16.1.17

"கடலும் கிழவனும்" - எர்னெஸ்ட் ஹேமிங்வே

The old man and the sea - by Ernest Hemingway

ஒரு கிழவனுக்கும் அவனது தூண்டிலில் அகப்படும் ராட்சத மீனுக்கும் (marlin வகை) இடையேயான போராட்டம்தான் இக்கதை. முழுக்க முழுக்க கடலில் நடப்பதால் வாசிப்பவர்களும் கடலில் பிரயாணம் செய்தது போன்ற அனுபவத்தை தருகிறது. 1952-ல் இந்தப் படைப்பு வெளியானபோது இருநாட்களில் 5.3 பில்லியன் பிரதி விற்றுத்தீர்ந்தது. இலக்கியத்திற்கான நோபல் பரிசும், புலிட்சர் விருதும் பெற்ற நாவல் இது.

ஒரு தீவிரமான சூழ்நிலையில், எதிர்மறையான நிலைமைகளிலும் போராடுவதற்கு வலுவுடன் எழும் உத்வேகம் குறித்து எழுதப்பட்ட மகத்தான படைப்பு இது. 1952-ல் வெளியிடப்பட்ட இப்படைப்பு, உச்சபட்ச வார்த்தைச் சிக்கனம் மற்றும் வர்ணனைகள் கொண்ட சிறுநாவலாகும். 1954-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றது. இப்படைப்பு மூலம் எர்னஸ்ட் ஹெமிங்வே உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார்.

கியூப புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோ இந்நாவலை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பாராம்.

இந்த நாவல் கடலில் மீன் பிடிக்க செல்லும் "சாண்டியாகோ" என்ற ஒரு செம்படவ முதியவரின் வாழ்க்கையில் 04 நாட்கள் கடலிலும் நிலத்திலும் சேர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகளின் தொகுப்பு.

அவருக்கு உதவியாகவும் மீன் பிடித் தொழிலைக் கற்றுக் கொள்ளும் வகையிலும்  "மெனோலன்" என்ற ஒரு சிறுவன் அவனுடய 5 ஆவது வயதில் அவரிடம் அவன் பெற்றோர்களால் வேலைக்கு சேர்த்துவிடப்படுகிறான். பல காலமாய் அவன் முதியவருடன் கடலுக்கு சென்று வருகிறான். இப்பொழுது அவன் ஒரு வளர்ந்த பையனாகி விட்டான். இவ்வளவு காலத்தில் இருவருக்குள்ளும் நல்ல அன்பு உருவாகி வளர்ந்துள்ளது.

கடந்த 84 நாட்களாக அந்த முதியவருக்கு கடலில் எதுவும் கிடைப்பதில்லை. அவருடைய அதிர்ஷ்டம் எல்லாம் தீர்ந்ததாகக் கூறி பையனின் பெற்றோர் 40 வது நாளிலேயே அவனை வேறொரு படகில் சேர்த்து விடுகின்றனர். ஆனால் பையனுக்கு முதியவரின் மேல் அதீத அன்பு. அவரை விட்டுப் பிரியவும் மனமின்றி பெற்றோர் சொல்லையும் மீற இயலாமல், வேறொரு படகில் சேருகிறான். இருப்பினும் கடலுக்கு சென்று வந்த பிறகும் செல்வதற்கு முன்னும் அவருக்கு உணவு வாங்கி வருவது, வலைகளை படகுக்கு எடுத்து செல்வது  உட்பட நிறைய பணிவிடைகள் செய்கிறான்.

அன்று விடிந்தால் 85-வது நாள். முந்தைய இரவு, சிறுவன் முதியவரை சந்தித்துப் பேசுகிறான். மறுநாளைக்குரிய தன்னுடைய கடல் பயணம் குறித்து யோசனையில் முதியவர் இருக்கிறார். சிறுவன் அவருக்கு ஏதேனும் உதவி செய்ய நினைக்கிறான். தானும் அவருடன் மறுநாள் கடலுக்கு வருவதாக சொல்கிறான் முதியவர் அதனை மறுக்கிறார். முதியவரிடம் தூண்டிலுக்கான மீன்களை மட்டுமாகிலும் வாங்கி வருவதாகச் சொல்லி வெளியே செல்கிறான். மறுநாள் மீன் பிடிக்க செல்வதற்காக சர்டினெ மற்றும் தூண்டில் முள் மீன்களையும் முதியவருக்கும் தனக்குமான இரவு உணவையும் வாங்கி வந்து தந்துவிட்டு உணவிற்குப் பின் தன் வீட்டிற்குச் செல்கிறான்.

முதியவரும் அடுத்த நாள் அதீத நம்பிக்கையுடன் கடலில் தனியாக செல்கிறார். முதல் நாள் கடலில் அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் நம்பிக்கையுடன் கடலில் நீண்ட தூரம் செல்கிறார். இரண்டாம் நாள் நடுக்கடலில் தூண்டிலிட்டு மீனுக்காக காத்திருக்கையில் ஏதோவொரு பெரிய மீன் சிக்கிவிடுகிறது.

அதன்பிறகு இருநாட்களாய் தனி ஆளாய் அந்த மீனுடன் (கிழவனின் படகைவிட பெரிய மீன்) கடுமையாக போராடி அதைக்கொன்று, படகுடன் சேர்த்து கட்டிக்கொண்டு கரை திரும்பும் வழியில் அந்த பிடிபட்ட பெரிய மீனின் ரத்த வாசனையை மோப்பம் பிடித்து சுவைக்க நிறைய சுறா மீன்கள் படகைத் தொடர்ந்து ஒவ்வொன்றாக வருகிறது. அவைகளுடன் கிழவனுக்கு மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கிறது. குத்தீட்டியால் சில சுறாக்களை கொல்வதும், பின் ஒரு சுறா குத்தீட்டியுடன் தண்ணீரில் முழ்கியதும் தன்னிடமுள்ள கத்தியால் தாக்க வரும் சுறாக்களுடன் போராடுவதும் என்று அவரிடம் இருந்த ஆயுதங்கள் பறிபோகிறது. கைகளும் வலுவின்றி மரத்துப்போய் 4 நாள் பயணத்தில் உடலும் சோர்வடைந்துவிட மனதை மட்டும் தளரவிடாமல் பின் தொடர்ந்து வந்த எல்லா சுறாக்களையும் கொன்றுவிடுகிறார்.

இறுதியாக அவர் கரைக்குத் திரும்பும்போது வழியில் எல்லா மீன்களும் சாப்பிட்டதில் வெறும் கூடு மட்டுமே அவர் பிடித்து வந்த மீனில் எஞ்சியிருக்கிறது. மீன் பிடிபட்டதும் என்னென்னவோ பெருங்கனவு கண்டு திரும்பிய அவர் அந்தச் சிறுவனிடம் மீன்கள் என்னைத் தோற்கடித்துவிட்டது என்று புலம்புகிறார்.

தினமும் மீன் பிடித்துவரும் அச்சிறுவன் தனக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தவர் அதிர்ஷ்டம் இல்லையென்று புலம்புவதைக் கண்டு கவலைப்படுகிறான். அவரைத் தேற்றுகிறான். முடிவாய் "அதிர்ஷ்டத்தை நான் அழைத்துக்கொண்டு வருகிறேன்; இருவரும் சேர்ந்து மீன் பிடிப்போம்" என்று சொல்கிறான்.

மீண்டும் கடலுக்குப் போவதைப் பற்றிக் கனவு காண்கிறான் கிழவன்.


No comments:

Post a Comment