இயக்குநர் திரு. கே.எஸ்.தங்கசாமி அவர்கள் அலுவலகத்தில் இப்புத்தகத்தைக் கண்டேன். மேலோட்டமாகப் புரட்டிப் பார்த்தேன். தோழர் தியாகுவின் சிறை அனுபவங்களைப் பற்றிய புத்தகமாக இருக்க படித்துப் பார்க்கும் ஆர்வம் எழுந்தது. எனினும் சுமார் 610 பக்கம் கொண்ட இப்புத்தகத்தைப் பிறகு படிக்கலாம் என்றுதான் தள்ளிப்போட்டு வந்தேன்.
மார்க்சியம் பற்றி எளிமையாக சில பக்கங்களில் அவர் விவரித்திருந்த பக்கங்கள் பார்வையில் பட்டதும் உடனடியாகப் படித்துவிட வேண்டும் என முடிவு செய்து புத்தகத்தை அவரிடமிருந்து இரவலாகப் பெற்றேன்.
எவ்வளவு பெரிய தியாக வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் தியாகு..!!
பொதுவுடைமை போராட்டம்,
நக்சலைட் வாழ்க்கை,
அழித்தொழிப்பு நடவடிக்கை,
தோழர் ஏ.எம்.கே.,
சிறை நிர்வாக முறைகள்,
சிறைக் கொடுமைகள்,
மூலதனம் மொழி பெயர்ப்பு,
கைதிகளின் குற்றப் பின்னணிகள்,
கேவலமான நீதித்துறை அமைப்பு,
நீதிபதிகளின் யோக்கியதை,
பொய் வழக்குகள்,
தூக்கு கைதிகளின் வழக்குகள்,
மூவரைக் கொன்ற தென்கொண்டார் கதை,
முதலாளியம்மாவை கொன்ற சந்துரு கதை,
சேரிப் பெண்ணைக் கொன்ற செருமங்கலம் வீரைய்யன் கதை,
ஆன்மீகவாதிகள் சிறைக்கு வந்த கதை,
அப்பாவி கருப்பையாவின் கதை,
மிசா காலத்து சிற்றவதைகள்,
இப்படி ஏராளமான தன் அனுபவங்களை சுவாரசியமாக எழுதியிருக்கிறார்.
"சோளகர் தொட்டி" என்ற நாவலைப் படித்தபோது நான் உணர்ந்த அதே மாதிரியான ஒரு மனநிலையை இப்புத்தகத்திலும் அனுபவித்தேன்.
நீதிபதிகளாலும், கேட்பாரற்ற அதிகாரம் கொண்ட காவற்துறை அதிகாரிகளாலும் இந்நாட்டில் தினம் தினம் நீதி தேவதை எப்படியெல்லாம் கேவலமாக கற்பழிக்கப்படுகிறாள் என்பதை ஆவணப்படுத்தியிருக்கிறார்.
தன் அரசியல் அனுபவங்களை இலக்கிய நடையில் ஒரு நல்ல திரைக்கதைப் போன்றே எழுதியிருக்கிறார். முக்கியமாக வீரைய்யன் என்ற தூக்குத் தண்டனைக் குற்றவாளியின் கடைசி 10 நாள் வாழ்க்கையையும், அவனது வீட்டிற்கு அவனுக்காக தியாகு எழுதித் தந்த கடிதத்தையும் படிக்கும்போது கண்ணீர் அடக்க முடியாமல் அரும்பியது.
தான் சிறையில் மொழிபெயர்த்த காரல் மார்க்சின் மூலதனத்தை வீரைய்யன்தான் முதன்முதலில் படியெடுத்து எழுதிக்கொடுத்ததை அவன் தூக்கிலிடப்பட்ட 10 ஆண்டுகள் கழித்து வார இதழ் ஒன்றில் பேட்டி கொடுத்து நினைவுகூர்ந்துள்ளார்.
செய்யாத கொலையில் சிக்க வைக்கப்பட்ட கருப்பையாவின் கதையை நினைத்தால் இப்போதும் மனசு ஈரமாகிறது. படிக்கும்போது எழுந்த கண்ணீரால் நிறுத்தி நிறுத்திப் படித்தேன்.
இந்திரா காந்தியின் அவசர கால அநியாயங்களையும், சிறையில் நடந்த கொடுமைகளையும் புத்தகத்தின் இறுதியில் விவரித்திருக்கிறார். சிறையில்பட்ட சித்ரவதையால் பலியான திமுக எம்.பி. சிட்டிபாபுவின் வாழ்க்கையை இதில்தான் தெரிந்துகொண்டேன். மேலும் ஸ்டாலினுக்கு சிறையில் நேர்ந்த கதியும்.
ஒரு போராட்டத்தில் பங்கெடுத்ததற்காக ஒருநாள் முழுதும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பொய்யாய் தயாரிக்கப்படுவதை நேரிலேயே பார்த்திருக்கிறேன். நள்ளிரவில் நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டு பிறகு சில மணிகளில் புழல் சிறயில் அடைக்கப்பட்டேன். ஒருவாரகால புழல் சிறை வாசத்தில் உள்ளே பலர் தண்டனைப் பின்னணிகளை கேட்டிருக்கிறேன். பொழுதுகளைப் போக்க காய்கறி தோட்டம் விளைவிக்கும் ஆயுள் கைதிகளின் கண்ணீர்க் கதைகளை உள்ளே கேட்டு ஆறுதல்படுத்தியிருக்கிறேன். இதன்பொருட்டோ என்னவோ, என்னால் தோழர் தியாகுவின் மன உலகிற்கு ஏதுவாக பயணப்பட முடிகிறது.
தன் பரந்த அனுபவங்களை புத்தகத்துக்குள் அடக்கியிருக்கிறார் தோழர் தியாகு. இந்த நாட்டின் நீதித்துறையின் அவல நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ள கட்டாயமாக படிக்க வேண்டிய அவசியமான புத்தகம் இது.
No comments:
Post a Comment