30.5.14

"யார் உயர்ந்த சாதி? அவனா நீயா அவர்களா?"

உனக்கும் அதிகாரமில்லை. அவனுக்கும் அதிகாரமில்லை. டெல்லிக்காரனுக்கு நீயும் அடிமைதான், அவனும் அடிமைதான். உன் மொழியை எவ்வளவு ஒடுக்க முடியுமோ அவ்வளவும் ஒடுக்கி உன் மொழியல்லாதவனை உனக்கு அதிகாரியாக உன் ஊருக்குள் அனுப்புகிறான் வேறொருவன். உன் சாதிதான் முன்னேற வேண்டுமென நீயும், அவன் சாதிதான் முன்னேற வேண்டுமென அவனும் என்னென்னெல்லாமோ செய்கிறீர்கள். அவன் அவன்சாதி அயோக்கியனை ஆதரிக்கிறான். நீ உன்சாதி அயோக்கியனை ஆதரிக்கிறாய். கோவணமும் இல்லாமல் இருக்கப்போகிற எதிர்காலத்தை எதிர்பார்த்தே உங்கள் அரசியல் ஆதரவு நகர்ந்துகொண்டிருக்கிறது. உங்களுக்காக உன் மண்ணில் இயங்கும் அலுவலகங்களில் உன் மொழியில்லை. உனக்காக வேலைசெய்பவர்கள் உன்னுடன் உன் மொழியை பேசவில்லை. கைபேசி நிறுவனங்களும் விமான நிலையங்களும் தொடர்வண்டி நிலையங்களும் அஞ்சல் அலுவலகங்களும் இதரபிற மைய அரசு அலுவலகங்கமே அவனும் நீயும் அடிமை நாய்கள் என்பதற்கான ஆதாரம்தான். "உன் மொழியை எவ்வளவு ஒடுக்க முடியுமோ அவ்வளவும் ஒடுக்கி உன் மொழியல்லாதவனை உனக்கு அதிகாரியாக உன் ஊருக்குள் அனுப்புகிறான் வேறொருவன்."

அவனும் நீயும் ஒரே மொழிதான் என்பதே உங்கள் அடையாளம். மொழிதான் உங்கள் சந்ததிகளை சிந்திக்கவைக்கும். உன் சந்ததிக்கும் அவன் சந்ததிக்கும் சோறுபோட வக்கற்றதாய் உன் மொழி மாறிவிட்டது. உங்கள் மீதும் உங்கள் சந்ததி மீதும் உண்மையான அக்கறையுள்ள அரசு ஏற்பட அவனை நீயும் உன்னை அவனும் நம்பித்தானாக வேண்டும். 

உங்கள் மண்ணில் நீயும் வளரவில்லை. அவனும் வளரவில்லை. ஆனால் "சௌகார்பேட்டைகள்" மட்டும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு உபயோகப்படும்படியே மைய அரசு அலுவலகங்கள் உங்கள் மண்ணில் துவங்கப்படுகின்றது. 

யார் உயர்ந்த சாதி? நீயா அவனா அவர்களா?

28.5.14

முதுகுளத்தூர் வகுப்புக் கலவரமும் கீழ்வெண்மணிப் படுகொலையும்

முதுகுளத்தூர் வகுப்புக் கலவரத்திற்கும் கீழ்வெண்மணியில் 44 ஏழைத் தொழிலாளர்கள் கொளுத்தப்பட்டதற்கும் என்ன செய்து கிழித்தது பெரியாரியம்?

முதுகுளத்தூர் கலவரத்திற்கு காரணமான முத்துராமலிங்கத்தை எதிர்த்து நாடே பேச தயங்கியபோது அவரை கைது செய்யச் சொன்னது பெரியார். இதனால் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. பின் கீழ்வெண்மணியில் 44 பேரை உயிரோடு கொளுத்திய அந்த நாயுடுவை சிறையிலிருந்து விடுதலையானதும் திட்டமிட்டு கொன்றதில் 11 பேர் திக-வினர், ஒருவர்தான் கம்யூனிஸ்டு. தேர்தலில் நின்று சீரழிந்தவர்களை பெரியாரியவாதிகளாக எண்ணி பெரியாரை விமர்சிப்பது நியாயமில்லாதது.

