இன்று காலை இந்த புத்தகத்தை படித்தேன்.
சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக் என்ற இடத்திற்கு சுற்றுலா செல்கிறார்கள் ஃபெலூடா என்கிற மித்தரும் தோப்ஷேவும். ஃபெலூடா என்பவர் சத்யஜித் ரேவின் பிரபல துப்பறியும் கதாபாத்திரம். இருவரும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். சிக்கிமின் விமானநிலையத்திலிருந்து ஒரு டாக்ஸி துணையோடு செல்லத் துவங்குபவர்களுக்கு வழியில் ஆங்காங்கே மலைச்சரிவால் பாதை மோசமாக இருப்பதாகவும், ஓரிரு நாட்களுக்கு முன்புகூட பாறை உருண்டு வந்து விழுந்ததில் ஒரு டாக்சி பயணி (ஷெல்வான்கர்) அகோர விபத்தில் இறந்துபோனதாகவும், பயண வழியில் சந்திக்கும் போஸ் என்பவரால் தகவல் அறிகிறார்கள். அந்த போஸ் என்பவர் தான் பூக்களிலிருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் ஒரு மும்பாய் கம்பெனியின் பணியாள் என்றும் பின் இறந்துபோனது ஷெல்வான்கர் எனத் தெரியவரும்போது அவர் தன்னுடன்தான் பணிபுரிவதாகவும் சொல்ல, சுற்றுலாவுக்குப் போன இடத்தில் ஷெல்வான்கரின் விபத்தைப் பற்றி துப்பறிய ஆரம்பிக்கிறார் மிஸ்டர் ஃபெலூடா.
9 தலைகளுடனும் 34 கைகளுடனும் மூன்று அங்குல உயரத்திலுள்ள "யமன்தக்" என்ற திபெத்திய சிலை ஒன்றை அதன் மதிப்பு தெரியாமல் வெறும் 1000 ரூபாய்க்கு ஷெல்வான்கருக்கு விற்றுவிடுகிறார் நிஷிகாந்த் சர்க்கார். விற்றபின்புதான் அதன் விலை அதிகமென அவருக்குத் தெரியவர ஷெல்வான்கரை கண்டுபிடித்து சிலையை திரும்ப வாங்க முயல்கிறார். இந்நிலையில் ஷெல்வான்கர் இறந்துவிட, ஃபெலூடாவுக்கு தன் நோக்கத்தைப்பற்றி சொல்லாமல் திபெத் பௌத்த மடங்கள், லாமா நடனம், சிக்கிம் இடங்கள் என்பன பற்றிய பல தகவல்களுக்காக உதவுகிறார். இருப்பினும் ஷெல்வான்கருக்கு நேர்ந்தது விபத்தல்ல; அதுவொரு கொலைதான் என்றும் அது நடந்த சில நேரங்களில் சம்பவம் நடந்த 'சிக்கிம் வடக்கு நெடுஞ்சாலை' என்ற இடத்திற்கு சர்க்கார் சென்றிருக்கிறார் என்பதையும் மிஸ்டர் ஃபெலூடா அறிந்து கொள்கிறார். சுற்றுலா போனதை மறந்துவிட்டு கொலையை துப்பறிய ஆரம்பிக்கும் ஃபெலூடாவிற்கு, திபெத்தைப் பற்றி சில புத்தக எழுதும் ஆய்வுக்காக வந்ததாக அறிமுகமாகும் புகைப்பட கலைஞரான 'ஹெல்மட் உங்கர்' என்ற ஒரு ஜெர்மானிய ஹிப்பியின் மீதும், ஷெல்வான்கரின் நண்பர் டாக்டர் வைத்யா (ஆவி மீடியம்) என்பவர் மீதும், சர்க்கார் மீதும் சந்தேகம் வலுக்கிறது. இறுதியில் ஷெல்வான்கரை திட்டமிட்டு கொலை செய்தது யார்? என்பதும், எதற்கு? என்பதும் சுவாரஸ்யமாய் துப்பறிகிறார் மிஸ்டர் ஃபெலூடா.
இந்தக்கதையை படித்ததும் ஒருமுறை சிக்கிம் மாநிலத்தையும், அங்கிருக்கும் திபெத்திய பௌத்த மடங்களுக்கும் ஒருமுறை சென்றுவர வேண்டும் என தோன்றியது.
ஒரு துப்பறியும் கதையில் அந்தந்த இடங்களைப் பற்றிய பூகோள தகவல்களையும் சுவாரஸ்யமாய் தெரிந்துகொள்வது என்பது மகிழ்ச்சிதானே.
No comments:
Post a Comment