10.3.14

எதிர்ப்பரசியலால் மட்டும் பயனுண்டா?

தமிழர்களின் பிரச்சனைகளை கருத்தில் கொள்ளாமல் பதவி சுகத்தை மட்டுமே குறிவைத்து அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் மாநில கட்சிகளான திமுக / அதிமுக-வை நம்பிக்கொண்டும், இன்னமும் வலுப்பெறாத மதிமுக / தமிழ்தேசிய இயக்கங்களை நம்பிக்கொண்டும்... 

எல்லா மாநிலங்களிலும் தன் விசுவாச அடிமைகளைக் கொண்டு ராட்சத பலத்துடன் படர்ந்திருக்கும் காங்கிரசு / பாஜக என்ற இரண்டு தேசிய கட்சிகளையும் ஒரே நேரத்தில் எதிர்த்துக்கொள்வது தமிழினத்திற்கு பேராபத்தே. இன்னும் ஐந்தாண்டுகளில் தமிழர் பிரச்சனைகள் யாவும் இவ்வாறே இழுத்தடிக்கப்படும் என்பதே உண்மை. தேசிய கட்சிகளின் அதிகாரத்தை மீறி எந்த பிராந்திய / மாநிலக் கொம்பனாலும் எதையும் அசைக்க முடியாது என்பதற்கு கடந்த காலங்களே சாட்சி.

திமுக / அதிமுக / காங்கிரசு / பாஜக - என எல்லா கட்சிகளையும் எதிர்த்துக்கொண்டு மாற்றத்தை முன்னெடுக்கும் அளவுக்கு தமிழினத்தில் ஏதேனும் வலுவான தலைமையிருக்கிறதா? செயல்திட்டம் இருக்கிறதா?  

வலுப்பெறாத ஒரு அடிமை இனம், அதிகாரக் கட்சிகளை எதிர்த்துக்கொண்டிருப்பதில் என்ன லாபம்? யாருக்கு லாபம்?

சீனாவையும் (கோயில்கள் இடிப்பு / மசூதிகள் இடிப்பு) இந்தியாவையும் பாகிஸ்தானையும் மயிரளவுக்கும் மதிக்காமல் நட்பாய் மட்டும் காட்டிக்கொண்டு தேவைப்படும்போது தங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ளும் சிங்களர்களின் ராஜதந்திரத்தை தமிழ் இயக்கத் தலைவர்கள் கவனத்தில் எடுப்பார்களா? எல்லா மாநில அரசியல் கட்சிகளும், பிற மாநிலத்தவர்களும், வேற்று இனத்தவர்களும் துளி வெறுப்பின்றி தமிழனுக்காக குரல்கொடுக்கும் நிலைவர செயலாற்றுவார்களா? 

வானவியல் புவியியல்

சூரியன் தன்னைத்தானே சுற்றுவதில்லை. சூரியனில் நடப்பது வெப்பச்சலனம்தான். அதாவது ஹைட்ரஜன் என்கிற ஒரு மந்த வாயுவானது ஹீலியம் என்கிற இன்னொரு மந்தவாயுவாக மாறுவது. சூரியன் ஒரே இடத்திலேயே இருக்கிறது. 

ஆதிகாலத்திலிருந்து மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருட ஆரம்பம், பெயர்கள், நேரம், காலங்கள் எல்லாமே மாறி மாறி கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் எல்லாமே வானவியலை அடிப்படையாகக்கொண்டதுதான். அதில் ரோமன் / கிரேக்கமே பிரதானமானது. 

ராகு, கேது என்ற நிழல் கிரங்கள் தவிர்த்த ஏனைய பிற முக்கிய கிரகங்களான ஏழு கிரகங்களின் அடிப்படையிலேயே வார நாட்கள் கணக்கிடப்படுகிறது. சோதிடத்திலும் ராகு, கேது கிரகங்களுக்கென்று தனியாக வீடுகளில்லை. பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்ட யுரேனஸ், நெப்டியூன் (ராகு, கேது) என்கிற கிரகங்களின் கதிர்கள் பூமியை அவ்வளவாக பிற கிரகங்களின் கதிர்களை போல பாதிக்கவில்லை என்பதால் அவைகளுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது என்று கருதுகிறேன். 

இவ்வாறே ஒரு நாள்பொழுது என்பது பூமியின் சுழற்சியையும், வாரம் என்பது முக்கிய 7 கிரகங்களின் குறிப்பீடாகவும், மாதம் என்பது பூமியை சுற்றிவரும் சந்திரனின் ஒரு சுழற்சியையும், மாதங்களின் பெயர்கள் நட்சத்திர மண்டலங்களை கணக்கில்கொண்டும், வருடம் என்பது சூரியனை சுற்றிவரும் பூமியின் சுழற்சியை அடிப்படையாகக்கொண்டும் கணக்கிடப்படுகிறது. 

