13.8.15

திராவிடம் என்றால் என்ன ?...

ஆரிய வாழ்க்கை முறையான, கலாச்சாரமான,

பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பித்தல்,

தீண்டாமை கடைப்பிடித்தல்,

தன் சாதிக்கு மட்டும் சலுகை, ஆதரவு, உதவி , ஊக்கம், வாய்ப்பு தருதல்,

இதர சாதிகளை படிக்கவிடாமல், சிந்திக்க விடாமல், முன்னேறவிடாமல் தடுத்தல் 
போன்றவற்றை செய்வது பார்ப்பனியம் / பிராமணீயம்/ ஆரியம்.

இதற்கு எதிராக

யாதும் ஊரே

யாவரும் கேளிர்

இட்டார் பெரியோர் 
இடாதார்(தான்) இழிகுலத்தோர்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

என்று முழங்கி

சமத்துவம், சகோரத்துவம்,
பகுத்தறிவு, சமநீதி, போன்ற

உயரிய நெறிகளை பரப்பி

நன்மை , நற்செயல், தொண்டு, சேவைகள் 
ஆகியவற்றை செய்வதுதான்

திராவிடம்..

மனிதனுக்கு வைக்கப்படும் பெயரில் கூட சாதி வேறுபாடு தெரியும்படி

சுப்பன் என்பது கீழ் சாதிக்கு,
சுப்பிரமணி என்பது இடை சாதிக்கு,
சுப்பிரமணியன் ஸ்வாமி என்பது உயர் சாதிக்கு

என இருந்த நடைமுறைகளை மாற்றி

அன்பழகன், தமிழமுது, கனிமொழி,
போன்ற நற்குணங்களை குறிக்கும் 
தூய தமிழ்ப் பெயர்களை சூட்ட வைத்தது திராவிடம்.

கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தது 
திராவிடம்.

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சொத்துரிமை,
பெற்றுத்தந்தது 
திராவிடம்.

சுய மரியாதை திருமண சட்டம் தந்தது திராவிடம்.

இது போல நெடிய சாதனைப் பட்டியல் பல உண்டு திராவிடத்துக்கு..

திராவிட அரசியல் கட்சியினர் சிலர் தவறு செய்கிறார்கள் என்பதற்காக

திராவிடம் என்ற தத்துவம் தீது என்று சொல்வது,

அறியாமை, புரியாமை, தெரியாமை,
உணராமை.

9.8.15

தீராக்காதல்

காதல் ஒரு புனிதம் என்பது
அவரவர் இச்சையைப் பொருத்தது

காமுறுதல் உயிரின் இயல்பு
காதல் அதன் கவுரவப் பெயர்

தொடர்ந்து
காதல் பற்றியே எழுதும் ஒரு
கவிஞனிடம் சொன்னேன்
உண்மையாகவே நீ காதலிக்கவில்லை என்று

பொய்யும் மேற்பூச்சும் இன்றி
காதலித்துப்பார்
உன் காதல் தீர்ந்துவிடும் என்றேன்

தீரா அன்பின் இறுதியில் வெறுப்பும்
வெறுப்பின் இறுதியில் அன்பும்தான்
இயல்பு விதி

இயல்பாய் காதலிக்காத வரையில்
"தீராக்காதல்" யாருக்கும் வரலாம்

7.8.15

இந்தியாவில் ஆபாச இணையதளங்களை முடக்கியது சரியா? தவறா?

இந்தியாவில் 'போர்ன்' இணையத்தளங்கள் தடை செய்யப்படலாமா கூடாதா என்ற விவாதங்களைக் கவனித்தபோது ஒன்று சொல்லத் தோன்றுகிறது.
போர்ன் இணையத்தளங்களை தடைசெய்யக்கூடாது எனச் சொல்பவர்கள் தனிமனித சுதந்திரம், மேலைநாடுகளில் தடையில்லை, சிறுவர்கள் இவ்விணையங்களைப் பார்க்காமல் ஒழுங்குபடுத்தினால் போதுமானது என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த சொல்விற்பனர்கள் அதிமுக்கியமான விடயங்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள்.

