5.9.23

Section 375 - ஹிந்தி திரைப்படம்

 




இந்தச் சட்டப் பிரிவு எப்படி உருவானது என்பதைப் பார்ப்போம்.
குஜ்ஜார் ஜாதியினர் ஆதிக்கம் நிறைந்த ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் குயவர் சமூகத்தைச் சேர்ந்த பன்வாரி தேவி கணவருடன் வசித்து வருகிறார். இராஜஸ்தான் மாநிலத்தில் பொதுவாகவே குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடக்கும். அப்படி நடக்கவிருந்த குஜ்ஜார் ஜாதியினரின் குழந்தைத் திருமணம் ஒன்றை காவல்துறைக்குத் தெரிவித்து தடுத்து நிறுத்துகிறார் பன்வாரி தேவி. இதனால் அவமானமடையும் குஜ்ஜார் ஜாதியினர் விவசாயம் செய்துகொண்டிருக்கும்போது பன்வாரி தேவியின் கணவரைத் தாக்கிவிட்டு பன்வாரி தேவியை 5 பேராகச் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள். காவல்துறையும் வழக்கம்போல ஆதிக்க ஜாதிக்கே பல்லக்கு தூக்குகிறது. இதனால் பன்வாரி தேவிக்கு எதிராகவே வழக்கின் எல்லா ஆதாரங்களும் நிற்க, இன்று வரையில் இவ்வழக்கில் நீதி கிடைக்கவில்லை. அதாவது 1992 ம் ஆண்டு இச்சம்பவம் நடந்தபோது பன்வாரிக்கு சுமார் 30 வயது. கடந்த 25 ஆண்டுகளாக அவர் இன்னும் நீதிக்காகப் போராடி வருகிறார். குற்றவாளிகள் 2 பேர் வயதாகி இறந்துவிட்டனர். மீதமுள்ளவர்கள் வழக்கின் எல்லா குற்றச்சாட்டுகளையும் சட்டத்தின் ஓட்டைகளைக் கொண்டு உடைத்து சுதந்திரமாக வெளியே இருக்கின்றனர். இப்படி இன்னும் லட்சக்கணக்கான கற்பழிப்பு வழக்குகளுக்கு போலிசாரின் மெத்தனத்தால் போதிய ஆதாரமில்லாமல் நீதி வழங்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது இந்திய நீதித்துறை. இச்சம்பவத்திற்குப் பின்னர்தான் Section 375 என்ற சட்டப்பிரிவைக் கொண்டுவருகிறது அரசு. இதன்படி கற்பழிப்புக் குற்றச்சாட்டு பதிவானால் ஆதாரம் இல்லாமலேயே ஆண்களைக் கைது செய்யலாம். குற்றம் சாட்டிய பெண் எந்த ஆதாரத்தையும் நிரூபிக்கத் தேவையில்லை. ஆண்தான் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும்.
நாடெங்கும் #MeToo ஹாஷ்டேக் பிரபலமாகி வந்த சூழலில் அதற்கு எதிராக ஆண்களின் தரப்பு நியாயத்தைப் பேச எடுக்கப்பட்ட படமாகத் தெரிகிறது இத்திரைப்படம்.
இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 375 என்றால் என்ன, பெண்களுக்கு எதிரான எம்மாதிரியான வன்முறையெல்லாம் இந்தத் தண்டனைச் சட்டப்பிரிவில் அடங்கும், பணி இடத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை நம் சமூகம் எப்படி அணுகுகிறது, பிரிவு 375-ன் விதிமுறைகள் என்ன, அதை போலீஸ் முதல் நீதிபதிகள் வரை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் படம் முழுக்க ஆங்காங்கே பேசுகிறார்கள்.
’சட்டமும் நீதியும் ஒன்றல்ல, வேறு வேறு. சட்டத்துக்கு வடிவம் உண்டு, நீதிக்கு வடிவம் இல்லை’ என்கிற வசனத்துடன் படம் தொடங்குகிறது. இறுதியில் நாம் நீதியை வைத்து வணிகம் செய்யவில்லை, சட்டங்களை வைத்து வணிகம் செய்கிறோம்' என்பதாக படம் முடிகிறது.
ஒரு திரைப்பட இயக்குநரிடம் வேலை பார்க்கும் ஒரு ஆடை வடிவமைப்பாளர், இவரிடம் காதல் கொள்கிறார். திரைப்பட இயக்குனர் ஏற்கனவே திருமணம் ஆனவர். இதைப் பற்றி இவருடைய தோழிக்கு தெரிந்து இருக்கிறது. இருந்தாலும் அவருடைய வேலையில் முன்னேறுவதற்கு, புதிய வாய்ப்புகளை பெறுவதற்கும் திரைப்பட இயக்குனரை உபயோகப்படுத்துகிறார். ஒரு சமயத்தில் அவரை திருமணம் செய்ய சொல்லி , கட்டாயப்படுத்துகிறார். அவர் மறுத்தவுடன், அவரின் மேல் கற்பழிப்பு குற்றசாட்டை சுமத்தி, சிறையில் அடைக்கிறார் . section 375 படி , குற்றசாட்டு சுமத்தியவர் அதை நிரூபணம் செய்யத் தேவையில்லை. ஆனால் ஆண்தான் அவர் மேல் சுமத்தப்பட்ட பழியை எதிர்த்துப் போராட வேண்டும். அவர் சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்து தன் மேல் தவறு இல்லை என்று நிரூபித்தாலும் நீதிமன்றம் அதை ஏற்க மறுக்கிறது. இது எப்பொழுதுமே பெரும்பாலும் ஆண்கள் மேல் மட்டும் தான் தவறு என்பதாக இருக்கும் சட்டப்பிரிவைப் பற்றி இந்தத் திரைப்படத்தில் விளக்கமாக சொல்லியிருக்கிறார்கள். பெண்களின் பாலியல் வல்லுறவுப் பிரச்சினையைப் பேசும் Pink படத்தினைப்போல், இப்படம் ஆண்களுடைய பிரச்சினையைப் பேசுகிறது. படத்தின் 80% வீத காட்சிகள் நீதிமன்ற வாதமாகவே இருக்கிறது. மிகவும் வலுவான விறுவிறுப்பான வசனங்களால் படம் எங்கும் தொய்வடையவில்லை.
என்னதான் ஆண்கள் தரப்பு நியாயத்தை இப்படம் பேசினாலும் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு நிகரான அவமானத்தை இந்திய ஆண்கள் சமூகம் சந்திப்பதில்லை என்பதாலும், ஒரேயொரு அப்பாவி பெண்கூட எதிர்காலத்தில் நீதி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதாலும், பெண்களின் உரிமைக்கு எதிராக மிகவும் பிற்போக்குத்தனமும் பாதுகாப்பு சூழலுமற்ற இந்தியாவில் Section 375 -ஐ வரவேற்பதே நல்லதாகத் தோன்றுகிறது. ஆண்களைப் பழிவாங்கும் நோக்கத்திற்காகவே இச்சட்டத்தைப் பயன்படுத்தும் பெண்களுக்கான தண்டனைகளையும் இப்பிரிவில் இணைக்கச் சொல்லி படம் பேசியிருக்கலாம்.

07.06.2020

No comments:

Post a Comment