தொடர் மின்வெட்டு காரணமாக கோடையை கல்கத்தாவில் கழிக்க முடியாமல் ஒரிஸ்ஸாவின் பூரிக்கு வருகிறார்கள் ஃபெலூடாவும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் தபேஷ் மற்றும் மர்ம நாவல் எழுத்தாளரான லால்மோகன் பாபுவும். பூரி கடற்கரையின் ஓரமாக இருக்கும் நீலாச்சல் என்ற நட்சத்திர விடுதியில் தங்கும் அவர்கள், ஒரு சமயம் கடற்கரைக்கு ஓய்வெடுக்க நடந்து செல்லும்போது தூரத்தில் ஒரு புதர் மறைவில் குண்டடிபட்ட ஒரு பிணம் இருப்பதைப் பார்க்கிறார்கள். காவல்துறை விசாரணையில் அவர் பெயர் ரூப்சந்த் எனவும், நேபாளத்தைச் சேர்ந்த ஓட்டுனர் எனவும் அறியும் அவர்கள் அவரது சட்டைப் பையில் "சர்க்கார், கல்கத்தா" என்ற முகவரி அட்டை ஒன்று இருந்ததையும் காவல்துறையிடமிருந்து தெரிந்துகொள்கிறார்கள். அந்த கடற்கரையில் ஒரு ஊன்றுகோலுடன் கூடிய காலடித்தடத்தையும் காண்கிறார்கள். அந்த சர்க்காரைப் பற்றி விசாரிக்க அவர் கடந்தசில நாட்களாக ஊரில் இல்லை என தகவல் தெரிகிறது.
நெற்றியில் சுண்டுவிரல் வைத்து ஒருவரின் முக்காலத்தையும் துல்லியமாகக் கணிக்கும் "லக்ஷ்மண் பட்டாச்சார்யா" என்ற ஒருவர் அக்கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு பழைய மாதிரியான மூன்றடுக்கு வீட்டின் நடுத்தளத்தில் இருப்பதாகக் கேள்விப்படும் லால்மோகன்பாபு ஃபெலூடாவிடம் அடிக்கடி அவரைப் பற்றிச் சொல்கிறார். "சாகரிகா" என்று பெயரிடப்பட்ட பழமைவாய்ந்த அந்த வீட்டின் முதலாளி டிஜி சென். இவர் பழைய ஓலைச்சுவடிகளை சேகரித்து பாதுகாத்து வருபவர். மேலும் மலையேறுவதிலும் பனியில் வாழும் விலங்குகளைப் பற்றி அறிவதிலும் ஆர்வலர்.
ஒருசமயம் 'மஜூம்தார்' என்பவர் ஃபெலூடாவிடம் அறிமுகமாகி தான் டிஜி சென்னின் நண்பர் என்றும், டிஜி சென்-ஐப் போன்ற ஆர்வலர்தானென்றும் கூறி, முன்பு நேபாளத்தில் டிஜி சென்னின் அறைக்குள் தெரியாமல் நுழைந்த ஒரு சமயம் ஓலைச்சுவடிகள் பற்றிய ஏதோ ரகசிய நடவடிக்கைகளை தான் கண்டதாகவும் அதனால் தன்னை ஒரு மலையிலிருந்து தள்ளிவிட்டு விபத்து ஏற்படுத்தியதாகவும் அதில் ஞாபக மறதியும் கை கால் முறிவும் தனக்கு ஏற்பட்டதாகவும் சொல்லி தற்போது அவரைக் காண பூரி வந்துள்ளதாகவும் சொல்கிறார்.
அந்தக் கடற்கரையின் காலடித்தடங்கள் மஜூம்தாரினுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கிறார் ஃபெலூடா.
டிஜி சென்-ஐ சந்திக்கும் ஃபெலூடா ஓலைச்சுவடி பற்றிய விவரங்களை அறிகிறார். அவரது மகனைப் பற்றி மறைக்கும் சென்-ஐ சந்தேகம் கொள்கிறார். பிறிதொரு சமயம் மஹூம் சென் என்ற அவரது மகனை சந்தித்து டிஜி சென்னுக்கு நடந்த விபத்து பற்றி அறிகிறார்.
ஜோதிடர் லக்ஷ்மண் பட்டாச்சார்யாவை மஜூம்தார் சந்திக்க அவரது கடந்த காலத்தை ஆச்சர்யப்படும்படி சொல்ல ஃபெலூடா உட்பட அனைவரும் வியக்கின்றனர்.
