20.2.18

பிசாசுகளிடமிருந்து விடுதலை


பிசாசு பிடிச்சிக்கிட்டே இருக்குமாம். இவங்க விடுவிச்சிக்கிட்டே இருப்பாங்களாம். நல்லா இருக்குது விளையாட்டு.
யேசுவும் பிசாசும் அல்லது பாதிரிகளும் பிசாசுங்களும் எப்ப எங்க சண்டை போட்டாங்க? ஏன் போடல?

ஒருவேளை கோவப்பட்டு பிசாசை அடிச்சிக் கொன்னுட்டா வியாபாரம் படுத்துடும், அப்புறம் விளையாட்டும் போயிடும். அதனால பிசாசோடு மோதக்கூடாது. மக்கள்கிட்டதான் கும்மியடிக்கனும்.

யேசுவே, இந்தப் பாதிரியார்களிடமிருந்து முதலில் மக்களைக் காப்பாத்து ; பின்னர் பிசாசை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.

பிசாசுங்ககிட்டயிருந்து விடுபட்டு பாதிரியாருங்ககிட்ட மாட்டிக்கிட்ட மக்களைக் காப்பத்த ஆண்டவனாகிய உமது தந்தை அவரின் ஒரே குமாரனாகிய உமக்கு முதலில் பெலம் கொடுக்க வேண்டுகிறோம் கர்த்தாவே. ஆமென்....! 
 
(10-04-2017)


ராகுல சாங்கிருத்தியாயன்

"அறிவிலிகளே...! சோம்பேறிகளே....! 
 
புறப்படுங்கள். பரந்த உலகம் முழுவதும் சுற்றி வாருங்கள். இதற்காக உங்களுக்கு இன்னொரு வாழ்வு கிடைக்கப்போவதில்லை. நீங்கள் நெடுநாள் வாழ்ந்தாலும் கூட. இந்த இளமை உங்களுக்கு மீண்டும் வரப்போவதில்லை"

இந்தி பயண இலக்கியத்தின் தந்தை என அறியப்படுபவர்; தன் வாழ்நாளில் 45 வருட காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணத்தில் செலவழித்தவர்; புத்தத் துறவியாகி பின்னர் மார்க்சியவாதியானவர். அதுமட்டுமன்றி ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிரான கருத்துகளை எழுதியதற்காக மூன்றாண்டு கால சிறைவாசம் அனுபவித்தவர். இவர் அறிந்தமொழிகளில் தமிழும் ஒன்று, இந்தியோடு, பாலி, சமஸ்கிருதம், அரபி, உருது, பாரசீகம், கன்னடம் போன்ற இந்தியாவில் பேசப்படும் மொழிகளும், சிங்களம், ப்ரெஞ்சு, ரசிய மொழி ஆகிய பிற நாட்டு மொழிகளும் கற்றவராகத் திகழ்ந்தார். அத்தோடு புகைப்படக்கலையையும் படித்திருந்தார். இவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றதோடு மட்டுமன்றி நேபாளம், திபெத், இலங்கை, ஈரான், சீனம், முன்னாள் சோவியத் உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். திபெத்திற்கு இவர் புத்த துறவியாகச் சென்று அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும் ஓவியங்களையும் இந்தியாவிற்குக் கொணர்ந்தார். இவை முன்னர் இந்தியாவின் நாளந்தா நூலகத்தில் இருந்தவை ஆகும். ஆகவே ராகுலைப் பெருமைப்படுத்தும் வகையில் பாட்னா அருங்காட்சியகம் இப்பொருட்களைச் சிறப்புப் பிரிவொன்றில் காட்சிப்படுத்தி உள்ளது இருபது வயதில் எழுத ஆரம்பித்த இராகுல்ஜி பல்வேறு துறைகளில் 146 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய நூல்களில் அனைவரும் அறிந்தது வால்கா முதல் கங்கை வரை வரலாற்றுப் புனைவு நூலாகும். கி.மு. ஆறாயிரத்தில் துவங்கும் இந்நூல் கி.பி. 1942இல் முடிகிறது. இந்நூல் கே.என். முத்தையா என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. தெலுங்கு மற்றும் மலையாள மொழிபெயர்ப்புகளும் அம்மொழிகளில் புகழ்பெற்றுத் திகழ்கின்றன. 1958 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான சாகித்திய அகாதெமி விருது மத்திய ஆசியாவின் இதிகாசம் எனும் இவரது புத்தகத்திற்கு வழங்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இராகுல்ஜி முறைப்படிக் கல்லாதவரெனினும் அவரது நுண்மாண் நுழைபுலத்தைக் கருதி சோவியத் யூனியனின் லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்திய த்தத்துவவியல் பேராசிரியராய் நியமித்தது. இராகுல் சாங்கிருத்தியாயன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.
 
