2.2.14

சைபர்ர்ரு க்க்க்ரைம்ம்மு...?!...

சவுக்கு இணையத்தில் சின்மயி தொடர்பான கட்டுரைக்கு, சைபர் க்ரைம் பற்றி விஸ்வனாதன் என்பவரது கருத்துக்கள்

சைபர் கிரைம் சட்டம், விதிகள் எல்லாம் நம் காவல் துறை அதிகாரிகளுக்கு கிரேக்க மொழி போன்றது. எனது பர்சனல் டீடைல்ஸ், ID நம்பர் ஆகிவைகளை செல்போன் நிறுவனத்திடம் இருந்து சட்டவிரோதமாக திருடியதாக ஒருவனின் மீது நான் கொடுத்த சைபர் கிரைம் புகாரினை விசாரிக்காமல், என்னையே குற்றம் செய்தவன் போல நடத்திய சைபர் கிரைம் போலீசாரின் மீது புகார் கொடுத்தும், RTI மூலம் பல கேள்விகள் கேட்டும் மடக்கிய போது, சைபர் கிரைம் செல்லின் தலைமை ஏற்று இருந்த இன்ஸ்பெக்டர் அழாத குறையாக கெஞ்சி, எங்களுக்கு சைபர் கிரைம் பற்றியெல்லாம் சத்தியமாக ஒன்றும் தெரியாது, தயவு செய்து மேலும் இது பற்றி கிளற வேண்டாம் என்றும், புகார் கொடுத்த என்னை எனது IT வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்து சைபர் கிரைம் பிரிவை தலைமை ஏற்று நடத்துமாறு கேட்டுக்கொண்டார். இது தான் சைபர் கிரைம் செல்களின் லட்சணம். இந்த வழக்கில் கைது செய்தது போல, ஏதோ ஜேம்ஸ் பான்ட் கதைகளில் வருவதுபோல எல்லாம் சைபர் கிரைம் செல்களில் ஆட்கள் வேலை பார்ப்பது இல்லை. ஆட்கள் தெரிந்தாலோ, பணம் கொடுத்தாலோ தான் காரியம் ஆகும்.

சாதி / வெட்டிப் பெருமை / வெட்டி வீரம்....?!...

இங்கே இணையத்தில் பலரும் நான் அந்த வம்சம் இந்த வம்சம் என்று வெட்டிப்பெருமை பேசிக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாம் என்ன சாதியில் பிறக்கவேண்டும் என்பதை நாமா தீர்மானிக்கிறோம். அவனவன் அந்தந்த சாதியில் பிறந்ததற்கு அவரவரா காரணம்? இதில் என்ன பெருமை இருக்கப் போகிறது? ஒவ்வொரு சாதியிலும் ஒரு பெருமை வாய்ந்தவன் வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறான். அதைச் சொல்லிச் சொல்லியே சொறிந்துகொள்வதில் என்ன இருக்கிறது? முடிந்தால் தானும் பலர் பாராட்டும்படியாக, பெருமைப்படும்படியாக வாழ முயற்சிக்க வேண்டும்.

ஒருவனுக்கு பெருமை என்பது பிறப்பால் வருவதில்லை. செயலால்தான் வருகிறது.

சுயசாதி வெட்டிப்பெருமையை பேசிக்கொள்ளும் பலரது கருத்தியல் விளக்கங்களும், செயல்பாடுகளும் மிக கேவலமாக இருக்கிறது. வீரம் என்பது ஒரு விஷயமா? வலுவில்லாதவனோடு மோதுவதும், வெட்டுவதும், குத்துவதும், பலரை இழிவாகப் பேசுவதும் வீரமா?

அநியாயத்தையும், அக்கிரமக்காரர்களின் ஆட்பலத்தையும் (தனியாளாய்) எதிர்த்து நிற்கிறவன் எவனோ அவனே வீரன். எதற்கும் பயமின்றி நியாயத்திற்கு குரல் கொடுப்பவன் எவனோ அவனே வீரன்.

இம்மாதிரியான வீரர்களை நேரடியாக எதிர்க்கத் துணிவின்றி கூலிப்படையால் கொல்பவர்களெல்லாரும் சமூகத்திற்கு தங்கள் முகத்தை வீரனாகத்தான் காட்டிக் கொள்கிறார்கள்.

