இன்று இக்கதையைப் படித்தேன்.
பண்டைய காலத்தில் "ஏறு தழுவுதல்" என்று அழைக்கப்பட்டு தற்போது ஜல்லிக்கட்டு என்று அழைக்கப்படும் தமிழர்களின் மாடு அணைக்கும் வீர விளையாட்டு பற்றிய குறுநாவல் இப்புத்தகம்.
செல்லாயிகட்டு வாடிவாசலுக்கு, பெரியபட்டி ஜமீன்தார் மொக்கையாத்தேவரின் காளையை அடக்க சமயம் பார்த்து காத்துக்கொண்டிருக்கிறான் பச்சி. அவனுடன் அவனது மச்சினன் மருதனும் துணைக்கிருக்கிறான். சுற்றுப்பட்டி ஊரெல்லாம் கட்டுச்சோறு கட்டிவந்து இன்று மாடு அடக்கப்போகும் வீரர்களை எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறது. பிச்சி எதையோ நோக்கிக் காத்துக்கிடப்பதை ஒரு வயதான கிழவர் குறிப்பால் உணர்கிறார். அந்தக் கிழவருக்கு ஜல்லிக்கட்டு காளைகள் அத்தனை பற்றியும் எல்லா விவரமும் தெரிந்திருப்பதைக் கண்டு இருவரும் அதிசயிக்கிறார்கள். அப்படியே தங்களுக்குத் தேவையான சிலபல தகவல்களையும் அவரிடமிருந்து கேட்டுக்கொள்கிறார்கள். யாராலும் அடக்க முடியாத ஜமீன்தாரின் காளை "காரி" பற்றியும் அதை அவர்கள் வளர்க்கும் விதம் பற்றியும் மூன்று வருடத்திற்கு முன்பு இந்தக்காளையை அடக்க முயன்று குடல் அறுந்து ஆறுமாதம் படுக்கையாய் கிடந்து மாண்டுபோன அம்புலித்தேவன் பற்றியும் பல தகவல்களை சுவாரஸ்யமாய் சொல்கிறார் அந்தக் கிழவர். காளையை அடக்குவதில் "கிளக்கத்தியான் அம்புலி"யை மிஞ்ச ஆளில்லை எனப் புகழ்ந்த அந்தக்கிழவனுக்கு பிற்பாடுதான் இந்தப் பிச்சி அந்த அம்புலியின் மகன் எனத் தெரியவருகிறது. வேறு ஊர்க்காரனாய் இருந்தாலும் பாசம் கொள்கிறார். சீறிவரும் ஒவ்வொரு காளையைப் பற்றியும் அவர் சொல்வதை காதில் வாங்கிக்கொண்டு தானும் சீறிப்பாய்ந்து முதல் இரண்டு காளைகளையும் லாவகமாய் அடக்குகிறான் பிச்சி.
தன் காளையை அடக்க சுற்றுப்பட்டியில் ஆளேயில்லை என்று கர்வமாய் இருக்கும் ஜமீனுக்கு பிச்சியின் பின்னணி பற்றி தெரியவருகிறது. அம்புலியின் திறமையைப்பற்றி தெரிந்திருக்கும் அவர் பிச்சி அடக்கிவிடுவானோ என்று அச்சம் கொள்கிறார். இருந்தும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாடிவாசலை வேடிக்கை பார்த்து காத்திருக்கிறார். ஜமீனின் காரி சீறி வருகிறது. பிச்சியும் பாய்ந்து அடக்குகிறான். மூன்று திமிலில் மாடு அடங்க, அதன் தலையில் சுற்றப்பட்டிருந்த தங்கச் சங்கிலியையும் பட்டு உருமாவையும் உருவி எடுத்து கிழவனிடம் தருகிறான். மாடு துள்ளி எக்காளமிட, ஏற்கெனவே இரண்டு காளைகளை அடக்கிய பிச்சியின் கை மெல்ல பிடி தளர, பிச்சியின் தொடையைக் குத்தி கிழிக்கிறது காரி. ரத்தம் பொல பொலவெனக் கொட்ட எல்லோரும் அம்புலியைப் பற்றியும், அவன் மகன் பிச்சியையும் பெருமையாய் தூக்கிக்கொண்டு கொண்டாடியபடியும் அலறியபடியும் மருத்துவமனையை நோக்கி புறப்பட, அருகே வரும் ஜமீன் பிச்சியின் வீரத்தைப் பாராட்டி 100 ரூ பரிசளிக்க அதை வாங்கி அந்தக் கிழவனிடமே தருகிறான் பிச்சி. ஜமீனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு, 'தங்களை எதிர்ப்பதற்காக காரியை அடக்கவில்லையென்றும், தன் அப்பன் அம்புலி உயிர்விடும்போது சொன்னதற்காகத்தான் அடக்கியதாகவும்' சொல்ல அவர் தன் ஜமீன் வண்டியிலேயே அவனை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல சொல்கிறார்.
தன் காளையை யாரும் அடக்கமுடியாது என நினைத்துக்கொண்டிருந்த ஜமீன் இதை பெரும் அவமானமாய் கருதுகிறார். மேலும் 2 பேரைக் குத்திக் கொன்று 20 பேரை முட்டித்தள்ளி ஆவேசம் அடங்காமல் துள்ளிக்கொண்டிருக்கும் காரியை தன் ரிவால்வரை எடுத்து இரண்டு முறை சுடுகிறார். காளை அடங்கிச் சாய்கிறது.
தன் ஊரையும் தன் மகளையும் தன் ஆநிரைகளையும் எதிரிகளிடமிருந்து பாதுகாத்து காப்பாற்றும் திறன் தன் நிலத்து ஆயர் இளைஞனுக்கு இருக்கிறதா என சோதித்தறிய முல்லைத் திணையில் ஆரம்பித்த "ஏறு தழுவுதல்", மிருகங்களுக்கும் மனிதனுக்குமான மோதல் என்பதைத் தாண்டி மனிதனுக்கும் மனிதனுக்குமான கௌரவப் பிரச்னையாக தற்போது வளர்ந்துள்ளது. மேலும் சில குறிப்பிட்ட சாதிக்கானதாகவும் குறுகியிருக்கிறது என்பதும் மறுக்கமுடியாததுதான். ஆதிக்க அடக்குமுறைகளுக்கெதிரான கருத்தியலாகவும் ஏறு தழுவுதலை எடுத்துக்கொள்ளலாம்தான். ஆனால் மனிதர்களைப் பொறுத்தவரையில்தான் அது வீர விளையாட்டு. காளைகளைப் பொறுத்தவரையில் அதெல்லாம் கிடையாது.
மேலோட்டமாகப் பார்த்தால் மிருகவதையாகத் தோன்றும். பழங்காலந்தொட்டு நெடுங்காலமாகத் தொடரும் முல்லைத் திணையின்; தமிழர்களின் பண்பாட்டு வேர் அறுபடுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாதுதான்.
No comments:
Post a Comment