட்டு வைத்தது பார்ப்பனிய ஜனதா கட்சி. அவாள்களின் சூழ்ச்சி புரியாமல் பல இணைய அறிவாளிகளும் திமுக-வை சாடிக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு அந்த திமுக-தான் பல லட்சம் பிற்படுத்தப்பட்ட ஹிந்து இளைஞர்களின் எதிர்காலத்தை போராடி பாதுகாத்துள்ளது.

அரைகுறையாக சமூகநீதி வரலாறு தெரிந்துகொண்டு திமுக-வை விமர்சிப்பதே அரசியல் மேதைத்தனம் என்று உளறும் சகோதரர்கள் & சங்கிகள் இந்திய பார்ப்பன அரசியலை சற்றாவது கூர்ந்து கவனித்து விமர்சித்தால் நம் அனைவருக்கும் நல்லது.

28.07.2020


கடவுள் பிறந்த கதை

மனிதன் கடவுளைப் படைக்கும் போது அவனுக்கு கடவுள் பற்றி நிறைய சந்தேகங்கள் எழுந்தன. கடவுள்தான் இந்தப் பெரிய தட்டையான உலகத்தை படைத்தாரா? அவர் ஒருவரே இத்தனையும் படைத்திருப்பாரா? என்றெல்லாம் சிந்தித்தான்.

கடவுள் அவ்வளவு பெரிய அப்பாடக்கராக எல்லாம் இருக்க முடியாது, எப்படியும் உதவிக்கு நிறைய கடவுள்கள் இருக்கும் என்கின்ற முடிவுக்கு வந்தான்.
பிறப்புக்கு, இறப்புக்கு, நெருப்புக்கு, காற்றுக்கு, நீருக்கு என்று கடவுள்களை உருவாக்கிக் கொண்டே வந்தவனுக்கு குழப்பம் தீரவில்லை. இவ்வளவு பெரிய நீரை, சுழன்று அடிக்கும் காற்றை படைக்கின்ற அளவிற்கு இந்தக் கடவுள்களுக்கு சக்தி இருக்க முடியுமா என்று சிந்தித்தான். இரண்டு கைகளையும், ஒரு தலையையும் வைத்துக் கொண்டு கடவுள்களால் இவற்றை செய்து விட முடியுமா?
மனிதனிடம் அதற்கும் ஒரு பதில் இருந்தது. 'கடவுளே! உன்னிடம் உள்ள இரண்டு கைகளையும் ஒரு தலையையும் வைத்துக் கொண்டு இவற்றை எல்லாம் உன்னால் செய்ய முடியாது, நான் உனக்கு நான்கு தலைகள், ஆறு தலைகள் உருவாக்கித் தருகிறேன், பத்துக் கைகள், நூறு கைகள் தருகிறேன. அவற்றை வைத்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்' என்று ஒரே போடாக போட்டான்.
கடவுளுக்கு பசிக்கும் என்று சாப்பாடு கொடுத்தான். கலியாணம் கட்டி வைத்தான்.வீடு கட்டிக் கொடுத்தான். ஊரை சுற்றிக் காட்டினான். எல்லாம் செய்தும் கடவுள் பற்றிய மனிதனின் சந்தேகங்கள் தீரவே இல்லை.
கடவுளுக்கு பூசை செய்கின்ற போதும், தனக்குத்தான் பூசை நடக்கிறது என்பது கடவுளுக்கு புரியாமல் போய் விடுமோ என்கின்ற அச்சம் மனிதனுக்கு உண்டு. அதனால் கடவுளுக்கு தான் வைத்த அத்தனை பெயரையும் சொல்லிக் கூப்பிடுவான். அதை செய்தவனே, இதை செய்தவனே என்றெல்லாம் வர்ணிப்பான். கடவுளின் வலிமை மீது அவ்வளவு சந்தேகம் மனிதனுக்கு.
மனிதனுக்கு நோய் வந்தால், அவன் கடவுளை வேண்டுகின்ற முறையே அட்டகாசமானது. உடல்நலத்தை காப்பாற்று என்று சொன்னால், கடவுளுக்கு விளங்குமா என்றும் அவனுக்கு சந்தேகம். தன்னுடைய உடலில் உள்ள அத்தனை பாகங்களையும் சொல்லி, அவற்றை எல்லாம் காக்க வேண்டும் என்று கடவுளை வேண்டினால்தான் அவனுக்கு நிம்மதியாக இருக்கும். எல்லாம் வல்ல கடவுளால் தன்னுடைய உடலில் எங்கே பிரச்சனை என்பதை கண்டுபிடிக்க முடியாது என்று அவன் உறுதியாக நம்புகிறான்.
மனிதன் இத்தனை சந்தேகங்களுடன் கடவுள்களை படைத்ததை விட, அவற்றை படைக்காமலேயே விட்டிருக்கலாம்.

- வி. சபேசன்

19.07.2020

சனாதனம் காக்கலாமா?

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடந்துகொண்டிருந்தது. உறவின்போது பல சிறுமிகள் இறந்துபோயினர். இதனை தடுக்க 12 வயதுக்குட்பட்ட பெண்களுடன் உறவுகொண்டால் தண்டனை என்று சட்டம் கொண்டு வந்தது ஆங்கில அரசு.

இது எங்கள் மத நம்பிக்கை, எங்கள் மனம் புண்படுகிறது என்று இந்த சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார்கள் அப்போதைய மத மூடர் கும்பல்கள்.
மூடர்கள் மனம் புண்படுகிறது என்று ஆங்கிலேயர்கள் அச்சட்டத்தை தவிர்த்திருந்தால் படிப்படியாக இன்றைக்கான மாற்றம் வந்திருக்குமா?

