7.9.15

படித்ததில் பிடித்தது

�� ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.

�� ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .
வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

�� ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .

�� ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.

அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.

ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.

�� நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.

�� உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

�� கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.

�� காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை.

எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.

�� பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.
பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.

�� சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

�� சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

�� கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

�� விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை  தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

�� இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான  பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில்   நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

�� கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

�� அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.

ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

�� யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.

�� எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

�� அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.

�� சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.
அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,

�� வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.

�� அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.

கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.

�� எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.

�� மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.

பாம்பு, அரசன் , புலி, கொட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .

�� பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.

கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.

�� கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

�� வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.

பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

�� பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

�� வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.

சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது.

�� கல்வி கற்கும் மாணவனானவன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோவம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை.

உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம்.

�� தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்.

6.9.15

ஈழமும் அணுகுமுறையும்

ஈழப் பிரச்சினையை இனி இந்திய அளவில் பரவலாக நகர்த்திச் சென்று பேசுவதே கொஞ்சமேனும் பயனுள்ளதாக இருக்கும். வெளி மாநில தலைமைகளுடன் தொடர்பு ஏற்படுத்த ஒரு குழுவொன்றை அமைக்க வேண்டும். அனைத்து மொழி மக்களுக்கும் இது மனித உரிமை & விடுதலை போராட்டம் என்ற பார்வையில் மாற்றப்பட வேண்டும்.

எல்லா மாநிலத் தலைநகரிலும் இருக்கும் தமிழ் அமைப்புகளை தொடர்ச்சியாக சந்தித்து பிரச்சாரத்தை தொடங்க வேண்டும். எல்லா இனங்களையும் நேசிக்கும் இனமாக நம் தமிழ் இனத்தைக் காட்ட வேண்டும். படிப்படியாக அனைத்து மாநில முற்போக்கு & ஜனநாயக அமைப்புகளுடன் தோழமையை ஏற்படுத்தி ஈழத்தை அவர்கள் ஏற்கும்படி தகுந்த உண்மையைச் சொல்லி பரப்புரை செய்ய வேண்டும். அந்தந்த மாநில மக்களின் பார்வையில் பிரிவினை சக்திகளாக தோன்றும் அமைப்புகளுடன் கடைசியாகத்தான் நட்பு ஏற்படுத்த வேண்டும்.

சுருக்கமாக ஈழத்தின் மீதான சராசரி மக்களின் பொதுப்புத்தியை மாற்றி அமைக்க முதலில் முறபட வேண்டும். புலிகளின் உயிர்த்தியாகம் எல்லா இனத்தாராலும் புரிந்துகொள்ளப்பட மென்மையாக காய் நகர்த்தப்பட வேண்டும். இதுவே உயிர் நீத்த புலிகளுக்கு நாம் செய்யும் மரியாதை.

அந்தந்த மொழிகளில் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற வேண்டும். எல்லா மாநிலங்களிலும் இருக்கும் தமிழ்ச்சங்கங்களை தொடர்பு கொண்டு தெளிவான நெறியாள்கை செய்தால் இது சாத்தியமே.

5.9.15

அவனுக்கும் கஷ்டம்னா?

"எல்லாரும் கஷ்டம் வந்தா திருவண்ணாமலைக்குப் போறாங்க. திருவண்ணாமலையில இருக்குறவனுக்கு கஷ்டம் வந்தா எங்கதான் போவான்?"

செப்.5 - ஆசிரியர் தினம்

இன்னமும்கூட
முக்கால்வாசி வாத்தியார்கள்
முட்டாள்களாகவேதான் இருக்கிறார்கள்

தாயைப்போல பொண்ணு
ஆசிரியர்களைப்போல மாணவர்கள்

மனப்பாட கல்வி முறை
அரசியல் பார்வையற்ற ஆசிரியர்கள்
போராடும் திறனற்ற தலைமுறை

ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தின்
அர்த்தம்தான் என்ன?

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்

இவன் கடவுளல்ல
முல்லைத்திணை மனிதன்

ஏய்க்கும் கூட்டத்திற்கு
மேய்க்கும் கூட்டம் அடிமை ஆக
கடவுளாக்கப்பட்டவன்

பிறந்தான் இறந்தான்
எனினும்
பிறந்தநாள் மட்டுமே கொண்டாடப்படுவதில்
அடங்கியிருக்கிறது சூட்சுமம்

அன்று
இடையர் கூட்டத்தின் வேலியாய் நின்று
இன்று
தன்னையே எல்லையாய் சுருக்கிய பிம்பம்

ராமன் தற்கொலை செய்து மாண்டதும்
வேடனின் அம்பால் கிருஷ்ணன் மாண்டதும்
தெரியாமலே போகிறது தலைமுறைதோறும்

"தானே படைத்தாலும்கூட
தன்னால் எதையும் மாற்ற இயலாது"

இப்படிச் சொன்னவனுக்கு
பிறந்தநாள் மட்டும் உண்டு
இறந்தநாள் மட்டும் இல்லையென்றால்
இயற்கை அவமதிப்பன்றோ..!