சோதிடத்தில், பூமியை எல்லா கிரகங்களும் சுற்றி வருவதாகக் கணக்கிட்டுத்தான் பின்பற்றி வருகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. சூரியனைத்தான் பிற கோள்கள் சுற்றிவருகிறது என்ற அறிவியல் கண்டுபிடிப்பிற்குப் பின்னரும் சோதிடக் கணக்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த மாற்றத்தை உள்வாங்கி வேறொரு சோதிடக்கணக்கை உண்டாக்கியவர் கிருஷ்ணமூர்த்தி பத்ததி. 

(இவை யாவும் என் சொந்தப் பார்வையே)

9.3.14

தமிழும் அதன் வளமும்

தமிழில் ஏராளமான இலக்கியங்கள் உள்ளன. வாழ்நாள் முழுமையையும் இலக்கியம் வாசிக்கத் தயார் என்று காலவரிசைப்படி எடுத்து அமர்வீர்கள் என்றால் உங்களுக்கு ஆயுள் போதாது. அதுவுமில்லாமல் அந்தந்த இலக்கியச் செல்வங்களில் மூழ்கி முத்தெடுக்க முனையும்போது, அதன் இனிமைக்குள் மயங்கி, கடந்து செல்வதை மறந்துவிடுவீர்கள். 

திருக்குறளைக் கடந்து வருவதற்கே உங்களுக்கு ஓராண்டு தேவைப்படலாம். ஒவ்வொரு குறளும் புதிது புதிதாகப் பொருள் விளக்கமாகிக்கொண்டே இருக்கும். அண்மையில் நான் திருக்குறளுக்கு உரையெழுதும் பணியில் ஈடுபட்டிருந்தபோது என்னை நாள்கணக்கில் நிறுத்தி வைத்த குறள்கள் பல. 

‘பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோ நம்
பெண்மை உடைக்கும் படை’ 

என்ற குறளைக் கண்டதும் நான் திகைத்துப் போய்விட்டேன். இக்குறள்கள் அடிக்கடி எடுத்தாளப்பெற்று நமக்குப் பழக்கமாகியிருக்கவில்லை. ‘பல மாயங்கள் புரிகின்ற கள்வன், திருடன் இவன். அதற்கெல்லாம் பெண்ணாகிய நாம் அஞ்சமாட்டோம். யாம் நற்குணங்கள் என்னும் கோட்டையைக் கட்டி எழுப்பி அதில் அரசியாக வீற்றிருக்கிறோம். இவன் இங்கே வந்து என்ன செய்துவிட முடியும்? ஏதேனும் சிறுபொருள் திருடிச் செல்லமுடியும். என் சிறு கவனத்தைக் கவரமுடியும். மற்றபடி என்னைக் கவர்ந்துவிட முடியுமோ இவனால்? ஆனால், எத்தனை தூரம் பணிந்து இணக்கமாக இழைவாகப் பேசுகிறான்? அந்தப் பணிந்த மொழிகள் என் பெண்மை என்னும் கோட்டையை உடைத்துவிடும்போல் உள்ளனவே. கோட்டையைக் கொத்தி உடைக்கிறானே, அது ஒன்று இரண்டல்ல படைகளாய்ப் பெருகித் தாக்குகின்றனவே’ என்று பொருள் விரியும்போது நான் வியந்து அமர்ந்துவிட்டேன். எண்ணி எண்ணி மகிழ்ந்துகொண்டிருந்தேன். அதுபோல்தான் தமிழில் உள்ள இலக்கியங்கள் எல்லாமே. அவை பழைய கள். உன்மத்தத்தின் அளவை அளக்க இதுகாறும் அளவுமானி எதுவும் தோன்றவில்லை.

அதனால்தான் பாரதிதாசன் தமிழின் அருமையை இவ்வாறு பாடினார் :-

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல் 
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சும் 
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை 
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை 
என்னுயிர் என்பேன் கண்டீர்.