19.07.2020

வெற்றிவேல் வீரவேல்...!

"எல்லாத்துக்கும் திமுக-தான் காரணம். பல்லாயிரம் வருஷத்துக்கு முன்னாடி இந்து மத கடவுள்களை பத்தி கேவலமா ஆபாசமா கதை எழுதி அத புராணங்கள்னு நம்பவெச்சி இந்து மதத்தைக் கெடுத்து வெச்சதே இந்தத் திமுக-தான். 4 வர்ணத்தை பிரிக்கச் சொல்லி பொறப்புலயே ஜாதி ஏற்றத்தாழ்வு கற்பிச்சதும் இந்தத் திமுக-தான். இந்து மதத்தில் இருக்கிற அநியாயங்கள் எல்லாத்துக்கும் காரணமும் இந்த திமுக-தான். வேற யாரும் காரணம் இல்ல. இப்போ இந்துக்களாகிய நீங்கள் என்ன பண்ணனும்னா நான் சொல்றத அப்படியே நம்பனும். உண்மை என்ன ஏதுன்னு எங்கேயும் ஆதாரம் தேடி படிச்சி யோசிக்கக்கூடாது. முருகன் தமிழ் கடவுள்னு சொல்றாங்களே, அப்ப முருகனுக்கு ஏன் சமஸ்கிருதத்தில் மந்திரம் படிக்கிறாங்க? கோயில்ல தமிழ்ல வழிபாடு செய்ய பார்ப்பானுங்க ஏன் எதுக்குறாங்க? பிஜேபி ஏன் மக்கள் பிரச்சினைக்கெல்லாம் போராடாம இந்த மாதிரி விஷயங்கள்ல மட்டும் தூண்டிவிடுது? இப்படியெல்லாம் முட்டாள்தனமா கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது. என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்குதா இல்லையா? அப்ப, நான் சொல்றதை நம்பித்தான் ஆகணும். இப்ப நான் சொல்றது புரிஞ்சுதா உனக்கு?..."

17.07.2020

இந்து தர்மம் காப்போம்...

வழக்கு எல்லாம் போடமாட்டாராம். நேரடியா ஒரே வெட்டுதானாம். கறுப்பர் கூட்டத்திற்கு இயக்குநர் களஞ்சியம் எச்சரிக்கை விடுக்கிறார். எதனால் என்றால் கந்தர் கவசத்தை அவமதித்துவிட்டார்களாம். அதென்ன "கந்தர் கவசம்"? அதன்பேர் "கந்தர் சஷ்டி கவசம்"தானே. ஏன் சஷ்டி என்பதை சொல்ல மறுக்கிறார்? தமிழ் கடவுளுக்கு சஷ்டியை நுழைத்தது யார், ஏன்? இவர்கள் மீதெல்லாம் அண்ணன் கோபப்பட்டால் இன்னும் என்னாகுமோ?

இந்து தர்மம் காப்போம்...!

மேல் ஜாதிகளுக்கு கூழைக்கும்பிடு போடுவோம்...!!

சஷ்டி என்போம்...
அனுபூதி என்போம்...
சம்ஹாரம் என்போம்...
முருகன் தமிழ்க் கடவுள் என்போம்...
இதைப்பற்றி மூச்சுவிடோம்.
வெற்றிவேல் வீரவேல்...!!

16.07.2020

எனது மதம் இயற்கை

நான் நமது முன்னோர் வழிபாட்டையும் எளிய மக்களின் வழிபாட்டையும் மதிக்கிறேன். இதுகூட அவர்கள் நமக்காக உழைத்துவிட்டுச் சென்றவர்கள் என்ற நன்றிக் கடன் பொருட்டுதான்; அவர்கள் நம்மைக் காப்பார்கள் என்ற நம்பிக்கையில் அல்ல. கடவுளின் பேரால் அரசியல் செய்கிறவர்களை எதிர்க்கிறேன். நம்பிக்கைகளில் எந்தப் புனிதமும் எனக்கில்லை. இயற்கையின் மர்மங்களை இயன்றவரையில் அறிந்துகொள்ள ஆர்வம் கொள்கிறேன். இயற்கையைப் புரிந்துகொள்ள மதங்கள் அறிவுக்கு இடையூறு. இயற்கை யாரையும் நட்போ பகையோ பாராட்டுவதில்லை. அது மனிதர்களைப் பொருட்படுத்தவில்லை. இன்னும் 2000 வருடம் கழித்து பிறக்கப்போகும் மனிதர்களையும் இந்த மந்திரங்கள்தான் காப்பாற்றும் என்று சொல்வதும் நம்புவதும் மிக வேடிக்கையானது. இயற்கையின் புரியாத மர்மங்களால் கடவுள் கருத்து ஆழமாய் உயிர்பெறுகிறது. அதற்கும் உங்களுக்கு நேரடித் தொடர்புகொள்ள ஏதும் தடையில்லை. யார் உதவியும் தேவையுமில்லை. அதன்பேரால் ஏமாற்றும் சுரண்டலும் நடக்கிறபோது எதிர்ப்பதில் யாருக்கு என்ன பிரச்சினை?

15.07.2020

அதெப்படி எங்கள் நம்பிக்கையை விமர்சிக்கலாம்?