எம்.எல்.ஏ வை எதிர்த்து சுவரொட்டி ஒட்டும்போது கை வெட்டப்பட்டு மாண்ட தொப்பி குமார், மற்றும் பெரியார் தி.க பழனிச்சாமி, திருவண்ணாமலையில் சாலையில் வெட்டிக்கொள்ளப்பட்ட சமூக ஆர்வலர்.... இவர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான வீரர்கள். இவர்களிடம் பணபலமில்லை, ஆட்பலமில்லை. ஆனால் நெஞ்சில் வீரமும், துணிவும் மட்டுமே இருந்தது.

சாதிக்காக வாழ்வதும் / உயிர் விடுவதும் / பலர் உயிரை வாங்குவதும் வீரம் என்றால் இவர்களது வீரத்திற்கு என்ன பெயர்?

வெட்டி வீரம் என் சாதிக்கு சொந்தம் என்று மார்தட்டுவதை விடுத்து அறிவு என் சமூகத்திற்கு சொந்தம் என்று உரக்கச் சொல்லுங்கள். ஊரும் உலகமும் உங்களை பாராட்டும். உண்மையான பெருமை என்பது இதுதான்....

முகநூல் சோ...

சில நாட்களாக, இந்த கிஷோர் சாமியின் பதிவுகளை நன்றாகக் கவனியுங்கள்.

நிறைய பதிவுகளில் தேவர் / வன்னியர் சாதியினை பெருமையாகவும் அவர்களுக்கு எதிரான மாற்று சாதியினரை  தரக்குறைவாகவும் பதிவிடுகிறார். இது மிகவும் அருவெறுப்பான கீழ்த்தரமான அரசியல். அதாவது இணையத்தில் அடியாள் பிடிக்கும் வேலையாகவே தெரிகிறது. இது கடைந்தெடுத்த வர்ணாசிரம குணம் என்பதை உணராத சில சாதி உணர்வாளர்களும் இதற்கு துணை போகிறார்கள். குறை சொல்வதென்றால் யாரையும் நேரடியாக குறை சொல்லலாம். ஆனால் ஒரு தரப்பினரை துணைக்கழைத்துக் கொண்டு சொல்வதென்பது... படு கேவலம். தமிழன் தன் சுயசாதிப் பெருமையில் ஊறித்திளைத்து பார்ப்பனியத்திற்கு அடியாட்களாக சேவகம் செய்து கொண்டிருக்க வேண்டுமென்பதையே இந்த மேல் குடி மேதாவிகள் விரும்புகிறார்கள். சில அப்பாவி சாதி உணர்வு இளைஞர்களும் இதற்கு பலியாகிறார்கள்.

இது பாம்புகளை விடவும் பெரிய விஷம் என்று அய்யா பெரியார் சொன்னதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தயவுகூர்ந்து கிஷோர் கே சாமியின் சாதீயப் புகழ்ச்சியில் எந்த பதிவர்களும் மயங்கவேண்டாம். ஆரம்பத்தில் ஓரளவு நடுவுநிலையாக பதிவிட்டுக் கொண்டிருந்த இந்த சாமி போகப்போக இப்படி பதிவிடுகிறார் என்பது ஏனோ தெரியவில்லை. 
(அக் 30, 2012)

என்னுடைய அப்பா மதிப்பிற்குரிய மாசிலாமணி அவர்கள்....

 

வெறும் மூன்று மாடுகளை மட்டுமே வைத்துக்கொண்டு, அதன் வரும்படியில் நான்கு குழந்தைகளை படிக்க வைத்து, எங்களுக்கு அறிவையும் கல்வியையும் மட்டுமே சொத்தாய் வைத்துச் சென்ற எம் தந்தையார் "து.மாசிலாமணி" அவர்களின் நினைவு நாள் இன்று. 12 வருடங்களுக்கு முன்னர் 20-11-2000 அன்று காலை 7:30 மணியளவில் உயிர் நீத்தார். இதே நவம்பர் மாதத்தில், மூன்று வருடங்களுக்கு முன்னர் 01-11-2009 அன்று எம் தாயார் ஆதிலட்சுமி அவர்களும் உடல்நலமின்றி இறந்துபோனார்.