தமிழின் பழைமையைக் கருத்தில்கொண்டு திரும்பினால் எண்ணற்ற இலக்கிய வகைகள் இருக்கின்றன. சங்கப் பாடல்கள், ஐம்பெருங்காப்பியங்கள், கம்ப இராமாயணம், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், சித்தர் பாடல்கள், தனிப்பாடல்கள் என அவை ஏராளம். சங்கப் பாடல்களை உங்கள் வாழ்வில் கற்பதற்கு வாய்த்தால் அது பெரும்பாக்கியம். ஒவ்வொரு பாடலையும் அணு அணுவாகப் புரிந்துகொள்ளும்போது உங்களுக்குள் ஏற்படும் தெளிவு வேறுவகை. ஐம்பெருங்காப்பியங்களைக் கற்றீர்கள் என்றால் எண்ணற்ற நிலங்களின் வழியே இரண்டாயிரமாண்டுப் பழந்தமிழர்களோடு வாழ்ந்துவிடுவீர்கள். கம்ப இராமாயணத்தைப் படித்துத் தமிழின் முழுமையை உணரலாம். அற இலக்கியங்களைப் பயின்றால் இத்தனை நீதிகளை வகுத்துக்கொண்ட, இந்த மொழி மாந்தர்கள் வழியில் நாமும் தோன்றியிருக்கின்றோமா என்ற செம்மாப்பு தோன்றும். 

'தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று’ 

என்று பாடிய மரபை உடையவர்களாயிற்றே நாம். தனிப்பாடல்களில் இல்லாத சுவையே இல்லை எனலாம். இன்றெல்லாம் யாருக்காவது சிலேடை என்றால் என்னவென்று தெரியுமா என்று அஞ்சுகிறேன். தனிப்பாடல்களில் காணப்படும் காளமேகப் புலவர் தமிழின் பெரும்புலவர்களில் ஒருவர்

கத்துக் கடல்சூழ் நாகைக் காத்தன் சத்திரத்தில் 
அத்தமிக்கும் போது அரிசிவரும் - குத்தி 
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம் 
இலையிலிட வெள்ளி எழும்

-என்று சிலேடையாகப் பாடிய வரிகள் நினைவுக்கு வருகின்றன. பிச்சை பெற்று அன்னம் உண்கின்ற இடத்தில் எழுந்த கோபத்தை அடக்கமாட்டாமல் இருபொருள்படப் பேசிய அப்புலவன் யாருக்கும் தலைவணங்கி இருக்கமாட்டான் என்றே நம்புகிறேன். 

எப்படிப் பார்த்தாலும் தமிழ் மரபில் ஆயிரக்கணக்கான புலவர்கள் செய்யுள் எழுதியிருக்கிறார்கள். நம் கைவசம் இலட்சக்கணக்கான பாடல்கள் உள்ளன. பல இலட்சக்கணக்கான பாடல்களைக் காலத்தின் கறையானிடம் தின்னக் கொடுத்த பின்னும் நமக்கு மீதமிருப்பனவற்றை வாசித்து அடங்க ஒருவனின் ஆயுள் போதாது என்றால் நம் செல்வங்களின் பேரளவை நினைத்துப் பார்க்கலாம்.

இவற்றில் ஒரு பிரிவாகச் சிற்றிலக்கியங்கள் உள்ளன. இலக்கியம் என்றால் இலக்கியம்தான், அதிலென்ன சிற்றிலக்கியம் பேரிலக்கியம் ? ஒருபொருள் சார்ந்து - அதைத் தமிழில் துறை என்கிறார்கள் – இயன்றவரை விரிவாக அல்லது முடிந்தவரை சுருக்கமாக இலக்கணம் வகுத்த வழியின்படி பாடிச் செல்கின்ற இலக்கியங்கள் அவை. வாய்ப்பாட்டாகப் பாடி முடிக்கும்போது ஓரமர்வில் ஒருபொழுதில் தொடங்கி அடங்குகிற இலக்கிய வடிவம். 
தாலாட்டுப் பாட்டு இருக்கிறது, பிள்ளை தூங்கியபின்பு யாராவது பாடுவார்களா ? ஒப்பாரிப் பாட்டு இருக்கிறது, செத்து சவ அடக்கம் செய்து 16 நாள்கள் கழிந்த பின்னால் யாராவது ஒப்பாரி வைத்துக்கொண்டு இருப்பார்களா ? அம்மாதிரிதாம் சிற்றிலக்கியங்களும்.
அந்தக் காலங்களில் அதற்கு நிகழ்கலைத் தன்மை இருந்திருக்கிறது. ‘பாடுய்யா பார்ப்போம்’ என்று வள்ளல்கள் சொல்ல, புலவர் பாடியிருக்கிறார். அப்படிப் பாடும்போது ‘அட... வீணாப் போனவரே.. விளங்காமப் போனவரே’ என்றா பாடமுடியும் ? நீர் நல்லவர், வல்லவர், நடையழகர், சிரிப்பழகர் - என்றெல்லாம் பாடிப் பரிசில் வாங்கிச் செல்வர். புகழ்வது, ஒன்றில் ஏற்றிப் பாடுவது, கற்பனைக்கு மொழி வடிவம் தருவது - அந்தக் காலத்தில் அருமையான செயல். இன்றைய நிலைமையை வைத்தெல்லாம் இதை இழிந்துபேச முடியாது என்பதே என் கருத்து. பால்ய விவாகத்திலிருந்து விடுபட்டதும், உடன்கட்டை ஏறும் வழக்கை ஒழிக்கப் பாடுபட்டதும் நம் காலத்துக்குச் சற்று முந்திதானே நடந்தன? அப்படிப்பட்ட காலங்களில் பாடப்பட்டவை சிற்றிலக்கியங்களாக நம்முன் கிடக்கின்றன. 