கோயிலில் கொலை செய்யலாம். காமலீலை புரியலாம். அனுராதா ரமணனை படுக்கைக்கு அழைக்கலாம். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கலாம். சிதம்பரம் கோயிலில் பெரிய புராணத்தை தமிழில் பாடினால் உதைக்கலாம். கும்பிட வரும் பெண்களை கன்னத்தில் ஓங்கி அடிக்கலாம். தமிழர் கடவுள்கள் மீது பல ஒழுக்கமற்ற கதைகள் பூசி வேறு கடவுளாக்கலாம். கருவறைக்குள் யாரும் வரக்கூடாது என்று வழக்காடலாம். வசதிக்கேற்ப அர்ச்சனைச் சீட்டு விற்கலாம். சிறப்புக் கட்டணம் என கோயிலில் வணிகம் செய்யலாம். ஜாதிதான் மதத்தின் பலம் எனப் பேசிப்பேசி ஜாதிப்படிநிலை நீர்த்துப் போகாதபடி கட்டிக்காக்கலாம். தமிழில் குடமுழுக்கு கூடாது என்று திமிராகப் பேசலாம். இதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு அக்கறையில்லை.

தமிழ் முருகனை ஸுப்ரமண்யன் ஆக்கிவிட்டு அவாள்கள்தான் பூஜை செய்ய முடியும் என்ற நிலையைப்பற்றி எப்போதும் பொங்காமல் கிடந்தவர்கள் இப்போது கொதிப்பதெல்லாம் நல்லதுதான். திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடக்கும் அநீதிகளை, பணம் ஏமாற்றுப் பேர்வழிகளை எதிர்த்து யாரேனும் ஒரு போராட்டமாவது நடத்துவார்களா? அங்கு காணாமல்போன முருகனின் நகைகளுக்காக ஒருவராவது குரல் கொடுத்தார்களா? பக்தர்களின் பொங்கல் எல்லாம் போலியானது என்று அவாள்கள் எல்லோருக்கும் தெரியும். இதையெல்லாம் தெரிந்துதான் அவாள்கள் இன்னும் கோயில்களில் தமிழுக்கு எதிராக வேலைபார்த்துக் கொண்டிருக்கின்றனர். கருவறையிலேயே காமலீலை புரிந்துகொண்டிருக்கின்றனர்.
சிதம்பரம் கோயிலில் தமிழில் பதிகம் பாடிய ஆறுமுக நாவலரை தீட்சிதர்கள் அடித்தபோது ஒருவரும் குரல் கொடுக்காமல் போனது எப்படி?
அதெப்படி எங்கள் நம்பிக்கையை விமர்சிக்கலாம் என்று கேட்பவர்கள் இன்றைக்கு உலகில் நாம் நம்பிக்கொண்டிருக்கும் பலவும் இப்படி யாரோ ஒருவர் உண்மையைப் பேசியதால் படிப்படியாக மாறிவந்ததுதான் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

"விமர்சனங்களால் ஏதேனும் ஆட்டம் காணுகிறது என்றால் அங்கு உண்மை வேறு ஏதோ என்பதையாவது புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்"


15.07.2020

விமர்சனத்தால் அலறும் மதங்கள்

மதம் வேறு...
மதவெறி வேறு...

ஆன்மீகம் வேறு...
கடவுள் நம்பிக்கை வேறு...
இயற்கை பற்றிய புரிதல் வேறு...

இது விளங்காத குழப்பவாதிகளும் அரசியல் ஆதாயவாதிகளும்தான் விமர்சனங்களுக்கு அஞ்சுகிறார்கள். உண்மை இருக்கிறவர்கள் விமர்சனங்களை கண்டுகொள்ள மாட்டார்கள். சரியான விளக்கம் கொடுப்பார்கள். மத ஜாதி அமைப்புகள் நடத்திக்கொண்டு கடவுளுக்கு குடை பிடிப்பவர்களை மட்டும் சற்று அமைதியாகக் கவனித்துப் பாருங்கள், ஒரு எளிய உண்மை புரியவரும்.

நீங்கள் இந்துவாக இருக்கலாம். கடவுளை வணங்கலாம். இது உங்கள் உரிமை. ஆனால் கடவுள் என்றால் ஏதோ எளிய மனிதனால் நெருங்க இயலாத விஷயம் போல் அதை பூதாகாரப்படுத்தியும் மந்திரம் பூஜை சடங்கு என்று பயங்காட்டியும் பாமர மக்களை தொடர்ந்து அதிலிருந்து அந்நியப்படுத்தி சிலர் வைத்திருப்பதையும் அறிவுள்ள ஒருவர் எப்படி விமர்சிக்காமல் கடந்துபோக இயலும்? ஒன்றை விமர்சிக்கும்போதுதான் அதைக்கடந்து நீங்கள் இன்னுமுள்ள மெய்யை நெருங்கிச் செல்ல வழி ஏற்படும். பொய்கள் இருந்தால் உடையட்டும். இதில் நமக்கென்ன நட்டம். யாரோ ஒருவர் விமர்சித்துவிட்டால் வீழ்ந்துவிடும் அளவுக்கா மதம் பலவீனமாக இருக்கிறது? விமர்சனங்களை அனுமதித்தால்தான் வளர்ச்சியும் மாற்றமும். இஸ்லாம் இப்படி விமர்சனத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் உலகின் பலமூளையில் வாழும் மக்கள் இன்னும் மாற்றத்தை அனுபவித்திருப்பார்கள்.

14.07.2020

எத்தனை காலத்திற்கு இப்படியே ...?