சாதியையும் பிறவி அடிமைத்தனத்தையும் ஒழிக்காமல் வர்க்கப் புரட்சியை இந்தியாவில் நடத்த முடியாது என்றார் பெரியார். ஏழை வர்க்கத்திற்குள்ளேயும் பணக்கார வர்க்கத்திற்குள்ளேயும் சாதிப்பிரிவினை ஏற்றத்தாழ்வுகள் இல்லாமலா இருக்கிறது. மேல்சாதி பணக்காரன் கீழ்சாதி பணக்காரனையும், மேல்சாதி ஏழை கீழ்சாதி ஏழையையும் சமமாகப் பார்க்கிறானா? வர்க்க ஏற்றத்தாழ்வுகளை ஒழித்தால் வர்ணாசிரம சாதி ஏற்றத்தாழ்வுகள் தானாகவே ஒழியுமென்ற கம்யூனிஸ்டுகளின் வாதத்தை பெரியார் ஏற்கவில்லை. அதனால்தான் கம்யூனிஸ்டுகளின் தூண்டுதலால் நடத்தப்பட்ட கீழ்வெண்மணி போராட்டத்தை ஒரு கூலி உயர்வுப் போராட்டமாகவே அதை விமர்சித்தார். 

கம்யூனிஸ்டு அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டவர் பெரியார்தான். அதற்காக 6 மாத சிறைதண்டனையும் பெற்றார்.

27.5.14

"வாடிவாசல்" - சி.சு.செல்லப்பா




இன்று இக்கதையைப் படித்தேன்.

பண்டைய காலத்தில் "ஏறு தழுவுதல்" என்று அழைக்கப்பட்டு தற்போது ஜல்லிக்கட்டு என்று அழைக்கப்படும் தமிழர்களின் மாடு அணைக்கும் வீர விளையாட்டு பற்றிய குறுநாவல் இப்புத்தகம். 

செல்லாயிகட்டு வாடிவாசலுக்கு, பெரியபட்டி ஜமீன்தார் மொக்கையாத்தேவரின் காளையை அடக்க சமயம் பார்த்து காத்துக்கொண்டிருக்கிறான் பச்சி. அவனுடன் அவனது மச்சினன் மருதனும் துணைக்கிருக்கிறான். சுற்றுப்பட்டி ஊரெல்லாம் கட்டுச்சோறு கட்டிவந்து இன்று மாடு அடக்கப்போகும் வீரர்களை எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறது. பிச்சி எதையோ நோக்கிக் காத்துக்கிடப்பதை ஒரு வயதான கிழவர் குறிப்பால் உணர்கிறார். அந்தக் கிழவருக்கு ஜல்லிக்கட்டு காளைகள் அத்தனை பற்றியும் எல்லா விவரமும் தெரிந்திருப்பதைக் கண்டு இருவரும் அதிசயிக்கிறார்கள். அப்படியே தங்களுக்குத் தேவையான சிலபல தகவல்களையும் அவரிடமிருந்து கேட்டுக்கொள்கிறார்கள். யாராலும் அடக்க முடியாத ஜமீன்தாரின் காளை "காரி" பற்றியும் அதை அவர்கள் வளர்க்கும் விதம் பற்றியும் மூன்று வருடத்திற்கு முன்பு இந்தக்காளையை அடக்க முயன்று குடல் அறுந்து ஆறுமாதம் படுக்கையாய் கிடந்து மாண்டுபோன அம்புலித்தேவன் பற்றியும் பல தகவல்களை சுவாரஸ்யமாய் சொல்கிறார் அந்தக் கிழவர். காளையை அடக்குவதில் "கிளக்கத்தியான் அம்புலி"யை மிஞ்ச ஆளில்லை எனப் புகழ்ந்த அந்தக்கிழவனுக்கு பிற்பாடுதான் இந்தப் பிச்சி அந்த அம்புலியின் மகன் எனத் தெரியவருகிறது. வேறு ஊர்க்காரனாய் இருந்தாலும் பாசம் கொள்கிறார். சீறிவரும் ஒவ்வொரு காளையைப் பற்றியும் அவர் சொல்வதை காதில் வாங்கிக்கொண்டு தானும் சீறிப்பாய்ந்து முதல் இரண்டு காளைகளையும் லாவகமாய் அடக்குகிறான் பிச்சி.

