12.9.16

3016-லாவது...

நாட்ல இருக்கிற எல்லா பிரச்சினையும் தீரனும்னா மறுபடியும் மோடி பிரதமராகனும்னு ஒரு கூட்டமும், மறுபடியும் ஜெயலலிதா முதல்வராகனும்னு ஒரு கூட்டமும், மறுபடியும் கருணாநிதி முதல்வராகனும்னு ஒரு கூட்டமும் இன்னும் பேசிக்கிட்டுதான் இருக்குது. 

3016-ல் ஆவது இந்த நாடு ஜாதி ஒழிந்து சிந்திக்கிறவங்க வாழுற நாடா மாறியிருக்கனும்னு விரும்புறேன். ஆனா அவங்களும் இவங்களும் விடமாட்டாங்க போல...

9.9.16

"BEKAS" - குர்திஷ் திரைப்படம் (2012

BEKAS - குர்திஷ் திரைப்படம் (2012)

போரில் பெற்றோரை இழந்த இரண்டு குர்திஷ் சகோதர சிறுவர்கள், அமெரிக்கா சென்று சூப்பர்மேனை பார்த்துவிட்டு அழைத்து வந்து அவரது சக்தியால் தங்கள் பெற்றோர்களை உயிர்ப்பிக்கவும், குர்திஷ்களுக்கு கொடுமை செய்யும் சதாம் உசேனை கொல்லவும் விருப்பம் கொள்கின்றனர். அதற்காக சிறு சிறு வேலை செய்து பணம் சேர்க்கின்றனர். ஒரு கழுதையை விலைக்கு வாங்கி அமெரிக்காவுக்கு பயணம் தொடங்குகின்றனர். 

எந்த ஆவணங்களுமின்றி எப்படி அந்நாட்டு எல்லையைக் கடக்கிறார்கள்? சூப்பர் மேனை சந்தித்தார்களா? என்பதே படம்.

சதாமை வீழ்த்த அமெரிக்காவை எதிர் பார்த்த குர்திஷ் மக்களின் விருப்பத்தையும், குர்திஷ் சிறுவர்களே சூப்பர்மேன்கள்தான் என்று உணர்த்தும் அரசியலையும் இப்படம் பேசுகிறது.

"காக்கா முட்டை" மாதிரியான படங்களை எதிர்பார்க்கும்; ரசிக்கும் மக்களுக்கு இப்படம் நல்ல நிறைவானதாக இருக்கும்.

அருமையான படம்...!!!








8.9.16

"நீதியை நிலை நிறுத்தப் போராடுவோம்" - கா.தமிழ்வேங்கை

"நீதியை நிலை நிறுத்தப் போராடுவோம்" - கா.தமிழ்வேங்கை

அற்பக் காரணங்களுக்காக மனித உரிமைகளை மீறுவது தொடங்கி, காசு வாங்கிக்கொண்டு "என்கவுண்டர்" செய்வது வரை காவல்துறையின் அத்துமீறல்கள் ஏராளம். கண்முன் நடக்கும் இத்தகைய அத்துமீறல்களை நாம் யாரும் கேட்பதில்லை. அச்சம்தான் காரணம்.

ஒரு குழந்தைத் தொழிலாளியிடம் காவலர் ஒருவர் அநியாயமாக நடந்துகொண்டபோது விழுப்புரத்தைச் சேர்ந்த மனித உரிமைப் போராளியான தமிழ்வேங்கை அப்படி ஒதுங்கவில்லை. தட்டிக் கேட்கிறார். காவல்துறை அலட்சியம் செய்கிறது. அவர் ஓயவில்லை. பிரச்சினையை மனித உரிமை ஆணையத்திற்கு இட்டுச் செல்கிறார். வழக்காடி வெற்றியும் பெறுகிறார். அந்தக் காவலருக்கும் அவரது புகார் மனுவை வாங்க மறுத்த அதிகாரிகளுக்கும் 50,000/- ரூபாய் தண்டத்தொகை விதித்து ஆணை இடுகிறது ஆணையம்.

இந்தச் சுவையான வழக்கை ஒரு நாவலைவிட விறுவிறுப்புடன் சொல்லிச் செல்கிறது இக்குறு நூல்.

கண்முன்னே நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்க விரும்பும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அனுபவ நூல் இது.

விலை : 70,
வெளியீடு : ஐந்திணை வெளியீட்டகம், விழுப்புரம்.