"நாங்கள் நம்பும் புராணங்கள் ஆபாசமாய் இருந்தால் அதைப்பற்றி எங்களுக்குப் பிரச்சினை இல்லை. யார் இதை இப்படி எதற்காக எழுதினார்கள்? என யோசிக்கமாட்டோம். அது எங்களை எவ்வளவு கேவலப்படுத்தினாலும் கவலையில்லை. ஆனால் அதை ஆபாசம் என்று யாரேனும் வெளிப்படையாக விமர்சித்தால் கொதிப்போம், சீறுவோம். ஆபாசத்துடன் கதை கட்டியவர்களிடமும் தொடர்ந்து அதை பரப்பிக் கொண்டிருப்பவர்களிடமும் கண்டும் காணாமல் பொத்திக்கொண்டு இருப்போம்"

கடவுளை விமர்சிக்கிறார்கள் என்று பொங்கும் மத அமைப்புகள் அதே மதத்தில் கல்வி கற்கவும் வேலையின்றியும் வாழப் போராடும் அடித்தட்டு எளியமக்களின் நலன்களுக்காக பொங்குவதும் போராடுவதுமில்லையே ஏன்?

படிச்சி என்ன பண்ணப்போறோம்? மேல் ஜாதிக்காரனுங்களுக்கு சேவகம் செய்யத்தானே நாம பொறக்குறோம்...
ஹிந்து தர்மம் காப்போம்...!!!
வெற்றிவேல் வீரவேல்...!!!

ச்சே... இந்தத் திக ஆளுங்க இருக்கிறதால எவ்ளோ தொந்தரவு?


14.07.2020


மதத்தை நம்பும் தமிழர்களுக்கு எச்சரிக்கை தேவை

"ஊருக்குள்ள ஸ்பேனர் புடிக்கிறவனெல்லாம் மெக்கானிக்குன்னு சொல்லிக்கிறான்" என்று திருவாளர் கவுண்டமணி சொன்னது இந்தமாதிரி நச்சுக்களையும் சேர்த்துதான். ஒரு சொட்டு விஷம் ஒரு குடம் பாலையும் கெடுக்கும். எப்போதும் விஷம் வீரியம் இழப்பதில்லை. மதத்தை நம்பும் தமிழர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இந்த பீஹாரி பார்ப்பானிடத்தில்.


14.07.2020

தமிழர்களின் மொழியறிவு

 தமிழர்களின் மொழியறிவு எத்தகையது? ஒரு உதாரணம் பாரீர்...

⚜
*"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (#மறைத்து_வைத்தல்) என்பது பொருளாகும்.*
⚜
*தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.*
⚜
*மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான்.*
⚜
*சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.*
⚜
*சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது.*
⚜
*'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.*
⚜
*நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது.*
⚜
*வேதத்தைக் கூட " மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.*
⚜
*கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மறைவாக விரைவாக செல்வதால் வே'கம் எனப் படுகிறது.*
⚜
*உண்மைத்தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது வே'டம்.*
⚜
*கசப்பு வெளியே தெரியாமல் உள்ளே மறைவாக இருப்பின் அது வே'ம்பு.*
⚜
*ஈராயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மொழி என்றால் சும்மாவா? தமிழைக் கொண்டாடுவோம்.*

09.07.2020

மழை இறங்கும் காட்சி...

 


பக்கத்து ஊரில் மழை இறங்கும் காட்சி...



05.07.2020

நம்பிக்கையை இழக்கலாமா?

மருத்துவம் மக்களைக் காக்கிறது. மந்திரங்கள் யாரைக் காக்கிறது? சர்வ வல்லமை படைத்த வேதங்களும் மந்திரங்களும் அறிந்த அறிவாளிகள் இப்படி கொரோனோவிற்கும் உயிருக்கும் பயந்து 'சௌகர்யமாய்' தங்களை ஜீவிக்கவைக்கும் மந்திரங்களின் வேதங்களின் மீதான நம்பிக்கையை இழக்கலாமா?


30.06.2020

நான் போலிசில்ல பொறுக்கி... - இயக்குநர் ஹரி


விசாரணைகளின்போது இதுவரையில் ஏராளமான அப்பாவிகள் நாடெங்கும் போலிசாரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இதெல்லாம் இயக்குநர் ஹரிக்கு இதுவரையில் தெரியாமல் இருந்ததா? அல்லது சாத்தான் குளத்தில்தான் முதன் முறையாக காவல்துறை கொடூரம் நிகழ்த்தியதா? அல்லது இதுவரையில் இல்லாமல் காவல்துறையின் உண்மை முகம் இப்போதுதான் ஹரி அவர்களுக்கு தெரியவந்ததா? அல்லது பெருமைப்படுத்தி படம் எடுத்ததாக அவர் சொன்னதெல்லாம் பொய்யா?

28.06.2020

வி.பி.சிங் - இந்திய வரலாற்றில் என்றைக்கும் ஒளிரும் நட்சத்திரம்

ஆண்ட ஜாதிகள் என்று தங்களை தாங்களே பீற்றிக்கொள்ளும் இந்தியாவிலுள்ள எல்லா ஜாதி இந்துக்களுக்கும் இடஒதுக்கீடு கிடைத்த பின்னர்தான் தங்களுக்கான தகுதியை உணரும் கதவு திறந்தது. பிராமணர்களே உயர்ந்தவர்கள் என்ற அடிமை எண்ணம் இருக்கும் இந்துக்களே இன்னும் இடஒதுக்கீடு பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கின்றனர். அதே பிராமணர்கள்தான் இன்றும் இந்த ஜாதி இந்துக்கள் வளராதபடி பல்வேறுவகையில் கவனமாகக் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றனர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டுமென முதலில் குரல் கொடுத்தது அம்பேத்கர்தான். ஆண்ட ஜாதி இந்துக்களுக்கே இந்த நிலைமைதான் இந்தியாவில். ஆனால் இவர்களோ வரலாறு தெரியாமல்; பிராமண சூழ்ச்சி உணராமல் ஜாதிப்படிநிலையில் தங்களுக்குக் கீழுள்ள வலுவற்ற மக்களிடமே கம்பு சுற்றிக்கொண்டிருக்கின்றனர்.

