சுதந்திர நாள் எனப்படும் இந்த (15-08-2015) நாளில் என்னை மிகவும் சிந்திக்க வைத்த ஒரு கட்டுரை இது. ஆனால்...,
=======================================
ஆகத்து - 15 - 1947 - தமிழ்நாடு
இந்தியாவிடம் அடிமைப்பட்ட நாள்!
=======================================
இன உணர்வுள்ள தமிழர்களே சிந்திப்பீர்!
=======================================
இந்தியா நமக்கான நாடா??
=======================================
-> இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூலம், “தமிழர்” என்ற இன அடையாளத்தையே மறுத்தும், தொடர்ச்சியாக, தமிழர்களின் தேசிய மொழியான தமிழைப் புறக்கணித்தும், இந்தி - சமற்கிருதத்தைத் திணித்தும் வருவது இந்திய அரசு!
-> தமிழர்கள் அதிகமாக வசித்த தேவிகுளம் - பீர்மேடு பகுதிகளை கேரளாவுக்கும், சித்தூர் மாவட்டத்தை ஆந்திராவுக்கும்,கொள்ளேகாலம் - கோலார் பகுதிகளை கர்நாடகத்திற்கும் பிரித்துக் கொடுத்து, தமிழினத்தை வஞ்சித்தது இந்திய அரசு!
-> 1965இல் இந்தித் திணிப்பை எதிர்த்த தமிழர்களை, 300 பேருக்கும் மேலானோரை தமிழக மண்ணிலேயே சுட்டுக் கொன்றது இந்திய அரசு!
-> காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு ஆற்றுநீர் உரிமைகளை இழந்து வறட்சியில் நாம் தவிப்பதற்கு, முதற்காரணம் இந்திய அரசு!
-> வடநாட்டில் ஓர் அங்குலம் நிலம் அண்டை நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டாலும் கூக்குரலிட்டுக் கத்திவிட்டு, ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்த்த போதும், தன் சொந்த நிலப்பகுதியான கச்சத்தீவை இன்னொரு நாட்டிற்கு(இலங்கைக்கு) பரிசாக வழங்கியது, இந்திய அரசு!
-> ஓர் அண்டை நாட்டின் இராணுவத்தால், தமிழக மீனவர்கள் சொந்த மண்ணிலேயே படுகொலை செய்யப்பட்டதையும், நாள் தோறும் தாக்கப்படுவதையும் வேடிக்கைப் பார்க்கும் வெட்கம்கட்ட கடற்படையைக் கொண்ட ஒரே அரசு, இந்திய அரசு!
-> 1989இல் இந்திய அமைதிப்படை என்ற பெயரில் படையனுப்பி, தமிழீழ மக்களை நேரடியாகக் கொன்றொழித்தது, இந்திய அரசு!
-> 2009ஆம் ஆண்டு, தமிழீழ இனப்படுகொலையை மேற்கொள்ள சிங்கள அரசுக்கு நிதி - ஆயுத - அரசியல் உதவிகள் வழங்கி, பல்லாயிரக்கணக்கான தமிழீழ மக்கள் படுகொலை செய்ததும், இன்றுவரை உலக அரங்கில் இலங்கைக் கொலையாளிகளுக்குப் பாதுகாப்புத் தருவதும் - இந்திய அரசு!
-> ஒருபுறம், தமிழ்நாட்டு உரிமைகளுக்கு தொடர்ச்சியாக தடை போட்டுக் கொண்டு, எந்த வெட்கமும் இல்லாமல் நெய்வேலி - நிலக்கரி, சேலம் - இரும்பு, காவிரிப்படுகை - பெட்ரோல், குத்தாலம் - எரிவளி என தமிழ்நாட்டுக் கனிம வளங்கள் தாராளமாகக் கொள்ளையிடுவது, இந்திய அரசு!
-> தமிழ்நாடு அரசே கடனில் உள்ளபோது, தமிழ்நாட்டு மக்களிடமிருந்து ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்படும் சுங்க, நிறுவன, வருமான வரிகள் அனைத்தையும் முழுவதுமாகக் கொள்ளையிட்டுச் செல்வது, இந்திய அரசு!
-> சாதி இழிவு ஒடுக்குமுறையின் வேராய் நிற்கும் ஆரியப் பார்ப்பனியத்தின் அரச வடிவமாய் இன்றும் ஆணவத்துடன் நிற்பது இந்திய அரசு!
-> வடநாட்டு நீதிமன்றங்ளில் அம்மக்களின் மொழியான இந்திக்கு அனுமதிதந்துவிட்டு, தமிழை நடுவண் ஆட்சி மொழியாக்க, கல்வி மொழியாக்க, வழக்கு மொழியாக்க முடியதென்று இறுமாப்போடு அறிவிக்கிறது, இந்திய அரசு!
-> மூவாயிரம் ஆண்டுத் தமிழர் அடையாளத்தை, சட்டப்படி அங்கீகரிக்க மறுத்து, இல்லாத இந்திய அடையாளத்தை நம் மேல் திணிக்கும் இந்திய அரசு!
-> முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களைத் துடிக்கத் துடிக்க கொன்றொழித்த கொலைகாரர்களுக்கு ஆயுதம் அளித்து, நட்பாய் நிற்பது இந்திய அரசு!
-> ஆயிரம் நாட்களுக்கு மேல் அறவழியில் போராடியும், தமிழ்நாட்டு மக்கள் மீது ஆபத்தானக் கதிரியக்க அணுஉலைகளைத் தொடர்ச்சியாகத் திணிக்கிறது, இந்திய அரசு!
-> ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களை கைதூக்கிவிட, தமிழ்நாட்டில் செயலிலுள்ள சமூக நீதி காக்கும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுத் தடை விதிக்க முனைகிறது, இந்திய அரசு!
-> பேரறிவாளன், சாந்தன், முருகன் - அப்பாவி மூன்றுத் தமிழரை தூக்கிலிட்டுக் கொல்லத்துடிக்கும் 'அகிம்சாமூர்த்தி” தான் இந்திய அரசு!
-> காசுமீரிகள், சீக்கியர்கள், மணிப்பூரிகள், நாகர்கள் என இந்தியத் துணைக்கண்டமெங்கும் உள்ள பல்வேறு தேசிய இனங்களையும், அதன் தாயகங்களையும் ஆயுத வழியிலும், அரசமைப்புச் சட்ட வழியிலும் ஒடுக்கி வருகிறது, இந்திய அரசு!
-> தமிழ்நாட்டுத் தாயகத்தை சிதைத்து அழிக்கும் வகையில், அதிகளவிலான வடவர் உள்ளிட்ட அயலாரை தமிழ்நாட்டில் குவிப்பது, இந்திய அரசு!
-> இலட்சக்கணக்கானத் தமிழர்கள் தமிழ்நாட்டில் வேலையின்றித் தவிக்கும் போது, தமிழ்நாட்டு இந்திய அரசு நிறுவனங்களில், வடவர் உள்ளிட்ட அயலாரையே அதிகளவில் பணியமர்த்துவது இந்திய அரசு!
-> தமிழ்நாட்டு இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் சட்ட திட்டங்களை மீறி, வரம்பற்று சுரண்ட பன்னாட்டு - வடநாட்டு நிறுவனங்களுக்கு சூறையாடல் அனுமதி வழங்குகிறது, இந்திய அரசு!
-> மான்சாண்டோ - பேயர் போன்ற நிறுவனங்களின் இலாப வெறிக்காக, பி.ட்டி கத்தரி உள்ளிட்ட மரபணு விதைகளை அனுமதித்து, மண்ணின் மரபான வேளாண்மையை அழித்தொழிக்கத் துடிப்பது இந்திய அரசு!
-> தமிழ்நாட்டு நீர் உரிமைகள் சட்டவிரோதமாக மறுக்கப்படுவதாலும், ஏற்றுமதி சார்ந்த பொருளியல் கொள்கை - வேளாண் கடன்களுக்கு கெடுபிடி என தமிழ்நாட்டு உழவர்களைத் தற்கொலைக்கு தள்ளுகிறது, இந்திய அரசு!
-> மீத்தேன் திட்டம், கெயில் திட்டம், நியூட்ரினோ ஆலை என தொடர்ச்சியாக தமிழ்நாட்டு வாழ்வாதாரங்களை அழிக்கும் திட்டங்களைத் திணித்து, தமிழகத்தை சுடுகாடாக்க முயல்கிறது, இந்திய அரசு!
-> பூம்புகார் உள்ளிட்ட தமிழர் வரலாற்று பகுதிகளில் அகழ்வராய்ச்சிக்குத் தடை விதிப்பது, ஏறுதழுவல்(ஜல்லிக்கட்டு) தடை விதிப்பது, தம் கையிலுள்ள தணிக்கைத்துறையின் மூலம் தமிழினத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் படைப்புகளுக்கு தடை விதிப்பது, என கலை இலக்கியப் பண்பாட்டுத் துறையிலும் ஒடுக்குமுறை புரிகிறது இந்திய அரசு!
இத்தனையும் ”பரிசளித்த”, இந்தியாவை நாம் சுமக்க வேண்டுமா?
“கப்பலோட்டியத் தமிழர்” வ.உ.சி. சிதம்பரனார் கப்பல் விட்டது, நம் தமிழ் மீனவன் நமது கடலிலேயே செத்துக் கிடப்பதைப் பார்க்கத்தானா?
இந்திய விடுதலைக்கு கொடி பிடித்து மடிந்த தமிழ்நாட்டு ஈகியர்கள், இந்தக் கொடுமைகளெல்லாம் நடந்தேறத்தான் போராடினார்களா?
பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மொழியை - தமிழ்த் தேசிய இனத்தை, எல்லா வகையிலும் ஒடுக்கும் இந்தியா நமக்குத் தேவையா? முடிவெடுக்க வேண்டிய தருணமிது!
தமிழர்களுக்கு ஒரு நாடல்ல, இரண்டு நாடுகள் வேண்டும்!
இந்திய விடுதலையை மறுதலிப்போம்! தமிழ்நாடு விடுதலைக்கு அணிவகுப்போம்!
தோழமையுடன்,
க. அருணபாரதி,
தலைமைச் செயற்குழு உறுப்பினர்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
*** இந்த கட்டுரை நிதர்சனமானது. தமிழர்கள் எவ்வளவு அடிமையாய் நடத்தப்படுகிறார்கள் என்பதை நெற்றியில் அடித்தாற்போல் உறைக்க வைக்கிறது.
ஆனால், ஜாதியும் அதன்பேரில் மட்டுமே ஜீவிக்கும் ஆதிக்க மனோபாவ பிராணிகளும் ஒழியாமல் தனித்தமிழ்நாடு கிடைத்தால் என்னாகும் என்பதை யோசித்தால் பேரச்சம் எழவே செய்கிறது.
இதற்கான தெளிவான செயல்வடிவம் இல்லாதுபோனால் தமிழர் என்போர் தமிழ்நாட்டில் வாழ்ந்தார்கள் என்ற அடையாளம்கூட நாளை இல்லாமல் போகக்கூடும் என்பதும் நிதர்சனம்.
No comments:
Post a Comment