தன் காளையை அடக்க சுற்றுப்பட்டியில் ஆளேயில்லை என்று கர்வமாய் இருக்கும் ஜமீனுக்கு பிச்சியின் பின்னணி பற்றி தெரியவருகிறது. அம்புலியின் திறமையைப்பற்றி தெரிந்திருக்கும் அவர் பிச்சி அடக்கிவிடுவானோ என்று அச்சம் கொள்கிறார். இருந்தும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாடிவாசலை வேடிக்கை பார்த்து காத்திருக்கிறார். ஜமீனின் காரி சீறி வருகிறது. பிச்சியும் பாய்ந்து அடக்குகிறான். மூன்று திமிலில் மாடு அடங்க, அதன் தலையில் சுற்றப்பட்டிருந்த தங்கச் சங்கிலியையும் பட்டு உருமாவையும் உருவி எடுத்து கிழவனிடம் தருகிறான். மாடு துள்ளி எக்காளமிட, ஏற்கெனவே இரண்டு காளைகளை அடக்கிய பிச்சியின் கை மெல்ல பிடி தளர, பிச்சியின் தொடையைக் குத்தி கிழிக்கிறது காரி. ரத்தம் பொல பொலவெனக் கொட்ட எல்லோரும் அம்புலியைப் பற்றியும், அவன் மகன் பிச்சியையும் பெருமையாய் தூக்கிக்கொண்டு கொண்டாடியபடியும் அலறியபடியும் மருத்துவமனையை நோக்கி புறப்பட, அருகே வரும் ஜமீன் பிச்சியின் வீரத்தைப் பாராட்டி 100 ரூ பரிசளிக்க அதை வாங்கி அந்தக் கிழவனிடமே தருகிறான் பிச்சி. ஜமீனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு, 'தங்களை எதிர்ப்பதற்காக காரியை அடக்கவில்லையென்றும், தன் அப்பன் அம்புலி உயிர்விடும்போது சொன்னதற்காகத்தான் அடக்கியதாகவும்' சொல்ல அவர் தன் ஜமீன் வண்டியிலேயே அவனை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல சொல்கிறார். 

தன் காளையை யாரும் அடக்கமுடியாது என நினைத்துக்கொண்டிருந்த ஜமீன் இதை பெரும் அவமானமாய் கருதுகிறார். மேலும் 2 பேரைக் குத்திக் கொன்று 20 பேரை முட்டித்தள்ளி ஆவேசம் அடங்காமல் துள்ளிக்கொண்டிருக்கும் காரியை தன் ரிவால்வரை எடுத்து இரண்டு முறை சுடுகிறார். காளை அடங்கிச் சாய்கிறது. 