வரலாற்று சிறப்புமிக்க மண்டல் குழுவின் அறிக்கையை துணிச்சலுடன் செயல்படுத்த திராவிட இயக்கமே பக்கபலமாக இருந்தது பலருக்கும் தெரியவில்லை.
வி.பி.சிங்... இந்திய வரலாற்றில் என்றைக்கும் நட்சத்திரம்.


25.06.2020

இப்படிக்கு கொரோனா வைரஸ்

 "குழந்தைகளுக்கு பள்ளிக்கூடமும் தேர்வும் அவசியமா?

- இப்படிக்கு
கொரோனா வைரஸ்

22.06.2020

அப்பாவின் அன்பு

"அம்மாவின் அன்பை அவர் இருக்கும்போது உணரலாம். அப்பாவின் அன்பை அவர் இல்லாதபோது முழுமையாக உணரலாம்"

22.06.2020

அரசியல் அதிகாரம்...?


எங்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமைகளை திட்டமிட்டு மறுக்கும் அரசு குறித்து கேள்வி எழுப்ப மாட்டோம். போராட சிந்திக்க மாட்டோம். தலைமுறை தலைமுறையாய் ஆடு மாடு மட்டுமே மேய்த்து பெருமை பேசியே சாவோம். ஆடு மாடுகள் திருடு போகும்போதும் விபத்தில் இறக்கும்போதும் உதவ ஆளில்லாமல் தவிப்போம், அழுவோம். எதற்கும் காவல்துறையை, நீதிமன்றத்தை அணுகத் தயங்குவோம். செயல்திறன் இல்லாதவர்களையெல்லாம் தலைவன் என்று நம்பித் திரிவோம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அநீதிகளுக்கு எதிராக எதிர்க்குரல் எழுப்ப அஞ்சி ஊமையாகவே
இருந்து சமூக அரசியல் அதிகாரத்தில் பங்கெடுக்க முனையாமல் ஜாதிப் பெருமையை மட்டும் பேசிக்கொண்டிருப்போம். ஜாதி மத மூடத்தனத்திற்கு பல்லக்கு தூக்குவோம். எவனாவது அறிவு, சிந்தனை என்றால் கூட்டமாய் போய் ஆபாசமாய் சண்டையிடுவோம். கிருஷ்ணா கிருஷ்ணா என்று பேசியே எல்லாவற்றிலும் ஏமாந்துபோவோம். திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து எல்லோர் வீட்டுக்கும் அரிசி வருவதால் இதைப் பேசிப்பேசியே பிறவிப் பயன் அடைவோம். 2 MLA -வுக்கும் தகுதியில்லாமல் ஜாதி மதம் புராணம் என்பது பற்றியே காலத்திற்கும் காற்றில் கோட்டை கட்டிக்கொண்டிருப்போம். எங்கள் எதிர்காலத் தலைமுறைகளும் சிந்தனை அடிமைகளாகவே இருக்கத் தேவையான எல்லா வேலைகளையும் முனைப்பாய் செய்வோம்.

13.06.2020

ஆசிரியர் கி.வீ

தோழர் கி.வீரமணி ஏதோ தமிழர்களை எல்லாம் கெடுப்பது மாதிரியும் அவனவன் ஆதரிக்கிற தலைவனுங்க எல்லாரும் ஏதோ தமிழர்களை மலை உச்சிக்கு கொண்டுபோக உழைக்கிற மாதிரியும் சிலபேர் அலறிக்கொண்டிருக்கிறார்கள். ஜாதிய நோய் பீடித்த இந்தியா சமூகத்தின் சீரான வளர்ச்சிக்கு இட ஒதுக்கீடுதான் தீர்வு என்பது 01% வீத நேர்மையான மூளையுள்ளவனுக்கும் புரியும். ஆனால் குடுமி மன்றத்திற்கு க்கு எதிரான உச்சக்குடுமி மன்ற தீர்ப்பை எதிர்த்து களமாட யாரையும் காணோம். தமிழ்ச் சமூகத்திற்கு ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு அபாயம் இருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு எல்லா போராட்ட அமைப்புகளையும் அரவணைத்து செயல்படும் அறிவும் நுணுக்கமும் கொண்ட தலைவன்தான் தேவை தற்போது. அப்படி யார் இருக்கிறார்கள் தமிழகத்தில்? குறுங்குழு மனப்பான்மையைத் தவிர்த்துவிட்டு இதை யோசிப்பது காலத்தின் தேவை.

12.06.2020

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்... (!)

"சமைக்கும் முன்னர் காகங்களுக்கு என்று சேர்த்து யோசிப்பதில்லை. ஆனால் சந்தர்ப்பவசமாக சமைத்த பின்னர் பெரும்பாலும் அவைகளுக்கு மட்டுமென்றே நேர்ந்துவிடுகிறது"

12.06.2020

Bhasmasur - ஹிந்தி திரைப்படம்

1:14 மணி நேர படம் இது. 1:10 மணி வரை வெறுமனே இழுத்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது, எனினும் பொறுமையாகப் பார்த்தேன். இவ்வளவு நேரம் வரையிலும் இந்தப் படத்திற்கு ஏன் இந்தப்பெயரை தலைப்பாக வைத்தார்கள் என்று எழுந்த கேள்விக்கு பதில் கிடைக்கவேயில்லை. இறுதி 4 நிமிடக் காட்சியும் ஓரிரு வசனங்களும் ஒரு பெரும் சலனத்தை ஏற்படுத்தியது. படம் முடிந்து கொஞ்ச நேரம் வேறெதையும் யோசிக்க இயலவில்லை. உண்மையிலேயே இப்படைப்பாளிகள் மிகுந்த பாராட்டுக்கு உரியவர்கள்.

