28.1.17

மெரீனாவில் தனித்தமிழ்நாடு...!!

மாண்புமிகு முதல்வர் ஜி, 

"அண்ணா திமுக" என்ற உங்கள் கட்சியில் இருக்கும் "அண்ணா" என்ற பெயரில் ஒருவர் இருந்தார். அவரைப் பற்றி படித்திருக்க தங்களுக்கு நேரமில்லாமல் போயிருக்கலாம். 

கழகத்தின் முன்னாள் நிரந்தரப் பொதுச்செயலாளர் பெரிய அம்மா செல்வி ஜெயலலிதா இருந்தவரையில் உங்கள் கட்சியின் சுவரொட்டிகளில் ஒரு ஓரமாய் ஒரு தாடிக்கார கிழவன் படம் இருக்கும். அவர் பெயர் பெரியார் ஈ.வெ.ரா. அவரைப் பற்றி உங்களுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை; ஆனால் உங்கள் திடீர் டில்லி நண்பர்கள் விவரமாகச் சொல்லியிருப்பார்கள். கடவுள்களை எதிர்த்து நாத்திகம் பேசிய கிழவன் என்றாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கவும் கூடும். 

இந்த நாடு சுதந்திரம் அடைந்த நாளிலேயே அதைக் "கருப்பு நாள்" என்று எவனுக்கும் அஞ்சாமல் எழுதினார் பேசினார். தனித்தமிழ்நாடு கேட்டார். இந்தியக் கொடியை எரித்தார். சட்டங்களைக் கொளுத்தினார். உங்கள் நண்பர் சேகர் ரெட்டி இதையெல்லாம் உங்களிடம் சொல்லாமல் மறைத்திருக்கலாம். 

"தனித்தமிழ்நாடு" என்ற உரிமைக்குரல் கடந்த வாரம்தான் மெரீனாவில் எழுந்தது என்பது உங்களைப் பொருத்தவரை உண்மைதான். 

8 கோடிப்பேர் கொண்ட உங்கள் மாநிலம் விரும்பும் ஜல்லிக்கட்டை நடத்தக்கூட உங்களை அலையவைத்து இழுத்தடித்து உங்கள் கட்சி எம்.பி.க்களை உதாசீனப்படுத்தி ஆயிரம் காரணம் சொன்னவர்கள் இன்னும் இருக்கும் காவிரி மேலாண்மை வாரியம் முதலான எல்லா பிரச்சினைகளுக்கும் எப்படியெல்லாம் அலையவிடப் போகிறார்கள் என்பதை நாங்களும் பார்க்கத்தான் போகிறோம். 

இந்தத் தனிநாடு கோரிக்கை வைக்கும் சமூக விரோதிகள் சிலராவது உங்கள் மாநிலத்தில் இருப்பதால்தான் உங்களை கொஞ்சமாவது டெல்லி மதிக்கிறது என்பதை கொஞ்சமேனும் அரசியல் தெரிந்தவர்களே உணரமுடியும். 

வரலாறு ஒரு அருமையான வாய்ப்பை உங்களுக்கு வழங்கியிருக்கிறது.

மக்களின் உணர்வுகளை உரிமைகளை எதிர்ப்புகளை மதித்து நடப்பதுதான் மக்களாட்சி என்பதையும்; யாரையும் ஒடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும்; தமிழர்கள் டெல்லிக்கு அடிமைகளில்லை என்பதையும் முடிந்தால் அவர்களுக்குப் புரியவையுங்கள். நீங்களும் புரிந்துகொள்ளுங்கள். 

பிறகு, ஏன்? எதற்கு? யார்? தனிநாடு கேட்கப் போகிறார்கள்?













27.1.17

காவல்துறை சொல்வது என்ன?

கோவையில் கலவரம் செய்தவர்களை அமைதியாக வேடிக்கை பார்த்தது காவல்துறை.

மெரீனாவில் அமைதியாகப் போராடிய மாணவர்கள் மீதும் மனிதாபிமானமாக உதவிய மீனவர்கள் மீதும் மட்டும் ஆவேசம் கொண்டு தாக்கியது ஏன்?

மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது காவல்துறை?

ஹிந்து அமைப்புகளில் இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என்றா?

அழகான குழந்தை...?

அழகான குழந்தை பிறந்தது என்று பலரும் மகிழ்ச்சியுடன் பகிர்கிறார்கள். நமக்கும் மகிழ்ச்சியே. 

குழந்தை என்றாலே அழகுதானே. அழகில்லாத குழந்தை யாருக்கேனும் பிறப்பதுண்டா. 

வாழ்த்துக்கள்...!!!

விருது அரசியல்

"ஏழை எளிய மக்களின் தாலிகள் அறுபடுவதெல்லாம் பிரச்சினையில்லை; பூணூல்கள் அறுபட்டுவிடக்கூடாது என்பதுதான் இந்தியாவுக்கு எப்போதும் முக்கியப் பிரச்சினை"

சோ

ஜக்கி

ஜோஷி

26.1.17

எச்சரிக்கை

தமிழ் இளைஞர்களின் தை எழுச்சியை இனி பலவாறாக ஒடுக்க நினைக்கும் அரசும் உளவுத்துறையும். 80-களில் அரசுக்கு எதிராக புரட்சிக்காரர்களாக வட தமிழகத்தில் உருவெடுத்த உழைக்கும் மக்களை பின்னாளில் ஜாதி மோதலால் திட்டமிட்டு பிரித்தார்கள். இப்போதும் மீனவர் பகுதியில் திருமா அவர்களின் படங்கள் இருக்கும் இடத்தைத்தான் அதிகம் தாக்கினார்களாம். ஆக ஒடுக்கப்பட்டவர்களை மேலும் மேலும் ஒடுக்கி வைக்கத்தான் அரசு விரும்புகிறது. மற்றவர்களெல்லாம் ஏதோவொரு ஆண்ட பரம்பரை கதைகளில் மூழ்கி புராணக்கதை மகுடிக்கு மயங்கி வாழ இதை புறக்கணிக்குக்கும் மக்கள் மட்டுமே அவர்களுக்கும் அவர்களது புனிதங்களுக்கும் சவாலாய் இருக்கிறார்கள். இந்தியா முழுதும் கவனித்தீர்களென்றால் புரட்சியும் புரட்சிக்கருத்துக்களும் மாற்றத்திற்கான செயற்பாடுகளும் ஒடுக்கப்பட்ட பட்டியல் வகுப்பினரிடமிருந்தே வெடித்துக் கிளம்புகிறது. இவர்களை ஒடுக்கிவிட்டால் வேறு யாரும் பிரச்சினை இல்லை என நினைக்கிறது அரசு. மற்றவர்கள் மீசையை முறுக்கிக்கொண்டு எளியவர்களிடம்தான் வீரம் என்று பேசுகிறார்களே தவிர அரசிடம் மோதுவதில்லை. ஆக மீண்டும் மீண்டும் மக்களுக்குள் பிளவுகளை உண்டாக்கி மோதவிட்டு தன்னை வலுப்படுத்திக் கொள்கிறது அரச பயங்கரவாதம். அது எந்த நேரத்திலும் எல்லோரையும் மிதிக்கும் என்ற நடைமுறை உண்மையைக்கூட படித்தவர்களும் புரியும் திறனற்றுக் கிடக்கிறார்கள் என்பதுதான் மிக வருத்தமான உண்மை.

தற்போது நெல்லையில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு பதற்றம் என்றும் போலிஸ் படைகள் குவிப்பு என்றும் தகவல் வருகிறது. வாகனங்களைக் கொளுத்திவிட்டு மக்களை ஒடுக்க ஒரு காரணம் தேடியவர்கள் அடுத்த காரணங்களையும் உருவாக்கக்கூடும். அவர்களிடம் சகல அதிகாரங்களும் குவிந்து கிடக்கிறது. நீதி தேவதை அவர்கள் வீட்டு எடுபிடி.

ஆகவே தோழர்களே பொதுமக்களே யாரும் உணர்ச்சி வசப்படாதீர்கள். அவர்களின் நோக்கத்தை உணர்ந்துகொள்ளுங்கள். ஜாதி மத பேதங்களை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணமோ நோக்கமோ விருப்பமோ இந்த அரசை இயக்கிக்கொண்டு இருப்பவர்களுக்கு அறவே இல்லை. முடிந்தவரையில் அதை ஆதாயமாக்க அலைவதே இவர்களின் பிழைப்புக்கு ஒரே வழி.

யார் படித்தாலும் சிந்திக்கத் தூண்டுபவர் அம்பேத்கர். அவர் யாருக்கும் வெறுப்பானவர் அல்ல. இந்த நாட்டிலே ஆண்ட ஆளும் விருது பெற்ற ஆளுமைகளாய் முட்டுகொடுக்கப்பட்ட எல்லோரையும்விட, அநீதி இழைக்கப்பட்ட இந்த நாட்டின் எல்லா எளிய மக்களுக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் வாழ்நாளெல்லாம் சிந்தித்தவர் செயற்பட்டவர்.

அனைத்து சமூக நண்பர்களும் இதை உணர்ந்து அரச பயங்கரவாத சூழ்ச்சி வலையில் யாரும் சிக்காமல் முறியடிக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

"தோழர் அம்பேத்கரைக் கொண்டாடுவோம்"

பாஸ்பரஸ் குடியரசு

இலங்கையில் தமிழர்கள் மீதான போரில் பாஸ்பரஸ் குண்டு பயன்படுத்தப்பட்டு இனப்படுகொலை நடத்தப்பட்டது. இங்கே மெரினா கடற்கரை மீனவர் பகுதியிலும் பாஸ்பரஸ் தூவி கடைகளும் உடைமைகளும் எரிக்கப்பட்டுள்ளது.