தன் ஊரையும் தன் மகளையும் தன் ஆநிரைகளையும் எதிரிகளிடமிருந்து பாதுகாத்து காப்பாற்றும் திறன் தன் நிலத்து ஆயர் இளைஞனுக்கு இருக்கிறதா என சோதித்தறிய முல்லைத் திணையில் ஆரம்பித்த "ஏறு தழுவுதல்", மிருகங்களுக்கும் மனிதனுக்குமான மோதல் என்பதைத் தாண்டி மனிதனுக்கும் மனிதனுக்குமான கௌரவப் பிரச்னையாக தற்போது வளர்ந்துள்ளது. மேலும் சில குறிப்பிட்ட சாதிக்கானதாகவும் குறுகியிருக்கிறது என்பதும் மறுக்கமுடியாததுதான். ஆதிக்க அடக்குமுறைகளுக்கெதிரான கருத்தியலாகவும் ஏறு தழுவுதலை எடுத்துக்கொள்ளலாம்தான். ஆனால் மனிதர்களைப் பொறுத்தவரையில்தான் அது வீர விளையாட்டு. காளைகளைப் பொறுத்தவரையில் அதெல்லாம் கிடையாது. 

மேலோட்டமாகப் பார்த்தால் மிருகவதையாகத் தோன்றும். பழங்காலந்தொட்டு நெடுங்காலமாகத் தொடரும் முல்லைத் திணையின்; தமிழர்களின் பண்பாட்டு வேர் அறுபடுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாதுதான். 

26.5.14

"படிப்பும் விடுதலைக்கான அறிவும்" - தோழர் மருதையன்



இன்று அருமையான இந்த சிறு புத்தகத்தைப் படித்தேன். நமது அரசாங்கமும் சமூகமும் நம் இளைஞர்களை எவ்வளவு அடிமைப்புத்தியோடு தயாரிக்கிறது என்பதைப் பற்றி அருமையாகச் சொல்லியிருக்கிறார் தோழர் மருதையன் அவர்கள். 

மக்களைச் சுரண்டும் வெளிநாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு ஏவலாளிகளாகவும், அவர்கள் ஊழலுக்கு ஒத்தாசை புரிபவர்களாகவும், அவர்களை வழக்கிலிருந்து விடுவிக்க பெரும் தொகைக்காக வாதாடுபவர்களும்தான் நம் கல்விக்கூட அறிவுத் தயாரிப்புகளில் பெரும்பான்மை. 

எது உண்மையான படிப்பு? எவ்வாறானது உண்மையான போராட்டம்? எதிரிகளை நாம் எப்படி சமாளிக்கப்போகிறோம்? அறிவு என நாம் கருதிக்கொண்டிருப்பது உண்மையில் அவ்வளவு பலமுடையதா? இப்படியான ஏராளமான கேள்விகளுக்கான விடையை திறக்கிறது இச்சிறு புத்தகம். 

தன் பிள்ளைகளை அடிமைப்புத்தியற்ற அறிவாளிகளாய் வளர்க்க முனையும் பெற்றோர்கள் கண்டிப்பாக படிக்கவும்.

விலை: 20 ரூபாய்.
கிடைக்குமிடம்: கீழைக்காற்று பதிப்பகம், 044-28412367.

"மரண வீடு" - சத்யஜித் ரே




தொடர் மின்வெட்டு காரணமாக கோடையை கல்கத்தாவில் கழிக்க முடியாமல் ஒரிஸ்ஸாவின் பூரிக்கு வருகிறார்கள் ஃபெலூடாவும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் தபேஷ் மற்றும் மர்ம நாவல் எழுத்தாளரான லால்மோகன் பாபுவும். பூரி கடற்கரையின் ஓரமாக இருக்கும் நீலாச்சல் என்ற நட்சத்திர விடுதியில் தங்கும் அவர்கள், ஒரு சமயம் கடற்கரைக்கு ஓய்வெடுக்க நடந்து செல்லும்போது தூரத்தில் ஒரு புதர் மறைவில் குண்டடிபட்ட ஒரு பிணம் இருப்பதைப் பார்க்கிறார்கள். காவல்துறை விசாரணையில் அவர் பெயர் ரூப்சந்த் எனவும், நேபாளத்தைச் சேர்ந்த ஓட்டுனர் எனவும் அறியும் அவர்கள் அவரது சட்டைப் பையில் "சர்க்கார், கல்கத்தா" என்ற முகவரி அட்டை ஒன்று இருந்ததையும் காவல்துறையிடமிருந்து தெரிந்துகொள்கிறார்கள். அந்த கடற்கரையில் ஒரு ஊன்றுகோலுடன் கூடிய காலடித்தடத்தையும் காண்கிறார்கள். அந்த சர்க்காரைப் பற்றி விசாரிக்க அவர் கடந்தசில நாட்களாக ஊரில் இல்லை என தகவல் தெரிகிறது.