இராஜஸ்தான் கிராமம் ஒன்றில் இரு குழந்தைகளுடன் வசிக்கும் ஏழைக் குடும்பம் ஒன்று. வாங்கிய கடனுக்கு பயந்து பலர் கிராமங்களில் தலைமறைவாகிவிடுகின்றனர். அப்படி தலைமறைவாகி வீட்டுக்கு வரும் தானு என்பவனை கடன்காரர்கள் பிடித்துச் செல்கின்றனர். அவர்களிடமிருந்து திரும்பிவரும் அவன், தன் வீட்டில் தன் 10 வயது மகன் திபு பாசத்துடன் வளர்த்து வரும் கழுதையை தன் கடனுக்காகப் பக்கத்து நகரத்தில் விற்றுவிட முடிவெடுக்கிறான். அந்த ஊரிலிருந்து நீரின்றி கடுமையாக வறண்ட காடு வழியாகத்தான் பக்கத்து நகரத்துக்கு நெடுந்தூரம் செல்ல வேண்டும். தான் கால்நடையாகவே செல்லப்போவதாகவும், தனியாக கழுதை வராது என்பதால் திபுவையும் உடன் அழைத்துச் செல்ல இருப்பதையும் தானு சொல்வதைக் கேட்டு திபுவின் தாய் எதிர்க்கிறாள். திபுவை உடன் அனுப்ப மறுக்கிறாள். 'உன் கணவரைப்போல நானும் நாமும் சாகத்தான் வேண்டுமா?' என்று அவன் எதிர் கேள்வி கேட்க அமைதியாகிவிடுகிறாள்.
கழுதையை விற்க திபுவிற்கு விருப்பமில்லை. அது மட்டும்தான் அவனுக்கு நல்ல நண்பனாக இருக்கிறது. ஒருநாள் இரவில் அதை அவிழ்த்துவிட்டுவிடுகிறான். எனினும் மறுநாள் தானுவிடம் கிடைத்துவிடுகிறது.
கழுதையையும் திபுவையும் அழைத்துக்கொண்டு அந்த வறண்ட வனம் வழியாக நெடுந்தூரம் பயணிக்கிறான் தானு. வறட்சியான நிலமெனினும் கண்ணுக்கு நிறைவான காட்சிகள். பசியால் வாடி அலைந்து இறுதியில் நகரத்தை அடைந்ததும் கழுதையை விற்றுவிடுகிறான் தானு. அப்பணத்தில் திபுவிற்கு புதுத் துணியும் இனிப்புகளும் வாங்கிக் கொடுக்கிறான். ராட்சத ராட்டினத்தில் சுற்ற வைக்கிறான். இப்படியாக கழுதையைப் பிரிந்த திபுவை கொஞ்சம் மகிழ்ச்சிப்படுத்துகிறான். இறுதியில் கல்லுடைக்கும் இடமொன்றில் ஒரு ஆளிடம் திபுவையும் விற்றுவிடுகிறான். இத்துடன் படம் முடிந்துவிடுகிறது. இவ்வளவு நேரம் கழுதை விற்பதுதான் கதையா? இதற்கு இவ்வளவு நேரம் இழுப்பதா? என்று தோன்றிய எண்ணம் நொடியில் அமைதியாகிவிட்டது. கொஞ்சநேரம் எந்த யோசனையுமில்லை.
குடும்பத்துடன் கூலி அடிமையாவது, குழந்தைகளை விற்பது, மனைவியை விற்பது என இராஜஸ்தான் மட்டுமல்ல, இந்தியாவின் பல மாநில கிராமங்களிலும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை சூழல் இன்னமும்கூட இப்படித்தான் இருக்கிறது. இதைத்தான் இப்படம் பேசுகிறது. அவ்வளவு நேரமாய் கேள்வியாக இருந்த இப்படத்தின் தலைப்பு குறித்த கேள்விக்கான காரணம் படத்தின் இறுதியில்தான் புரிந்தது. (Bhasmasur என்றால் பத்மாசூரன். அதாவது வரம் கொடுப்பவன் தலையிலேயே கையை வைப்பவன்)
படம் Netflix-ல் இருக்கிறது. ஒருமுறை காணுங்கள்.



11.06.2020

ஜெ.அன்பழகன் எனும் மக்கள் பணியாளர்

 