ஊருக்கு ஊர் "வெட்டி வீரம்"

சுய சிந்தனையை; அறிவை வளர்த்துக் கொள்ள எள்ளளவும் முயற்சிக்காமல் ஜாதியின் பேரால் மட்டும் சக உழைக்கும் மக்களிடம் "வீரனைப்போல" ஆண்டு முழுதும் பாவ்லா காட்டிக்கொண்டு ஏனைய கிராமங்களைப் போலவே சில இளைஞர்கள் எங்கள் ஊரிலும் இருந்துகொண்டிருக்கிறார்கள். 

தான் உண்டு தன் வேலையுண்டு என்றுதான் தமிழக கிராம மக்களில் 98% பேர் வாழ்கிறார்கள். இந்த ஜாதியை தூக்கி வைத்துக்கொண்டு 2% ஆட்கள் செய்யும் அலப்பறைகளால்தான் எல்லா கிராமங்களின் வளர்ச்சியும் மட்டுப்படுகிறது.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பொதுக்கால்வாய்கள், வளைக்கப்பட்ட புறம்போக்கு பொது இடங்கள், பரவிக்கிடக்கும் கருவேல மரங்கள், பஞ்சாயத்து நிர்வாக விவரம், மக்களை மோதவிட்டுப் பகையாக்கும் ஜாதி அரசியல், அறிவையும் வளர்ச்சியையும் கெடுக்கும் ஜாதி உணர்வு, முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்குவதில் நடக்கும் கையாடல்கள், ஊர்ப் பொருளாதாரத்தை போண்டியாக்கும் கோயில் திருவிழாக்கள், மற்றும் அத்திருவிழாக்களின் வரவு செலவு கையாடல்கள்... இப்படி எதுவுமே எந்த "வீரனுக்கும்" கடைசி வரைக்கும் தெரியாமலே போய்விடுகிறது. 

கர்நாடக எல்லைகளில் தமிழகப் பேருந்துகளை மறித்து கன்னடர்கள் செய்த அட்டூழியம் மற்ற ஊர் வீரர்களைப்போலவே எங்கள் ஊர் "வீரர்களுக்கும்" தெரியாது. தெரியாதவரையில் கன்னடர்களுக்கு நல்லகாலம். தெரிந்திருந்தால் கர்நாடகாவே கதிகலங்கிப் போயிருக்கும். இத்தனைக்கும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 1 கீ.மீ தூரம்தான் எங்கள் ஊர். 

ஊர் எல்லையைத் தாண்டினால் "வீரம்" செல்லுபடியாகாது என்ற அறிவில் மட்டும் எப்போதுமே எல்லா ஊர் "வீரன்களும்" தெளிவாக இருக்கிறார்கள். 

நமக்கெதுக்கு வம்பு என்று ஓராயிரம் பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கி பயந்து அடங்கி வாழ்ந்துகொண்டு; ஊருக்குள் மட்டும், அதுவும் ஜாதி என்றால் மட்டும் வீரனைப்போல வேசங்கட்டி படம் காட்டியே தாத்தா காலத்திலிருந்து பழகிவிட்டிருக்கிறார்கள்.

அநியாயத்தை எதிர்த்து நியாயத்திற்காகப் போராடுவதுதான் "வீரம்" என்பது தமிழகம் முழுதுமுள்ள "வீரன்களுக்கு" எப்போது புரியவரும் என்பது தெரியவில்லை.

ஊருக்கு ஊர் "வீரம்" வேறுபடுகிறது.

திருவிழா நடத்துவதில் சீன் போடுவதும், பட்டாசு வெடிப்பதில் சீன் போடுவதும்தான் பொதுவாக கிராமங்களில் "வீரம்" என்றாகிவிட்டது. 

இதில் பக்தியாவது... மண்ணாங்கட்டியாவது...

பிற ஊர்களில் எப்படியோ...?

6.9.16

வேண்டுதல்...

"குப்பை அள்ளுபவர்களின் துயரத்தை இன்றாவது உணர்ந்து மக்கள் திருந்த அருள் பாலிக்கட்டும் மூத்திர சந்து பிள்ளையார்கள்"

சிந்திக்க வைத்த வரிகள்

மதுரையிலிருந்து சென்னை திரும்பியபோது திருச்சி அருகே ஒரு உணவகத்தில் எழுதியிருந்ததைக் கவனித்தேன்...

"நாம் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டுமென்றால் 
சூரியனைப் போல எரிய வேண்டும்"

3.9.16

போராளி ஒருவருக்காக...

தோழர்...