அவரவர் சுயசிந்தனையை
தொந்தரவின்றி வளர்க்க
இனி
இறந்தநாளையும் கொண்டாடுவோம்
எல்லா கடவுளுக்கும்.

3.9.15

நாளைக்காக மட்டும் வாழமுடியுமா?

��குழந்தைகளை படிக்க வைக்கும் எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு...

சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. வழக்கம்போல வாசகர் எழுதியதல்ல, வாசகரின் தந்தை எழுதியது. தன்னை அறிமுகம் செய்துகொண்டார் அவர்.

மத்திய அரசில் ஆரம்பநிலை அதிகாரியாக இருந்தவர். இரண்டாம்நிலை அதிகாரியாக ஓய்வு பெற்றார். இரு பிள்ளைகள். இருவருமே நன்றாகப்படித்து அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலுமாக வேலைபார்க்கிறார்கள். இவர் திருச்சியில் மனைவியுடன் வாழ்கிறார்.
அவரது பிரச்சினை தனிமைதான்.

மனைவிக்கு கடுமையான கீல்வாதம். ஆகவே குளிர்நாடுகளில் சென்று வாழமுடியாது. அவருக்கு ஆஸ்துமாபிரச்சினை உண்டு. பிள்ளைகள் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழ்கிறார்கள். அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைகூட ஊருக்கு வருவதில்லை என்பதே அவரது மனக்குறை. வந்தால் அதிகபட்சம் ஐந்துநாட்கள். உடனே கிளம்பிவிடுகிறார்கள். அந்த ஐந்து நாட்களிலும் மொத்தமாக ஐந்துமணிநேரம் பெற்றோரிடம் செலவழித்தால் அதிகம்

‘உங்கள் நூல்களை இங்கே வரும்போது என் இரண்டாவது மகன் கட்டுக்கட்டாக வாங்கிச்செல்கிறான். நீங்கள் ஏன் இதை அவனிடம் பேசக்கூடாது? நீங்கள் பேசினால் அவன் கேட்பான்’ என்றார் அவர்.

இம்மாதிரி குடும்ப விஷயங்களில் தலையிடக்கூடாதென்பது என் கொள்கை. ஆனால் அவர் மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியபோது அதை அவரது மகனுக்கு அப்படியே திருப்பி விட்டேன்.
அவர் மகன் ஒருவாரம் கழித்து மிகநீளமான ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். என்னை பலகோணங்களில் சிந்திக்கவைத்த கடிதம் அது.

‘நான் திருச்சியில் இருபத்திரண்டு வருடம் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் திருச்சியுடன் எனக்கு மானசீகமாக எந்த உறவும் இல்லை. இருபத்திரண்டு வருடம் அப்பா அம்மாவுடன் வாழ்ந்தேன். ஆனால் அவர்களைப்பற்றி ஒரு நல்ல நினைவுகூட இல்லை’ என்றார் அவரது மகன். அவரது தந்தை அவரை ஒரு பொறியியலாளராக ஆக்கவேண்டும் என்பதைப்பற்றி மட்டும்தான் சிந்தனை செய்தார். அதுவும் அவர் எல்.கெ.ஜியில் சேர்வதற்கு முன்னதாகவே.
ஒவொருநாளும் அவரே காலையிலும் மாலையிலும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார். அதைத்தவிர அவர்களின் அன்னையும் பாடம் சொல்லிக்கொடுப்பதுண்டு. பள்ளிக்கூடப்படிப்பு, வீட்டில் படிப்பு தவிர இளமை நினைவுகள் என்று எதுவுமே இல்லை. ஞாயிற்றுக்கிழமைகள், விடுமுறைநாட்களில் முழுக்கமுழுக்க பாடங்கள்தான். கோடைவிடுமுறை முழுக்க ஆங்கிலமொழியறிவுக்கும் கணிதத்திறமைக்கும் வகுப்புகள். தீபாவளி, பொங்கல் தினங்களில்கூட கொண்டாட்டம் இல்லை. படிப்புதான்.

"சிலசமயம் இரவில் படுத்து சிந்திப்பேன். இளமைக்காலத்தைப்பற்றிய ஒரே ஒரு மகிழ்ச்சியான நினைவாவது மனதில் எஞ்சியிருக்கிறதா என்று. எவ்வளவு நினைத்தாலும் ஒரு சிறிய நிகழ்ச்சிகூட நினைவுக்கு வரவில்லை. பின்பு ஒருமுறை எண்ணிக்கொண்டேன். சரி, ஒன்றிரண்டு துயரமான நினைவாவது இருந்தால் நன்றாக இருக்குமே என்று. அந்த நினைவுகள் வழியாகக்கூட என் வீட்டுடனும் ஊருடனும் மானசீகமாக தொடர்புபடுத்திக்கொள்ளலாமே என்று. அப்படியும் ஒரு நினைவு கிடையாது. படிப்பு படிப்பு படிப்புதான்."

