தமிழ்நாட்டில் தேர்தல் நடந்து முடியும்வரை; தற்போதைக்கு உலகில் எந்த நாடாவது இக்காரணத்தால் கருணை அடிப்படையில் அகதி அந்தஸ்து கொடுத்தால் தயவுசெய்து என் உள்பெட்டியில் தெரிவியுங்கள்.
27.12.15
முடியலடா கடவுளே
இனி தேர்தல் ஆணையத்துக்காரனுங்க தொல்லை தாங்க முடியாது. எல்லா தேர்தலையும் ரொம்ப யோக்கியமா நடத்துற மாதிரியே இப்பவும் பில்டப் குடுப்பானுங்க பாருங்க.
எண்ணிக்கை 1000
தமிழ்நாட்டின் ஏதோவொரு மூலையில் 24 மணி நேரமும் இளையராஜாவின் பாடல் தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது.
1000 என்ற எண்ணிக்கை என்பது அவருக்கு ஒரு சாதனையில்லை. அவர் அதுக்கும் மேல.
"எல்லாத் தமிழனையும் தாலாட்டிக் கொண்டிருக்கும் இரண்டாவது தாய்"
26.12.15
விசாரணை
விசாரித்த பின்னர் உண்மை தெரிந்தது.
சல்மான் கானிடம் கார் என்பதே கிடையாது. அவர் பல வருடங்களாக பேருந்தில்தான் பயணிக்கிறார். வேட்டைக்குப் போனால் ஆட்டோவில் மட்டும்தான் போவார்.
25.12.15
இதயங்கனிந்த பாராட்டு
விஜயகாந்த் ஒரு சிறந்த புரட்சியாளர். சமூகப் போராளி. தீவிரமான பொதுவுடைமைவாதி. மார்க்சும் ஏங்கெல்சும் பொதுவுடைமை சித்தாந்தத்தை உலகில் பிரகடனப்படுத்தியதே இவரைத் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக 2016-ல் அறிவிக்கத்தான். இதைப் புரிந்துகொண்ட தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகளை பாராட்டுவோம்.
இந்த உயர்ந்த நோக்கத்திற்காகவே கட்சியை நடத்தும் வைகோ, திருமாவின் பெருந்தன்மையான பரந்த மனதையும் இதேபோல் பாராட்டுவோமாக.
அரசு வழங்கும் ஓர் அரிய வாய்ப்பு
குறைந்த செலவில் மசாஜ் செய்துகொள்ள விரும்புபவர்கள் சென்னை மாநகராட்சி வழங்கும் இந்த அரிய சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது மாநகர எல்லைக்குள் குறைந்த பட்சம் 5 கி.மீ. தொலைவுக்குள் ஏதேனும் ஒரு மாநகரப் பேருந்தில் ஏறி பயணிக்க வேண்டும். இதன் மூலமாக நகரின் அனைத்து மக்களுக்கும் இச்சேவை சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. நன்கு அனுபவமுள்ள பல ஓட்டுநர்கள் பணிபுரிவதால் உயிருக்கு அச்சப்படத் தேவையில்லை. நகரின் பல எலும்பு மருத்துவமனைகள் இச்சேவையைப் பாராட்டி வரவேற்றுள்ளன என்பது கவனிக்கத் தக்கது. மேலும் நடப்பு ஆண்டு மட்டுமல்லாது அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் இச்சேவை தொடர்ந்து நடைபெறும் என்பதால் பொதுமக்கள் வாய்ப்புள்ளபோது நிதானமாகவே இச்சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
24.12.15
உணர்தல்
"யாரையேனும் தொடர்ந்து அழைத்தும் அவரைத் தொடர்புகொள்ள இயலவில்லை எனில், அவரது முகநூலின் கடைசிப் பதிவின் நேரத்தைப் பார்த்துதான் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது, அவர் இன்னமும் உயிருடன்தான் உள்ளார் என்பதை"
பனி பொழியும் சென்னை மா நகரம்
மழை வந்துபோகும் ஒவ்வொரு முறையும் சமீப நாட்களாகவும் காலை, நண்பகல், மாலை என பகல் பொழுது முழுதும் சென்னை மா நகரின் அனைத்து சாலைகளிலுமே பனி பொழிகிறது. சற்று தூரத்தில் இருக்கும் எதுவுமே தெளிவாகத் தெரிவதில்லை. எங்கெங்கு காணினும் அவ்வளவு பனி. என்ன ஒரே குறையென்றால், இப்பனியை வெறுமனே பார்க்காமல் கண், வாய், மூக்கு, தலை என சகலத்தையும் மெல்லிய துணியால் போர்த்திக்கொண்டு ரசிப்பது நல்லது.
21.12.15
பெரும் அரக்கன்
" சாத்தான், பேய், பிசாசு மற்றும் புராணங்களில் படித்த அரக்கர்கள் எல்லாரையும்விட நிகழ்காலத்தில் பறக்கும் கொசுக்கள் மிகவும் மோசமானது.
வைரஸ்களை பரப்பும் வல்லமையும் கொடூரமும் அவர்களுக்கு இல்லை. அவர்களால் நமக்கு இப்போதைக்கு பிரச்சினையுமில்லை. "
20.12.15
சென்னை அழியப்போவுதாம்
இது என் அக்காளின் ஒரே மகள். பெயர் கலையரசி. 3-ம் வகுப்பு படிக்கிறாள். கடந்த 15-ம் தேதி என்னை கைபேசியில் அழைத்து, "மாமா நாளைக்கி சென்னை அழியப்போவுதாம். கெளம்பி ஊருக்கு வா" என்று சொன்னாள். "யாரும்மா சொன்னது?" என்று கேட்டேன். "எல்லாரும் சொல்றாங்க, நீ கெளம்பி வர்றியா இல்லியா? அப்புறம் நீ போன் பண்ணா பேச மாட்டேன்" என்று சொன்னாள்.
என்ன சொல்வது என்று நெடுநேரம் யோசித்துவிட்டு பின்னர் "சரி" என்று வைத்துவிட்டேன்.
இன்று நான் அவளுக்கு போன் செய்து "சென்னையிலிருந்துதான் பேசறேன். என்னவோ சொன்னியேம்மா" என்று கேட்டேன்.
அவள் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள்.