26.1.17

எச்சரிக்கை

தமிழ் இளைஞர்களின் தை எழுச்சியை இனி பலவாறாக ஒடுக்க நினைக்கும் அரசும் உளவுத்துறையும். 80-களில் அரசுக்கு எதிராக புரட்சிக்காரர்களாக வட தமிழகத்தில் உருவெடுத்த உழைக்கும் மக்களை பின்னாளில் ஜாதி மோதலால் திட்டமிட்டு பிரித்தார்கள். இப்போதும் மீனவர் பகுதியில் திருமா அவர்களின் படங்கள் இருக்கும் இடத்தைத்தான் அதிகம் தாக்கினார்களாம். ஆக ஒடுக்கப்பட்டவர்களை மேலும் மேலும் ஒடுக்கி வைக்கத்தான் அரசு விரும்புகிறது. மற்றவர்களெல்லாம் ஏதோவொரு ஆண்ட பரம்பரை கதைகளில் மூழ்கி புராணக்கதை மகுடிக்கு மயங்கி வாழ இதை புறக்கணிக்குக்கும் மக்கள் மட்டுமே அவர்களுக்கும் அவர்களது புனிதங்களுக்கும் சவாலாய் இருக்கிறார்கள். இந்தியா முழுதும் கவனித்தீர்களென்றால் புரட்சியும் புரட்சிக்கருத்துக்களும் மாற்றத்திற்கான செயற்பாடுகளும் ஒடுக்கப்பட்ட பட்டியல் வகுப்பினரிடமிருந்தே வெடித்துக் கிளம்புகிறது. இவர்களை ஒடுக்கிவிட்டால் வேறு யாரும் பிரச்சினை இல்லை என நினைக்கிறது அரசு. மற்றவர்கள் மீசையை முறுக்கிக்கொண்டு எளியவர்களிடம்தான் வீரம் என்று பேசுகிறார்களே தவிர அரசிடம் மோதுவதில்லை. ஆக மீண்டும் மீண்டும் மக்களுக்குள் பிளவுகளை உண்டாக்கி மோதவிட்டு தன்னை வலுப்படுத்திக் கொள்கிறது அரச பயங்கரவாதம். அது எந்த நேரத்திலும் எல்லோரையும் மிதிக்கும் என்ற நடைமுறை உண்மையைக்கூட படித்தவர்களும் புரியும் திறனற்றுக் கிடக்கிறார்கள் என்பதுதான் மிக வருத்தமான உண்மை.

தற்போது நெல்லையில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு பதற்றம் என்றும் போலிஸ் படைகள் குவிப்பு என்றும் தகவல் வருகிறது. வாகனங்களைக் கொளுத்திவிட்டு மக்களை ஒடுக்க ஒரு காரணம் தேடியவர்கள் அடுத்த காரணங்களையும் உருவாக்கக்கூடும். அவர்களிடம் சகல அதிகாரங்களும் குவிந்து கிடக்கிறது. நீதி தேவதை அவர்கள் வீட்டு எடுபிடி.

ஆகவே தோழர்களே பொதுமக்களே யாரும் உணர்ச்சி வசப்படாதீர்கள். அவர்களின் நோக்கத்தை உணர்ந்துகொள்ளுங்கள். ஜாதி மத பேதங்களை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணமோ நோக்கமோ விருப்பமோ இந்த அரசை இயக்கிக்கொண்டு இருப்பவர்களுக்கு அறவே இல்லை. முடிந்தவரையில் அதை ஆதாயமாக்க அலைவதே இவர்களின் பிழைப்புக்கு ஒரே வழி.

யார் படித்தாலும் சிந்திக்கத் தூண்டுபவர் அம்பேத்கர். அவர் யாருக்கும் வெறுப்பானவர் அல்ல. இந்த நாட்டிலே ஆண்ட ஆளும் விருது பெற்ற ஆளுமைகளாய் முட்டுகொடுக்கப்பட்ட எல்லோரையும்விட, அநீதி இழைக்கப்பட்ட இந்த நாட்டின் எல்லா எளிய மக்களுக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் வாழ்நாளெல்லாம் சிந்தித்தவர் செயற்பட்டவர்.

அனைத்து சமூக நண்பர்களும் இதை உணர்ந்து அரச பயங்கரவாத சூழ்ச்சி வலையில் யாரும் சிக்காமல் முறியடிக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

"தோழர் அம்பேத்கரைக் கொண்டாடுவோம்"

No comments:

Post a Comment