நெற்றியில் சுண்டுவிரல் வைத்து ஒருவரின் முக்காலத்தையும் துல்லியமாகக் கணிக்கும் "லக்ஷ்மண் பட்டாச்சார்யா" என்ற ஒருவர் அக்கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு பழைய மாதிரியான மூன்றடுக்கு வீட்டின் நடுத்தளத்தில் இருப்பதாகக் கேள்விப்படும் லால்மோகன்பாபு ஃபெலூடாவிடம் அடிக்கடி அவரைப் பற்றிச் சொல்கிறார். "சாகரிகா" என்று பெயரிடப்பட்ட பழமைவாய்ந்த அந்த வீட்டின் முதலாளி டிஜி சென். இவர் பழைய ஓலைச்சுவடிகளை சேகரித்து பாதுகாத்து வருபவர். மேலும் மலையேறுவதிலும் பனியில் வாழும் விலங்குகளைப் பற்றி அறிவதிலும் ஆர்வலர். 

ஒருசமயம் 'மஜூம்தார்' என்பவர் ஃபெலூடாவிடம் அறிமுகமாகி தான் டிஜி சென்னின் நண்பர் என்றும், டிஜி சென்-ஐப் போன்ற ஆர்வலர்தானென்றும் கூறி, முன்பு நேபாளத்தில் டிஜி சென்னின் அறைக்குள் தெரியாமல் நுழைந்த ஒரு சமயம் ஓலைச்சுவடிகள் பற்றிய ஏதோ ரகசிய நடவடிக்கைகளை தான் கண்டதாகவும் அதனால் தன்னை ஒரு மலையிலிருந்து தள்ளிவிட்டு விபத்து ஏற்படுத்தியதாகவும் அதில் ஞாபக மறதியும் கை கால் முறிவும் தனக்கு ஏற்பட்டதாகவும் சொல்லி தற்போது அவரைக் காண பூரி வந்துள்ளதாகவும் சொல்கிறார். 

அந்தக் கடற்கரையின் காலடித்தடங்கள் மஜூம்தாரினுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கிறார் ஃபெலூடா.
டிஜி சென்-ஐ சந்திக்கும் ஃபெலூடா ஓலைச்சுவடி பற்றிய விவரங்களை அறிகிறார். அவரது மகனைப் பற்றி மறைக்கும் சென்-ஐ சந்தேகம் கொள்கிறார். பிறிதொரு சமயம் மஹூம் சென் என்ற அவரது மகனை சந்தித்து டிஜி சென்னுக்கு நடந்த விபத்து பற்றி அறிகிறார். 

ஜோதிடர் லக்ஷ்மண் பட்டாச்சார்யாவை மஜூம்தார் சந்திக்க அவரது கடந்த காலத்தை ஆச்சர்யப்படும்படி சொல்ல ஃபெலூடா உட்பட அனைவரும் வியக்கின்றனர். 

இந்நிலையில் டிஜி சென்னிடமிருந்து ஒரு ஓலைச்சுவடியொன்று காணாமல் போகிறது. அதே நாளிலிருந்து அவரது உதவியாளர் போஸும் தலைமறைவாகி விடுகிறார். போஸ்தான் திருடியிருக்க வேண்டும் என அனைவரும் கருத, கடற்கரைக் அருகிலுள்ள ஒரு பாழடைந்த பங்களா ஒன்றில் கொல்லப்பட்ட நிலையில் போஸ்-ஐ காண்கிறார் ஃபெலூடா. 

