12.1.17

ஜல்லிக்கட்டு - ஆதரவும் எதிர்ப்பும்

"தமிழர்களின் விவகாரங்களில் தமிழர் அல்லாதோர் முடிவெடுக்கும் முறைமை ஒழிக்கப்பட வேண்டும்" என்கிறார் பெரியார்.

மாடு வெட்டக்கூடாது மாடு தின்னக்கூடாது என்று சொல்லும் கூட்டத்தானிடம் நாம் எந்த உரிமையில் அவனை எதிர்க்கிறோம்? மாட்டை வெட்டுவதும் தின்பதும் விற்பதும் மாட்டுக்குச் சொந்தக்காரனின் உரிமை என்றுதானே. அதே உரிமை ஏன் ஜல்லிக்கட்டு கேட்கும் மாட்டுக்காரனுக்கு இல்லை? ஜல்லிக்கட்டை விரும்புவதும் விரும்பாததும் மாட்டுக்காரனின் உரிமைதானே. 

இந்த நாட்டிலே எதில்தான் ஜாதியில்லை?

தங்களைத்தவிர வேறு எந்த ஜாதிக்காரனும் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது, விளையாடக்கூடாது, அப்படி நடத்தினால் எதிர்ப்போம் என்று எந்த ஜாதிக்காரனாவது சொல்கிறானா? இப்படிச் சொன்னால் இதுதான் ஜாதி வெறி. ஆனால் உண்மை என்ன?

எவனோ ஒரு அரைவேக்காடு "தன் ஜாதிக்கான விளையாட்டு" என்று சுவரொட்டி அடித்தான். அதை யாரும் ஆதரிக்கவில்லை. பிறர் எதிர்க்கவே செய்தார்கள். ஏறு தழுவுதல் எங்கு உருவானதோ அவர்களே அலப்பறை செய்யாமல் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். 

பறை அடிப்பதை எவ்வகையில் தமிழர் பண்பாடு என்கிறோம்?  எல்லோருமேவா பறை அடித்தார்கள்? தற்போது யாரும் பறையடிப்பதை யாரும் தடுக்கவில்லை. இதுதான் ஜனநாயகத்தன்மை உடையது. அது எங்களுக்கு மட்டுமே அடையாளம் என்று சொன்னாலும் அதையுமே நாம் விமர்சிக்கத்தான் செய்வோம். யாராவது அப்படிச் சொன்னால் அது அறிவுடைமையா? அதை நவீனப்படுத்தி வளர்க்கும் நாம் ஏன் ஜல்லிக்கட்டை மட்டும் எதிர்க்கிறோம்? 

ஜல்லிக்கட்டு நடத்த இன்று எவன் உரிமை கேட்கிறானோ அதே உரிமை தமிழனாக இருக்கும் எல்லோருக்குமே இருக்கிறது. 

சிந்துவெளி ஆவணங்களில் ஏறுதழுவுதல் அடையாளம் இருக்கிறது. இது தமிழர்களுடையது என்ற சான்று மதம் அற்ற நம் இலக்கியங்களில் இருக்கிறது. இதை ஒழித்துவிட்டு தமிழர் வரலாற்று ஆதாரமமாய் எதை காப்பாற்றப்போகிறோம்?

பெரியாரை எங்கள் ஜாதி என்று ஒரு அரைவேக்காட்டுக் கூட்டம் சுவரொட்டி அடித்து ஒட்டினார்கள். நாம் என்ன பெரியாரையா குறை சொல்கிறோம்? 

ஜாதி ஒழிப்பிற்கு மக்களை அணிதிரட்டுங்கள். அறிவுள்ள எவனும் இதை எதிர்க்க மாட்டான். 

பறை இசை இன்று சகலரும் கற்பதைப்போல ஜல்லிக்கட்டையும் ஜனநாயகத்தன்மைப்படுத்துங்கள். 

நான் மாடுகளால் வளர்ந்தவன். எங்கள் ஊரில் ஜல்லிக்கட்டு நடந்ததில்லை. நான் நேரில் பார்த்ததுமில்லை. நான் விளையாடக்கூடாது என்று யாராவது சொன்னால் முதலில் அதை செய்வேன். 

ஒரு ஊர் கபடியில் இன்னொரு ஊர்க்காரன் விளையாடுகிறானா? ஒரு ஊர்த் திருவிழாவில் இன்னொரு ஊர்க்காரன் நாட்டாமை செய்கிறானா? ஒவ்வொருவரும் நடத்தும் விளையாட்டில் அந்தந்த ஊர்க்காரர்களே பங்கெடுக்கும்போது ஜல்லிக்கட்டில் மட்டும் ஜாதி இருக்கிறது என்பது சரியான வாதம் இல்லை. 

எல்லா ஜாதியும் பங்கெடுக்கும் விழா என்று இன்னும் எதுவுமே இங்கு உருவாகவில்லை. பறை இசையை இப்போதுதான் எல்லோரும் கற்கிறார்கள். இதில் மாற்றம் வந்தது எப்படி?

காதல் பல உயிர்களை பலி வாங்கியுள்ளது. ஜாதி மோதலுக்கு வழி வகுத்துள்ளது. பட்டியல் வகுப்பினரை இன்னும் பதம் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டுடன் ஒப்பிடும்போது ஜாதி மோதலுக்கும் உயிர் பலிக்கும் அதிகம் அதிகம் காரணமாயிருந்தது; இருப்பது காதல்தான். நாம் காதலை ஒழிக்கலாமா? மேலும் தீவிரமாக ஆதரிக்கலாமா? 

இரட்டைக்குவளை இருந்தது என்பதால் அதை மட்டும் எதிர்த்து மாற்றினார்களா? இல்லை டீக்கடைகளே ஜாதிவெறி வளர்க்குமிடம் அதை இல்லாமல் ஒழிக்க வேண்டும் என்று போராடினார்களா?

ஜல்லிக்கட்டுக்கு தடை போட PETA என்பவன் யார்? உச்ச நீதிமன்றம் யார்? இது தமிழர்கள் மீதான ஆதிக்க நாட்டலே.

ஜல்லிக்கட்டு எல்லா மாவட்டங்களிலும் நடக்கிறதா? எனும் கேள்வி நியாயமற்றது. மீத்தேனும் கூடங்குளமும் நியூட்ரினோவும் எல்லா மாவட்டத்திலும் இல்லைதான். இதனால் அது அவரவர் பிரச்சினை மட்டும் என்று ஆகிவிடுமா? 

பட்டியல் வகுப்பிலும் ஏராளமான மாடுபிடி வீரர்கள் இருந்தனர்; இப்போதும் இருக்கின்றனர். அவர்களும் மருத நில வேளாண்மை மக்கள்தான். காளைகளும் வளர்க்கப்பட்டு அவரவர் பகுதியில் ஜல்லிக்கட்டு நடந்த ஆதாரங்களும் இருக்கின்றன. இது எங்கள் விளையாட்டு மட்டும் என்று சொல்பவர்களின் சூழ்ச்சியும் நோக்கமும் இவ்வாறான பிறரது பங்களிப்பை மறைப்பதுதான். 

மூத்தகுடியான தமிழனின் அடையாளமாக ஏறுதழுவுதல் இருக்கும்போது; அதில் எப்படி ஆதிகுடிகளுக்கு மட்டும் பங்கில்லாமல் இருக்க முடியும்?

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தோழர் திருமா அவர்களின் நிலைப்பாடே சரியானது என்பது என் பணிவான கருத்து.


No comments:

Post a Comment