இந்த நாளில் கண்ணீரோடு எம் தாய்,தந்தையரை எண்ணிப் பார்க்கிறேன்.

எங்கள் கிராமத்தில், எங்கள் சமூக மக்களின் எல்லா பிரச்சனைகளும் எம் தந்தையிடம் பஞ்சாயத்துக்கு வரும். பெரிய படிப்போ, வசதியோ ஒன்றுமில்லை. அந்தக்காலத்து ஆறாம் வகுப்பு. அம்மாவுக்கு படிப்பு வாசனையே கிடையாது. மிக மிக கண்டிப்பானவர். சிறு தவறு என்றாலும்கூட பயங்கரமாக கோபப்படுவார். இன்றைக்கும்கூட எங்கள் கிராமத்தில் பலர், "உங்கப்பா இருந்திருந்தா இந்தப் பிரச்சனை எப்பவோ தீர்ந்திருக்கும்" என்று பலர் பேசும்போது கண்ணீரோடு நினைத்துப் பார்ப்பேன். மாசிலாமணிப் பசங்க என்று எங்கள் ஊரில் பிறர் சொல்வதுதான் எங்களுக்கு இன்றும் பெருமையாக இருக்கிறது. தம்பியின் கல்யாணத்தின் போது வெளியூர் உறவுக்காரர்களுக்கெல்லாம் நான்தான் பத்திரிகை கொடுக்கச் சென்றேன். அவரவர்களின் பல பிரச்சனைகளையும் தீர்க்கக்கூட என் அப்பா உதவியிருப்பது அவர்கள் சொல்லித்தான் எனக்கு தெரியவந்தது. என் 19 வயதில் இறந்துபோன என் அப்பாவிடமிருந்து நான் கற்றுக்கொண்டது என் எளிமையும், நேர்மையும்.

அண்ணன் மிலிட்டரி எஞ்சினியர். தம்பி Msc MTech முடித்து சிங்கப்பூரில் வேலைபார்க்கிறான். நான் சினிமாவுக்கு வந்து........

என் தந்தை எனக்கு கடைசியாக எழுதிய கடிதத்தை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அதில் என்னைப்பற்றிய கவலைகளே அவருக்கு அதிகமிருக்கிறது. ரத்தப் புற்றுநோய் வந்து மருத்துவம் பார்க்க வசதியின்றி கடன் பிரச்சனைகளின் கவலைகளாலும் சுழன்ற அவரின் கடைசிக்காலத்தில் என்னைப் பற்றிய கவலைகளும் கொன்றிருக்கிறது.

என் தந்தையின் சாயலில் யாரையாவது எங்கேயாவது பார்த்தால் ஒரு கணம் பெருத்த அமைதியடைவேன். எனக்காக கவலைப்பட்ட அவருக்காக நான் எதுவுமே செய்யவில்லை, இன்று வரையிலும் கூட. இப்போதைக்கு எங்கள் கிராமத்தில் நடக்கும் நாலு நல்லது கெட்டதுகளில் பங்கெடுக்கும் குடும்பங்களில் நாங்களும் ஒன்றாய் இருப்பதுதான் அவர் வாழ்க்கைக்கு நாங்கள் செய்த மரியாதை.

எதிர்காலத்தில் என் பெற்றோர் பெயரில் என் சொந்த பணத்தில் பலருக்கு படிக்கவும், தொழில்செய்ய உதவியும் செய்யவேண்டுமென்பதே என் கனவில் இருக்கிறது. கண்டிப்பாக இது நடக்குமென்றே நம்புகிறேன்...

காதல்... கத்தரிக்காய்... கல்யாணம்...