"வீட்டைவிட மோசம் என் பள்ளி. தனியார் பள்ளி அது. மிக உயர்மதிப்பெண்கள் பெற்றுத்தரும் செலவேறிய பள்ளி. அங்கே பிள்ளைகளைச் சேர்க்க தவம் கிடப்பார்கள். பள்ளிக்கு உள்ளே நுழைந்த கணம் முதல் வெளியே செல்லும் கணம் வரை கூடவே ஆசிரியர்கள் இருப்பார்கள். பேசவோ சிரிக்கவோ விளையாடவோ அனுமதி இல்லை. படிப்பு மட்டும்தான். அந்தப்படிப்பிலும் எந்த சுவாரசியமும் இல்லை."

"பள்ளிப்படிப்புக்கு வெளியே நான் எதையுமே வாசித்ததில்லை. யாருமே எனக்கு இலக்கியத்தையோ கலைகளையோ அறிமுகம் செய்ததில்லை. நானறிந்த படிப்பு என்பது புத்தகத்தில் உள்ளதை அச்சு அசலாக திருப்பி எழுதுவதற்கான பயிற்சி மட்டும்தான்" என்று எழுதியிருந்தார்.

அப்படியே பொறியியல் படித்து வேலைக்காக அமெரிக்கா சென்றபோதுதான் அவருக்குத் தெரிந்தது மனிதவாழ்க்கை என்பது எவ்வளவு மகிழ்ச்சிகள் கொண்டது என்று. பயணங்கள், நண்பர்களுடனான சந்திப்புகள், இலக்கியவாசிப்பு, இசை. அவர் எழுதினார்.

எந்த இடத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ அந்த இடத்தில் நம் மனம் படிந்துவிடுகிறது. அதுதான் நமது ஊர் என்று நினைக்கிறோம்.

"எனக்கு அமெரிக்காவின் நகரங்கள்தான் பிடித்திருக்கின்றன. திருச்சி எனக்கு அன்னிய ஊராகத் தெரிகிறது. ஒருநாளுக்குள் சலித்துவிடுகிறது. என் பெற்றோர் மீது எனக்கு மரியாதையும் நன்றியும் உண்டு. அவர்களை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அவர்களுடன் அரைமணிநேரம்கூட என்னால் பேசிக்கொண்டிருக்க முடியாது. இருபத்திரண்டு வருடம் படி படி என்று மட்டுமே சொன்ன இரண்டு வயோதிகர்கள் அவர்கள். அவ்வளவுதான். அவர்களை நான் நேசிக்கவேண்டும் என்றால் அவர்களை எனக்கு தெரிந்திருக்கவேண்டும். அவர்களின் மனம் எனக்குப் புரிந்திருக்க வேண்டும். எனக்கு அவர்கள் அன்னியர்கள்போல தெரிகிறார்கள்."

"இருபத்திரண்டு வருடம் அவர்கள் எங்களிடம் பொதுவாக எதையும் உரையாடியதே இல்லை. படிப்பையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலைகளை கொட்டிக்கொண்டே இருப்பார்கள். இப்போது அவர்கள் பேச நினைத்தாலும் பேசுவதற்கான தொடர்பு இல்லை. இப்போதுகூட நீ என்ன சம்பளம் வாங்குகிறாய், என்ன மிச்சம் பிடித்தாய் என்று பயம்காட்ட மட்டுமே அவர்களால் முடிகிறது. புத்தகம் வாங்காதே, பயணம்செய்யாதே என்று அவர்கள் வாழ்ந்ததுபோல என்னையும் வாழச் சொல்கிறார்கள். நீங்களே சொல்லுங்கள், அரைமணிநேரம்கூட பேசிக்கொள்ள பொதுவாக ஏதும் இல்லாதவர்களிடம் நாம் எவ்வளவுதான் செயற்கையாக முயன்றாலும் பேசிக்கொண்டிருக்க முடியுமா? முற்றிலும் அன்னியமாக தெரியும் ஓர் ஊரில் எவ்வளவுநாள் வாழமுடியும்? மரியாதைக்காகவோ நன்றிக்காகவோ ஐந்துநாள் இருக்கலாம். அதற்குமேல் என்ன செய்வது?’ என்று மகன் கேட்டார். என் இளமைப்பருவம் முழுக்க வீணாகிவிட்டது என்றுதான் நினைக்கிறேன்."

