மாண்புமிகு முதல்வர் ஜி,
"அண்ணா திமுக" என்ற உங்கள் கட்சியில் இருக்கும் "அண்ணா" என்ற பெயரில் ஒருவர் இருந்தார். அவரைப் பற்றி படித்திருக்க தங்களுக்கு நேரமில்லாமல் போயிருக்கலாம்.
கழகத்தின் முன்னாள் நிரந்தரப் பொதுச்செயலாளர் பெரிய அம்மா செல்வி ஜெயலலிதா இருந்தவரையில் உங்கள் கட்சியின் சுவரொட்டிகளில் ஒரு ஓரமாய் ஒரு தாடிக்கார கிழவன் படம் இருக்கும். அவர் பெயர் பெரியார் ஈ.வெ.ரா. அவரைப் பற்றி உங்களுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை; ஆனால் உங்கள் திடீர் டில்லி நண்பர்கள் விவரமாகச் சொல்லியிருப்பார்கள். கடவுள்களை எதிர்த்து நாத்திகம் பேசிய கிழவன் என்றாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கவும் கூடும்.
இந்த நாடு சுதந்திரம் அடைந்த நாளிலேயே அதைக் "கருப்பு நாள்" என்று எவனுக்கும் அஞ்சாமல் எழுதினார் பேசினார். தனித்தமிழ்நாடு கேட்டார். இந்தியக் கொடியை எரித்தார். சட்டங்களைக் கொளுத்தினார். உங்கள் நண்பர் சேகர் ரெட்டி இதையெல்லாம் உங்களிடம் சொல்லாமல் மறைத்திருக்கலாம்.
"தனித்தமிழ்நாடு" என்ற உரிமைக்குரல் கடந்த வாரம்தான் மெரீனாவில் எழுந்தது என்பது உங்களைப் பொருத்தவரை உண்மைதான்.
8 கோடிப்பேர் கொண்ட உங்கள் மாநிலம் விரும்பும் ஜல்லிக்கட்டை நடத்தக்கூட உங்களை அலையவைத்து இழுத்தடித்து உங்கள் கட்சி எம்.பி.க்களை உதாசீனப்படுத்தி ஆயிரம் காரணம் சொன்னவர்கள் இன்னும் இருக்கும் காவிரி மேலாண்மை வாரியம் முதலான எல்லா பிரச்சினைகளுக்கும் எப்படியெல்லாம் அலையவிடப் போகிறார்கள் என்பதை நாங்களும் பார்க்கத்தான் போகிறோம்.
இந்தத் தனிநாடு கோரிக்கை வைக்கும் சமூக விரோதிகள் சிலராவது உங்கள் மாநிலத்தில் இருப்பதால்தான் உங்களை கொஞ்சமாவது டெல்லி மதிக்கிறது என்பதை கொஞ்சமேனும் அரசியல் தெரிந்தவர்களே உணரமுடியும்.
வரலாறு ஒரு அருமையான வாய்ப்பை உங்களுக்கு வழங்கியிருக்கிறது.
மக்களின் உணர்வுகளை உரிமைகளை எதிர்ப்புகளை மதித்து நடப்பதுதான் மக்களாட்சி என்பதையும்; யாரையும் ஒடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும்; தமிழர்கள் டெல்லிக்கு அடிமைகளில்லை என்பதையும் முடிந்தால் அவர்களுக்குப் புரியவையுங்கள். நீங்களும் புரிந்துகொள்ளுங்கள்.
பிறகு, ஏன்? எதற்கு? யார்? தனிநாடு கேட்கப் போகிறார்கள்?
No comments:
Post a Comment