மனிதன் கடவுளைப் படைக்கும் போது அவனுக்கு கடவுள் பற்றி நிறைய சந்தேகங்கள் எழுந்தன. கடவுள்தான் இந்தப் பெரிய தட்டையான உலகத்தை படைத்தாரா? அவர் ஒருவரே இத்தனையும் படைத்திருப்பாரா? என்றெல்லாம் சிந்தித்தான்.
கடவுள் அவ்வளவு பெரிய அப்பாடக்கராக எல்லாம் இருக்க முடியாது, எப்படியும் உதவிக்கு நிறைய கடவுள்கள் இருக்கும் என்கின்ற முடிவுக்கு வந்தான்.
பிறப்புக்கு, இறப்புக்கு, நெருப்புக்கு, காற்றுக்கு, நீருக்கு என்று கடவுள்களை உருவாக்கிக் கொண்டே வந்தவனுக்கு குழப்பம் தீரவில்லை. இவ்வளவு பெரிய நீரை, சுழன்று அடிக்கும் காற்றை படைக்கின்ற அளவிற்கு இந்தக் கடவுள்களுக்கு சக்தி இருக்க முடியுமா என்று சிந்தித்தான். இரண்டு கைகளையும், ஒரு தலையையும் வைத்துக் கொண்டு கடவுள்களால் இவற்றை செய்து விட முடியுமா?
மனிதனிடம் அதற்கும் ஒரு பதில் இருந்தது. 'கடவுளே! உன்னிடம் உள்ள இரண்டு கைகளையும் ஒரு தலையையும் வைத்துக் கொண்டு இவற்றை எல்லாம் உன்னால் செய்ய முடியாது, நான் உனக்கு நான்கு தலைகள், ஆறு தலைகள் உருவாக்கித் தருகிறேன், பத்துக் கைகள், நூறு கைகள் தருகிறேன. அவற்றை வைத்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்' என்று ஒரே போடாக போட்டான்.
கடவுளுக்கு பசிக்கும் என்று சாப்பாடு கொடுத்தான். கலியாணம் கட்டி வைத்தான்.வீடு கட்டிக் கொடுத்தான். ஊரை சுற்றிக் காட்டினான். எல்லாம் செய்தும் கடவுள் பற்றிய மனிதனின் சந்தேகங்கள் தீரவே இல்லை.
கடவுளுக்கு பூசை செய்கின்ற போதும், தனக்குத்தான் பூசை நடக்கிறது என்பது கடவுளுக்கு புரியாமல் போய் விடுமோ என்கின்ற அச்சம் மனிதனுக்கு உண்டு. அதனால் கடவுளுக்கு தான் வைத்த அத்தனை பெயரையும் சொல்லிக் கூப்பிடுவான். அதை செய்தவனே, இதை செய்தவனே என்றெல்லாம் வர்ணிப்பான். கடவுளின் வலிமை மீது அவ்வளவு சந்தேகம் மனிதனுக்கு.
மனிதனுக்கு நோய் வந்தால், அவன் கடவுளை வேண்டுகின்ற முறையே அட்டகாசமானது. உடல்நலத்தை காப்பாற்று என்று சொன்னால், கடவுளுக்கு விளங்குமா என்றும் அவனுக்கு சந்தேகம். தன்னுடைய உடலில் உள்ள அத்தனை பாகங்களையும் சொல்லி, அவற்றை எல்லாம் காக்க வேண்டும் என்று கடவுளை வேண்டினால்தான் அவனுக்கு நிம்மதியாக இருக்கும். எல்லாம் வல்ல கடவுளால் தன்னுடைய உடலில் எங்கே பிரச்சனை என்பதை கண்டுபிடிக்க முடியாது என்று அவன் உறுதியாக நம்புகிறான்.
மனிதன் இத்தனை சந்தேகங்களுடன் கடவுள்களை படைத்ததை விட, அவற்றை படைக்காமலேயே விட்டிருக்கலாம்.
- வி. சபேசன்
19.07.2020
No comments:
Post a Comment