இந்தக்காலத்துல எளசுங்க பண்றத காதல்னு நம்புறவன் கேனையனாதான் இருக்கணும். அது காதலா? யில்ல காமமான்னு அவங்களுக்கே கல்யாணமான 6 மாசம் கழிச்சுதான் தெரியவரும். இந்த லட்சணத்துல சாதி ஒழிப்பு எப்புடி சீன்ல வருது? தன் சாதி பொண்ணுங்களோ, அடுத்த சாதி பொண்ணுங்களோ, பொண்ணுங்கன்னா போகப்பொருளா, சதைப்பிண்டமா பார்க்குற குணமே இங்க எவனுக்கும் மாறல. இந்த லட்சணத்துல இவங்க பண்றது காதலாம், அது சாதி மறுப்பாம், அதனால சாதி ஒழியுமாம். ரெண்டுதரப்புலயும் மறுத்தாத்தானே சாதி மறுப்பு. ஒரு தரப்பே சொல்லிக்கிட்டா மறுப்பாயிடுமா? அதனால சமூகத்துல மாற்றம் வந்திடுமா? அரைவேக்காட்டுத்தனமான காதல்களால சாதி எப்புடி ஒழியும்?... மறுபடியும் சாதிக்கட்சிகள்தான் வளரப்போவுது. என்னைப் பொறுத்தவரை பெத்தவங்க மனச பதற வெச்சிட்டு பண்ணிக்கிற கல்யாணம் எதுவா இருந்தாலும் ஒழியணும்.

திராவிடர் கழகம் நாளைக்கு நடத்துற சுயம்வரத்துல வெளிப்படையா அறிவிச்சிருக்காங்க சாதி மறுப்பு திருமணம்னு. இந்த மாதிரி மாசம் ஒண்ணு நடந்தா நாட்டுக்கு நல்லது. சாதிய ஒழிக்கணும்னு நெனக்கிறவங்க இதுல கலந்துக்கலாமே. பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணும்னு அடம்புடிச்சா என்ன பண்றதாம்? சாதி ஒழியணும்னு சொல்லி இட ஒதுக்கீட்டுக்கு ஆப்பு வெச்சிடாதீங்க வெறியர்களே. ஏதோ இப்பதான் பெரியார் புண்ணியத்துல முதல் தலைமுறையா படிச்சிக்கிட்டிருக்கோம்.

ஒரு பணக்கார தலித் ஏழை தலித்துக்கு பொண்ணு கொடுக்கிறானா? ஏழை தலித் வீட்ல பொண்ணு எடுக்கிறானா?

ஒரு பணக்கார வன்னியன் ஏழை வன்னியனுக்கு பொண்ணு கொடுக்கிறானா? ஏழை வன்னியன் வீட்ல பொண்ணு எடுக்கிறானா?

பாதிக்கப்பட்ட வன்னியனுக்கு ராமதாசுதான் பணம் கொடுத்து ஒதவப்போறாரா யில்ல வசூல் பண்ண பொற்காச பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு திருமாதான் தந்து உதவப் போறாரா?

காதல்னு சுத்தி வீணாப்போற ஒங்க வீட்டுப் புள்ளைங்களுக்கு புரியவெச்சி நல்லா படிக்க வையுங்க, நல்லா படிக்க சொல்லுங்க. கல்விதான் சாதியையும், மூடநம்பிக்கையையும் அடியோடு ஒழிக்கும். கல்வியறிவில்லாம காதலிக்காதீங்க, கல்யாணம் பண்ணிக்காதீங்க. அடுத்த தலைமுறையையும் அடிமை ஆக்காதீங்க. இனப்பெருக்கம் தன்னால நடக்கும். ஆனா, அறிவு தன்னால வளராது.

ஓடுனவங்கள கூப்பிட்டு கேட்டுப்பாருங்க, சாதிய ஒழிக்கதான் ஓடுனாங்களான்னு.

மறுபடியும் சொல்றேன்... சாதிய ஒழிக்க விருப்பமுள்ளவங்க திராவிடர் கழகம் நடத்தும் இணைதேடல் விழாவுல கலந்துக்குங்க. தெளிவான சாதி ஒழிப்புக்கு துணை நில்லுங்க.

இல்லேன்னா... எப்பயும் ரெண்டுதரப்பு கட்டப்பஞ்சாயத்துக்காரனுங்க காட்லதான் மழை...

எப்படி வெல்லப்போகிறாள் தமிழ்?....