குடிமக்களின் மீன் கடைகளை எரிப்பதும் வாகனங்களைக் கொளுத்துவதும் மண்டையை உடைப்பதும் பெண்களிடம் கீழ்த்தரமாக பேசுவதும் அவர்களின் ஆடைகளை கூட்டத்தில் அவிழ்ப்பதும் விரட்டி விரட்டி அடிப்பதும் சாதாரண குடங்களையும் ஆவேசமாக உடைப்பதுமாக இப்படி குடிமக்களையும் அவர்களது உடைமைகளையும் மயிரளவும் மதிக்காமல் எந்த குடிமக்களுக்காக குடியரசு விழா கொண்டாட்டம்?
யார் அந்த விசேஷ குடிமக்கள்?

மனசாட்சி இருக்கிறவர்கள் இதை ஆதரிப்பார்களா?

எதிர் கருத்துகூட எழக்கூடாது பேசக்கூடாது எழுதக்கூடாது என்று வறட்டுத்தனமாக பேசுவதும் எழுதுவதும் நினைப்பதும் ஜனநாயகமா?

எதிர் கருத்துகளைக் கண்டு அச்சம் எழுகிறது எனில் தவறு யாரிடம்?

இனி இந்த நாட்டில் பிறக்கும் எல்லா குழந்தைகளின் நாவையும் அறுத்து நிரந்தர ஊமையாக்கிவிடலாமே?

ஒரு தேசம் ஒரு சாரார்களுக்கு விரோதமாக நடந்துகொள்வதை சுட்டிக்காட்டி பேசுவது தேச விரோதமா? அதை முட்டுக்கொடுப்பதுதான் தேச பக்தியா?



25.1.17

கொடிய அரசு நாள்

தமிழ்நாடே குடிகார நாடு என்று எல்லாரும் எழுதிக்கொண்டு இருந்தார்கள். இதற்காக கொஞ்சம்கூட வெட்கப்படவில்லை ஆட்சியாளர்கள். 100 கட்சிக்காரன் போராட வந்தாலே 200 குவாட்டர் செலவாகும் நாட்டில் 10 லட்சம் பேர் கூடியும் அந்த இடத்தில் ஒரு மது பாட்டிலாவது காணக் கிடைத்ததா?

விரட்டி விரட்டி தாக்குகிற அளவுக்கு போராடியவர்கள் செய்த தவறு என்ன?

6 மணிக்கு சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு காலையிலேயே கலையச்சொல்லி அவர்களை மிரட்டியது ஏன்?

மீனவர்கள் செய்த தவறு என்ன? பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையே பொறுக்கித்தனமாக நடந்தபோது பாதுகாப்பு கொடுத்தது தவறா?

இப்படியெல்லாம் நடந்துகொள்ள அதிகாரிகளுக்கு எதற்கு IPS தேர்வு தகுதி?

"போராடினால் தாக்கப்படுவீர்கள்" என்று அச்சுறுத்தப்படும் நாட்டில் குடியரசு கொண்டாட்டம் என்பது போலியாய் தெரியவில்லையா?

யார் சமூக விரோதிகள்? நியாயம் கேட்டு போராடுபவர்களா... சம்பளம் வாங்கிக்கொண்டு மண்டையை உடைப்பவர்களா? இதை ஆதரிக்கும் அறிவுக் குருடர்களா?

தாக்கப்பட்ட மாணவர்களுக்கும் மீனவர்களுக்கும் நீதி வேண்டும். உலகமே காறித்துப்பும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு ஒளிவுமறைவில்லாமல் தண்டனை கொடுக்க வேண்டும்.

அதுவரையில் இது குடியரசு நாள் அல்ல. "கொடிய அரசு நாள்"

21.1.17

வரலாற்றில் இனப்பிரச்சினைகள்

25000 பெண்கள் வன்புணர்வு

1 லட்சம் பேர் படுகொலை

2 லட்சம் பேர் சிறைக்கொட்டடியில்

20 லட்சம் பேர் சொந்த நாட்டிலேயே அகதி முகாம்களில்

ரத்தமும் சதையுமாய் 7 நாடுகள் இணைந்திருந்து பின் தேசிய இனப் பிரச்சினையால் தனித்தனியாக உடைந்த யூகோஸ்லாவியாவில் நடந்ததுதான் இது.
 
"மதச்சார்பின்மை" என்றால் கேலி செய்பவர்களும், "இனப்பிரச்சினை" என்றால் அலட்சியம் காட்டும் தேசியவாதிகளும் கவனிக்க வேண்டிய வரலாற்று நிகழ்வுகளில் யூகோஸ்லாவிய போரும் ஒன்று.

கவனிக்கத் தவறினால், வரலாற்றின் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும்.

வானியல் ஆய்வாளர்களின் வாழ்க்கை

கி.பி. 1543-ம் ஆண்டு வரையில் யாருக்குமே தெரியாத தகவல், " பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது" என்பது. 

இதைத் தெரிவிக்க கிறித்தவ மதகுருமார்களின் தண்டனைக்குப் பயந்து 30 ஆண்டுகாலம் தயங்கினார் கோப்பர்நிகஸ். இறுதியில் சாகும்தருவாயில் ஒரு புத்தகமாய் எழுதிவிட்டு மறைந்தார். 

இதை பின்னாளில் உறுதிப்படுத்திய கலிலியோ, கி.பி. 1632-ம் ஆண்டில் தனது பல வானியல் ஆய்வுகளை இணைத்து ஒரு புத்தகம் வெளியிட்டார். 

இதற்காக சாகும்வரையில் 9 ஆண்டு காலம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் கலிலியோ.

ஆனால் இன்றைக்கும் மதவாதிகள் அறிவியலைவிட மூளைச்சலவை செய்யும் தங்கள் மதநூல்களையே ஆழமாய் நம்புகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

இசுலாமியர்கள் தமிழர்களில்லையா?

ஜாதி மத அடையாளங்கள் தவிர்த்து "எல்லோரும் தமிழர்களாய்" கூடி போராடும் மாணவர்களுக்கு சிலர் குல்லாயைக்கூட கழற்றாமல் உணவு கொடுப்பதும், அதை "இஸ்லாமிய நண்பர்கள் உணவளிக்கிறார்கள்" என்று பிறர் எழுதுவதையும் எவ்வாறாக எடுத்துக்கொள்வது?

இஸ்லாமியர்கள் தமிழர்கள் இல்லையா? எப்போதும் ஏன் இந்த கூடுதல் அடையாளம்?

அணுகுமுறைகள்

"நியாயம் பேசுபவர்களின் அணுகுமுறைகள்தான் அந்நியாயங்கள் பலவீனப்படவோ பலப்படவோ முக்கிய காரணம்"

எவ்வளவுதான் மன அழுத்தம் ஏற்பட்டாலும் மாற்றத்தை விரும்புபவர்கள் மக்களிடம் எப்போதும் தங்கள் அக்கறையை வெளிக் காட்டுவதைத்தான் முதன்மைப்படுத்த வேண்டும். மாறாக வெறுப்பைக் காட்டுவதால் எந்த பயனும் இல்லை.

17.1.17

கோமாளித் தலைவர்கள்

2009-ல் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் இனவழிப்புப் போரின்போது இலங்கை ராணுவ அமைச்சன் சரத் ஃபொன்சேகா சொன்னான், தமிழ்நாட்டில் இருப்பவர்கள் "கோமாளித் தலைவர்கள்" என்று.

தமிழர்கள் கன்னடர்களால் தாக்கப்பட்டபோதும் ஆந்திராவில் சுட்டுக்கொலப்பட்ட போதும்கூட நிலைமை மாறவில்லை.

ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினர்மீது காவலர்கள் தாக்குதல் நடத்துவதை இப்போதும் காண்கிறோம்.

இனியும் உள்முரண்பாடுகளையே தமிழர்கள் கூர் தீட்டிக்கொண்டிருந்தால் தனித்தனியாகவோ அல்லது ஒட்டுமொத்தமாகவோ அழியப்போவது மட்டும் உறுதி.

16.1.17

"கடலும் கிழவனும்" - எர்னெஸ்ட் ஹேமிங்வே

The old man and the sea - by Ernest Hemingway

ஒரு கிழவனுக்கும் அவனது தூண்டிலில் அகப்படும் ராட்சத மீனுக்கும் (marlin வகை) இடையேயான போராட்டம்தான் இக்கதை. முழுக்க முழுக்க கடலில் நடப்பதால் வாசிப்பவர்களும் கடலில் பிரயாணம் செய்தது போன்ற அனுபவத்தை தருகிறது. 1952-ல் இந்தப் படைப்பு வெளியானபோது இருநாட்களில் 5.3 பில்லியன் பிரதி விற்றுத்தீர்ந்தது. இலக்கியத்திற்கான நோபல் பரிசும், புலிட்சர் விருதும் பெற்ற நாவல் இது.

ஒரு தீவிரமான சூழ்நிலையில், எதிர்மறையான நிலைமைகளிலும் போராடுவதற்கு வலுவுடன் எழும் உத்வேகம் குறித்து எழுதப்பட்ட மகத்தான படைப்பு இது. 1952-ல் வெளியிடப்பட்ட இப்படைப்பு, உச்சபட்ச வார்த்தைச் சிக்கனம் மற்றும் வர்ணனைகள் கொண்ட சிறுநாவலாகும். 1954-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றது. இப்படைப்பு மூலம் எர்னஸ்ட் ஹெமிங்வே உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார்.