இறைவனை அரசனை மற்றும் சக மனிதர்களை அவர்களின் செந்தகைமை வியந்து பாடியிருக்கின்றார்கள். அதில் பாடப்பெற்றுள்ள தகைமையுடையவர் நிச்சயமாக வாழ்ந்திருப்பார், அதில் வருகின்ற ஊரும் இயற்கையும் தாவரங்களும் விலங்குகளும் காடுகளும் நிலங்களும் அதே செழுமையோடு குன்றாத வளத்துடன் இருந்திருக்கும் என்றே நம்புகிறேன். நாம் வாழ்கின்ற இந்தக் காலத்திலேயே மழை பொழிகின்றது என்னும்போது அந்தக் கால வாழ்வு அப்படியொன்றும் இழிந்ததாக இருந்திருக்காது. அதில் இலங்குகின்ற தமிழும் பண்பாட்டுத் தகவல்களும் மிகமிக முக்கியமானவை.

தமிழில் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கு உள்ள சிக்கல் என்னவென்றால் பழந்தமிழ் இலக்கியங்களோடு அவர்களுக்கு எந்தப் பரிச்சயமும் இல்லை. அதிகபட்சம் திருக்குறள் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. பத்திருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் நிலைமை இப்படியில்லை. சுஜாதா சங்க இலக்கியங்களுக்கு உரையெழுத முயன்றார். ஜெயகாந்தன் கம்பனைப் பற்றி மிகச் சிறப்பாக அறிந்தவர். கடைசியில் இந்நிலை முற்றி இன்றெழுதப்படுகிற கவிதைகளைக்கூட யாரும் படிப்பதில்லை என்னும் நிலைமை வந்துவிட்டது. நாஞ்சில் நாடன் இதற்கு விதிவிலக்காகத் திகழ்கிறார். அவர் தேர்ந்துள்ள புனைகதை மற்றும் வாழ்வியற்கூ றுகளை விவரிக்கும் கட்டுரையுலகுக்கு இது முற்றாக வேறானதுதான். இதையெழுதும் நேரத்தில் ஒரு நாவலை எழுதிப் புகழ் சம்பாதிக்கும் செயலில் அவர் இறங்கியிருக்கலாம். இத்தனைக்கும் ஒரு நாவல் எழுதுவதைக் காட்டிலும் அதிக உழைப்பைக் கோருகிற பணி இது. 98க்குப் பின்பாக அவர் புதினம் எதையும் எழுதியதாகத் தெரியவில்லை. ஏதேனுமொரு நற்செயலை இந்தச் சமூகத்திற்கு உருப்படியாகச் செய்து தரவேண்டும் என்று ஆசையுற்றதால்தான் இத்தகைய முயற்சியிலேயே ஈடுபட்டிருக்கவேண்டும். இந்தக் காரணத்திற்காகவே அவரை அவர் ஆசைப்படுவதுபோல அழைக்கக் கடமைப்பட்டுள்ளோம். நாஞ்சில் நாட்டு வீரநாராயண மங்கலத்து ஓரேர் உழவர் ஸ்ரீ கணிபதிபிள்ளை மகனார் நாஞ்சில் நாடனார்.

