9.11.19

மாவீரர் நாள் 2017

தனிநாடு கேட்டு எழுந்த கோரிக்கை இன்று 'ராணுவமே எங்கள் காணியைவிட்டு வெளியேறு' என்ற புள்ளியில் நிற்கிறது.

மொழியின்பேரால் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருந்த தமிழ் மக்களின் விடுதலைக்கான நியாயத்தை இன்னும் வெளியுலகம் புரிந்துகொள்ளவில்லை. அதை தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடமை உள்ளது. ஈடில்லா மாபெரும் அறிவாளிகள், நேர்மையானவர்கள் எல்லாம் தங்களை கொடையாகத் தந்திருக்கிறார்கள் விடுதலைப் போராட்டத்திற்கு. இந்தியாவில் உள்ள எல்லா தேசிய இனங்களும் ஈழ விடுதலைக்கான நியாயத்தை உணர்ந்து ஆதரிக்கும் சூழல் ஏற்படுத்த வேண்டும். இன்னும் புலிகளை பயங்கரவாதிகளாகவே பார்க்கும் பார்வை இந்தியா முழுதும் இருக்கிறது. குறைந்தபட்சம் காஷ்மீர் விடுதலைக்காக அம்மக்கள் செயல்படும் அளவுக்கூட தமிழர்களின் செயல்பாடுகள் இந்தியாவுக்குள் இல்லை என்பதே உண்மை.

ஈழம் விடுதலை அடைந்தால் அதன் தாக்கம் நிச்சயமாக எல்லா தெற்காசிய தேசிய இனங்களிலும் பரவும். அதனாலேயே இப்போது அதற்கு ஆதரவுதர மறுக்கிறார்கள். எல்லா இன மக்களையும் ஈழத் தமிழினத்திற்கு நேர்ந்த; நேரும் கொடுமைகளை உணரும்படிச் செய்வதே தனி ஈழத்திற்கு பலம். அதற்கான தேவையே இல்லாதது போலவும், தேசிய இனங்களுக்குள் பகை மூட்டியும், புகழ்ச்சி மயக்கத்திலேயேயும் தமிழர்களை மிதக்க வைத்தும், புலிகளின் புகழ் பாடுவதே இறுதியான நிறைவானது என்பதாகவுமான புள்ளியிலேயும்தான் இன்றைய அரசியல் நிற்கிறது.

ஈழப்போராட்டம் எல்லா பக்கத்திலும் தோற்றுவிட்டது என்பதே நிதர்சனம். இதை நாம் நேர்மையாக ஏற்று அதன் காரணகாரியங்களை பரிசீலனை செய்ய வேண்டும். வெறும் சாகசவாதக்காரர்களாக புலிகளையும் பிரபாகரனையும் கொண்டாடும் மனோபாவப் போக்குத்தான் இங்கு நிறைந்துள்ளது. "இப்பேர்ப்பட்ட புலிகளாலேயே ஈழத்தை அடையமுடியவில்லை, புலிகளையே அழித்தனர் சிங்களர்கள், இனி எவனால் முடியும்?" என்றவாறான உளவியல் சிதைவையும் எண்ணத்தையும் கூடவே அது உருவாக்குகிறது.

நாம் தோற்றுள்ளோம் என்ற யதார்த்தத்தை நேர்மையாக உள்வாங்கும்போதுதான் வெற்றியடைவதற்கான தெளிவான பாதையை வகுக்க ஏதுவாகும்.

இனியாவது மேடைப் பேச்சாளர்களையே வியந்து பார்த்துக்கொண்டு நில்லாமல் செயலாற்றல் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தோள் கொடுத்து தமிழர் உரிமைப் போராட்டத்திற்கு தம்மால் இயலும் சிறு பங்களிப்பையும் செய்ய உறுதியேற்க வேண்டும் என்பதை உணர்ந்து மாவீரர்களின் தியாகத்திற்கு அனைவரும் வலுசேர்த்தால் நல்லது.

பிறப்பால் பேதம் வளர்க்கும் முறைமையற்ற தமிழர்நாடு அமையட்டும். ஈழப்போராளிகளின் தியாகமும் தலைவரின் அர்ப்பணிப்பும் அதற்கு முன்மாதிரியாக இருக்கட்டும்.
 
27.11.2017 

No comments:

Post a Comment