கியூப புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோ இந்நாவலை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பாராம்.

இந்த நாவல் கடலில் மீன் பிடிக்க செல்லும் "சாண்டியாகோ" என்ற ஒரு செம்படவ முதியவரின் வாழ்க்கையில் 04 நாட்கள் கடலிலும் நிலத்திலும் சேர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகளின் தொகுப்பு.

அவருக்கு உதவியாகவும் மீன் பிடித் தொழிலைக் கற்றுக் கொள்ளும் வகையிலும்  "மெனோலன்" என்ற ஒரு சிறுவன் அவனுடய 5 ஆவது வயதில் அவரிடம் அவன் பெற்றோர்களால் வேலைக்கு சேர்த்துவிடப்படுகிறான். பல காலமாய் அவன் முதியவருடன் கடலுக்கு சென்று வருகிறான். இப்பொழுது அவன் ஒரு வளர்ந்த பையனாகி விட்டான். இவ்வளவு காலத்தில் இருவருக்குள்ளும் நல்ல அன்பு உருவாகி வளர்ந்துள்ளது.

கடந்த 84 நாட்களாக அந்த முதியவருக்கு கடலில் எதுவும் கிடைப்பதில்லை. அவருடைய அதிர்ஷ்டம் எல்லாம் தீர்ந்ததாகக் கூறி பையனின் பெற்றோர் 40 வது நாளிலேயே அவனை வேறொரு படகில் சேர்த்து விடுகின்றனர். ஆனால் பையனுக்கு முதியவரின் மேல் அதீத அன்பு. அவரை விட்டுப் பிரியவும் மனமின்றி பெற்றோர் சொல்லையும் மீற இயலாமல், வேறொரு படகில் சேருகிறான். இருப்பினும் கடலுக்கு சென்று வந்த பிறகும் செல்வதற்கு முன்னும் அவருக்கு உணவு வாங்கி வருவது, வலைகளை படகுக்கு எடுத்து செல்வது  உட்பட நிறைய பணிவிடைகள் செய்கிறான்.

அன்று விடிந்தால் 85-வது நாள். முந்தைய இரவு, சிறுவன் முதியவரை சந்தித்துப் பேசுகிறான். மறுநாளைக்குரிய தன்னுடைய கடல் பயணம் குறித்து யோசனையில் முதியவர் இருக்கிறார். சிறுவன் அவருக்கு ஏதேனும் உதவி செய்ய நினைக்கிறான். தானும் அவருடன் மறுநாள் கடலுக்கு வருவதாக சொல்கிறான் முதியவர் அதனை மறுக்கிறார். முதியவரிடம் தூண்டிலுக்கான மீன்களை மட்டுமாகிலும் வாங்கி வருவதாகச் சொல்லி வெளியே செல்கிறான். மறுநாள் மீன் பிடிக்க செல்வதற்காக சர்டினெ மற்றும் தூண்டில் முள் மீன்களையும் முதியவருக்கும் தனக்குமான இரவு உணவையும் வாங்கி வந்து தந்துவிட்டு உணவிற்குப் பின் தன் வீட்டிற்குச் செல்கிறான்.

முதியவரும் அடுத்த நாள் அதீத நம்பிக்கையுடன் கடலில் தனியாக செல்கிறார். முதல் நாள் கடலில் அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் நம்பிக்கையுடன் கடலில் நீண்ட தூரம் செல்கிறார். இரண்டாம் நாள் நடுக்கடலில் தூண்டிலிட்டு மீனுக்காக காத்திருக்கையில் ஏதோவொரு பெரிய மீன் சிக்கிவிடுகிறது.

அதன்பிறகு இருநாட்களாய் தனி ஆளாய் அந்த மீனுடன் (கிழவனின் படகைவிட பெரிய மீன்) கடுமையாக போராடி அதைக்கொன்று, படகுடன் சேர்த்து கட்டிக்கொண்டு கரை திரும்பும் வழியில் அந்த பிடிபட்ட பெரிய மீனின் ரத்த வாசனையை மோப்பம் பிடித்து சுவைக்க நிறைய சுறா மீன்கள் படகைத் தொடர்ந்து ஒவ்வொன்றாக வருகிறது. அவைகளுடன் கிழவனுக்கு மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கிறது. குத்தீட்டியால் சில சுறாக்களை கொல்வதும், பின் ஒரு சுறா குத்தீட்டியுடன் தண்ணீரில் முழ்கியதும் தன்னிடமுள்ள கத்தியால் தாக்க வரும் சுறாக்களுடன் போராடுவதும் என்று அவரிடம் இருந்த ஆயுதங்கள் பறிபோகிறது. கைகளும் வலுவின்றி மரத்துப்போய் 4 நாள் பயணத்தில் உடலும் சோர்வடைந்துவிட மனதை மட்டும் தளரவிடாமல் பின் தொடர்ந்து வந்த எல்லா சுறாக்களையும் கொன்றுவிடுகிறார்.

இறுதியாக அவர் கரைக்குத் திரும்பும்போது வழியில் எல்லா மீன்களும் சாப்பிட்டதில் வெறும் கூடு மட்டுமே அவர் பிடித்து வந்த மீனில் எஞ்சியிருக்கிறது. மீன் பிடிபட்டதும் என்னென்னவோ பெருங்கனவு கண்டு திரும்பிய அவர் அந்தச் சிறுவனிடம் மீன்கள் என்னைத் தோற்கடித்துவிட்டது என்று புலம்புகிறார்.

தினமும் மீன் பிடித்துவரும் அச்சிறுவன் தனக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தவர் அதிர்ஷ்டம் இல்லையென்று புலம்புவதைக் கண்டு கவலைப்படுகிறான். அவரைத் தேற்றுகிறான். முடிவாய் "அதிர்ஷ்டத்தை நான் அழைத்துக்கொண்டு வருகிறேன்; இருவரும் சேர்ந்து மீன் பிடிப்போம்" என்று சொல்கிறான்.

மீண்டும் கடலுக்குப் போவதைப் பற்றிக் கனவு காண்கிறான் கிழவன்.


15.1.17

விவசாயிகள் மரணம்

"வறட்சியால் மரணமடைந்த தமிழக விவசாயிகளுக்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி"  

ஜாதி, மதம், கட்சிகளால் மக்களை பிரித்து நடத்துகிற; இவைகளால் பிரிந்து கிடக்கிற அனைவருக்குமே இந்தக் குற்றத்தில் பங்குள்ளது.   

கடைசி ஒரு பிச்சைக்காரன் இருக்கிற வரையிலும்; ஊரார் உணவுக்கு உழைக்கிற விவசாயியே மனமுடைந்து சாகும் வரையிலும் இந்த நாட்டை "எனது ஆட்சி / எங்கள் ஆட்சி / நான் ஆண்டேன் / நாங்கள் ஆண்டோம்" என்று எந்த கட்சியும் பெருமைபட்டுக்கொள்ள தகுதியில்லை.  

மக்களுக்கான பணத்தை கொள்ளையிட்டு மாடமாளிகை கட்டி தம் உற்றார் உறவினர்களுடன் கூடிக் களித்து வாழும் எல்லா திருடர்களுக்கும் இந்தக் குறளே பதில்...  

"அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே  செல்வத்தைத் தேய்க்கும் படை"

( தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர், ஆட்சியாளர்களின் செல்வத்தை அழிக்கும் )

14.1.17

தமிழர் திருநாளா? மகர சங்கராந்தியா?

"தமிழர் திருநாள்" / "உழவர் திருநாள்" / "பொங்கல் திருநாள்" என்று எப்படியும் சொல்லிவிடக்கூடாது என்று சில "#_ஜி-க்கள்" மகர சங்கராந்தி வாழ்த்துக்கள் என்று எழுதுகிறார்கள். பண்டிகைகள் என்பது இங்கே ஒரு மனிதனின் அறிவை எப்படியெல்லாம் மழுங்கடிக்கிறது என்று பாருங்கள். 

அறிவியல் வளராத காலகட்டத்திலேதான் பூமியை சூரியன் சுற்றி வருவதாகச் சொன்னார்கள்; நம்பினார்கள். ஆனால் இன்றைக்கு அதுபற்றி தெளிவாகத் தெரியவந்த பின்னரும் கூட அப்படியே நம்பிக்கொண்டிருப்பவர்களை என்னவென்பது?

சூரியன் ஒரே இடத்தில்தான் இருக்கிறது. அதில் ஹைட்ரஜன் என்ற மந்த வாயு எரிந்து ஹீலியமாக மாறிக்கொண்டிருக்கிறது. அது நகர்வதில்லை. இந்த நிகழ்வில் வெப்பம் வெளியாக அதுவே ஒளியாகவும் வருகிறது. இந்த நகராத சூரியன் மகரத்திற்கு வரும்போது "மகர சங்கராந்தி"யாம். 

360 பாகையை சந்திரனின் சுழற்சியைக் கொண்டும் பருவகாலங்கள் மீண்டும் மீண்டும் வரும் கால ஓட்டங்களைக் கருத்தில் கொண்டும் தோராயமாக 12 ஆல் வகுத்து மாதங்களைக் கொண்டுவந்தார்கள். இம்மாதங்கள் என்பது பூமி சுழல்வதின் கணக்கு. இதைத்தான் ஜாதகத்தில் இன்னும் பூமியை கோள்கள் சுழல்வதாக நம்பி கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சூரியன் என்பது கோள் அல்ல, ஒரு எரி நட்சத்திரம். சந்திரன் என்பதும் கோள் அல்ல, ஒரு துணைக்கோள் மட்டுமே. ஆனால் "நவ கிரகங்கள்" என்றுதான் இன்னமும் மாற்றாமல் கவனமாக காப்பாற்றிக்கொண்டு வருகிறார்கள். 