இந்நிலையில் டிஜி சென்னிடமிருந்து ஒரு ஓலைச்சுவடியொன்று காணாமல் போகிறது. அதே நாளிலிருந்து அவரது உதவியாளர் போஸும் தலைமறைவாகி விடுகிறார். போஸ்தான் திருடியிருக்க வேண்டும் என அனைவரும் கருத, கடற்கரைக் அருகிலுள்ள ஒரு பாழடைந்த பங்களா ஒன்றில் கொல்லப்பட்ட நிலையில் போஸ்-ஐ காண்கிறார் ஃபெலூடா.
இரண்டு கொலைகளுக்கும் தொடர்பிருப்பதாக கருதும் ஃபெலூடா, குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும் இன்றிரவு பிடித்துவிடுவதாகவும் சொல்லி மற்ற இருவர்களையும் தன்னுடன் தயார்படுத்தி அந்த பாழடைந்த பங்களாவிற்கு மிகவும் எச்சரிக்கையாக இரவில் அழைத்து செல்கிறார். டிஜி சென்னின் மகனும் இதற்கு உதவுகிறார்.
இரவில் அந்த பங்களாவிற்குள் குற்றவாளிகளை ஃபெலூடா பிடித்துவிட, அவரது அழைப்பின்பேரில் ஏற்கெனவே வந்திருந்த போலிசார் அவர்களைக் கைது செய்கிறார்கள். குற்றவாளிகளைக்கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள் தபேஷும் லால்மோகன் பாபுவும். மஜூம்தாரும், லக்ஷ்மண் பட்டாச்சார்யாவும்தான் அந்தக் குற்றவாளிகள்.
முதலில் கொலையுண்ட ரூப்சந்த் என்ற ஓட்டுனரின் மூலமாக டிஜி சென்னைக் கடத்திகொண்டுபோய் கொன்றுவிட்டு அவரது ஓலைச்சுவடிகளை திருட திட்டமிடுகிறார் சர்க்கார் என்பவர். அதில் தப்பித்துவிடும் டிஜி சென் பூரிக்கு வந்து அமைதியாக ஓலைச்சுவடிகளை சேகரித்து வாழ்கிறார். இதை அறியும் சர்க்கார் இங்கேயும் தொடர்ந்து வந்து விலைமதிப்பில்லாத அந்த ஓலைச்சுவடிகளினால் பெரும் செல்வத்தை ஈட்டி செல்வந்தாராகலாமென்று லக்ஷ்மண் பட்டாச்சார்யாவையும் துணைக்கிழுக்கிறார். பழைய ஓட்டுனர் திரும்பி வந்து மேலும் பணம் கேட்டு மிரட்ட அவரைக் கொன்றுவிடுகிறார் சர்க்கார். பின் தங்களின் திட்டத்துக்கு உதவியாளர் போஸ் உடன்படாமல்போக அவரையும் கொன்றுவிடுகிறார்கள். கடைசியாகக் கைப்பற்றிய ஓலைச்சுவடியை வைத்துக்கொள்ள முடியாமல் கடலில் வீசிவிட்டு தப்பிக்க முனையும்போதே அகப்பட்டுக்கொள்கிறார்கள் இருவரும்.
மஜூம்தார் என்ற டிஜி சென்னின் நண்பர் உண்மையிலேயே விபத்து ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு பின்பு இறந்துவிட்டதையும், மஜூம்தார் என அறிமுகமானவர் சர்க்கார்தான் என்ற உண்மையையும் ஃபெலூடா கண்டுபிடிக்கிறார். காணாமல்போன அந்த ஓலைச்சுவடியையும் ஒரு மீனவ சிறுவனிடமிருந்து பெற்று டிஜி சென்னிடமே ஒப்படைக்கிறார்.
மேலும் டிஜி சென்னுக்கு செயற்கைக்கால் பொருத்தப்பட்டிருப்பதையும், அவர் யாருக்கும் தெரியாமல் நடைபயிற்சி செல்வதையும், அந்தக் கோலூன்றிய கடற்கரை காலடித்தடங்கள் மஜூம்தாராக நடித்த சர்க்காருடையது அல்லவென்றும் அது டிஜி சென்னுடையதுதானென்றும் சொல்ல அவர் ஆச்சர்யப்படுகிறார்.
No comments:
Post a Comment