20.8.15

ஒரு தென்னை மரத்தின் கொலை

எங்கள் ஊர் பள்ளிக்கூடத்துக்கு எதிரில் வாங்கிய வீட்டுமனையின் தென்புறமாய் மேற்கு கிழக்கு மூளைகளில் இரண்டு தென்னங்கன்று நட்டார் என் அப்பா. அதில் மேற்கு மூளை தென்னங்கன்று வளராமல் பட்டுப்போனது. இந்தக்கன்று மட்டும் வளர்ந்து வந்தது.

2000-ம் ஆண்டு இந்த மனையில் வீடுகட்ட ஆரம்பித்தார் அப்பா. அதே வருடம் பூசுவேலை நடக்கும்போது நவம்பர் மாதம் இறந்துவிட்டார். அவரால் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு வைக்கப்பட்டு வளர்ந்த தென்னைமரம்தான் இது. பக்கத்து வீட்டுக்காரருக்கு தொந்தரவாக இருக்கிறது என்ற காரணத்தால் இன்று 18-08-2015 காலை சுமார் 7 மணியளவில் என் அண்ணன் இந்த மரத்தை ஆள் வைத்து வெட்டிவிட்டார்.

வெட்டப்பட்ட மரம் சாயும்போதும், சாய்ந்து கிடந்ததை பார்த்த போதும் என் அப்பாவின் ஞாபகம் வந்தது. இந்த மரத்தை வைக்கும்போது நான் என் அப்பாவுடன் இருந்தேன். இன்று அதை வெட்டும்போது என் அப்பா இல்லை. ஒருநாள் அதற்கு தண்ணீர் ஊற்ற மறந்தாலும் என்னையும் என் அம்மாவையும் கடுமையாகத் திட்டுவார் என் அப்பா. அம்மாவும் இன்று இல்லை.

கடைசி நேரத்தில் அதில் கூடு கட்டியிருந்த காக்கைகள் அங்குமிங்கும் அலைபாய்ந்தபடி கரைந்துகொண்டிருந்தது. நானும் அதன் அலைவரிசையில் ஒத்திருந்தேன்.

எங்களுக்குப் புதிய வீடு கட்டுமுன்னர், பறவைகளுக்கான வீடொன்றை கட்டியுள்ளார் என் அப்பா. இன்று அந்த பறவைகளின் வீடொன்று இடிக்கப்பட்டது. ஒரு தென்னை மரம் கொலை செய்யப்பட்டது.

(பழைய வீட்டுக்குப் பின்புறத்திலும் என் அப்பா கட்டிய பறவைகளின் வீடொன்று மிச்சம் இருக்கிறது)

No comments:

Post a Comment