பூமத்திய ரேகை, அட்ச ரேகை, தீர்க்க ரேகை என்பதெல்லாமும் கற்பனைதான். ஒரு வசதிக்காக வகுத்தார்கள். இதில் ஏமாற்று வேலையில்லை. அதேபோல் மேஷம் தொடங்கி மீனம் வரையிலான பெயர்களும் மாதங்களைப் பற்றிய கற்பனைதான். ஆனால் இதில் பிழைப்பை புகுத்தி பாதுகாக்கிறார்கள். 

பொதுவாக பண்டிகைகள் என்பதே "அறிவைக் கெடுப்பதாக ஹிந்து மதத்தில் இருக்கிறது" என்று பெரியார் சொன்னது மேலோட்டமானதல்ல. 

"மகர சங்கராந்தி" என்று பெயரிட்டு கொண்டாடாமல் "உழவர் திருநாள்" என்று பெயரிட்டு கொண்டாடும் எம் பழந்தமிழர்களின் அறிவைக்கண்டு நாம் வியக்கிறோம். 

தமிழர்கள் ஹிந்து மதத்திற்குள் நுழைக்கப்பட்டவர்கள் என்பதற்கு பண்பாட்டு ரீதியிலான ஏராளமான சான்றுகள் இருக்கிறது. 

தமிழர்களாய் பிறந்தும் கல்வி கற்றும் "மகர சங்கராந்தி" என்று வாழ்த்து தெரிவிப்பவர்களின் பதிவைக் கண்டால் வருத்தம் எழுகிறது. 

சரி, அப்படியானால் "திராவிடர் திருநாள்" என்று ஒரு சாரார் பெயரிடுகிறார்களே என்று யாரேனும் கேட்கலாம். 95% வீதம் பேர் தமிழர் திருநாளாகக் கொண்டாடினாலும்கூட சகல அரசு அதிகார பலம் கொண்ட ஒரு 05%  வீதம் பேர் அதை ஹிந்து மத பண்டிகை என்று நிறுவ மும்முரம் காட்டுவதால் 01% பேர் அதற்கு பதில் சொல்ல மட்டும் "திராவிடர் திருநாள்" என்று கொண்டாடுகிறார்கள். "தமிழர் திருநாள்" என்பதை மறுத்துவிட்டு அவர்கள் கொண்டாடவில்லை என்பதையும், கண்டும் காணாமல் பலர் கடந்துசெல்லும் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புதான் அவர்களுக்கு முக்கியப் பிரச்சினை என்பதையும் கவனிக்கவும். 

உழவர்கள் முக்கியமா? அல்லது மகரத்தில் சங்கரன் ஆந்துவது முக்கியமா? எது அறிவுடைமை?

"உழவர் திருநாள்" / "தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்" அனைவருக்கும்.

12.1.17

2017-ம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சி

இந்த ஆண்டு (2017) சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய நூற்கள்.

01. ஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு 1 & 2 = 1200 ரூ

02. கி.ரா. சிறுகதைகள் தொகுப்பு = 550 ரூ

03. பிஞ்சுகள் / அந்தமான் நாயக்கர் - கி.ரா. குறுநாவல்கள் = 100 ரூ

03. கோபல்ல கிராமம் - கி.ரா = 170 ரூ

04. கோபல்லபுரத்து மக்கள் - கி.ரா = 200 ரூ

05. ருசியான கதைகள் - கி.ரா = 130 ரூ

06. இந்திய தண்டனைச் சட்டம் தமிழில் = 110 ரூ

07. சொந்த ஜாமீன் பெறுவது எப்படி? = 120 ரூ

08. கடலும் கிழவனும் - எர்னஸ்ட் ஹெமிங்க்வே = 60 ரூ

09. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல் சாங்கிருத்துயாயன் = 280 ரூ

10. வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம் - கே.பாக்யராஜ் = 120 ரூ

இதில் ஜெ.கே / கி.ரா கதைகளில் குறுநாவல்களில் பலவற்றை தனித்தனியாக படித்திருக்கிறேன். மொத்த சிறுகதைகளையும் படித்துவிட வேண்டும் என்பதால் சேர்த்து வாங்கியுள்ளேன். மேலும் வால்கா முதல் கங்கை வரையும், வாங்க சினிமாவைப்பற்றி பேசலாம் புத்தகங்களும் எப்போதோ படித்தவைதான். இன்றைய அறிவுக்கு ஒருமுறை படிக்க வேண்டும் என்பதற்கும், யாரிடமோ கொடுத்து திரும்ப வராமல் போனதற்குமாக வாங்கினேன். வாங்க நினைப்பவர்களுக்கு பயன்படும் என்பதால் விலையையும் சேர்த்து குறிப்பிட்டுள்ளேன்.

ஜல்லிக்கட்டு - ஆதரவும் எதிர்ப்பும்

"தமிழர்களின் விவகாரங்களில் தமிழர் அல்லாதோர் முடிவெடுக்கும் முறைமை ஒழிக்கப்பட வேண்டும்" என்கிறார் பெரியார்.

மாடு வெட்டக்கூடாது மாடு தின்னக்கூடாது என்று சொல்லும் கூட்டத்தானிடம் நாம் எந்த உரிமையில் அவனை எதிர்க்கிறோம்? மாட்டை வெட்டுவதும் தின்பதும் விற்பதும் மாட்டுக்குச் சொந்தக்காரனின் உரிமை என்றுதானே. அதே உரிமை ஏன் ஜல்லிக்கட்டு கேட்கும் மாட்டுக்காரனுக்கு இல்லை? ஜல்லிக்கட்டை விரும்புவதும் விரும்பாததும் மாட்டுக்காரனின் உரிமைதானே. 

இந்த நாட்டிலே எதில்தான் ஜாதியில்லை?

தங்களைத்தவிர வேறு எந்த ஜாதிக்காரனும் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது, விளையாடக்கூடாது, அப்படி நடத்தினால் எதிர்ப்போம் என்று எந்த ஜாதிக்காரனாவது சொல்கிறானா? இப்படிச் சொன்னால் இதுதான் ஜாதி வெறி. ஆனால் உண்மை என்ன?

எவனோ ஒரு அரைவேக்காடு "தன் ஜாதிக்கான விளையாட்டு" என்று சுவரொட்டி அடித்தான். அதை யாரும் ஆதரிக்கவில்லை. பிறர் எதிர்க்கவே செய்தார்கள். ஏறு தழுவுதல் எங்கு உருவானதோ அவர்களே அலப்பறை செய்யாமல் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். 

பறை அடிப்பதை எவ்வகையில் தமிழர் பண்பாடு என்கிறோம்?  எல்லோருமேவா பறை அடித்தார்கள்? தற்போது யாரும் பறையடிப்பதை யாரும் தடுக்கவில்லை. இதுதான் ஜனநாயகத்தன்மை உடையது. அது எங்களுக்கு மட்டுமே அடையாளம் என்று சொன்னாலும் அதையுமே நாம் விமர்சிக்கத்தான் செய்வோம். யாராவது அப்படிச் சொன்னால் அது அறிவுடைமையா? அதை நவீனப்படுத்தி வளர்க்கும் நாம் ஏன் ஜல்லிக்கட்டை மட்டும் எதிர்க்கிறோம்? 

ஜல்லிக்கட்டு நடத்த இன்று எவன் உரிமை கேட்கிறானோ அதே உரிமை தமிழனாக இருக்கும் எல்லோருக்குமே இருக்கிறது. 

சிந்துவெளி ஆவணங்களில் ஏறுதழுவுதல் அடையாளம் இருக்கிறது. இது தமிழர்களுடையது என்ற சான்று மதம் அற்ற நம் இலக்கியங்களில் இருக்கிறது. இதை ஒழித்துவிட்டு தமிழர் வரலாற்று ஆதாரமமாய் எதை காப்பாற்றப்போகிறோம்?

பெரியாரை எங்கள் ஜாதி என்று ஒரு அரைவேக்காட்டுக் கூட்டம் சுவரொட்டி அடித்து ஒட்டினார்கள். நாம் என்ன பெரியாரையா குறை சொல்கிறோம்? 

ஜாதி ஒழிப்பிற்கு மக்களை அணிதிரட்டுங்கள். அறிவுள்ள எவனும் இதை எதிர்க்க மாட்டான். 

பறை இசை இன்று சகலரும் கற்பதைப்போல ஜல்லிக்கட்டையும் ஜனநாயகத்தன்மைப்படுத்துங்கள். 

நான் மாடுகளால் வளர்ந்தவன். எங்கள் ஊரில் ஜல்லிக்கட்டு நடந்ததில்லை. நான் நேரில் பார்த்ததுமில்லை. நான் விளையாடக்கூடாது என்று யாராவது சொன்னால் முதலில் அதை செய்வேன். 

ஒரு ஊர் கபடியில் இன்னொரு ஊர்க்காரன் விளையாடுகிறானா? ஒரு ஊர்த் திருவிழாவில் இன்னொரு ஊர்க்காரன் நாட்டாமை செய்கிறானா? ஒவ்வொருவரும் நடத்தும் விளையாட்டில் அந்தந்த ஊர்க்காரர்களே பங்கெடுக்கும்போது ஜல்லிக்கட்டில் மட்டும் ஜாதி இருக்கிறது என்பது சரியான வாதம் இல்லை. 