இரண்டு கொலைகளுக்கும் தொடர்பிருப்பதாக கருதும் ஃபெலூடா, குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும் இன்றிரவு பிடித்துவிடுவதாகவும் சொல்லி மற்ற இருவர்களையும் தன்னுடன் தயார்படுத்தி அந்த பாழடைந்த பங்களாவிற்கு மிகவும் எச்சரிக்கையாக இரவில் அழைத்து செல்கிறார். டிஜி சென்னின் மகனும் இதற்கு உதவுகிறார். 
இரவில் அந்த பங்களாவிற்குள் குற்றவாளிகளை ஃபெலூடா பிடித்துவிட, அவரது அழைப்பின்பேரில் ஏற்கெனவே வந்திருந்த போலிசார் அவர்களைக் கைது செய்கிறார்கள். குற்றவாளிகளைக்கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள் தபேஷும் லால்மோகன் பாபுவும். மஜூம்தாரும், லக்ஷ்மண் பட்டாச்சார்யாவும்தான் அந்தக் குற்றவாளிகள். 

முதலில் கொலையுண்ட ரூப்சந்த் என்ற ஓட்டுனரின் மூலமாக டிஜி சென்னைக் கடத்திகொண்டுபோய் கொன்றுவிட்டு அவரது ஓலைச்சுவடிகளை திருட திட்டமிடுகிறார் சர்க்கார் என்பவர். அதில் தப்பித்துவிடும் டிஜி சென் பூரிக்கு வந்து அமைதியாக ஓலைச்சுவடிகளை சேகரித்து வாழ்கிறார். இதை அறியும் சர்க்கார் இங்கேயும் தொடர்ந்து வந்து விலைமதிப்பில்லாத அந்த ஓலைச்சுவடிகளினால் பெரும் செல்வத்தை ஈட்டி செல்வந்தாராகலாமென்று லக்ஷ்மண் பட்டாச்சார்யாவையும் துணைக்கிழுக்கிறார். பழைய ஓட்டுனர் திரும்பி வந்து மேலும் பணம் கேட்டு மிரட்ட அவரைக் கொன்றுவிடுகிறார் சர்க்கார். பின் தங்களின் திட்டத்துக்கு உதவியாளர் போஸ் உடன்படாமல்போக அவரையும் கொன்றுவிடுகிறார்கள். கடைசியாகக் கைப்பற்றிய ஓலைச்சுவடியை வைத்துக்கொள்ள முடியாமல் கடலில் வீசிவிட்டு தப்பிக்க முனையும்போதே அகப்பட்டுக்கொள்கிறார்கள் இருவரும். 
மஜூம்தார் என்ற டிஜி சென்னின் நண்பர் உண்மையிலேயே விபத்து ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு பின்பு இறந்துவிட்டதையும், மஜூம்தார் என அறிமுகமானவர் சர்க்கார்தான் என்ற உண்மையையும் ஃபெலூடா கண்டுபிடிக்கிறார். காணாமல்போன அந்த ஓலைச்சுவடியையும் ஒரு மீனவ சிறுவனிடமிருந்து பெற்று டிஜி சென்னிடமே ஒப்படைக்கிறார். 

மேலும் டிஜி சென்னுக்கு செயற்கைக்கால் பொருத்தப்பட்டிருப்பதையும், அவர் யாருக்கும் தெரியாமல் நடைபயிற்சி செல்வதையும், அந்தக் கோலூன்றிய கடற்கரை காலடித்தடங்கள் மஜூம்தாராக நடித்த சர்க்காருடையது அல்லவென்றும் அது டிஜி சென்னுடையதுதானென்றும் சொல்ல அவர் ஆச்சர்யப்படுகிறார். 