எல்லா பின்னூட்டங்களுக்கும் பதில் அளிக்காதீர்கள். விமர்சனத்தை அறவே பொருட்படுத்தாதீர்கள். பதிவுகளை மட்டும் பதிந்துவிட்டு நகர்ந்துவிடுங்கள். தேவைப்பட்டாலொழிய கமெண்ட்களுக்கு வராதீர்கள். 

உலகமும் மக்களும் பிரச்சினைகளும் மிகப்பெரிது. இன்னொருவருக்காக நீங்கள் போராடினால் வாழ்நாளில் எத்தனைப் பேருக்காக போராட இயலும். அவரவர் பிரச்சினைகளை அவரவர்களே எதிர்கொள்ள மட்டும் துணை நில்லுங்கள். அதற்கான வலுவான கட்டமைப்பை மட்டும் நிறுவ முயலுங்கள். எல்லோருக்காகவும் நாமே போராடிக்கொண்டிருந்தால் எதிரி நம்மை சுலபத்தில் வீழ்த்தி விடுவான். மீண்டும் அதே சூழல்தான் தொடரும். தனிநபர்களை வீழ்த்துவதும் விரக்திக்கு ஆளாக்குவதும் எதிரிக்கு சுலபம். எல்லா விமர்சனத்திற்கும் எதிர்வினை ஆற்றுவதுதான் போராளிகளின் பலவீனம். சிரித்தபடி செல்லுங்கள். 

நீங்கள் இல்லையாயினும் போராட்டம் தொடர்ந்து நடைபெறவும் நீர்த்துப் போகாமல் இருக்கவும் கட்டமைப்பு ஏற்படுத்துங்கள். 

நேரடியாக களத்தில் இறங்கிப் போராடுவதைக் குறைத்துகொண்டு பாதிக்கப்படுபவர்களுக்கு போராட்ட அறிவையும் சட்டரீதியான வழிகாட்டலும் தைரியமும் கொடுங்கள். நிரந்தரமாக அதை எதிர்த்தும் போராடும் களப்போராளிகளை உருவாக்க மட்டும் குறி வையுங்கள்.

வாழ்நாளில் 100 பேருக்காக போராடுவதைக் காட்டிலும் 1000 போராளிகளை உருவாக்கி விடுவதே மிக அவசியமானது.

யார் வேண்டுமானாலும் போராடலாம், எல்லோரையும் போராடச் சொல்லி வீதிக்கு அழைப்பது சிலரால் மட்டுமே முடியும்.

பாதிக்கப்பட்டவர்கள் ஆலோசனை தேடி உங்களைச் சந்திக்க வரும் பொறிமுறைதான் நிரந்தரத் தீர்வு. 

இதுதான் சரியென்று நான் இறுதியாக சொல்லவில்லை. எனது சிறிய அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.

2.9.16

ஞானிகள் நடந்த வழி

"எளிமையாக செய்து முடிக்கக்கூடிய செயலுக்கு ஒருவர் காரணம் சொல்லிக் கொண்டிருந்தாலோ அல்லது காலம் தாழ்த்திக் கொண்டிருந்தாலோ அவருக்கு உதவி செய்ய விருப்பவில்லை என்பதே தெளிவான உண்மையாகும்"

- "ஞானிகள் நடந்த வழி", பக்கம் - 24.

31.8.16

ஊருக்கு ஆயிரம் நடிப்புத் திலகங்கள்

தன் ஜாதிக்காரனாப் பார்த்து ஓட்டு போட்டுவிட்டு தன் ஜாதி ஜெயிக்கலியேன்னு வருத்தப்பட்டுட்டு அப்புறம் நாட்டையும் அரசாங்கத்தையும் எப்பவும் கொறை சொல்ற டிசைன் ஜீவன்கள் குறையனும். 

ஊழல், ஜாதியின் பின்னால் பதுங்கிக் கொள்கிறது. 

அவனவன் ஜாதிக்காரன் ஊர் தலைவரா / அதிகாரத்துல இருக்கிற எடத்துல நடக்கிற எந்த ஒரு ஊழலையும் எவனும் கண்டுக்காம விடறது உள்நோக்கு இல்லாததா?

ச்சை... எப்பப் பார்த்தாலும் எவனப் பார்த்தாலும் "நாங்க யோக்கியம்ன்ற" மாதிரியே பேட்டி குடுத்துக்கிட்டு.......

28.8.16

பெரும் பேராசை

"நீதிபதியே யோக்கியனாக இல்லாத நாட்டில் வக்கீலும் போலீசும் யோக்கியமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பெரும் பேராசை"