எல்லா ஜாதியும் பங்கெடுக்கும் விழா என்று இன்னும் எதுவுமே இங்கு உருவாகவில்லை. பறை இசையை இப்போதுதான் எல்லோரும் கற்கிறார்கள். இதில் மாற்றம் வந்தது எப்படி?

காதல் பல உயிர்களை பலி வாங்கியுள்ளது. ஜாதி மோதலுக்கு வழி வகுத்துள்ளது. பட்டியல் வகுப்பினரை இன்னும் பதம் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டுடன் ஒப்பிடும்போது ஜாதி மோதலுக்கும் உயிர் பலிக்கும் அதிகம் அதிகம் காரணமாயிருந்தது; இருப்பது காதல்தான். நாம் காதலை ஒழிக்கலாமா? மேலும் தீவிரமாக ஆதரிக்கலாமா? 

இரட்டைக்குவளை இருந்தது என்பதால் அதை மட்டும் எதிர்த்து மாற்றினார்களா? இல்லை டீக்கடைகளே ஜாதிவெறி வளர்க்குமிடம் அதை இல்லாமல் ஒழிக்க வேண்டும் என்று போராடினார்களா?

ஜல்லிக்கட்டுக்கு தடை போட PETA என்பவன் யார்? உச்ச நீதிமன்றம் யார்? இது தமிழர்கள் மீதான ஆதிக்க நாட்டலே.

ஜல்லிக்கட்டு எல்லா மாவட்டங்களிலும் நடக்கிறதா? எனும் கேள்வி நியாயமற்றது. மீத்தேனும் கூடங்குளமும் நியூட்ரினோவும் எல்லா மாவட்டத்திலும் இல்லைதான். இதனால் அது அவரவர் பிரச்சினை மட்டும் என்று ஆகிவிடுமா? 

பட்டியல் வகுப்பிலும் ஏராளமான மாடுபிடி வீரர்கள் இருந்தனர்; இப்போதும் இருக்கின்றனர். அவர்களும் மருத நில வேளாண்மை மக்கள்தான். காளைகளும் வளர்க்கப்பட்டு அவரவர் பகுதியில் ஜல்லிக்கட்டு நடந்த ஆதாரங்களும் இருக்கின்றன. இது எங்கள் விளையாட்டு மட்டும் என்று சொல்பவர்களின் சூழ்ச்சியும் நோக்கமும் இவ்வாறான பிறரது பங்களிப்பை மறைப்பதுதான். 

மூத்தகுடியான தமிழனின் அடையாளமாக ஏறுதழுவுதல் இருக்கும்போது; அதில் எப்படி ஆதிகுடிகளுக்கு மட்டும் பங்கில்லாமல் இருக்க முடியும்?

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தோழர் திருமா அவர்களின் நிலைப்பாடே சரியானது என்பது என் பணிவான கருத்து.


புண்ணியம்

மாடுகளை வெட்டக்கூடாது. மாட்டுக்கறி தின்னக்கூடாது. ஆனால் மாட்டுக்கறியை வெளிநாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யலாம். தடையில்லை. 

உள்நாட்டில் மாடு மேய்ப்பவனுக்கு வருமானம் இருந்தால் என்ன? இல்லாமல் போனால்தான் என்ன? அவன் கோமாதாவை காப்பாற்றியாக வேண்டும். கோமாதா அவனை காப்பாற்றுகிறதா என்றெல்லாம் தேசவிரோதமாக கேள்வி எழுப்பக்கூடாது. 

மாட்டை வளர்ப்பதற்கே பிறந்து வாழ்ந்து மறைய ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; நேர்ந்துவிடப்பட்டு உள்ளது. அவன் விருப்பத்திற்கு வருமானம் ஈட்ட அவனுக்கு உரிமை இல்லை, தடுக்கப்படுகிறது. 

கோமாதாவுக்காக குரல் கொடுக்கிற இந்த "விசேஷ பிறப்பு ஜீவகாருண்யவாதிகள்" யாரும் ஆளுக்கு ஒன்றோ அல்லது வீட்டுக்கு ஒன்றோ வளர்ப்பதில்லை.

ஒரு கட்டு புல்லோ கீரையோ வாழப்பழமோ வாங்கி ஒரு தடவை கொடுத்துவிட்டாலே "புண்ணியம்" சுலபமாக கிடைத்துவிடுகிறது.

காலம் முழுதும் மாடு மேய்க்கிறவர்களுக்கு மட்டும் "அது" ஏனோ தலைமுறை தலைமுறையாக கிடைக்காமல் போகிறது...!!!

11.1.17

ஸ்டாலின் - தபெதிக சந்திப்பு

திமுக தலைவர் கலைஞர் உடல்நல விசாரிப்பு சந்திப்பு - சனவரி 10, 2017. 

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு. ராமகிருட்டிணன்,,,

கழக துணைத்தலைவர் மூத்த வழக்கறிஞர் துரைசாமி,,,

வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை,,,

சென்னை மாவட்ட செயலாளர் குமரன்,,,

கழக தலைமை நிலையச் செயலாளர் வழக்கறிஞர் வை.இளங்கோவன்,,,

 சுயமரியாதை மாணவர் இயக்க மாநில  ஒருங்கிணைப்பாளர் மனோஜ்குமார்,,,,

சென்னை தோழர்கள் விநாயக மூர்த்தி,கணேசன்  மற்றும் மருத்துவர் எழிலன் ஆகியோர்களுடன் இன்று,,

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களை கோபாலபுரம் இல்லம் சென்று சந்தித்தனர்,,,

 திமுக தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நலம் விசாரித்து செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது,,

கோவையில் நடைபெற்ற திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் தபெதிக சார்பாக வெளியிடப்பட்ட "100 புத்தகங்கள்" ஸ்டாலின்  அவர்களுக்கு இயக்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது,,

சுமார் 30 நிமிடங்கள் பல அரசியல் நிலவரங்கள் ஆலோசிக்கப்பட்டது,,,

- தந்தை பெரியார் திராவிடர் கழகம்





ஜல்லிக்கட்டு - இளைஞர்கள் கூடல்

ஜல்லிக்கட்டு வேண்டும் என மெரினாவில் கூடியவர்களை பலரும் பகடி செய்கிறார்கள்


இவ்வாறான பார்வையும் பகடிகளும் எக்கருத்தையும் யாரிடமும் கொண்டு சேர்க்காது


இனிமேல் இதற்கெல்லாமும் ஒன்றிணையுங்கள் என்று அழையுங்கள். அதற்கான வேலைத்திட்டம் நடத்துங்கள்


ஏதும் பிரச்சினை வராது என்று தெரிந்துதான் இப்படி கூடுகிறார்கள். அப்படி பிரச்சினை வரும் என நினைப்பதற்கு அவர்கள் வருவதில்லை. இவ்வளவுதான். இதற்குக் காரணம் அறியாமை.


அறியாமையில் இருக்கும் மக்களைக் குற்றம் சாட்டுவதால் பயனில்லை. இது அம்பேத்கரியப் பார்வை இல்லை


உங்கள் நியாயத்தை அவர்கள் ஏற்க தடையாக இருப்பதை ஒழிப்பதை நோக்கியே செயல்படுங்கள்


பாதிப்புக்கு உள்ளாகுபவர்களையே நம்மால் ஓரணியிலோ அல்லது ஒரு பேரணியாகவோ திரட்ட இயலவில்லை என்பதை கவனிக்கவும்


வெறுப்பான பார்வையை; அணுகுமுறையை மாற்றி உங்கள் கருத்தின்பால் ஆவல் கொள்ள வையுங்கள். நியாயத்தை புரிய வையுங்கள்


எல்லோரும் ஜாதி வெறியர்களல்ல. ஜாதி வெறியர்களை மட்டும் அவர்களிடமிருந்து தனிமைப்படுத்துங்கள். மற்றவரோடு நட்பு பாராட்டுங்கள். எல்லோரையும் குற்றவாளியாக சித்தரித்தால் யாரும் எப்போதும் எவருடைய அறைகூவலையும் பொருட்படுத்த மாட்டார்கள். இது, அவர்களின் அறியாமையையே அவர்களிடம் நியாயப்படுத்தும் வலுப்படுத்தும்


இயல்பிலேயே தீவிர வலதுசாரிகளாக வளர்க்கப்படும் அவர்களுக்கு தானாய் எல்லா நியாயங்களும் புரிய வாய்ப்பில்லைதான். அவர்களின் மூளையில் உங்கள் நியாயத்தை விடவும் எதிர்க்கருத்து பலமாய் விதைக்கப்பட்டுள்ளது. ஒரு வங்கிப் படிவத்தைக்கூட முழுமையாய் சரியாய் ஐயமின்றி நிரப்ப முடியாத கல்வி அவர்களுடையது. இருக்கும் தலைமைகளின்பால் ஏற்படும் வெறுப்பு அவர்களை போராடத் தூண்டவில்லை என்றும் இருக்கலாம். ஏதோ அத்தி பூத்தாற்போல் இப்போதுதான் வந்திருக்கிறார்கள். இது தொடர ஆவன செய்ய விழைவோம்.


இது என் கருத்து மட்டும்தான். ஏற்பதும் மறுப்பதும் தங்கள் உரிமை


நன்றி தோழர்...


