1:14 மணி நேர படம் இது. 1:10 மணி வரை வெறுமனே இழுத்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது, எனினும் பொறுமையாகப் பார்த்தேன். இவ்வளவு நேரம் வரையிலும் இந்தப் படத்திற்கு ஏன் இந்தப்பெயரை தலைப்பாக வைத்தார்கள் என்று எழுந்த கேள்விக்கு பதில் கிடைக்கவேயில்லை. இறுதி 4 நிமிடக் காட்சியும் ஓரிரு வசனங்களும் ஒரு பெரும் சலனத்தை ஏற்படுத்தியது. படம் முடிந்து கொஞ்ச நேரம் வேறெதையும் யோசிக்க இயலவில்லை. உண்மையிலேயே இப்படைப்பாளிகள் மிகுந்த பாராட்டுக்கு உரியவர்கள்.
இராஜஸ்தான் கிராமம் ஒன்றில் இரு குழந்தைகளுடன் வசிக்கும் ஏழைக் குடும்பம் ஒன்று. வாங்கிய கடனுக்கு பயந்து பலர் கிராமங்களில் தலைமறைவாகிவிடுகின்றனர். அப்படி தலைமறைவாகி வீட்டுக்கு வரும் தானு என்பவனை கடன்காரர்கள் பிடித்துச் செல்கின்றனர். அவர்களிடமிருந்து திரும்பிவரும் அவன், தன் வீட்டில் தன் 10 வயது மகன் திபு பாசத்துடன் வளர்த்து வரும் கழுதையை தன் கடனுக்காகப் பக்கத்து நகரத்தில் விற்றுவிட முடிவெடுக்கிறான். அந்த ஊரிலிருந்து நீரின்றி கடுமையாக வறண்ட காடு வழியாகத்தான் பக்கத்து நகரத்துக்கு நெடுந்தூரம் செல்ல வேண்டும். தான் கால்நடையாகவே செல்லப்போவதாகவும், தனியாக கழுதை வராது என்பதால் திபுவையும் உடன் அழைத்துச் செல்ல இருப்பதையும் தானு சொல்வதைக் கேட்டு திபுவின் தாய் எதிர்க்கிறாள். திபுவை உடன் அனுப்ப மறுக்கிறாள். 'உன் கணவரைப்போல நானும் நாமும் சாகத்தான் வேண்டுமா?' என்று அவன் எதிர் கேள்வி கேட்க அமைதியாகிவிடுகிறாள்.
கழுதையை விற்க திபுவிற்கு விருப்பமில்லை. அது மட்டும்தான் அவனுக்கு நல்ல நண்பனாக இருக்கிறது. ஒருநாள் இரவில் அதை அவிழ்த்துவிட்டுவிடுகிறான். எனினும் மறுநாள் தானுவிடம் கிடைத்துவிடுகிறது.
கழுதையையும் திபுவையும் அழைத்துக்கொண்டு அந்த வறண்ட வனம் வழியாக நெடுந்தூரம் பயணிக்கிறான் தானு. வறட்சியான நிலமெனினும் கண்ணுக்கு நிறைவான காட்சிகள். பசியால் வாடி அலைந்து இறுதியில் நகரத்தை அடைந்ததும் கழுதையை விற்றுவிடுகிறான் தானு. அப்பணத்தில் திபுவிற்கு புதுத் துணியும் இனிப்புகளும் வாங்கிக் கொடுக்கிறான். ராட்சத ராட்டினத்தில் சுற்ற வைக்கிறான். இப்படியாக கழுதையைப் பிரிந்த திபுவை கொஞ்சம் மகிழ்ச்சிப்படுத்துகிறான். இறுதியில் கல்லுடைக்கும் இடமொன்றில் ஒரு ஆளிடம் திபுவையும் விற்றுவிடுகிறான். இத்துடன் படம் முடிந்துவிடுகிறது. இவ்வளவு நேரம் கழுதை விற்பதுதான் கதையா? இதற்கு இவ்வளவு நேரம் இழுப்பதா? என்று தோன்றிய எண்ணம் நொடியில் அமைதியாகிவிட்டது. கொஞ்சநேரம் எந்த யோசனையுமில்லை.
குடும்பத்துடன் கூலி அடிமையாவது, குழந்தைகளை விற்பது, மனைவியை விற்பது என இராஜஸ்தான் மட்டுமல்ல, இந்தியாவின் பல மாநில கிராமங்களிலும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை சூழல் இன்னமும்கூட இப்படித்தான் இருக்கிறது. இதைத்தான் இப்படம் பேசுகிறது. அவ்வளவு நேரமாய் கேள்வியாக இருந்த இப்படத்தின் தலைப்பு குறித்த கேள்விக்கான காரணம் படத்தின் இறுதியில்தான் புரிந்தது. (Bhasmasur என்றால் பத்மாசூரன். அதாவது வரம் கொடுப்பவன் தலையிலேயே கையை வைப்பவன்)
No comments:
Post a Comment