09-04-2017
 
 

கடவுளெனும் முதலாளி

மகாவீரர் கறி தின்னச் சொல்லவில்லை. பரம்பரை பரம்பரையாய் ஜெயின்கள் எல்லோரும் உடல் உழைக்கும்படியான எந்த பிழைப்பிலும் ஈடுபடாமல் வட்டிக்கடை மட்டும்தான் நடத்தச் சொன்னார்.

அல்லா, வட்டி கூடாது என்றார். தினமும் ஐந்து முறை தொழுகச் சொன்னார். ஆனால் அநியாய விலைக்கு எதையும் விற்கக்கூடாது என்று சொன்னாரா எனத் தெரியவில்லை.

பர்மாவில் முஸ்லீம்களையும் இலங்கையில் தமிழர்களையும் ரத்த வேட்டையாடக்கூடாது என்று புத்தர் சொல்லாமல் போய்விட்டார்.

முஸ்லீம்களை ஒடுக்குவது ஹிந்து தர்மம் என்று ராமன் தன் ஆட்களிடம் கனவில் வந்து சொல்லிக்கொண்டிருப்பதை நேரில் வந்து தடுக்க முயற்சிக்கலாம்.

சாத்தானிலிருந்து விடுவித்து மக்களுக்கு அற்புத சுகமளிப்பதைவிட நேரடியாக சாத்தானை ஒரு கை பார்க்கலாம் திரு யேசு அவர்கள்.

10-04-2017

தேர்தல் ஆணையம்....????

தேர்தல்னா வாக்குக்கு பணம் குடுக்கிறதுதான் இந்த நாட்டுல காலங்காலமா நடந்துட்டு வர்ற ஒரு பண்பாட்டு பரம்பரை வழக்கம். இதென்ன புதுசா?

இப்ப இந்தியாவில் இருக்குற ஆயிரக்கணக்கான MLA க்களும் MP க்களும் பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்கன்னு எல்லாருக்கும் தெரியும். தேர்தல் ஆணையத்துல பொறுப்புல இருக்குறவங்களுக்கு இது தெரியாதா? இவங்கயென்ன திடீர்னு வேற்று கிரகத்துல இருந்தா வந்தாங்க?

எப்பப் பார்த்தாலும் ரொம்ப நல்லவனுங்க மாதிரி நடிக்கிறதே இந்த தேர்தல் ஆணையத்துக்கும் அரசாங்கத்துக்கும் வேலையாப்போச்சி.

இனிமே வாக்குக்கு பணம் கொடுக்கும் வாங்கும் தேர்தல் எங்கேயாவது நடந்ததாக தெரியவந்தால் நாங்களெல்லாம் பொதுமக்கள் முன்னாடி கூட்டா தூக்குமாட்டி தொங்கி விடுகிறோம்னு தேர்தல் ஆணைய பொறுப்பாளர்கள் அறிவிச்சாகூட இந்த நாட்டுல எவனும் நம்பமாட்டான்... நம்பத்தயாரில்ல... நம்ப ஆளில்லை.

யாரை நம்பவைக்க இந்த நாடகத்த நடத்துறானுங்க? யாரந்த பொதுமக்கள்? எந்த நாட்டைச் சேர்ந்தவங்க?

ஆறுமுகசாமி

08-04-2017

சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் தமிழ் தேவாரப் பாடல்களை பாட வேண்டும் என தள்ளாத வயதில் தில்லை தீட்சிதர்களை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி ஆறுமுகசாமி அவர்கள் தனது 95 வயதில் மரணமடைந்திருக்கிறார். சமஸ்கிருத மந்திரங்களை கோயிலில் பாடக் கூடாது என கூறியதற்காக பிராமண தீட்சிதர்கள் அவரை தடியால் அடித்தார்கள். கோயிலில் இருந்து தூக்கி எறிந்தார்கள். ஆனால், அய்யா ஆறுமுகசாமி அவர்கள் தமிழ்நாட்டில் ஆலயங்களில் தமிழ் பாடல்கள் தான் பாட வேண்டும் என நீதிமன்றத்தை நாடினார். ஒருமுறை அவருக்கு கோயிலில் ஓரத்தில் நின்று பாடச் சொல்லி அனுமதி கிட்டியது. அதையும் கூட பாட விடாமல் அவரை தீட்சிதர்கள் அவமதித்தனர். ஆனாலும், அசராமல் பாடினார் ஆறுமுகசாமி அவர்கள். அவரது மறைவுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் அஞ்சலி செய்ய கடமைப்பட்டுள்ளது.
 