9.1.17

"அம்பேத்கர்" பெயர்க்காரணம்

சிலர் அம்பேத்கர் என்பது பீமாராவ் அவர்களுக்கு பாடம் நடத்திய ஒரு பிராமண ஆசிரியர் பெயர் எனக் குறிப்பிடுகின்றனர். நன்றியால் அவர் பெயரை அம்பேத்கர் வைத்துக்கொண்டதாக தொடர்ந்து எழுதுகின்றனர். இதுவொரு தவறான செய்தி. பிரபல பதிவர் சகோதரர் Karthik Karthik அவர்களும் இவ்வாறே ஒரு பதிவு இட்டுள்ளார். ஆனால் உண்மை என்னவென்றால்...

// மராட்டிய கொங்கணி வட்டாரத்தில், ரத்னகிரி மாவட்டத்தில், அம்பாவடே என்னும் கிராமத்தில், மோவ் என்னும் இடத்தில் அம்பேத்கர் பிறந்தார். அது இராணுவக் குடியிருப்பு. ஆதலால் Military Head Quarters of War -MHQW- என அந்த இடம் பெயர் பெற்றது! அம்பேத்கரின் தந்தையார் இராணுவ சுபேதார், ராம்ஜி மாலேர்ஜி சக்பாலுக்கும் பீமாபாய் அம்மையாருக்கும் பதினான்காவது பிள்ளையாக, 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 இல் பிறந்தார். ‘பீம்’ என்றும், ‘பீமாராவ்’ என்றும் இயற்பெயர் பெற்றவரின் ஆதிக் குடும்பப் பெயர் சக்பால். ஆனால் பீமின் குடும்பப் பெயர், ‘அம்பவடேகர்’ என்பது ஆகும். ‘அம்பவடேக’ என்பது இவருடைய சொந்த ஊர் என்பதால், அம்பவடேகர் என்ற குடும்பப் பெயர்கள் முன்னோர்களின் சொந்த ஊரையே அடிப்படையாகக் கொண்டு இருக்கும். இப்பெயரே பின்னாளில் அம்பேத்கர் என மாறியது. //

மேலும் விவரம் கீழே...

அம்பேத்கர் என்பது பார்ப்பனரின் பெயர். அதனை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் நன்றியுணர்ச்சியின் அடையாளமாக வைத்துக் கொண்டுவிட்டார். அதனால் பார்ப்பனர்கள் நல்லவர்கள் என்ற பிரச்சாரத்தினை ஆர்எஸ்எஸ் கும்பல் செய்து கொண்டிருக்கிறது.

அண்ணல் அம்பேத்கரை இப்பொழுது ஆர்எஸ்எஸ் கும்பல் கபளீகரம் செய்யத் துடித்துக்கொண்டிருக்கிறது. 

அதற்காக எத்தகைய பொய்யையும் அவிழ்த்து விட அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அண்ணல் அம்பேத்கர் வாழ்ககை வரலாற்றை தனஞ்செய் கீர் என்பவர் எழுதியிருக்கிறார். அவர் ஒரு பார்ப்பனர். அத்துடன் இந்துமகாசபா ஆதரவாளர். அவர் வீர சவர்க்கருடைய வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். வீர சவர்க்கருக்கு ஆதரவாகவும் அந்த நூலில் பல இடங்களில் எழுதியுள்ளார். அம்பேத்கரை விமர்சனம் செய்தும் அந்த நூலில் சில இடங்கள் வரும். அம்பேத்கருடைய வரலாற்றில் சில விசமத்தனங்களையும் அவர் அதில் புகுத்தியுள்ளார். அதில் ஒன்றுதான் அம்பேத்கருடை பெயர் அவருடைய ஆசிரியர் பெயர். அதனை அம்பேத்கர் தன்னுடைய பெயராக ஏற்றுக் கொண்டார் என்று எழுதியுள்ளார்.

அதனை இப்பொழுது ஆர்எஸ்எஸ் காரர்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளனர். அம்பேத்கரது 
இளமைக்காலத்தில் பார்ப்பனர்கள் பல்வேறு இடையூறுகளைச் செய்து வந்துள்ளனர். இவர் ஒரு தீண்டத்தகாவர் என்பதால் இவரைத் தொட்டு அடித்தால் தீட்டாகிவிடும் என்பதால் அம்பேத்கரை அடிக்க மாட்டார்களாம். பல ஆசிரியர்கள் அம்பேத்கருக்கு பாடம் நடத்துவதையே விரும்ப மாட்டார்களாம். அம்பேத்கரும் அவரது அண்ணனும் பள்ளி செல்லுகின்றபொழுது கூடவே ஒரு கோணிப்பையையும் எடுத்துச் சென்று அதில்தான் அமர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர்.
ஒரு பார்ப்பன ஆசிரியர் நீயெல்லாம் எதற்குப் படிக்க வருகிறாய்? என்று கேட்டாராம். அதற்கு அம்பேத்கர் உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போங்கள் என்று பதில் சொன்னாராம். அதுபோல் அம்பேத்கர் மெட்ரிகுலேசன் வகுப்பில் படித்தபோது மொழிப்பாடமாக சமஸ்கிருதத்தை எடுத்துப் படிக்க நினைத்தாராம். பார்ப்பன ஆசிரியர்கள் சூத்திரனான உனக்கு சமஸ்கிருதத்தை சொல்லித் தரமாட்டோம் என்று கூறி விட்டார்களாம். அதனால் தனக்கு விருப்பமில்லாத பார்சி மொழியை எடுத்துப் படித்தார் அம்பேத்கர்.

பார்ப்பனர்கள் இவ்வளவு இடையூறு செய்துள்ளார்கள் என்பதனை மக்களுக்குத் தெரியப்படுத்தினால் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவு கிட்டாது என்பதால் இப்பொழுது அவரது பெயர்ப் பிரச்சினையை கெட்டியாகப் பிடித்துள்ளார்கள். அதாவது அம்பேத்கர் என்ற பார்ப்பன ஆசிரியர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களிடம் மிகவும் பிரியமாக இருந்ததால் அதன் நன்றி உணர்ச்சியாக அம்பேத்கர் அவர்களே தனக்கு அந்த ஆசிரியரின் பெயரை வைத்துக் கொண்டுள்ளார் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

உண்மையில் தனஞ்செய்கீர் அவர்களது நூலிலுள்ள தகவலே அதன் புரட்டை வெளிப்படுத்துகிறது. அதாவது பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி அம்பாவடேகர் என்பதாகும். அம்பாவடே என்பது அவரது ஊரின் பெயர். கர் என்பது அவரது தாயாரின் குடும்பப் பெயர். அந்த இரண்டையும் சேர்த்து அம்பாவடேகர் என்று பெயரை பள்ளியில் சேர்க்கும்போது பதிவு செய்துள்ளார்கள். பணியில் ஒழுங்கில்லாத சோம்பேறியான பார்ப்பன ஆசிரியர் அந்தப் பெயரை பள்ளி பதிவேட்டில் அம்பேத்கர் என்று எழுதிவிட்டார். இப்படித்தான் அண்ணல் அம்பேத்கருக்கு அந்தப் பெயர் வந்தது.

இதனை அப்படியே தலைகீழாகப் புரட்டி அம்பேத்கரே நன்றியுணர்ச்சியின் காரணமாக அம்பேத்கர் என்ற தனது ஆசிரியரின் பெயரை வைத்துக் கொண்டார் என்று எழுதி பார்ப்பன ஆசிரியர்கள் அம்பேத்கரின் கல்விக்கு செய்துவந்த இடையூறுகளை மறைக்கப் பார்க்கிறார்கள். அதை உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அமபேத்கருக்கு உதவி செய்ததாகச் சொல்லும் அந்த ஆசிரியரின் வாரிசுகள் இன்றைக்கு இருப்பார்கள் அல்லவா? அல்லது அம்பேத்கர் என்பது பார்ப்பன இனத்தவர் வைத்துக் கொள்ளுகின்ற பெயராக இருந்தால் மற்றவர் யாராவது அந்தப் பெயரில் இருப்பார்கள் அல்லவா?

தமிழகத்தில்தான் தந்தை பெரியார் இயக்கத்தின் சாதனையாக எவரும் தன்னுடைய பெயருக்குப் பின்னால் ஜாதியைப் போடுவதில்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் எல்லாம் ஒவ்வொருவரும் தங்களுடைய பெயருக்குப் பின்னால் வால் மாதிரி தங்கள் ஜாதியை ஒட்ட வைத்திருப்பார்கள். அந்த வாலை வைத்து அவர்கள் என்ன ஜாதி என்பதனைக் கண்டு பிடித்து விடலாம்.
ஆனால் மகாராஷ்டிராவில் ஒரு பார்ப்பனர் கூட அம்பேத்கர் என்ற பெயரில் இல்லையே ஏன்?

