20.2.18

விவசாயிகள் அழிய வேண்டும், ஏன்?

விவசாயத்தைக் காப்பாற்றுவது விவசாயியின் வேலை இல்லை. அவன் மட்டும் தலைமுறை தலைமுறையாய் ஊருக்கு உழைத்து சாகவேண்டும் என்று எழுத்தில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக பேசி பேசி அவர்களை மட்டும் உழைத்து ஏமாந்து போகும்படியே எல்லோரும் விட்டதுதான் மிச்சம்.

மிகப்பெரிய உணவகங்களில் ஒரு சாதா தோசையின் விலைகூட இன்னும் விவசாயிக்கு தினசரி வருமானமாகவில்லை. 30 ஆயிரம் செலவழித்து 4 மாதம் காத்திருந்தால் 40 ஆயிரம் கிடைக்கிறது. அவனது உற்பத்திப் பொருளை வாங்கி விற்கும் வணிகனுக்குத்தான் ஆதாயமே கிடைக்கிறது.

வாழ்நாள் முழுதும் உழைத்துவிட்டு உழைப்புக்கு தகுந்த விலையும் கிடைக்காமல் எந்த வசதிகளையும் அனுபவிக்காமல் கஞ்சனைப்போன்றே நிர்பந்தமாக வாழ்ந்து உடலில் சத்தில்லை, விஷக்கடி, அந்த இந்த நோய் என்று கடைசிக்காலத்தில் அல்லல்பட்டு சாகும்படியாகிறது அவன் வாழ்க்கை.

வங்கிகளில் அலைக்கழிப்பு, காவல் நிலையங்களில் அலைக்கழிப்பு, நீதிமன்றங்களில் இழுத்தடிப்பு, தாசில்தார் அலுவலகங்களில் அலைக்கழிப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அலைக்கழிப்பு, அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களால் அலைக்கழிப்பு என வாழ்நாள் முழுதும் உதாசீனங்களையே சந்தித்து முடிகிறது அவர்கள் வாழ்க்கை. லஞ்சம் அதிகமாக சுரண்டப்படுவதும் விவசாயிகளிடமிருந்துதான்.

விவசாயத்திற்கு கொடிபிடிக்கும் நகரத்துவாசிகள் யாரும் ஒரு விவசாயிக்கு பெண் கொடுப்பதையோ விவசாயி வீட்டில் பெண் எடுப்பதையோ விரும்புவதில்லை.

விவசாயிகளுக்காக போராடுவதாக அறிக்கை விடும் எந்தத் தலைவனும் முழுநேர விவசாயி இல்லை. வருமானத்திற்கு வேறு தொழில் வைத்துக்கொண்டு விவசாயிகளுக்கான தலைவர்கள் ஆகவே முயற்சிக்கின்றனர்.

அரசின்மீது நம்பிக்கை இழந்து புலம்பும் விவசாயிகளை ஜாதி பெருச்சாளிகள் ஒருபக்கம் மூளைச்சலவை செய்து ஒன்றுசேரவிடாமல் பிரித்து வைத்திருக்கிறது.

எல்லா பக்கமும் அடிவாங்கிக் கொண்டு வேறு வழி தெரியாமல் மீண்டும் மீண்டும் கடனில் வீழ்ந்து மண்டிக்காரனுக்காகவே உழைத்து முடிகிறான் விவசாயி.

உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருப்பவர்கள் அவர்கள் தற்காலிகமாக விவசாயத் தொழிலை நிறுத்திவிட்டு கூடுமானவரையில் உணவகத் தொழிலில் ஈடுபட அறிவுறுத்த வேண்டும். (உணவக தொழிலில் அரசு யாரையும் எதிலும் கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை. விரும்பம்போல விலை. அதற்கும் வரி. 200% லாபம்) வருமானத்திற்கு வேறு தொழிலை வைத்துக்கொண்டு தங்கள் குடும்பத்திற்கு தேவையானதை மட்டும் விவசாயிகள் உற்பத்தி செய்துகொள்ள வேண்டும். நிலங்களை விற்கக் கூடாது. தரிசாகவே விட்டுவைக்க வேண்டும். இது எதுவரைக்கும் என்றால் அவனது முக்கியத்துவத்தை அரசு உணரும் காலம் வரை.

சேட்டு, பனியா, மார்வாரியெல்லாம் யாராலும் சுரண்டப்படாமல் சொகுசாக வாழ்வதைப்போல ஒரு விவசாயியும் வாழும் நிலை இங்கு வரவேண்டும்.

தலைமுறை தலைமுறையாய் விவசாயம் செய்பவர்கள் நல்ல வருமானமுள்ள தொழிலுக்கு மாற வேண்டும்.

"நீ விவசாயத்தை விட்டால் ஊருலகத்திற்கு எப்படி உணவு கிடைக்கும்?" என்ற அறிவுரையை தொடர்ந்து அவனுக்கு போதித்து, கடவுளே நீதான் என்று பாராட்டி நயமாய் பெருமை பேசி மயக்கி அவனை மேலும் அதே படுகுழியில் தள்ளும் அனுதாபிகள் தங்கள் நீலிக்கண்ணீர் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தங்களுக்காக மட்டும் உழைத்துக்கொண்டும்; தகுந்த முன்னேற்பாடு செய்துகொண்டும் நாடெங்கும் உணவுப் பஞ்சம் வரும் சூழலை ஒருமுறையாவது விவசாயிகள் உருவாக்க வேண்டும்.

விவசாயிகள் என்ற வர்க்கம் தற்காலிகமாக அழிய வேண்டும். விவசாயம் நிறுத்தப்பட வேண்டும். இதுவன்றி விவசாயிகளுக்கு இந்த நாட்டில் எப்போதைக்கும் விடிவில்லை.
 
23-04-2017
 
 

No comments:

Post a Comment