பழந்தமிழ் இலக்கியங்களைப் படிப்பது கடும்பணி. அதற்கு முறையான பயிற்சி வேண்டும். நானும் படிக்கிறேன் என்றெல்லாம் படித்துவிடமுடியாது. பிடிபடாது. மறைமலை அடிகள் சொல்வதுபோல் பதின்பருவத்திலிருந்தே தொல்காப்பியத்தோடும் திருக்குறளோடும் மனனப் பயிற்சி இருக்கவேண்டும். அப்பொழுதுதான் பழந்தமிழ்ப் பிரயோகங்கள் உங்களை வெளித்தள்ளாமல் உள்ளிழுத்துத் தம் அழகுகளைக் காட்டும். நாஞ்சில் நாடனுக்கும் இளமை முதல் பழந்தமிழ் இலக்கியங்களோடு ஆழ்ந்த வாசக நெருக்கம் இருந்திருக்கிறது. புனைகதை உலகில் இயங்கிக்கொண்டே அவற்றோடு நல்லுறவு பேணியிருக்கிறார் என்பதற்கான எல்லாத் தடயங்களும் இந்நூலில் உள்ளன. இல்லாவிட்டால் இதில் மூழ்கி முத்தெடுக்க முடியாது. ஒவ்வொரு நூலாகத் தேடிச்சென்று, நண்பர்களின் நூலக அடுக்குகளைத் தூசியெழத் தட்டி, ஒவ்வொருவருவரிடத்திலும் வாய்விட்டுக் கேட்டுப் பெற்று அவற்றை மெனக்கெட்டு வாசித்துப் பொருள் புரிந்து - இந்த நூலை எழுதியிருக்கிறார். தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் குறித்துத் திரண்ட தகவல்களோடு நிரல்பட எழுதப்பட்ட ஒரே நூல் என்று இதைத்தான் கூற வேண்டும்.
தமிழ் இலக்கணப் பத்திகளை நான் இணையத்தில் எழுதுவதுண்டு. இதெல்லாம் நம் வேலையில்லை, தகுதிவாய்ந்த புலவர்கள் பண்டிதர்கள் எத்தனையோ பேர் இருக்க, நமக்கெதற்கு இந்த வேலை என்று கருதியிருந்தேன். ஆனால், இதைச் செய்வதற்குக் கூட தகுதிவாய்ந்த உரிய நபர்கள் இல்லை என்பதை உணர்ந்தபோதுதான் நம் முன்னோர்கள் நம்மிடம் பொறுப்பை வழங்கிச் சென்றுவிட்டார்கள் என்பதையே உணர்ந்தேன்.

நாஞ்சில் நாடன் அஞ்சுவதுபோல் அவர் படித்த கலம்பகமும் சதகமும் அந்தாதியும் பிள்ளைத்தமிழும் பள்ளுவும் மறு அச்சுக்கு வாய்ப்பில்லாதவை என்றே கருதுகிறேன். அவற்றையெல்லாம் மின்பிரதிகளாக இணையத்தில் ஏற்றிச் சேமித்து வைக்கவேண்டும் என்று என் யோசனையைத் தெரிவிக்கிறேன். அதற்கு யாரேனும் அரசோ, பல்கலைக் கழகமோ, புரவலரோ நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும். கைவசமுள்ள நூல்களைப் படியெடுத்து இணையத்தில் ஏற்றவேண்டும். அதிகபட்சம் இதற்குச் சில மாதங்கள் தேவைப்படலாம். மனம் வேண்டும் என்பதுதான் முக்கியம் !

(கடந்த பிப்ரவரி 22, 2014 அன்று ஈரோடு வாசிப்பு இயக்கம் நடத்திய பனுவல் போற்றுதும்’ நிகழ்ச்சியில் நாஞ்சில் நாடன் எழுதிய ‘சிற்றிலக்கியங்கள்’ என்னும் நூல் குறித்து நான் ஆற்றிய உரை).

நன்றி : கவிஞர் மகுடேசுவரன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து

சைவமா? அசைவமா? பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் வரும் ஆபத்துகள் என்ன?


பிராய்லர் கோழி தற்போது கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதன் நோக்கம் என்ன தெரியுமா ? பிறந்து 55 நாட்களில் கல்லீரல், தமனி, நுரையீரல் என்று எல்லாவற்றையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் நாம் ஹலால் என்று முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம். இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே ...

இன்னும் சில நாட்களில் கோழி கறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் ரூ 120 இல் இருந்து ரூ 40 நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இவர்களின் திட்டத்தின் படி ரூ 180 என்று விலையை உயர்த்தி, பிறகு ரூ 120 என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர்.

மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது. மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம். ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது. அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக்கொள்கின்றனர்.
நாமக்கலின் HEALTH CARE ORGANIZATION எவ்வளவோ முயற்சி எடுத்தும் அவர்களால் இந்த உண்மையை ஆனந்த விகடன் புத்தகத்தில் ஆறாம் திணை என்ற தொகுப்பில் மட்டும் தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தது.

உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய் கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து, புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்ற போர் வீரன் குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன.

இன்றைக்கு அசைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும்; மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி!
அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும், உலகை உலுக்கி மாற்றிய 'மைக்ரோசாஃப்ட்’, 'ஆப்பிள்’ முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய், கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம்தான் இரும்புச் சத்து இருக்கிறது. ஆகையால், அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக்குறியாக்க வேண்டியது இல்லை. ஆனால், அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படிச் சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான், முக்கியமான ஒரு கேள்வி!