மகாராஷ்டிராவில் உள்ள பார்ப்பனர்களின் பெயர்கள் சில:

1) பட்னவிஸ் (தேவேந்திர பட்னவிஸ்)
2) கட்கரி (நிதின் கட்கரி) 
3) மகாஜன் (பிரமோத் மகாஜன்) 
4) தேசாய் (மொரார்ஜி தேசாய்)
5) ஹெட்கேவர் ( ஆர்எஸ்எஸ் தலைவர்)
6) கோல்வால்கர் (குருஜி கோல்வால்கர்)
7) சவர்க்கர் (வீரசவர்க்கர்)
8) கோட்ஷே (நாதுராம் கோட்ஷே)
9) திலக் (பாலகங்காதர திலகர்)
10) ரானடே
11) டென்டுல்கர்
12) மங்கேஸ்கர்
13) ஜோஷி
14) குல்கர்னி
15) பபட்
16) நட்கர்னி
17) ஷர்போத்தார்
18) ஆப்தே
19) ஷர்தேசாய்
20) பட்கே
21) தேஷ்பான்டே
22) தேவ்ரஸ்
23) தாக்கரே

இவையெல்லாம் உதாரணம். இதுபோல் நூற்றுக் கணக்கான பெயர்களில் பார்ப்பனர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அந்த நூற்றுக் கணக்கான பெயர்களில் ஒருவர் கூட அம்பேத்கர் என்ற பெயரில் இல்லை என்பது கவனிக்கத் தக்கது. அம்பேத்கர் என்பது பார்ப்பனரின் பெயர். அதனை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் நன்றியுணர்ச்சியின் அடையாளமாக வைத்துக் கொண்டுவிட்டார். அதனால் பார்ப்பனர்கள் நல்லவர்கள் என்ற பிரச்சாரத்தினை ஆர்எஸ்எஸ் கும்பல் செய்து வருமேயானால் இந்தக் கேள்விக்கு விடையளித்து விட்டு அதற்குப் பிறகு அந்தப் பிரச்சாரத்தினைச் செய்யட்டும்.
     
இவண் : பெல் ஆறுமுகம்.

8.1.17

மனித மிருகங்கள்

குறுகிய காலத்தில், உலகில் அதிகமான தமிழர்களைக் கொன்ற நாடு ஜப்பான். சயாம் மரண ரயில்பாதை அமைக்க சுமார் 1,60,000 பேர் கொல்லப்பட்டார்கள். இது பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை. 

அடுத்ததாக இலங்கை. இனத்தின் பேரால் சுமார் 2,50,000 தமிழர்களை படுகொலை செய்துள்ளது. இது பற்றி உலகம் கண்டுகொள்ளவில்லை.

அடுத்ததாக தமிழ்நாட்டுக்குள்ளேயே ஜாதியின் பேரால் தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்ந்துகொண்டே இருப்பதால் இன்னும் எண்ணிக்கையும் முடியவில்லை.

இச்செய்தியைப் படித்ததிலிருந்து கடும் மன அழுத்தமாக இருக்கிறது. 

கல்வியிலும் அறிவிலும் வளத்திலும் தழைத்தோங்கி பேதமற்று இன்புற்று வாழும் தமிழ்ச்சமுதாயம் அமைய கனவுகண்ட பாரதிதாசனின் கனவு கனவாகவே போய்விடுமோ...?



மனித மிருகங்கள்

குறுகிய காலத்தில், உலகில் அதிகமான தமிழர்களைக் கொன்ற நாடு ஜப்பான். சயாம் மரண ரயில்பாதை அமைக்க சுமார் 1,60,000 பேர் கொல்லப்பட்டார்கள். இது பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை. 

அடுத்ததாக இலங்கை. இனத்தின் பேரால் சுமார் 2,50,000 தமிழர்களை படுகொலை செய்துள்ளது. இது பற்றி உலகம் கண்டுகொள்ளவில்லை.

அடுத்ததாக தமிழ்நாட்டுக்குள்ளேயே ஜாதியின் பேரால் தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்ந்துகொண்டே இருப்பதால் இன்னும் எண்ணிக்கையும் முடியவில்லை.

இச்செய்தியைப் படித்ததிலிருந்து கடும் மன அழுத்தமாக இருக்கிறது. 

கல்வியிலும் அறிவிலும் வளத்திலும் தழைத்தோங்கி பேதமற்று இன்புற்று வாழும் தமிழ்ச்சமுதாயம் அமைய கனவுகண்ட பாரதிதாசனின் கனவு கனவாகவே போய்விடுமோ...?



7.1.17

"இட ஒதுக்கீட்டு உரிமை" - அதி அசுரன்

“இட ஒதுக்கீட்டு உரிமை” – அதி அசுரன், காட்டாறு வெளியீடு. 

• இட ஒதுக்கீடு என்பது என்ன?
• வகுப்புவாரி பங்கீடு என்றால் என்ன?
• ஜாதியடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது சரியா?
• பள்ளிகளில் ஜாதிச் சான்றிதழ் கேட்பது ஏன்? இதனால் ஜாதி உணர்வு வளர்கிறதா?
• இட ஒதுக்கீட்டால் தகுதி & திறமை பாழாகிறதா?
• இட ஒதுக்கீட்டில் பொருளாதாரா அடிப்படை கூடாதா? ஏன்?
• இட ஒதுக்கீட்டால் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியுமா?
• இட ஒதுக்கீட்டால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் நன்மையா? பிற்படுத்தப்பட்டோருக்கு & மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு நன்மை இல்லையா? 
• BC / MBC / SC / ST – இட ஒதுக்கீட்டில் அதிகம் பயனடைவது யார்?
• இட ஒதுக்கீட்டில் ஹிந்து மாணவர்களுக்கு சலுகைகள் இல்லை என்று சில அமைப்புகள் சொல்வது உண்மையா?
• முன்னேறிய நாடுகளில் இட ஒதுக்கீடு இருக்கிறதா?
• “க்ரீமிலேயர்” முறை கொண்டுவருவது சரியா?
• தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொண்டுவருவது சரியா? தவறா?
• இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சிலர் சொல்வது சரியா? நியாயமானதா?
• பார்ப்பன ஆதிக்கம் இன்றும் இருக்கிறதா?

இவ்வாறான எல்லா கேள்விகளுக்கும் தெளிவான; நியாயமான; உண்மையான விடை தருகிறது இச்சிறு நூல். 

இட ஒதுக்கீட்டால் இந்தியாவில் திறமைக்கு மரியாதை இல்லை என்ற பொய் தொடர்ந்து சமீபகாலமாக சிலராலும் சில ஊடகங்களாலும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் BC - 30%, MBC – 20%, SC – 18%, ST – 01% இதுதான் இட ஒதுக்கீட்டு கணக்கு. ஆனால் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி முதல் தலைமுறையாக படித்து வளரும் எல்லா சமூக இளைஞர்களும் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே எல்லா சலுகைகளையும் பெற்றுக் கொண்டிருப்பதாக சிந்திக்கவைக்கப் படுகிறார்கள். ஆனால் புள்ளி விவரங்கள் சொல்வது என்னவென்றால், இந்திய அளவில் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு இன்னும் சரிவர முழுமையாக நடைமுறைப் படுத்தவில்லை என்பதுதான். இந்தியாவில் எந்தெந்தத் துறையில் ஊழல் மலிந்துள்ளது என்பதை நீங்கள் பட்டியலிட்டால் அங்கு எந்த வகுப்பார் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்தால் இட ஒதுக்கீடு பற்றிய எல்லா எதிர் கருத்துக்களும் பொய்யே என்பது தெளிவாக விளங்கும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 69% வீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. பிற மாநிலங்களில் 50% வீதம் மட்டுமே. அத்துடன் இந்தியாவிலேயே இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் தமிழகம் முதல் இடத்திலும் மகாரட்டிரம் இரண்டாம் இடத்திலும் தெலங்கானா மூன்றாம் இடத்திலும் உள்ளது.

சுதந்திர இந்தியாவில் 59 வருடங்கள் கழித்துதான் ஒரு தாழ்த்தப்பட்டவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இன்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடங்களில் 15% வீதம் கூட மத்திய அர்சு முழுமையாய் நிரப்பவில்லை என்பது அதிர்ச்சியான உண்மை. ஆனால் BC-MBC-SC ஆகியோர் ஒருவருக்கு எதிராய் ஒருவர் தொடர்ந்து திட்டமிட்டு திருப்பிவிடப் படுகிறார்கள்.  

இட ஒதுக்கீட்டால் பயன்பெறும் அனைத்து BC /MBC /SC /ST சமூகத்தினரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். 

விலை வெறும் 10/- ரூபாய் மட்டும்தான். 

புத்தகம் பெற தொடர்புக்கு : 99762 56821, 99427 38950, 98940 69973, 97868 89325.

6.1.17

திராவிடன் - தமிழன்...? - கம்யூனிசம்

எவருடைய சான்றிதழிலும் "திராவிடன்" என்று இல்லை. 

ஹிந்து முஸ்லிம் கிறித்தவன் என்றுதான் இருக்கிறது. 

இதற்கு எதிர்வினை என்ன?

தமிழ்த்தேசியவாதிகளின் இதுவரையிலான போராட்டம் என்ன? இப்போது செய்துகொண்டிருக்கும் போராட்டம் என்ன? செயல்வடிவம்? 

ஆரியத்தை ஆதரிக்கிறவனும் எதிர்க்கிறவனும் எப்படி ஒரே பெயரில்? ஏன்


கம்யூனிஸ்ட் என்பவனுக்கு ஏன் தனிக் குறியீடு? கம்யூனிஸ்ட் என்று பெயரிடாமல் தமிழன் என்றே வைத்திருக்கலாமே? இதில் என்ன பிரச்சினை?


தமிழர் ராணுவம் என்று பெயர் வைக்காமல் ஏன் விடுதலைப் புலிகள் என்று பெயர் வைத்தார்கள் என்றால்...


இதுமாதிரிதான்.


இருவருக்கும் பொதுவுடைமைதான் இறுதி இலக்கு. வழிமுறைகள் வெவ்வேறு


கம்யூனிசம் உலகப் பொது சமூக விஞ்ஞானம்.