 

ஓஷோ

1. இறப்பு ஒரு முடிவல்ல, வாழ்வின் உச்சம், வாழ்வின் மிக ஆழமான அனுபவம்.

2. பயம் ஒரு பிடிப்பு.

3. பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொள்ளும் மக்கள், அதிகம் உளறுகிறார்கள் – எந்தப் பயனுமற்ற இரைச்சல் இது.


4. சமூகம், வாழ்வின் மூன்று முக்கிய விஷயங்களை அமுக்கப் பார்க்கிறது – அவை செக்ஸ், மரணம், வாழ்வின் பயனற்ற தன்மை.

4. சுதந்திரத்தின் ரகசியம், பின் தொடராதிருத்தலே.

5. தயக்கம், குற்றவுணர்ச்சி ஆகிய இரண்டுமே ஆணவத்தின் வெளிப்பாடுகளே. ஒன்று தோல்வி பயம், மற்றொன்று தோல்வியுற்ற ஆணவம்.

6. அன்பிற்குத் தடையாய் இருப்பது போலித்தனமாய் நாம் கடைபிடிக்கும் அன்பே.

7. குழந்தைகள் உங்களுடையவர்களல்ல, உங்கள் மூலம் வந்துள்ளவர்கள் அவ்வளவே.

8. பாதுகாப்பற்ற நிலையும், ஆபத்தும் உன்னை வாழ்க்கைக்குள் கொண்டுவருகின்றன.

9. வாழ்க்கை ஒரு இடையறாத ஓட்டம்.

10. பேராசையும் பயமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல ஒன்றிணைந்தவை.

- ஓஷோ

தேசத்துரோகிகள் யாரார்?

விலங்குகளில் "பசு" புனிதம்
நதிகளில் "கங்கை" புனிதம்
மொழிகளில் "சமஸ்கிருதம்" புனிதம்
நூல்களில் "கீதை" புனிதம்
மனிதர்களில் "பார்ப்பான்" புனிதம்

ஏழைகள் / விவசாயிகள் / மாணவர்கள் / முதியோர்கள் / வேலையற்றோர் என எல்லாத்தரப்பு மக்களைவிடவும் இந்தப் "புனிதங்களை" எங்கேயும் எப்போதும் கெட்டுவிடாமல் பாதுகாப்பதுதான் இந்திய அரசின் முக்கியப் பிரச்சினை. இதற்கு ஒத்துழைக்காத எல்லோரும் #_தேசத்துரோகிகள்.

1.11.17

Welcome சிவா

"இந்தப் பூதலத்தில் தீதுற்ற செல்வமென்?
தேடிப் புதைத்த திரவியமென்?
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே"

'சுவேதாரண்யன்' என்ற பெயருடன் பூம்புகாரில் வாழ்ந்த பெரும் வணிகனுக்கு "மருதபிரான்" என்ற மகனாய் வந்து சேர்ந்து வளர்ந்து ஆளாகி கடல் கடந்து வணிகம் செய்து திரும்பி வரும்போது மாட்டுச்சாணியின் சாம்பல்களை குவித்து வந்து "காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே" என செல்வம் குவிப்பது பயனற்றது என்ற ஞானத்தை உணர்த்திவிட்டுச் சென்றானாம் சிவன். இது நடந்ததாக வரலாறு சொல்வது 11-ம் நூற்றாண்டில். அதன் பின்னர் 'சுவேதாரண்யன்' என்ற அந்த பெரும் வணிகன் தன் உடைமைகள் பொன் பொருள் உறவுகள் அனைத்தும் துறந்து பட்டினத்தாராக காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து வாழ்வின் நிலையாமை பற்றி மக்களுக்காகப் பல பாடல்களைப் பாடி சிவனடி சேர்ந்தார்.

11-ம் நூற்றாண்டில் வந்துபோன சிவன் அதன்பின்னர் ஏனோ வரவில்லை. உலகமே; இந்தியாவே கார்ப்பரேட்களால் சூறையாடப்படும் இந்த காலசூழலில் இதேபோல் தனியார் முதலாளிகளுக்கு வாரிசாய் பிறந்து ஞானம் போதித்தால் நல்லது. யாரேனும் மெய்யான பக்தர்கள் நாட்டின் நிலையை அவருக்கு உணர்த்த முயற்சிக்க வேண்டும்.

