20.2.18

மாமனிதர் அம்பேத்கர்

ஒடுக்கப்பட்டவர்களின் மேல் இயல்பிலேயே இந்த சமூகம் ஏற்பாடு செய்து வைத்துள்ள வெறுப்பால் பலரும் அம்பேத்கரைப் படிக்கத் தவறுகின்றனர். கிராமத்தில் இருந்தவரை எனக்கு பெரியார், அம்பேத்கர் இருவரையும் பற்றி தெரியாது ; அறவே பிடிக்காது. சென்னை நகரம்தான் அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோரை எனக்கு அறிமுகப்படுத்தியது.

ஹிந்து மதம் - விதி - கர்ம வினை என்று ஒரு காலத்தில் எதையெதையோ கண்மூடித்தனமாய் நம்பிக்கொண்டிருந்தேன். இவர் எழுதிய (Buddha and his Dhamma) "புத்தரும் அவர் தம்மமும்" என்ற புத்தகத்தை (பெரியார்தாசன் மொழிபெயர்ப்பு) வாசித்த பின்னரே என்னிலிருந்து ஹிந்து என்ற உணர்வு அறுந்து போனது.

இந்த உலகில் ஒரு மனிதரின் உழைப்பால்; சிந்தனையால் பல கோடிப்பேர்களின் வாழ்க்கை பயனடைந்துகொண்டிருப்பது இவர் ஒருவராலேயே என்று நினைக்கிறேன். ஏனைய பிற்படுத்தப்பட்ட மக்களின் / எல்லா சமூக பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டிலும் இவரது உழைப்பும் பிணைந்துள்ளது என்பது இன்னும் வெளியே பரவாத உண்மை.

சமீபத்தில் "ஜாதியை அழித்தொழிக்க வழி" எனும் நூலைப் படித்தேன். இந்த சமூகத்தின் சிக்கல்களை அதைக் களையும் வழிகளை எந்தளவு ஆழமாய் அக்கறையாய் அலசி ஆராய்ந்து தன் கருத்தை வெளியிட்டுள்ளார் என்பதை ஒவ்வொரு வரியிலும் மிகவும் வியந்தேன். கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

அம்பேத்கர் என்றாலே ஏதோ தலித் அல்லாதவர்களுக்கு எதிரி என்றும், தலித் மக்களுக்கு மட்டுமான தலைவர் என்றும், அம்பேத்கரைக் கொண்டாடுகிறவர்கள் என்றாலே தலித்துகள் மட்டும்தான் என்றுமான எல்லா கட்டுகளும் உடைய வேண்டும். அதேபோல், அம்பேத்கரைப் படிக்காமலேயே வெறும் பிழைப்பு அரசியலுக்காய் அவர் பெயரையும் படத்தையும் பயன்படுத்தி பிற மக்களிடம் அவரது கருத்துக்கள் சென்றுவிடாதபடி வெறுப்பை வளர்க்கும் சிலரும் தம் போக்கை மாற்ற வேண்டும். எப்படியாவது அவரது கருத்துக்களை எல்லா தரப்பு மக்களும் படிக்கும்படியான வழியை ஏற்படுத்த வேண்டும்.

என்றைக்கும் உலக வரலாற்றில் வாழப்போகும் மாமனிதர் அம்பேத்கர்.

என்னுள் அறிவொளி ஏற்றியவர்களில் ஒருவர். மனப்பூர்வமாக அம்பேத்கர் அவர்களை போற்றுகிறேன்.

ஜெய்பீம்...!!!
 
(14-04-2017)

No comments:

Post a Comment