இப்ப என்னாகப்போகுது?

ராஜபக்சே வர்றத எதிர்த்தா இப்ப என்ன ஆகப்போகுது? 

"அந்த நாயை ஏன் எல்லாரும் எதிர்க்கிறாங்கன்னு உலகத்து தெரியனும்."

அதிக பாசம்

"தன் குழந்தைகளில் எதை முட்டாளாக நினைக்கிறார்களோ அக்குழந்தையின் மீதே பெற்றவர்கள் அதிக பாசம் காட்டுகிறார்கள்."

மனசாட்சி என ஒன்று இருந்தால்

இவ்ளோ பேரு எதிர்க்கும்போது ஒரு மானமுள்ளவன் என்ன பண்ணனும்? ஆனா அந்த மானங்கெட்டவன் இதைமீறியும் ஏன் வரான்னா; இவ்ளோ தமிழர்கள் எதிர்க்குறாங்கன்னா சிங்களனுக்கு நான் மட்டும்தான் தலைவனா இருக்க தகுதியுள்ளவன்னு காட்டிக்கத்தான். தன் ஊருக்குள்ள தன் செல்வாக்கை கூட்டிக்கத்தான்.

அவனையெல்லாம் விருந்தாளியா அடிக்கடி கூப்புடுற இவனுங்க என்னதான் ஜென்மங்களோ? இந்த "பாரத் மாதா"வை ரொம்பநாளா தன் கள்ளக்காதலியா வெச்சிட்டிருக்கிற சிங்கள ராஜதந்திரத்தை நாம ரொம்பவே யோசிக்கனும்.

நாளுவந்தா கொடியேத்தி மிட்டாய் கொடுத்து கோசம் போட்டுக்கிட்டு; வடக்குக்காரன் என்ன பண்ணாலும் குனிஞ்சிக்கிட்டே நிக்கிற நம்ம அறிவாளி புள்ளைகள் மனசு மாறனும். 

போராடனும்; இல்லாட்டி போராடுறவனை ஆதரிக்கனும். 

இப்படி ரெண்டும் இல்லாதவங்க மனசாட்சியோட ஒருக்கா "சேனல் 4" போர்க்காட்சிகளை பாருங்க, மனசாட்சின்னு ஒன்னு இருந்தா.

24.5.14

மோடி பதவியேற்பில் ரஜினி

ராஜபக்சே வந்தால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்காரர்களும் மோடி பதவியேற்பை புறக்கணிக்க வேண்டும். ஈழப்போர் பற்றியே தெரியாத வடநாட்டான்களுக்கு ஏன் தமிழர்கள் புறக்கணித்தார்கள் எனத் தெரியவேண்டும். இது ரஜினியின் தனிப்பட்ட நட்பு என்று விட்டுவிட முடியாது. நீதி கிடைக்காமல் கேட்பாரற்று அனாதையாய் மாண்டவர்கள் நம் உறவுகள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைப் பார்த்தால் இது நாம் அவர்களுக்கு செய்யும் துரோகம்.

"கேங்டாக்கில் வந்த கஷ்டம்" - சத்யஜித் ரே


இன்று காலை இந்த புத்தகத்தை படித்தேன்.

சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக் என்ற இடத்திற்கு சுற்றுலா செல்கிறார்கள் ஃபெலூடா என்கிற மித்தரும் தோப்ஷேவும். ஃபெலூடா என்பவர் சத்யஜித் ரேவின் பிரபல துப்பறியும் கதாபாத்திரம். இருவரும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். சிக்கிமின் விமானநிலையத்திலிருந்து ஒரு டாக்ஸி துணையோடு செல்லத் துவங்குபவர்களுக்கு வழியில் ஆங்காங்கே மலைச்சரிவால் பாதை மோசமாக இருப்பதாகவும், ஓரிரு நாட்களுக்கு முன்புகூட பாறை உருண்டு வந்து விழுந்ததில் ஒரு டாக்சி பயணி (ஷெல்வான்கர்) அகோர விபத்தில் இறந்துபோனதாகவும், பயண வழியில் சந்திக்கும் போஸ் என்பவரால் தகவல் அறிகிறார்கள். அந்த போஸ் என்பவர் தான் பூக்களிலிருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் ஒரு மும்பாய் கம்பெனியின் பணியாள் என்றும் பின் இறந்துபோனது ஷெல்வான்கர் எனத் தெரியவரும்போது அவர் தன்னுடன்தான் பணிபுரிவதாகவும் சொல்ல, சுற்றுலாவுக்குப் போன இடத்தில் ஷெல்வான்கரின் விபத்தைப் பற்றி துப்பறிய ஆரம்பிக்கிறார் மிஸ்டர் ஃபெலூடா. 

9 தலைகளுடனும் 34 கைகளுடனும் மூன்று அங்குல உயரத்திலுள்ள "யமன்தக்" என்ற திபெத்திய சிலை ஒன்றை அதன் மதிப்பு தெரியாமல் வெறும் 1000 ரூபாய்க்கு ஷெல்வான்கருக்கு விற்றுவிடுகிறார் நிஷிகாந்த் சர்க்கார். விற்றபின்புதான் அதன் விலை அதிகமென அவருக்குத் தெரியவர ஷெல்வான்கரை கண்டுபிடித்து சிலையை திரும்ப வாங்க முயல்கிறார். இந்நிலையில் ஷெல்வான்கர் இறந்துவிட, ஃபெலூடாவுக்கு தன் நோக்கத்தைப்பற்றி சொல்லாமல் திபெத் பௌத்த மடங்கள், லாமா நடனம், சிக்கிம் இடங்கள் என்பன பற்றிய பல தகவல்களுக்காக உதவுகிறார். இருப்பினும் ஷெல்வான்கருக்கு நேர்ந்தது விபத்தல்ல; அதுவொரு கொலைதான் என்றும் அது நடந்த சில நேரங்களில் சம்பவம் நடந்த 'சிக்கிம் வடக்கு நெடுஞ்சாலை' என்ற இடத்திற்கு சர்க்கார் சென்றிருக்கிறார் என்பதையும் மிஸ்டர் ஃபெலூடா அறிந்து கொள்கிறார். சுற்றுலா போனதை மறந்துவிட்டு கொலையை துப்பறிய ஆரம்பிக்கும் ஃபெலூடாவிற்கு, திபெத்தைப் பற்றி சில புத்தக எழுதும் ஆய்வுக்காக வந்ததாக அறிமுகமாகும் புகைப்பட கலைஞரான 'ஹெல்மட் உங்கர்' என்ற ஒரு ஜெர்மானிய ஹிப்பியின் மீதும், ஷெல்வான்கரின் நண்பர் டாக்டர் வைத்யா (ஆவி மீடியம்) என்பவர் மீதும், சர்க்கார் மீதும் சந்தேகம் வலுக்கிறது. இறுதியில் ஷெல்வான்கரை திட்டமிட்டு கொலை செய்தது யார்? என்பதும், எதற்கு? என்பதும் சுவாரஸ்யமாய் துப்பறிகிறார் மிஸ்டர் ஃபெலூடா.

இந்தக்கதையை படித்ததும் ஒருமுறை சிக்கிம் மாநிலத்தையும், அங்கிருக்கும் திபெத்திய பௌத்த மடங்களுக்கும் ஒருமுறை சென்றுவர வேண்டும் என தோன்றியது.

ஒரு துப்பறியும் கதையில் அந்தந்த இடங்களைப் பற்றிய பூகோள தகவல்களையும் சுவாரஸ்யமாய் தெரிந்துகொள்வது என்பது மகிழ்ச்சிதானே.