பட்டினத்தாருக்கு ஞானம் போதித்த சிவன், அம்பானி அதானிகளுக்கும் லாப  வேட்கை கொண்ட எல்லா வணிகர்களுக்கும் கொஞ்சம் வகுப்பெடுக்க வேண்டும். இல்லையேல் இனி இம்மண்ணில் பிறக்கும் குழந்தைகளின் வாழ்வாதாரம் என்னாவது? சுவேதாரண்யனை மட்டும் அப்படி அலையவிட்டது ஒருதலைப்பட்சமாகிவிடும் அல்லவா? இது சிவனுக்கு அழகா? இது நீதியா? இப்படி எண்ணுவது பிழையா?

அம்மா ஆதிலட்சுமி

தன் வாழ்நாள் முழுதும் மாடு மேய்த்தே எங்களை ஆளாக்கி விட்டுச் சென்ற என் அம்மா "ஆதிலட்சுமி" யின் 8-வது நினைவு நாள் இன்று. எனைப் பெற்றதில் ஒருபயனும் அறியாத எம் அம்மாவின் முகத்தைப் பார்க்கும்போதெல்லாம் எழும் குற்றவுணர்வுக்கு அஞ்சி உடன் வைத்துக்கொண்டே எப்போதாவது பார்க்கும் நிழற்படம்.

பட்டகடன் தீர்க்க, அம்மா பெயர் வைப்பதற்காகவேணும் எனக்கொரு மகள் பிறப்பாள்.

17.10.17

ராஜராஜ சோழப் பறையனார்

ஒரு மன்னர் என்பவன் தான் விரும்பிய பெண்ணையோ அல்லது வேறு நாட்டு இளவரசியையோ மணப்பான். அவனுக்கு மொழி இனம் பிரச்சினையில்லை. நாட்டின் எல்லை விஸ்தரிப்பும் கவிழாத ஆட்சி அதிகாரமும் தான் குறி.

ராஜா குலங்கெட்டவன் என்றொரு மொழி உண்டு. எந்தவொரு ராஜாவையும் இன்ன குலம் என்று தீர்மானமாய் சொல்லவியலாது. ஏனெனில் எல்லாருமே கலப்பில் உருவாகி வரும் வம்சம்தான். சிலருக்கு ஆண் வாரிசு இல்லையென்று பெண் வழி வாரிசுக்கும் மன்னர் பதவி சென்றிருக்கும். இப்படிப் பார்த்தோமானால் எல்லா வரலாற்று மன்னர்களுக்கும் இந்த அளவுகோல் பொருந்தும்.

ராஜராஜனுக்கு வருவோம்.

ராஜராஜன் எங்கள் ஜாதியென தேவர், வன்னியர், பள்ளர், கோனார், முத்தரையர், உடையார் என்று பலரும் விளம்பரம் செய்கின்றனர். இதெற்கெல்லாமும் உறுதியான சான்று இல்லை. அன்றைக்கு அவர்கள் எந்தெந்த பட்டப்பெயர் வைத்திருந்தார்களோ அப்பெயரெல்லாம் பின்னாளில் ஜாதி ஆனதில் அவரும் அந்த ஜாதிக்காரனாகி விட்டார்.

எல்லோரிடமும் தெலுங்கும் கன்னடமும் கலிங்க கலப்பும் உண்டு.

நிற்க, இப்போது பறையர் சமூகத்தினரும் ராஜராஜனை சொந்தம் கொண்டாடுவதை நான் ஆதரிக்கிறேன். ஏனெனில், எந்த வரலாறு கிடைத்தாலும் அதை சாதுரியமாக தனதாக மாற்றிக்கொள்பவர்களுக்கு இதுவொரு கடிவாளமாக இருக்கும். உண்மையில் யாரிடமும் எதற்கும் ஆதாரமில்லை. இத்தனைநாளாய் யார் யாரோ அவனை சொந்தம் கொண்டாடியபோது கண்டுகொள்ளாதவர்கள் பறையர்கள் உரிமை கொண்டாடும்போது மட்டும் குதிப்பது ஏன்?

மேலும் எல்லா ஜாதியும் தன் ஜாதியென ராஜராஜனைக் கொண்டாடினால்தான் இந்த ஆண்டஜாதி பஞ்சாயத்து முடிவுக்கு வரும்.

எல்லோருக்கும் பொதுவான ஆளாய் ராஜராஜனும் மாறுவான்.

இவ்வகையில் இதை ஆதரிப்பது மொத்த தமிழ்ச்சமூகத்திற்கும் லாபமே.