கொரோனா பேரிடர் உதவியாக திமுக அறிவித்த "ஒன்றிணைவோம் வா" செயல்திட்டம்தான் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மரணத்திற்கு காரணம் என பல அரைவேக்காடுகள் விமர்சிக்கிறார்கள்.
ஒரு அரசியல்வாதிக்கு மக்கள் பணி செய்வதைத்தவிர வேறு வேலை என்ன இருக்க வேண்டும்? அரசியல் என்றால் என்னவென புரிந்துகொண்டிருக்கிறார்கள் இந்த சாம்பிராணிகள்? பாதுகாப்போடு இருக்கும்போதிலும் நோய் தாக்கி மருத்துவர்களும் இறக்கிறார்களே இதற்கென்ன செய்வது? இந்த சுயநல அரைவேக்காட்டு மூளையை வைத்துக்கொண்டுதான் சமூக அக்கறை என எதையெதையோ வாந்தியெடுக்கிறார்களா இந்த ஜந்துக்கள்? என்னவொரு பெரும் கேவலமான அரசியல் புரிதல் இது? இப்படி மக்கள் பணி எதுவும் செய்யாமல் வெறுமனே வாயால் வடை சுடுவதுதானா சமூக அக்கறை? சொந்த ஊர் திரும்பும் வழியிலேயே புலம்பெயர் கூலித் தொழிலாளர்கள் சுமார் 750 பேர் இறந்துபோனதாக செய்திகள் தெரிவிக்கிறதே, இதற்கு சற்றேனும் ஆவேசப்படுகிறதா இந்த அரைகள்? தன் கட்சியில் இப்படி யாரும் மக்கள் பணிக்காக தியாகமாகாதது ஏன் என்றல்லவா யோசிக்க வேண்டும்? எதற்கெடுத்தாலும் திமுக-வை விமர்சித்துவிட வேண்டும் என்பது கேவலமாக இல்லையா? இது அடிமைப்புத்தி இல்லையா?
நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன என்பார்கள். ஜெ. அன்பழகன் மரணத்தை விமர்சிக்கும் மாரிதாஸ் வகை மனநோயாளிகளின் பதிவுகளைப் பார்க்கும்போது இந்தப் பழமொழிதான் நினைவில் தோன்றுகிறது.

11.06.2020

ஊர்களின் பெயர் மாற்றம்

வேலூரை Veeloor என்று மாற்றியுள்ளார்கள். இதை வீலூர் என்று படிக்கவும் வாய்ப்புள்ளது. இதை Veloor என்று மாற்றினால் சரியாக இருக்கும். இதேபோல் தமிழ்நாட்டின் பெயரையும் Thamizh Nadu என்று மாற்றுவது நல்லது. இதற்கு ஏன் ஆணை பிறப்பிக்கவில்லை எனத் தெரியவில்லை.


11.06.2020

தமிழக அரசுக்கு பாராட்டுகள்...

 


எல்லா ஊர்ப் பெயர்களையும் தமிழில் உச்சரிப்பது போலவே மாற்றம் செய்ய வேண்டும் என்பது பல தமிழ் உணர்வாளர்களுக்கும் நெடுநாள் எதிர்பார்ப்பு. இதை மகிழ்வுடன் வரவேற்கிறேன்.

தமிழக அரசுக்கு பாராட்டுகள்...!

10.06.2020

வெளிப்படைத்தன்மை தேவை


அரசின் இந்த முடிவை காலசூழல் கருதி வரவேற்கும் வேளையில், சில கேள்விகளும் எழுகிறது.

அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், விடுமுறை எடுத்த மாணவர்களுக்கும் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கப்படக்கூடும். ஆனால், பொதுவாக அரையாண்டுத் தேர்வு எழுதப்பட்ட தாள்களை எந்தப் பள்ளியிலும் ஆவணப்படுத்தி வைப்பதில்லை. விடைத்தாள்கள் பெரும்பாலும் மாணவர்களிடமே வழங்கப்பட்டுவிடும். இதை எப்படி ஆவணப்படுத்தியிருப்பார்கள்? அப்படியே ஆவணப்படுத்தி இருந்தாலும் ஒரு தலைமையாசிரியர் நினைத்தால் வேண்டப்பட்ட யாருக்கேனும் எவ்வளவு மதிப்பேனும் வழங்க இயலும். இதைக் கண்காணிக்க கல்வி அலுவலகங்கள் உடனடியாக விதிமுறைகள் வகுத்து செயல்படுத்த வேண்டும். இதுதொடர்பான செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையாக நடந்தால் நல்லது. அப்போதுதான் இந்தாண்டு படித்த 10 -ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் மீது நம்பிக்கை பிறக்கும். இதில் ஏதேனும் குழப்பங்களோ அல்லது முறைகேடுகளோ வெளியானால் உண்மையிலேயே அதிக மதிப்பெண்கள் எடுத்த அனைத்து மாணவர்களின் மீதும் ஐயம் எழ வாய்ப்பு உண்டாகிவிடும்.

10.06.2020

Section 375 - ஹிந்தி திரைப்படம்

 




