20.2.18

யார் புத்தர்..?

புத்தர் பெருமான் உடல் மிகவும் நலிந்து, மெலிந்து படுத்த படுக்கையில் இருந்தார். இனி அவர் பிழைப்பது அரிது என்ற நிலை. எந்த நேரத்திலும் மரணம் அவரைத் தழுவும் என்பதை உணர்ந்த தொண்டர்கள் அதிர்ச்சியில் நிலைகுலைந்து சோகத்தில் ஆழ்ந்தனர்.

மகான் அருகில் இருந்த தொண்டர் ஆனந்தர், துயரம் தாங்காமல் கதறியழுதுகொண்டே இருந்தார்.

இலேசாகக் கண்விழித்த புத்தர் மெல்லிய குரலில், “ஆனந்தா, ஏன் நீயே இப்படிக் கதறி அழுகிறாய்? மனதைத் தைரியப்படுத்திக் கொள். நான்தான் மீண்டும் நிச்சயம் பிறப்பேனே… இதனைப் பலமுறை உனக்கு தெளிவுபடுத்தி இருக்கிறேனே?” என்று கேட்டார்.

எவ்வளவுதான் ஆறுதல் கூறினாலும் ஆனந்தரால் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சற்றே அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “சுவாமி, நீங்கள் மீண்டும் பிறப்பீர்கள் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. ஆனால் நான் எப்படி உங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்?” என்று கேட்டார்.

புத்தரின் முகத்தில் இலேசான புன்னகை மலர்ந்தது!

“ஆனந்தா, என்னை நீ அடையாளம் கண்டு கொள்வது மிகவும் சுலபம். அன்பையும்,சேவையையும் நீ எவரிடத்தில் காண்கிறாயோ அவர்தான் புத்தர் என்பதை உணர்ந்து கொள்…” என்றார் புத்தர்.
 
28-04-2017
 
 

No comments:

Post a Comment