அந்தக்கடிதத்தை அப்படியே அவரது தந்தைக்கு அனுப்பினேன். இதைவிட தெளிவாக எதையும் நான் சொல்லிவிடமுடியாது என்றேன். அதை அவர் புரிந்துகொள்ளாமல் "நன்றிகெட்டதனம், பொறுப்பற்றத்தனம்" என்று மகனை வசைபாடி ஒரு கடிதம் அனுப்பி எனக்கும் பிரதி அனுப்பியிருந்தார். மேலும் ஒருமாதம் கழித்து ‘இந்த தீபாவளிக்கு அவனை வரச்சொல்லமுடியுமா?’ என்று கேட்டு ஒரு மின்னஞ்சல் எனக்கு அனுப்பினார்.

‘தீபாவளி என்பது இளமையில் கொண்டாடவேண்டிய ஒரு பண்டிகை. அன்றுதான் அந்த உற்சாகம் இருக்கும். வளர்ந்தபின் அந்த நினைவுகளைத்தான் கொண்டாடிக்கொண்டிருப்போம். உங்கள் மகனுக்கு நினைவுகளே இல்லை என்கிறார். நீங்கள் அவருக்கு உரிமைப்பட்ட பண்டிகைக் கொண்டாட்டங்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டுவிட்டீர்கள் என்கிறார்’ என நான் பதில் எழுதினேன். அவர் மீண்டும் பதில் போடவில்லை.

வாழ்க்கை என்பது எதிர்காலத்துக்கான போராட்டம் அல்ல. வாழும் தருணங்களை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வதுதான். அதற்காகவே பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் நம் முன்னோரால் உருவாக்கப்பட்டுள்ளன.
நாளை முக்கியம்தான். ஆனால், இன்று அதைவிட முக்கியம்.

எனது பார்வை

வெள்ளையனிடமிருந்து மேல் ஜாதிக்காரர்களுக்கு அதிகாரம் வந்தது. தனித்தமிழ்நாடு உருவானால் யாரிடம் அதிகாரம் போகும்? அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலையில் நம் சமூகம் சகல சிந்தனையிலும் முன்னேறிவிட்டதா?

மீண்டும் ஒரு அடிமைப் போரை நாம் நடத்தவேண்டியிருக்கும். தலைமுறைதோறும் இது வேலையல்ல. தலைமுறைதோறும் போராடிச் சாவதுதான் வலுவற்ற மக்களின் தலையெழுத்தா?

உணர்ச்சிவசப்பட்டு பட்டு தமிழன் விவேகத்தை இழக்கிறான். உணர்ச்சியூட்டப்பட்ட பிராணிகளாக வாழ்வது புரட்சியில்லை. அறிவூட்டப்பட்ட மனிதனாய் இருப்பதே. அதுவே காலந்தோறும் ஒரு இனத்தை மீண்டும் அடிமையுறாமல் காப்பாற்றும்.

எல்லாருடைய கருத்துக்களையும் விடவும், முன்னோர் சொன்னதைவிடவும் சிந்திக்கிற நம் அறிவு பெரிது.

எல்லோரும் சமம், எல்லோரும் தமிழர் என்ற நிலை ஆழ்ந்த படிப்பும் சிந்தனையினாலே மட்டுமே வரும். அதை உருவாக்கி அறிவியல் பார்வை கொண்ட சமூகமாக நாம் தன்னிறைவடையும் வரையில், தனித்தமிழ்நாடு அடைவது என்பது பெரும் இன அழிப்பிலேயே போய் முடியும். அடைந்தாலும் இதே முட்டாள்த்தனம் நீடிக்கப்போகும் நிலையெனில் எங்கு வாழ்ந்தால் என்ன?

சகல கருத்துக்களையும் உள்வாங்கிப் படியுங்கள். சொந்த சுய அறிவில் பகுத்து ஆராய்ந்து எதையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

அறியாமையிலிருந்து விடுபடுவதே மானுட சமூகத்தின் உண்மை விடுதலை.

எல்லா இனத்தையும் பகைபாராட்டாமல் அரவணைத்து ஒரு முன்னுதாரணமான இனமாக; இயற்கையின் தோழர்களாக வாழ எங்கிருந்தாலும் அறிவைத்தேடுங்கள். ஆளுமையை வளர்த்துக்கொள்ளுங்கள். இன்னொருவர் சொல்வதாலேயே எதையும் புறந்தள்ளாதீர்.

புத்தன், ஓஷோ, மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர், லெனின், மாவோ,  இங்கர்சால் & இன்னபிற எல்லா மானுட சமூக சிந்தனையாளர்களையும் படியுங்கள். அறிவுக்கு ஒத்துவந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்; ஒத்துவரவில்லையானால் புறந்தள்ளுங்கள். எதுவும் உங்கள் சுய தெளிவால் பிறக்கட்டும்.

இதுதான் என் பார்வை.