இந்தச் சட்டப் பிரிவு எப்படி உருவானது என்பதைப் பார்ப்போம்.
குஜ்ஜார் ஜாதியினர் ஆதிக்கம் நிறைந்த ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் குயவர் சமூகத்தைச் சேர்ந்த பன்வாரி தேவி கணவருடன் வசித்து வருகிறார். இராஜஸ்தான் மாநிலத்தில் பொதுவாகவே குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடக்கும். அப்படி நடக்கவிருந்த குஜ்ஜார் ஜாதியினரின் குழந்தைத் திருமணம் ஒன்றை காவல்துறைக்குத் தெரிவித்து தடுத்து நிறுத்துகிறார் பன்வாரி தேவி. இதனால் அவமானமடையும் குஜ்ஜார் ஜாதியினர் விவசாயம் செய்துகொண்டிருக்கும்போது பன்வாரி தேவியின் கணவரைத் தாக்கிவிட்டு பன்வாரி தேவியை 5 பேராகச் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள். காவல்துறையும் வழக்கம்போல ஆதிக்க ஜாதிக்கே பல்லக்கு தூக்குகிறது. இதனால் பன்வாரி தேவிக்கு எதிராகவே வழக்கின் எல்லா ஆதாரங்களும் நிற்க, இன்று வரையில் இவ்வழக்கில் நீதி கிடைக்கவில்லை. அதாவது 1992 ம் ஆண்டு இச்சம்பவம் நடந்தபோது பன்வாரிக்கு சுமார் 30 வயது. கடந்த 25 ஆண்டுகளாக அவர் இன்னும் நீதிக்காகப் போராடி வருகிறார். குற்றவாளிகள் 2 பேர் வயதாகி இறந்துவிட்டனர். மீதமுள்ளவர்கள் வழக்கின் எல்லா குற்றச்சாட்டுகளையும் சட்டத்தின் ஓட்டைகளைக் கொண்டு உடைத்து சுதந்திரமாக வெளியே இருக்கின்றனர். இப்படி இன்னும் லட்சக்கணக்கான கற்பழிப்பு வழக்குகளுக்கு போலிசாரின் மெத்தனத்தால் போதிய ஆதாரமில்லாமல் நீதி வழங்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது இந்திய நீதித்துறை. இச்சம்பவத்திற்குப் பின்னர்தான் Section 375 என்ற சட்டப்பிரிவைக் கொண்டுவருகிறது அரசு. இதன்படி கற்பழிப்புக் குற்றச்சாட்டு பதிவானால் ஆதாரம் இல்லாமலேயே ஆண்களைக் கைது செய்யலாம். குற்றம் சாட்டிய பெண் எந்த ஆதாரத்தையும் நிரூபிக்கத் தேவையில்லை. ஆண்தான் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும்.
நாடெங்கும் #MeToo ஹாஷ்டேக் பிரபலமாகி வந்த சூழலில் அதற்கு எதிராக ஆண்களின் தரப்பு நியாயத்தைப் பேச எடுக்கப்பட்ட படமாகத் தெரிகிறது இத்திரைப்படம்.
இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 375 என்றால் என்ன, பெண்களுக்கு எதிரான எம்மாதிரியான வன்முறையெல்லாம் இந்தத் தண்டனைச் சட்டப்பிரிவில் அடங்கும், பணி இடத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை நம் சமூகம் எப்படி அணுகுகிறது, பிரிவு 375-ன் விதிமுறைகள் என்ன, அதை போலீஸ் முதல் நீதிபதிகள் வரை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் படம் முழுக்க ஆங்காங்கே பேசுகிறார்கள்.
’சட்டமும் நீதியும் ஒன்றல்ல, வேறு வேறு. சட்டத்துக்கு வடிவம் உண்டு, நீதிக்கு வடிவம் இல்லை’ என்கிற வசனத்துடன் படம் தொடங்குகிறது. இறுதியில் நாம் நீதியை வைத்து வணிகம் செய்யவில்லை, சட்டங்களை வைத்து வணிகம் செய்கிறோம்' என்பதாக படம் முடிகிறது.
ஒரு திரைப்பட இயக்குநரிடம் வேலை பார்க்கும் ஒரு ஆடை வடிவமைப்பாளர், இவரிடம் காதல் கொள்கிறார். திரைப்பட இயக்குனர் ஏற்கனவே திருமணம் ஆனவர். இதைப் பற்றி இவருடைய தோழிக்கு தெரிந்து இருக்கிறது. இருந்தாலும் அவருடைய வேலையில் முன்னேறுவதற்கு, புதிய வாய்ப்புகளை பெறுவதற்கும் திரைப்பட இயக்குனரை உபயோகப்படுத்துகிறார். ஒரு சமயத்தில் அவரை திருமணம் செய்ய சொல்லி , கட்டாயப்படுத்துகிறார். அவர் மறுத்தவுடன், அவரின் மேல் கற்பழிப்பு குற்றசாட்டை சுமத்தி, சிறையில் அடைக்கிறார் . section 375 படி , குற்றசாட்டு சுமத்தியவர் அதை நிரூபணம் செய்யத் தேவையில்லை. ஆனால் ஆண்தான் அவர் மேல் சுமத்தப்பட்ட பழியை எதிர்த்துப் போராட வேண்டும். அவர் சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்து தன் மேல் தவறு இல்லை என்று நிரூபித்தாலும் நீதிமன்றம் அதை ஏற்க மறுக்கிறது. இது எப்பொழுதுமே பெரும்பாலும் ஆண்கள் மேல் மட்டும் தான் தவறு என்பதாக இருக்கும் சட்டப்பிரிவைப் பற்றி இந்தத் திரைப்படத்தில் விளக்கமாக சொல்லியிருக்கிறார்கள். பெண்களின் பாலியல் வல்லுறவுப் பிரச்சினையைப் பேசும் Pink படத்தினைப்போல், இப்படம் ஆண்களுடைய பிரச்சினையைப் பேசுகிறது. படத்தின் 80% வீத காட்சிகள் நீதிமன்ற வாதமாகவே இருக்கிறது. மிகவும் வலுவான விறுவிறுப்பான வசனங்களால் படம் எங்கும் தொய்வடையவில்லை.
என்னதான் ஆண்கள் தரப்பு நியாயத்தை இப்படம் பேசினாலும் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு நிகரான அவமானத்தை இந்திய ஆண்கள் சமூகம் சந்திப்பதில்லை என்பதாலும், ஒரேயொரு அப்பாவி பெண்கூட எதிர்காலத்தில் நீதி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதாலும், பெண்களின் உரிமைக்கு எதிராக மிகவும் பிற்போக்குத்தனமும் பாதுகாப்பு சூழலுமற்ற இந்தியாவில் Section 375 -ஐ வரவேற்பதே நல்லதாகத் தோன்றுகிறது. ஆண்களைப் பழிவாங்கும் நோக்கத்திற்காகவே இச்சட்டத்தைப் பயன்படுத்தும் பெண்களுக்கான தண்டனைகளையும் இப்பிரிவில் இணைக்கச் சொல்லி படம் பேசியிருக்கலாம்.

07.06.2020