வர்ணாசிரமம் / பார்ப்பனீயம் இருக்கும் மண்ணில் திராவிடம் கூடுதல் தேவையானது.


இந்தியாவில் மக்கள் வர்க்க ரீதியாக வாழவில்லை. அவர்களை ஏழை பணக்காரன் முதலாளி தொழிலாளி என்று அணிதிரட்ட முடியாது. தன் ஜாதி முதலாளிக்கு எதிராக எந்தத் தொழிலாளியும் போராட முனைவதில்லை. இங்கு ஜாதிதான் எல்லா அநீதிக்கும் காரணம். ஜாதி முறையை ஒழித்தால்தான் வர்க்க உணர்வு வரும், அதுவரையில் வாய்ப்பில்லை என்ற பார்வை பெரியாருடையது.


ஏனைய நாடுகளைப்போல் முதலாளி தொழிலாளி என்றே மக்களை வர்க்கப் பார்வை கொண்டு அணிதிரட்டி சமதர்மம் ஏற்படுத்த முடியும் என்பது இந்திய பொதுவுடைமைவாதிகளின் பார்வை


எது சரியாக இருக்கும் என்பது அவரவர் அறிவு & அனுபவப் பார்வையைப் பொருத்தது.


//கம்யூனிஸ்ட் இன அரசியலை ஏத்துக்கவில்லை..அப்ப கம்யூனிசத்த நீங்க ஏத்துகீரீங்களா இல்லை மறுக்கீங்களா//


மனிதர்கள் தேசியம் என்ற பெயரில் பிளவுபட்டு வாழ்வதை கம்யூனிசம் ஆதரிக்கவில்லை


இயற்கைகளுள் ஒன்றுதான் மனித இனம். இந்த இயற்கை பரிணாம விதிகளின்படி மனிதர்கள் ஆதியில் வாழ்ந்த கூட்டு உடைமை சமூக வாழ்வை இன்றைய நவீனத்திலும் எளிமையாக செயற்படுத்தி, அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலான வாழ்வை அமைக்கவியலும் என்பதை விஞ்ஞான ரீதியில் விளக்கும் அறிவியலே கம்யூனிசம்


கண்டிப்பாக நான் ஏற்கிறேன்


(விருப்பப்பட்ட்டால் யார் எந்த தேசிய இனத்திற்கும் மாறலாம் என்று 1960 ல் ஐநா ஒரு தீர்மானம் இயற்றியுள்ளது)


//சாதி மேற்கத்திய நாடுகளில் இல்லை என்று எதை வைத்து முடிவுக்கு வந்தீர்கள்....evidence pls//


இல்லை என்று படித்ததால் சான்றுகளை தேடவில்லை.

3.1.17

போராட்டம் பரவாதது ஏன்?

சமீபமாக தமிழகத்தில் போராடுபவர்களை திட்டமிட்டு கடுமையாகத் தாக்குகிறது காவல்துறை. நேற்றுகூட மதுரையில் பணத்தட்டுப்பாட்டை சரிசெய்யக் கோரி மத்திய அரசை எதிர்த்து போராடிய "ஜ.மா.ச" பெண்கள் அமைப்பில் காவல்துறையால் தாக்கப்பட்ட ஒருவர் கவலைக்கிடம். 

அதற்கு முன் நாள் சென்னை பள்ளிக்கரணையில் போராடிய "ஜ.வா.ச" -ன் 30 பேரில் 14 பேர் மட்டும் தனியாகக் கூட்டிச் செல்லப்பட்டு மிகக் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். 

இச்செய்திகளின் மூலம் போராட வருபவர்களை எச்சரிக்கிறது காவல்துறை. 

முன்னாள் மக்கள் முதல்வர் ஜெ. மரணத்திற்காக 500-க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சியில் இறந்தார்களாம். உடனடியாக ஆளுக்கு 3 லட்சம் அறிவித்தார்கள். 

விவசாயிகள் அநாதைகளாக நிற்கிறார்கள். இதுவரையில் சுமார் 84 பேர்கள் வறட்சியால் இறந்துள்ளனர். ஆய்வு செய்ய உத்தரவு போட்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் நடவடிக்கை எடுக்கும் முன்னர் எத்தனைப்பேர் இறப்பார்களோ?...

ஜாதி, ஒரே ஊர் மக்களையே பகையாளியாகவே இருக்க வைக்கிறது. பாமர விவசாயிகள் ஒன்று சேர்வதையும் கிராமங்களில் தடுத்து வைத்திருக்கிறது. தன் ஜாதி தலைவனே தனக்கு மோட்சம் கொடுப்பான் என்று நம்ப வைத்திருக்கிறது. படித்தவர்களும் இதில் சிக்கிவிடுகிறார்கள். 

மக்கள் அருகருகே வாழ்ந்தாலும் தங்களுக்குள் தொடர்பற்று வாழ்கிறார்கள்.


எல்லா ஜாதிகளும் மதங்களும் பொதுமக்களுக்கிடையிலான நட்பையும் தொடர்பையும் அறுத்து சிந்தனையளவில் அவர்கள் ஒன்று சேராதபடி கூறுபோட்டு பெரும் இடைவெளியோடு வைத்திருப்பதால் எந்தவொரு அநீதிக்கும் எதிராக ஒருமித்த மக்கள் எழுச்சிக்கு இந்த மண்ணில் என்றைக்குமே வாய்ப்பில்லாமல் இருக்கிறது. 

தேர்தல் ஆதாயம் கருதாத இடதுசாரி சிந்தனை இளைஞர்கள் பெருகினால் மாற்றங்கள் சாத்தியம்.


2.1.17

ஜோதிமணி - "ஜோக்கர்"கள்

தனக்குப் பிரச்சினை வரும்போது ஜனநாயக சக்திகளின் உதவி கோருவதும் பின்னர் வேறு யாருக்கோ பிரச்சினை என்றால் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதுமாகவும் பாதிக்கப்படுபவர்கள் இருப்பது மாறவேண்டும். 

தன் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மீது அவதூறு எழுவதைக்கூட கண்டித்து போராடவோ எதிர்க்கவோ காங்கிரசு கட்சிக்கு நேரமில்லை. இப்பேர்ப்பட்ட கட்சியில் ஏன் ஜோதிமணி இருக்க வேண்டும்? வெளியேற முடிவெடுப்பாரா? மாட்டார். ஏன்? அவர் தனி நபர் நலன் அதனுள் ஒளிந்து கிடக்கிறது.

இனி இம்மாதிரியான கட்சியில் இருப்பதால் அவருக்கே பலமில்லாதபோது அநீதி இழைக்கப்படும் மக்களுக்கு என்ன அக்கட்சியால் நன்மை கிடைத்துவிட முடியும்?

இனி தன் கட்சியை மாற்ற கருத்துரிமைக்காக காங்கிரசில் உட்கலகம் செய்வாரா? செய்ய மாட்டார். 

தன் மீதான வார்த்தை தாக்குதலுக்கே இப்படி கலங்குகிறவர் கொத்து கொத்தாக தமிழ் மக்கள் செத்தபோது ஆற்றிய எதிர்வினை என்ன?

சுமார் 60 வருடங்களாய் ஆண்டு நாட்டை வாழையடி வாழையாய் கொள்ளையிட்டு லஞ்ச ஊழலில் மிதக்கவிட்டு இன்னமும் தமிழின வெறுப்பில் இயங்கும் காங்கிரசில் ஜோதிமணி இருப்பதற்கு என்ன முக்கிய நோக்கம்?

எந்தப் பிரச்சினையானாலும் இங்கே சளைக்காமல் போராடும் அந்த சில நபர்களுடன்தான் இனி ஜோதிமணிக்கள் ஐக்கியப்படுவது அவசியம் என்பதை நாம் உணர்ந்து வலு சேர்க்க வேண்டும். 

ஜோதிமணி மீதான ஆபாசத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்பதில் எதிர் கருத்தில்லை.

ஆனால் பிரச்சினை தீர்ந்ததும் அவர் காங்கிரசுக்கு வாக்கு கேட்டு போய்விடுவார். நடுநிலையுடன் அநீதிகளை எதிர்த்து குரல் கொடுத்தோர் மீண்டும் அதே சில ஆட்களோடு "ஜோக்கர்"களாக எண்ணிக்கையில் சிறுபான்மையாக குரல் கொடுத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை சுட்டிக்காட்டவே இந்த பதிவு.

காங்கிரசின் காவல்துறையோ ராணுவமோ போராடுபவர்களின் மண்டையை உடைக்கும்போது "ஜோதிமணி"கள் எப்போதும் குரல் கொடுப்பதில்லை ஏனோ.

1.1.17

முத்திரைக் கவிதைகள்

ஆனந்தவிகடன் இதழின் 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் 2002-ம் ஆண்டில் வாரம் ஒரு கவிதை என 75 முத்திரைக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கினார்கள். பின்னர் அந்த 75 முத்திரைக் கவிதைகளையும் தொகுத்து தனிப்புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்கள். இதில் பரிசுபெற்ற பலரும் தற்போது திரை பாடலாசிரியர்களாக இருக்கிறார்கள். இப்புத்தகம் "விகடன்" விற்பனை நிலையங்களில் கிடைக்கும். எல்லா கவிதைகளுமே நச்சென ஒரு உலகத்தை தேக்கி வைத்திருக்கும். கவிதை பிரியர்கள் ஒருமுறை வாங்கிப் படித்துப் பாருங்கள். 

ஆனந்த விகடன் இதழில் பரிசு பெற்ற எனது "முத்திரைக் கவிதை" கீழே படத்தில்.