இன்று உலகில் நடத்தப்படும் மனிதக் கடத்தல்களில் எண்பது விழுக்காடு கடத்தல்கள் பாலியல் வணிகத்திற்காகவே நடத்தப்படுகின்றன. ஜப்பானில் தொடங்கி இங்கிலாந்து அமெரிக்காவரை இந்தக் கடத்தல் தொழில் கொடிகட்டிப்பறக்கிறது. சர்வதேச மாஃபியாக்களின் கையிலிருக்கும் இந்த வணிகம் போதைப்பொருள், ஆயுதக்கடத்தல் போன்றவற்றிற்கு இணையாகப் பணம் புழங்கும் தொழிலாகயிருக்கிறது. போர்ன் இணையங்களில் வெளியாகும் காட்சிகளில் இவ்வாறாகக் கடத்திக்கொண்டு வரப்படும் பெண்களே பெரிதளவில் நடிக்கவைக்கப்படுகிறார்கள். இணையங்களின் வருகையோடு போர்ன் தொழிலும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அதற்கேற்ப கடத்தப்படும் பெண்களும் சிறுமிகளும் அதிகரித்துள்ளார்கள்.
சிறுமிகளையும் சிறுவர்களையும் பாலியல் பண்டங்களாகக் காட்சிப்படுத்தும் ஏராளமான இணையத்தளங்கள் உள்ளன. இவற்றை அரசுகளால் இன்றுவரை கட்டுப்படுத்த முடியாமலேயே இருக்கின்றது. சிறுவர் பாலியல் இணையங்களும் பல்லாயிரக்கணக்கில் புதிது புதிதாகத் தோன்றியவண்ணமேயுள்ளன.

போர்னோவில் 'அடிமைகள்', 'அடித்தல்', 'அவமானப்படுத்தல்', 'விலங்குகளோடு புணர்ச்சி' என்றெல்லாம் ஏராளம் வகைப்பாடுகளுள்ளன. சட்டவிரோதமாக அல்லது ஏமாற்றி அழைத்துவரப்படும் பெண்களும் இந்தப் படங்களில் நடிக்க வைக்கப்படுகிறார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால் உண்மையாகவே பெண்கள் மீது சித்திரவதையை நடத்தி அதை இரத்தமும் பாலும் வழிய இணையங்களில் போடுகிறார்கள்.

பாலியல் விடுதிகளிலே அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கும் சிறுமிகள் மத்தியில் 'வன்முறை செக்ஸ்' குறித்த அச்சத்தைப் போக்கவும் வாடிக்கையாளரின் எந்த விருப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே என்பதைச் சிறுமிகளின் மனதில் படியச் செய்யவும் போர்ன் படங்களே பெரிதும் உபயோகிக்கப்படுகின்றன. இத்தகைய அடிமைச் சிறுமிகள் இருக்கும் விடுதிகளில் இந்தப் போர்னோ படங்கள் இடைவிடால் ஓடவைக்கப்படுகின்றன.

போர்னோவில் நாம் காணும் காட்சிகள் பெரிதும் மிகையானவை மற்றும் போலியானவை. இத்தகைய காட்சிகளில் வன்முறை இருப்பது பொதுவானது. இக்காட்சிகள் மெதுமெதுவாக மனித மனதில் பாலுறவு குறித்த இயல்புக்கு மாறான வன்முறைச் சித்திரத்தைப் பதிய வைக்கிறது. அது குடும்ப வன்முறையாக நீட்சியும் பெறுகிறது. போர்ன் படங்களைத் தொடர்ச்சியாகப் பார்ப்பது மனச்சமநிலையைச் சரித்துவிடுகிறது என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

இவ்வகைப் போர்னோ இணையத்தளங்கள் எல்லாமே 'Hidden camera' என்றொரு வகையை வைத்துள்ளார்கள். குளியலறைகளில், படுக்கையறைகளில், தங்குவிடுதிகளில், மசாஜ் சென்டர்களில், ஆடை அங்காடிகளில் சம்மந்தப்படவர்களிற்குத் தெரியாமலேயே எடுக்கப்படும் படங்கள் இப்பிரிவில் இணையங்களில் பதிவிடப்படுகின்றன. பாதிக்கப்பட்ட எத்தனையோ பெண்களும் குடும்பங்களும் தூக்கிலே தொங்கியிருக்கின்றன. அவமானத்தால் உயிருடன் செத்தவர்கள் பல இலட்சம். இதற்கெல்லாம் எந்த அரசாங்கமும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

போர்ன் இணையத்தளங்களிற்குப் பின்பு இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது போர்ன் இணையங்களைத் தடைசெய்யக்கூடாது எனச் சொல்வதில் ஏதும் நியாயங்கள் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நம்முடைய சில நிமிட காட்சியின்பத்திற்காக பெண்களும் சிறுமிகளும் கடத்தப்படுவதும் வதைக்கப்படுவதும் மனநிலை சரிவதும் மறுபுறத்தில் மாஃபியாக்களும் இணைய முதலாளிகளும் கொழிப்பதும் எதுவிதத்திலும் நியாயமற்றதென்றே நினைக்கிறேன்.

