இந்தியா சார்பில் 2018 -ம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட படம் இது. CRPF படையினரைத் தவறாக விமர்சனம் செய்திருப்பதாக இப்படம் வெளியானபோது கடும் எதிர்ப்பு எழுந்தது. அப்படையில் பணிபுரிந்த ஒருவரால் இப்படத்தின் மீது டெல்லியில் வழக்கும் தொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த தண்டகாரண்ய காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகள் கிராமம் ஒன்றில் வெறும் 76 வாக்காளர்கள் உள்ள கொண்டநர் என்ற ஊரில் சடங்குத்தனமாக நடத்தப்படும் தேர்தலை பிரச்சார தொனியின்றி அழுத்தமாக பகடி செய்கிறது இப்படம். யாருக்கு வாக்களிக்கிறோம்? எதற்கு வாக்களிக்கிறோம்? ஏன் வாக்களிக்க வேண்டும்? என்று எதுவும் தெரியாத மக்களிடம் வலுக்கட்டாயமாகவும் சடங்குத்தனமானவும் தேர்தலை நடத்திவிட்டு உலகளவில் ஜனநாயகத்திற்கு பெருமை சேர்த்துக்கொள்ளும் இந்திய அரசின் போலியை மறைமுகமாக விமர்சிக்கும் இயக்குநர், அதை நேரம் தவறாத நேர்மையான அலுவலர் கதாநாயகன் என்ற பட்டுத்துணியைப் போர்த்தி சாதுரியமாக வஞ்சப் புகழ்ச்சியாய் கையாள்கிறார். CRPF படைகளிடமும் நகசல்களிடமும் சிக்கித் தவிக்கும் ஆதிவாசிகளின் பயந்த வாழ்க்கையில் அரச படைகள் அவர்களை எவ்வாறெல்லாம் தரக்குறைவாக நடத்துகிறது என்பதை தைரியமாக பதிவு செய்துள்ளார். ஆதிவாசிகள் மட்டுமல்ல, நாகரிகம் வளர்ந்ததாய் சொல்லிக்கொள்ளும் வசதிகள் முன்னேறிய கிராமங்களிலும்கூட தேர்தல் பற்றிய விழிப்புணர்வு இன்னும் வரவில்லை என்பதும் ஜாதி பார்த்துதான் வாக்குகள் அளிக்கப்படுகிறது என்பதும் மொத்த மக்களாட்சியின் அவலம். மக்களைக் கையாள்வதில் தோற்றுப்போன அரசு தன் திறமையின்மையை மறைக்க நக்சல்கள் மீதே தொடர்ந்து பழிபோட்டுக்கொண்டிருக்கிறது. படைகளுக்கு செலவிடும் பணத்தில் காடுகளில் வாழும் ஆதிவாசி மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்வதில் முனைப்பு காட்டலாம் அரசு. இதனூடாக அரசின் மீதான ஆதிவாசி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுத்தான் நக்சல்களின் ஆதிக்கத்தை குறைக்க முடியும். கடந்த 30 வருடங்களாகத் தொடரும் நக்சல்களின் போராட்டத்தை படைகொண்டு மட்டுமே அடக்கிவிட முடியும் என்று தொடர்ந்து பதவிக்கு வரும் எல்லா அரசும் நினைப்பது ஆணவப்போக்கே. நம் ஜனநாயகம் நோஞ்சானாய் இருந்துகொண்டு சரிகையாலும் ஒப்பனையாலும் சோடிக்கப்பட்டு உலகின் முன் எவ்வாறெல்லாம் அழகாகக் காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை சமூக அக்கறையுடன் பதிவுசெய்கிறது இத்திரைப்படம். குறிப்பாக வசனங்கள் சுருக்கமாக ஆழமாக அரசியல்பூர்வமாக இருக்கிறது. இப்படியான படங்கள் தொடர்ந்து வருவது இந்திய சமூகத்திற்கு நல்லது. இயன்றவர்கள் தவறாமல் ஒருமுறை பார்த்துவிடவும்.
06.06.2020
No comments:
Post a Comment