ஏனென்றால், போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது, காரில் போகும் சுகவாசிக்கு அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்று வரை கட்டுமரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் 'ஃபிஷ் ஃப்ரை’ ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு. அசைவம் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிடுங்கள். ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ ஆட்டு இறைச்சியோ, ஒரு கிலோ கோழிக் கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது. அதையும்கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக்கொண்டால், இன்னும் சிறப்பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள் - குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைப்படுகிறது!

அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். நாம் எதை அறிந்துவைத்திருக்கிறோம்?
மாமிசம் சாப்பிடும்போது, நிச்சயம் இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பெருங்காயம் இருக்க வேண்டும் என்கிறது தமிழ் மருத்துவம். இதுவரை எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கரையிலும் இந்தக் கறி மசாலா இல்லாமல் கிடாக்கறி சமைக்கப்பட்டது கிடையாது. ஆனால், புதிதாக வெளிநாட்டில் இருந்து இங்கு மூலைக்கு மூலை முளைத்து உள்ள பன்னாட்டு கறிக் கடைகள் பொரித்தும் அவித்தும் தரும் கறி பக்கோடாக்களில் கறி மசாலாவை நீங்கள் பார்க்க முடியாது தெரியுமா?

கண்ணாடிக் குளிர் அறைகளில், நண்பர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களே, அந்தக் கறியில் என்னென்னஎல்லாம் கலந்து இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்... 

நூற்றுக்கணக்கான ரசாயனக் காரணிகள் அவற்றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்புகள் உண்டு. குறிப்பாக, புற்றுநோய்க்கு வரவேற்பு வளைவுகள் வைக்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் க்ளூட்டமேட் உப்புகள் உண்டு.
கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக் கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக் கூடியது. சாதாரண சளி, இருமல், மந்தம் போக்கக் கூடியது; உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச் சத்து அதிகம்; வைட்டமின் பி 12 சத்தும் அதிகம். உடல் எடை அதிகரிக்காது, வலுவுடன் ஆரோக்கியத்துடன் இருக்க சிக்கனுக்கு இணை எதுவும் இல்லை என்கிறது நவீன உணவியல்.

நம் ஊரில் கருங்கோழி எனும் நாட்டு இனக் கோழி இன்றும் இருக்கிறது. காலில் அதிக மயிருடன் ஷூ போட்டதுபோல் மிடுக்காக இருக்கும். அந்தக் கோழியின் சதைப் பகுதியும்கூட கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். தமிழ் மருத்துவம் தசை சூம்பி வலுவிழந்து இருக்கும் பக்கவாத நோயினருக்கும், பிற தசை நோயினருக்கும் இந்தக் கோழியைத்தான் உணவாக, மருந்தாகப் பன்னெடுங்காலமாக உரக்கச் சொல்லிவருகிறது. நாம் இப்போது சாப்பிடும் கோழி இறைச்சியின், பின்னணி குறித்து, 'கூவாத கோழியும், குடை சாயும் இறையாண்மையும்’ என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் சுந்தரராசன் கூறும் தகவல்கள் அதிரவைப்பவை.

"பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்துக்காக அளிக்கப்படும் 'ரோக்ஸார்சோன்’ (Roxar-sone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள். குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும், இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வு கள் தெரிவிக்கின்றன" என்று புத்தகத்தில் தந்து இருக்கும் எச்சரிக்கைப் பட்டியல் அபாயகரமானது.

இது மானங்கெட்டத்தனமில்லையா?

எல்லா சாதிக்காரன்கிட்டேயும் ஓட்டு கேட்டு வாங்க வேண்டியது. அப்புறம் ஜெயிச்சப்பின்னாடி எங்க சாதிதான் ஒசந்ததுன்னு உதார்விட வேண்டியது. இது மானங்கெட்டத்தனமில்லையா? எல்லா சாதி ஆட்களுக்கும்தான் இது பொருந்தும்.

இது மதவாதமில்லையா?