நாளை நீங்கள் அல்லது உங்கள் பிள்ளைகள், துணையோடு சம்போகத்தில் ஈடுபடும் காட்சி இவ்வகை இணையத்தளங்களில் 'லைவ்'வாக ஒளிபரப்பப்படுவதற்கு எல்லாவகையான சாத்தியங்களும் உண்டென்பதை மறவாதீர்கள். நாளை இங்கே நம் வீட்டுப் பெண்பிள்ளைகளும் கடத்தப்படலாம்.

- ஷோபா சக்தி.

5.8.15

பகல் கொள்ளை என்றால் என்ன? எப்படி நடக்கும்?

முன்பு பெட்ரோல் டீசல் விலையேற்றப்பட்ட ஒவ்வொரு முறையும் போரட்டம் செய்து பயணக் கட்டணத்தைக் கூட்டினார்கள் தானி, பங்குத்தானி, மற்றும் முச்சக்கர நாற்சக்கர முதலாளிகள். அரசாங்கமும் தன் பங்குக்கு போக்குவரத்துக் கட்டணங்களை உயர்த்தியது. எரிவாயு விலையேற்றத்தால் பெரும் நெருக்கடியைச் (?..) சந்தித்து தள்ளாடிக்கொண்டிருந்த தேநீர்க்கடை மலையாளிகளும் உடனடியாக விலையேற்றினார்கள். தள்ளுவண்டி உணவகம் முதற்கொண்டு பெரும் பேரெடுத்த உணவகங்கள் வரையும் தன் பங்குக்கு ஏற்றினார்கள். விவசாயிகளைவிடவும் பல மடங்கு லாபம் பார்க்கும் உணவுப் பொருள் விற்பனைத் தரகர்களும்கூட ஏற்றிக்கொண்டார்கள்.

சரி. இப்போது குறிப்பிட்ட சதவீதம் எரிவாயுக்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. உலகின் பிற ஏழை நாடுகள் அளவிற்கு இன்னும் இந்தியாவில் குறைக்கப்படவில்லை என்றாலும்கூட இந்த விலை குறைப்பே இங்கு ஒரு பெரும் சாதனைதான். ஆனால் எரிவாயுக்களின் விலையேற்றத்தை சாக்காக வைத்துக்கொண்டு உயரத்தில் ஏறினதெல்லாம் இன்னும் அங்கேயே இருக்கிறது. யோசித்துப் பாருங்கள். இனி ஏறின விலைகள் எதுவும் ஒருபோதும் இறங்கப்போவதில்லை.

அப்படியானால், தனியார்களும் அரசாங்கமும் செய்வது லாப ஈட்டலா? பகல் கொள்ளையா?

நாம் என்ன செய்யலாம்?

வலுவுடையவன் வைக்கும் தனிப்பட்ட கருத்துக்கள்தான் சமூகத்தின் பொதுக்கருத்துக்களாக மாற்றம் பெறுகிறது.

நாம் யாரை மதிக்கிறோமோ, அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள்தான் நமக்குள் பொதுக்கருத்துக்களாக உருமாற்றமடைகிறது.

யார் கருத்தையும் யார் மீதிலும் திணிக்க முடியாது. அது சாத்தியமற்றது.

கருத்து மோதல்கள்தான் உண்மைகளை வெளிக்கொணருகிறது. வரலாற்றின் போக்கை கட்டமைக்கிறது.

எக்கருத்தாயினும் ஐயம் எழும்போது அதை ஆய்ந்து கனிவோடு பரிசீலனை செய்து  கேள்வியெழுப்பும் தன்மையும் உடன் இருக்கும்படிச் செய்வதே கற்றோர்க்கு அழகு.

கற்றோருக்கும் கல்லாதோர்க்கும் ஒரு கருத்துக்களும் இருக்கலாம். ஆனால் இருவருக்கும் எப்போதுமே ஒரே கருத்துக்கள்தான் இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது ஒரு வகையில் அச்சத்தின் வெளிப்பாடே.

