"தமிழர் திருநாள்" / "உழவர் திருநாள்" / "பொங்கல் திருநாள்" என்று எப்படியும் சொல்லிவிடக்கூடாது என்று சில "#_ஜி-க்கள்" மகர சங்கராந்தி வாழ்த்துக்கள் என்று எழுதுகிறார்கள். பண்டிகைகள் என்பது இங்கே ஒரு மனிதனின் அறிவை எப்படியெல்லாம் மழுங்கடிக்கிறது என்று பாருங்கள்.
அறிவியல் வளராத காலகட்டத்திலேதான் பூமியை சூரியன் சுற்றி வருவதாகச் சொன்னார்கள்; நம்பினார்கள். ஆனால் இன்றைக்கு அதுபற்றி தெளிவாகத் தெரியவந்த பின்னரும் கூட அப்படியே நம்பிக்கொண்டிருப்பவர்களை என்னவென்பது?
சூரியன் ஒரே இடத்தில்தான் இருக்கிறது. அதில் ஹைட்ரஜன் என்ற மந்த வாயு எரிந்து ஹீலியமாக மாறிக்கொண்டிருக்கிறது. அது நகர்வதில்லை. இந்த நிகழ்வில் வெப்பம் வெளியாக அதுவே ஒளியாகவும் வருகிறது. இந்த நகராத சூரியன் மகரத்திற்கு வரும்போது "மகர சங்கராந்தி"யாம்.
360 பாகையை சந்திரனின் சுழற்சியைக் கொண்டும் பருவகாலங்கள் மீண்டும் மீண்டும் வரும் கால ஓட்டங்களைக் கருத்தில் கொண்டும் தோராயமாக 12 ஆல் வகுத்து மாதங்களைக் கொண்டுவந்தார்கள். இம்மாதங்கள் என்பது பூமி சுழல்வதின் கணக்கு. இதைத்தான் ஜாதகத்தில் இன்னும் பூமியை கோள்கள் சுழல்வதாக நம்பி கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சூரியன் என்பது கோள் அல்ல, ஒரு எரி நட்சத்திரம். சந்திரன் என்பதும் கோள் அல்ல, ஒரு துணைக்கோள் மட்டுமே. ஆனால் "நவ கிரகங்கள்" என்றுதான் இன்னமும் மாற்றாமல் கவனமாக காப்பாற்றிக்கொண்டு வருகிறார்கள்.
பூமத்திய ரேகை, அட்ச ரேகை, தீர்க்க ரேகை என்பதெல்லாமும் கற்பனைதான். ஒரு வசதிக்காக வகுத்தார்கள். இதில் ஏமாற்று வேலையில்லை. அதேபோல் மேஷம் தொடங்கி மீனம் வரையிலான பெயர்களும் மாதங்களைப் பற்றிய கற்பனைதான். ஆனால் இதில் பிழைப்பை புகுத்தி பாதுகாக்கிறார்கள்.
பொதுவாக பண்டிகைகள் என்பதே "அறிவைக் கெடுப்பதாக ஹிந்து மதத்தில் இருக்கிறது" என்று பெரியார் சொன்னது மேலோட்டமானதல்ல.
"மகர சங்கராந்தி" என்று பெயரிட்டு கொண்டாடாமல் "உழவர் திருநாள்" என்று பெயரிட்டு கொண்டாடும் எம் பழந்தமிழர்களின் அறிவைக்கண்டு நாம் வியக்கிறோம்.
தமிழர்கள் ஹிந்து மதத்திற்குள் நுழைக்கப்பட்டவர்கள் என்பதற்கு பண்பாட்டு ரீதியிலான ஏராளமான சான்றுகள் இருக்கிறது.
தமிழர்களாய் பிறந்தும் கல்வி கற்றும் "மகர சங்கராந்தி" என்று வாழ்த்து தெரிவிப்பவர்களின் பதிவைக் கண்டால் வருத்தம் எழுகிறது.
சரி, அப்படியானால் "திராவிடர் திருநாள்" என்று ஒரு சாரார் பெயரிடுகிறார்களே என்று யாரேனும் கேட்கலாம். 95% வீதம் பேர் தமிழர் திருநாளாகக் கொண்டாடினாலும்கூட சகல அரசு அதிகார பலம் கொண்ட ஒரு 05% வீதம் பேர் அதை ஹிந்து மத பண்டிகை என்று நிறுவ மும்முரம் காட்டுவதால் 01% பேர் அதற்கு பதில் சொல்ல மட்டும் "திராவிடர் திருநாள்" என்று கொண்டாடுகிறார்கள். "தமிழர் திருநாள்" என்பதை மறுத்துவிட்டு அவர்கள் கொண்டாடவில்லை என்பதையும், கண்டும் காணாமல் பலர் கடந்துசெல்லும் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புதான் அவர்களுக்கு முக்கியப் பிரச்சினை என்பதையும் கவனிக்கவும்.
உழவர்கள் முக்கியமா? அல்லது மகரத்தில் சங்கரன் ஆந்துவது முக்கியமா? எது அறிவுடைமை?
"உழவர் திருநாள்" / "தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்" அனைவருக்கும்.
No comments:
Post a Comment