// மோடியை ஆதரிக்கும் இந்துக்களைப்போல,
மோடியை எதிர்க்கும் முசுலீம்களும் மதவாதிகளே..! //

அதாவது இதன் கோணம் என்னவெனில், கொல்லப்பட்டது முஸ்லீம்கள் என்பதுதான் சிலருக்கு பிரச்னையே தவிர பொதுமக்கள் என்பதல்ல. இதே தரப்பினர் நாடெங்கும் பல பொதுமக்களைக் கொன்ற காங்கிரசையோ, அதன் தலைமையையோ இப்படியாக எதிர்க்கவில்லை. உதாரணம் சீக்கியர்கள் படுகொலை, ஒரிஸ்ஸாவில் கிறித்தவர்கள் படுகொலை, வடகிழக்கில் பழங்குடி மக்கள் படுகொலை etc..., முசுலீம்கள் மோடியை எதிர்ப்பது தவறென்று நான் சொல்லவில்லை. அந்த எதிர்ப்பின் பின்னணி மதமாய் இருப்பதால் இவர்களும் மதவாதிகள்தான் என்கிறேன். 

அதாவது மோடியை எதிர்க்கும் இந்துக்களுக்கும், மோடியை எதிர்க்கிற முசுலீம்களுக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதைத்தான் சொல்கிறேன். இதுவும் மதவாதம்தான் என்கிறேன். 

இந்த மனிதாபிமானிகள் காசுமீரில் 70,000-க்கும் மேற்பட்ட அப்பாவி முசுலீம்களைக் கொன்ற, கற்பழித்த காங்கிரசு ஆட்சித் தலைமைகளின் எதிர்ப்பை மோடியை எதிர்ப்பதுபோல் ஏன் முன்னெடுக்கவில்லை? பாஜக-வை விடவும் அதிக முசுலீம்களைக் கொன்றது காங்கிரசுதான். இதனால்தான் முசுலீம்களின் மோடி எதிர்ப்பும் மதவாதம் என்கிறேன். அதற்காக மோடிக்கு நான் சாமரம் வீசுவதாகக் கருதினால் எனது பழைய பதிவுகளை சென்று பாருங்கள், பிறகு பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!

மத எதிர்ப்பு சகிப்புத்தன்மை என்பது விகிதாச்சார அளவிலும் கூட இந்துக்களை விடவும் முசுலீம்களில் வெகு குறைவு. முசுலீம் மனிதாபிமானிகள் யாவருமேகூட மத அடிப்படைவாதிகளாகவே இருப்பது கண்கூடு. விதிவிலக்கு மிகவும் சொற்பம். எல்லா சனநாயக / மனித உரிமை  நடவடிக்கைகளும் மதம் எனும் பின்னணி வட்டத்தை விட்டு வெளியே இருக்கவேண்டும். எனவேதான் இவ்வாறானதும் மதவாதம் என்கிறேன். தஸ்லிமாவும், சல்மான் ருஷ்டியும் அதிகம் உருவாகும்போதுதான் இந்தப்பார்வை மாறமுடியும்.

5.3.14

வீரம் என்பது எளியவர்களோடு மோத மட்டும்தான் வருமா?

சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழ்ப் பதிகம் பாட முயன்றுகொண்டிருக்கும் ஆறுமுக சிவனடியாரை தாக்கிய, மிரட்டிய தீட்சிதர்களை எதிர்த்து "சத்திரியர்கள்" குரல் கொடுக்காதது ஏனோ? தாழ்த்தப்பட்டவர்களை காதலிக்கும் பெண்களில் தன்சாதிப் பெண்களின் சாதியை தெரிந்துகொள்ளும் "தமிழினப்போராளி" (?) அய்யா அவர்களுக்கு ஆறுமுக சிவனடியாரின் பின்னணி தெரியாமல் போவது ஏன்? 

4.3.14

அய்யா காங்கிரசு தாசு...

போர் நடந்த காலத்தில் எங்களுக்கும் புலிகளுக்கும் சம்மந்தமில்லை என்று அறிக்கை விட்டார்கள். மோதவேண்டிய அதிகார மையங்களை விடுத்து, கிராமந்தோறும் ஏழை எளிய மக்களிடம்தான் சத்திரியர்கள் என்று உதார் விடுகிறார்கள். இருந்த ஒன்றிரண்டு தமிழ் உணர்வாளர்களையும் வெளியேற்றிவிட்டு பதவிக்காய் யாரார் காலையோ பிடிக்கிறார்கள். இந்த லட்சணத்தில் தமிழினப்போராளி / தமிழ்க்குடிதாங்கி பட்டம் வேறு. காங்கிரசை எதிர்த்து ஒரு போராட்டமாவது நடத்த வராத வீரம் மக்களை சாதிரீதியாகப் பிரித்து மோத வைப்பதில்தான் வருகிறது. இன்றைய கால கட்டத்தில் தமிழ்நாட்டின் எல்லா சாதிக்கட்சிகளையும் வளர்த்துவிட்டு அவர்களை அடியாட்களாக தனக்குக்கீழ் வைத்துக்கொள்ள முயற்சிக்கும் ஒரே தமிழினக் கட்சி இதுதான். கடந்த மாமல்லபுரம் மாநாட்டில் "எங்களுக்கு பிராமணர் சங்கம்" ஆலோசனை வழங்குகிறது என்று பெருமையாகவேறு சொன்னார்கள். இந்தத் தமிழினப்போராளியை ஆழ்ந்து அவதானித்தால் மாம்பழம் மறைந்து கைச்சின்னமே காட்சியளிக்கும்.