தன் கருத்துக்கள் தாக்கப்படும்போதே ஒரு மனிதன் சிந்திக்க ஆரம்பிக்கிறான்.

மக்களைச் சிந்திக்க வைக்காமல் மாற்றத்தை கொண்டுவந்துவிட முடியாது. அரசியலிலும் இப்படித்தான்.

நம் மக்களும் சிந்திக்க வேண்டுமென்றால் அவர்கள் வசமுள்ள கருத்துக்கள் தாக்கப்படத்தான் வேண்டும்.

தாக்கக் கூடாது என்றால் நம் சமூகத்தில் 'மாற்றம் வேண்டும்' என விருப்பம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

நாம் என்ன செய்யலாம்?

சினிமாக்காரர்கள் கவனத்திற்கு...

இப்போதெல்லாம் சென்னைத் திரையரங்குகளில் எந்த காட்சிக்கு எந்தப் படம் ஓடுகிறது என்பதை சுவரொட்டிகளிலோ அல்லது திரையரங்குகளிலோ குறிப்பிடுவதில்லை.

பொத்தாம்பொதுவாக படத்தின் விளம்பரமும் திரையரங்கின் பெயருமே விளம்பரப்படுத்தப்படுகிறது.

காரணம் என்ன?

நினைத்த நேரத்தில் / காட்சிக்கு, நினைத்த படத்தை முன்னறிவிப்பில்லாமல் திரையரங்கு உரிமையாளர்களே மாற்றிப் போட வசதிக்காகத்தான்.

"தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்" இனி அதிரடியான பல செயல்களில் இறங்கவில்லை என்றால், இனி தமிழ் சினிமா தொழிலை சீர்படுத்துவது மிகக் கடினம்.

நடிப்பே வராத, நடிக்கவே தெரியாத, அல்லது நடிப்புத் தொழிலின் மீது அக்கறையே இல்லாமல் வெறும் பணத்திற்காக மட்டும் துறைக்குள் நுழைந்து பல இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களையும் "பலி" வாங்கும் அநியாய சம்பள நடிகர்களின் காட்டில்தான் இப்போதைக்கு தொடர் மழை பொழிந்துகொண்டிருக்கிறது.

ஸ்ரீ முருகப்பெருமானின் யோக்கியதை

"தேவர் பிலிம்ஸ்" நிறுவன முதலாளி தேவர் அவர்கள் முருகப்பெருமான் மீது அளவுகடந்த பக்தி வைத்திருந்தார். அதற்கு கொஞ்சமாவது அந்த நிறுவனத்தின் மீது இந்த முருகப்பெருமான் விசுவாசமோ நன்றியோ அருளோ அருளியிருந்தாலாவது இன்றைக்கு அந்த நிறுவனம் சினிமா எடுத்துக்கொண்டிருக்கும்.

ஆனால் இல்லையே?

இப்படித்தான், முருகப்பெருமானை பாடிப் புகழ்ந்து உளமுருகி நடித்த ஏவிஎம் ராஜன் கடைசியில் சொந்தப் படம் எடுத்து கடனில் சிக்கி கிறித்தவராக மாறி யேசுராஜன் ஆகிவிட்டார்.

இன்னமும் அவர் நடித்த முருகன் பட பாடலைக் கேட்டுக்கொண்டு பலரும் பகுத்தறிவின்றி பக்தியில் அறிவிழந்து மனம் மயங்கி பூசாரிகளிடமும் பார்ப்பான்களிடமும் ஏமாந்து கிடப்பது ஏனோ?

நண்பர்கள் தினம்

இந்த உலகமயமாக்கல் சூழலில் பரஸ்பர எதிர்பார்ப்புகளில்லாத நட்பு என்பது எவ்வளவு உண்மையானது என்பதை மனப்பூர்வமாக நேர்மையாக பரிசீலித்தால் மௌனம்தான் விடை.

அதிலும் சினிமா உலகத்தில் எவ்வளவு நெருங்கிப் பழகினாலும், எடுக்காமல் தவறவிட்ட ஒரு கைபேசி அழைப்புகளில் கூட நட்பு காலாவதியாகிவிடுகிறது.

எல்லாம் கடந்து, ஆத்மார்த்தமான நட்பும் நண்பர்களும் அமையப்பெற்றவர்கள் பாக்கியவான்கள்தான்.

சுருங்கச்சொன்னால், நெருக்கடியான நேரங்களிலும் மிக அத்தியாவசியமான சமயங்களிலும் ஆறுதலும் பண உதவியும் செய்ய முன்வரும் நட்புகள் அமையப்பெற்றவர்கள் பாக்கியவான்கள்.

எல்லோரும் "பாக்கியவான்"களாக ஆசீர்வதிக்கப்படுவார்களாக...!!!

கம்பிக்குள் வெளிச்சங்கள் - தோழர் தியாகு

இயக்குநர் திரு. கே.எஸ்.தங்கசாமி அவர்கள் அலுவலகத்தில் இப்புத்தகத்தைக் கண்டேன். மேலோட்டமாகப் புரட்டிப் பார்த்தேன். தோழர் தியாகுவின் சிறை அனுபவங்களைப் பற்றிய புத்தகமாக இருக்க படித்துப் பார்க்கும் ஆர்வம் எழுந்தது. எனினும் சுமார் 610 பக்கம் கொண்ட இப்புத்தகத்தைப் பிறகு படிக்கலாம் என்றுதான் தள்ளிப்போட்டு வந்தேன்.

மார்க்சியம் பற்றி எளிமையாக சில பக்கங்களில் அவர் விவரித்திருந்த பக்கங்கள் பார்வையில் பட்டதும் உடனடியாகப் படித்துவிட வேண்டும் என முடிவு செய்து புத்தகத்தை அவரிடமிருந்து இரவலாகப் பெற்றேன்.

எவ்வளவு பெரிய தியாக வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் தியாகு..!!

பொதுவுடைமை போராட்டம்,
நக்சலைட் வாழ்க்கை,
அழித்தொழிப்பு நடவடிக்கை,
தோழர் ஏ.எம்.கே.,
சிறை நிர்வாக முறைகள்,
சிறைக் கொடுமைகள்,
மூலதனம் மொழி பெயர்ப்பு,
கைதிகளின் குற்றப் பின்னணிகள்,
கேவலமான நீதித்துறை அமைப்பு,
நீதிபதிகளின் யோக்கியதை,
பொய் வழக்குகள்,
தூக்கு கைதிகளின் வழக்குகள்,
மூவரைக் கொன்ற தென்கொண்டார் கதை,
முதலாளியம்மாவை கொன்ற சந்துரு கதை,
சேரிப் பெண்ணைக் கொன்ற செருமங்கலம் வீரைய்யன் கதை,
ஆன்மீகவாதிகள் சிறைக்கு வந்த கதை,
அப்பாவி கருப்பையாவின் கதை,
மிசா காலத்து சிற்றவதைகள்,

இப்படி ஏராளமான தன் அனுபவங்களை சுவாரசியமாக எழுதியிருக்கிறார்.

"சோளகர் தொட்டி" என்ற நாவலைப் படித்தபோது நான் உணர்ந்த அதே மாதிரியான ஒரு மனநிலையை இப்புத்தகத்திலும் அனுபவித்தேன்.

நீதிபதிகளாலும், கேட்பாரற்ற அதிகாரம் கொண்ட காவற்துறை அதிகாரிகளாலும் இந்நாட்டில் தினம் தினம் நீதி தேவதை எப்படியெல்லாம் கேவலமாக கற்பழிக்கப்படுகிறாள் என்பதை ஆவணப்படுத்தியிருக்கிறார்.

தன் அரசியல் அனுபவங்களை இலக்கிய நடையில் ஒரு நல்ல திரைக்கதைப் போன்றே எழுதியிருக்கிறார். முக்கியமாக வீரைய்யன் என்ற தூக்குத் தண்டனைக் குற்றவாளியின் கடைசி 10 நாள் வாழ்க்கையையும், அவனது வீட்டிற்கு அவனுக்காக தியாகு எழுதித் தந்த கடிதத்தையும் படிக்கும்போது கண்ணீர் அடக்க முடியாமல் அரும்பியது.

தான் சிறையில் மொழிபெயர்த்த காரல் மார்க்சின் மூலதனத்தை வீரைய்யன்தான் முதன்முதலில் படியெடுத்து எழுதிக்கொடுத்ததை அவன் தூக்கிலிடப்பட்ட 10 ஆண்டுகள் கழித்து வார இதழ் ஒன்றில் பேட்டி கொடுத்து நினைவுகூர்ந்துள்ளார்.