எல்லாமே திராவிடக் கட்சிகள் சரி. பாமக அளவிற்கு தமிழ் உணர்வு அவர்களுக்கு இல்லை சரி. போர்க்காலத்தில் பாமக மத்திய அரசிலிருந்து வெளிநடப்பு செய்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கலாமே. வன்னியர் / சத்திரியர் என்று அவர் செய்யும் அரசியலை விடுத்தாலே இந்நேரம் எதிர்க்கட்சியாகவாவது வந்திருப்பார்கள். பெரும்பான்மையான வன்னியர்கள் தெளிவாகவே இருப்பதால்தான் மாமக-வால் மேலும் வளர இயலவில்லை. இரண்டு பேரும் மருத்துவம் படித்துவிட்டு வன்னிக்குச்சியிலிருந்து நாம் உருவானவர்கள் என்று குரு பேசியதை ரசித்து மகிழ்கிறார்கள். இது என்ன வகையான அறிவுநிலை? எந்தக்காலத்திலாவது குச்சியிலிருந்து மனிதன் தோன்ற முடியுமா? இத்தனைக்கும் குரு இரண்டு MA பட்டம் பெற்றவர். இதுதான் மக்களை விழிப்படைய வைக்கும் அரசியலா? எல்லோரையும் அரவணைத்து இயக்க வேண்டிய ஒரு மக்கள் சக்தியை, தன் மகனின் பதவி ஆசைக்காக வீணடிக்கிறார் தமிழ்க்குடிதாங்கி என்பதே நிதர்சனம். 

மக்கள் தொலைக்காட்சியும், தமிழ் ஓசை நாளிதழும் நல்ல உதாரணம்தான். ஆனால், அது தமிழ்ப் பற்றாயில்லாமல் சாதி நாற்றத்தை மறைக்கும் போர்வையாய் இருப்பதுதான் நிதர்சனம். 

வாழ்க அய்யா...!
வளர்க அவர் தமிழ்ப்பணி...! (?..)

2.3.14

பழந்தமிழரின் பருவக்கால நிலை அறிவு

கிழக்கில் புறப்பட்டு மேற்கு நோக்கி மின்னல் பாய்ந்தால் ஒரு மணி நேரத்தில் மழை பெய்யும். தென்மேற்கு மற்றும் வடமேற்கில் மின்னல் மின்னினால் இரவு நேரத்தில் மழை பெய்யும். நிலைவைச் சுற்றி வளையமிருந்தால் சிறு தூரல் மட்டுமே விழும். சிட்டுக்குருவி கூட்டமாகத் தாழப்பறந்தால் அன்றைக்கே மழை வரும். கிணற்றுத்தவளை வழக்கத்தைவிட அதிகமாக ஒலி எழுப்பினால் அல்லது நண்டு தன் வளையை பெரிதாகக் குடைந்தால் இரண்டு நாளில் மழை வரும். 

1.3.14

மிருகமும் காடும்

எது கிடைத்தால் வலிமை என்று நாம் நினைக்கிறோமோ அது விரைந்து கிடைக்கையில் நமக்குள் நெடுநாளாய் பதுங்கிக் கிடக்கும் மிருகத்திற்கு நாம் உயிர் கொடுக்கிறோம். அந்த வலிமைக்கேற்ப அந்த மிருகம் ஒரு காட்டைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. அந்தக்காடு நம் சொந்த கிராமமாகவோ, உறவுகளாகவோ, உள்ளூர் திருவிழாக்களாகவோ, மதி மயக்கும் மதுவாகவோ, பெண்ணாகவோகூட இருக்கலாம். அடிப்படையில் நாம் ஒவ்வொருவிதமான காடுகளில் வாழும் ஒவ்வொருவிதமான மிருகங்கள். 

பல மிருகங்களுக்கு அரசியலும், அதிகார வேட்கையும், பதவியும், பணமும், சாதிவெறியும் காடாக இருக்கிறது. மக்களாட்சியும் தேர்தலும்கூட பல மிருகங்கள் கூடி வாழ கொண்டாடும் இன்னொருவகை விழா நாட்களே.