செய்யாத கொலையில் சிக்க வைக்கப்பட்ட கருப்பையாவின் கதையை நினைத்தால் இப்போதும் மனசு ஈரமாகிறது. படிக்கும்போது எழுந்த கண்ணீரால் நிறுத்தி நிறுத்திப் படித்தேன்.

இந்திரா காந்தியின் அவசர கால அநியாயங்களையும், சிறையில் நடந்த கொடுமைகளையும் புத்தகத்தின் இறுதியில் விவரித்திருக்கிறார். சிறையில்பட்ட சித்ரவதையால் பலியான திமுக எம்.பி. சிட்டிபாபுவின் வாழ்க்கையை இதில்தான் தெரிந்துகொண்டேன். மேலும் ஸ்டாலினுக்கு சிறையில் நேர்ந்த கதியும்.

ஒரு போராட்டத்தில் பங்கெடுத்ததற்காக ஒருநாள் முழுதும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பொய்யாய் தயாரிக்கப்படுவதை  நேரிலேயே பார்த்திருக்கிறேன். நள்ளிரவில் நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டு பிறகு சில மணிகளில் புழல் சிறயில் அடைக்கப்பட்டேன். ஒருவாரகால புழல் சிறை வாசத்தில் உள்ளே பலர் தண்டனைப் பின்னணிகளை கேட்டிருக்கிறேன். பொழுதுகளைப் போக்க காய்கறி தோட்டம் விளைவிக்கும் ஆயுள் கைதிகளின் கண்ணீர்க் கதைகளை உள்ளே கேட்டு ஆறுதல்படுத்தியிருக்கிறேன். இதன்பொருட்டோ என்னவோ, என்னால் தோழர் தியாகுவின் மன உலகிற்கு ஏதுவாக பயணப்பட முடிகிறது.

தன் பரந்த அனுபவங்களை புத்தகத்துக்குள் அடக்கியிருக்கிறார் தோழர் தியாகு. இந்த நாட்டின் நீதித்துறையின் அவல நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ள கட்டாயமாக படிக்க வேண்டிய அவசியமான புத்தகம் இது.

மது விலக்கு

மதுக்கடைகளை ஒரு அரசாங்கம் நம்பியிருப்பதும் அதன் விற்பனையை ஊக்குவிப்பதும் என்பது எவ்வளவு கேலிக்கூத்தோ அதேபோல்தான் மதுவிலக்கு என்பதாகவும் தோன்றுகிறது.

எல்லா மாநிலங்களிலும் மது இருக்க, இங்கு மட்டும் நிலைமை சீரழிய காரணம் என்ன என்பது கண்டு களையப்பட வேண்டும்.

01. புதுவையில் மதுவிலக்கு கோரும் கட்சிகள் எது? ஏன் இல்லை?

02. மதுவை மக்கள் கைவிடுவது மிகவும் கடினம். மதுவிலக்கு சாத்தியமற்ற ஒன்றாகவே தோன்றுகிறது.

03. கள்ளச்சாராயம் பெருகும். அதை ஒடுக்க வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படாததை கடந்த காலத்தில் அறிவோம். பேட்டரி, யூரியா கலந்து தயாரிக்கும் கள்ளச் சாராயம் எளிய மக்களை காவு வாங்கும்.

04. உடல் உழைக்கும் சாமானிய மக்களுக்கு சிறிதளவேனும் மது தேவை.

05. ரேஷனைப் போன்று விற்பனை அளவுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும். மதுவருந்தும் விடுதிகள் இருக்கவே கூடாது.

06. மதுக்கடைகளினால் வரும் வருமானத்தை மட்டுமே அரசு நம்பி இருக்கக்கூடாது.

06. விவசாயிகளைக் கொண்டு தரமான "கள்" விற்பனையை அரசே துவங்கலாம். கள் இறக்க அனுமதி கொடுக்கலாம்.

07. நாளடைவில் கள் மட்டுமே கிடைக்கும்படி கொண்டு செல்லலாம்.

*** இத்தனை களேபரத்திற்கு இடையிலும் குடிப்பழக்கம் இல்லாதவர்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

*** தேவைப்படுவோருக்கு சிறிதளவேனும் கிடைக்கும்படி வழி செய்து வைத்திருப்பதே நியாயமான ஜனநாயகம்.