1. சாதி
2. சிங்களம்
3. காங்கிரசு
4. கன்னட மலையாள தெலுகு அதிகார அடக்குமுறை
5. தமிழ்நாட்டு முதன்மை அரசியல் கட்சிகள்
6. ஹிந்திய தேசிய கட்சிகள்
7. இனத்திலே பிறந்த துரோகிகள்

இவ்வளவுபேரையும் எதிர்கொண்டு எப்போது / எப்படி வெல்லப்போகிறாள் தமிழ்?....

யாருக்காக ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார்?

விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்....

நாடு முழுவதும் இன்று ஜெயின் கமிஷன் மீதே கவனம் செலுத்துகிறது. அதே சமயம் பூந்தமல்லியில் ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் முடிந்து விட்டன. இந்த நீதிமன்றத்தின் நீதிபதி, 'வழக்கின் தீர்ப்பு 1998 ம் ஆண்டு ஜனவரி 28 அன்று வழங்கப்படும்' என்று அறிவித்திருக்கிறார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 26 பேரும், தேசத்தின் குடிமக்களும் இந்தத் தீர்ப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றவாளிகளின் சார்பில் எதிர்தரப்பு வாதம், 50 நாட்கள் நடைபெற்றது. இரகசியமாக நடந்த இந்த வாதங்களின் பல முக்கியப் பகுதிகள் தமிழன் எக்ஸ்பிரஸுக்குக் கிடைத்தன. சொல்லப்படாத பல பின்னணிக் கதைகளை வாசகர்கள் முன் கொண்டு வருகிறோம். குற்றம் சுமத்தப்பட்டவர்கள், ராஜீவ் கொலையை விசாரித்த விசேஷ புலனாய்வுத் துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் முன்னிலையில் தமிழக போலீஸின் பாதுகாப்புடன் எதிர்தரப்பு வாதம் நடந்தது. 1993 ம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கு, 50 மாதங்கள் நடந்தது. 288 சாட்சியங்கள், 3000 அரசுத்தரப்பு ஆவணங்கள், 1000 எதிர்தரப்பு ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன. எதிர்தரப்பு வாதத்தில் எழுந்த பல கேள்விகளுக்கு விடையில்லை. சிறப்பு புலனாய்வுத் துறையின் இந்த விசாரணைகள், அதிகாரத்திலுள்ளவர்களின் அன்பைப் பெறும் வகையில் தான் நடந்தது என்று சந்தேகப்பட வைக்கிறது.

ராஜீவ் கொலை ஒரு வி.ஐ.பி.யின் மரணம் மட்டும் அல்ல; தேசத்தை சிதறச் செய்யும் மிகப் பெரிய சதி. பல அந்நிய சக்திகள் இந்தப் பரந்த தேசத்தைக் கட்டியாள நினைக்கும் தந்திரம். அதனாலேயே இந்த வழக்கிலுள்ள பல திடுக்கிடும் சம்பவங்கள், விசாரணையின் ஓட்டைகள் ஆகியன நமக்குத் தெரிய வேண்டியது மிக முக்கியம். இந்த விசாரணையில் எதிர்தரப்பு வாதங்களைத் தொடக்கி வைத்தவர் மூத்த வழக்கறிஞரான துரைசாமி. ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்த அந்த நீதிமன்ற அறையில் விசேஷ புலனாய்வுத் துறையின் 'முன் ஜோடிப்பு கதைகளை' போட்டு உடைத்தாராம் துரைசாமி. அதேபோல் எதிர்தரப்பு வழக்கறிஞர் ராமதாஸும் தன் 11 நாட்கள் வாதத்தில் குற்றப் பத்திரிகையில் புனையப்பட்டுள்ள பல கற்பனைக் கதைகளை சாட்சியங்களோடு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். இந்த எதிர்தரப்பு வாதங்களின் க்ளைமாக்ஸாக அமைந்தது வழக்கறிஞர் சந்திரசேகரின் கடும்வாதம். ஆதார பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசிய சந்திரசேகர், விசேஷ புலனாய்வுத்துறை ஏற்கனவே முடிவு செய்து தங்கள் முடிவுகளுக்கு ஏற்ப வழக்கை ஜோடித்ததாக கடுமையாகக் குற்றம் சாட்டினார். 'நான் கேட்கிற சாட்சியங்களை புலனாய்வுத்துறை காட்டிவிட்டால் என் கட்சிக்காரர்கள் தாங்கள் குற்றம் செய்ததாக தாங்களே முன்வந்து ஒப்புக் கொள்வார்கள்' என்று கூட சவால் விட்டார். இப்படி ஐம்பது நாட்கள் நடந்த எதிர்தரப்பு வாதங்கள் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. இதோ அந்த விடை கிடைக்காத கேள்விகள்:

1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்?

2. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?

3. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?

4. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை,ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?

5. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?

6. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?

7. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் தோட்டம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

8. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

9. யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

10. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் தா. பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?

11. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?

12. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார்.

13. உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?

14. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

15. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், 'ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது' என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார்.'அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்?' என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?

16. மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு.

17. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் தன் கணவருடனும் வழக்கறிஞர் மகேந்திரனுடனும் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை?சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?

18. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?

19. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப் படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். 'வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.

20. காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?

21. சிவராசன், தணு, சுபா ஆகியோர் ஒரு அந்நிய சக்தியின் தூண்டுதலால் ஏன் இந்தக் கொலையை செய்திருக்கக் கூடாது? அந்த மூவரும் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதால் மட்டுமே அவர்களைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி விசாரணையை முடித்துவிட்டார்களா?

22. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?

23. பிரபாகனும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத் துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?

24. 'விசேஷ' இலட்சியமுள்ள அரசியல்வாதிகள், ஏன் அவரது காங்கிரஸ் தோழர்களே கூட தங்கள் வளர்ச்சிக்கு ராஜீவ் தடையாக இருக்கிறார் என்பதால் கூலிப்படையினரை ஏவிவிட்டு ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

25. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

26. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது?

27. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?

28. புலிகளின் 'இந்துத்துவா' அபிமானம், இலங்கைத் தமிழர்களுக்கு உண்டான இந்து வெறி இரண்டையும் பயன்படுத்தி ஆர். எஸ்.எஸ். பிஜேபி இலங்கைத் தமிழர்கள் மூலமாக ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது? அவர்கள் ஆட்சியைப் பிடிக்க தடையாக இருக்கும் ஒரே தலைவர் ராஜீவ் தான். மகாத்மாவைக் கொன்றவர்கள் ஏன் ராஜீவைக் கொன்றிருக்கக்கூடாது?

29. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் ஸ்ரீபெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தினார்? தன்னை அறியாமல் சிக்கி ராஜீவ் மரணப்படுக்கையில் விழக் காரணமாகி விட்டாரா?

30. யார் இந்த பொட்டு அம்மான்? இப்படி ஒரு நபர் இருக்கிறாரா? அம்மான் ஒரு மூத்த தலைவர். ஒரு போரில் இறந்துவிட்டார். பொட்டு மட்டுமே உள்ளார் என்கிறது எல்.டி.டி.ஈ. வட்டாரம். உயிருடன் இல்லாத ஒரு நபரை எப்படி இரண்டாவது குற்றவாளியாக புலனாய்வுத்துறை முத்திரை குத்தியது?

31. பத்மநாபா கொலை வழக்கையும், இந்த வழக்கையும் ஒப்பிட்டால் பல உண்மைகள் வெளிவருகின்றன. தமிழ்நாடு காவல்துறையின் 'க்யூ' பிராஞ்ச்,பத்மநாபா வழக்கை விசாரித்தது. விசேஷப் புலனாய்வுத்துறை, ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்தது. இரண்டு விசாரணை அமைப்புகளும் சதி நடந்த இடம் யாழ்ப்பாணம் என்கின்றன. பத்மநாபா வழக்கில் குற்றவாளிகளில் சிவராசன். ராஜீவ் வழக்கில் அவர் முக்கிய குற்றவாளி. அப்படியானால் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகக் கருதப்பட்ட பிரபாகரன் பத்மநாபா வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை? ஆகவே பிரபாகரன் பெயரை நுழைப்பது அரசியல் முடிவே தவிர விசாரணையினால் கிடைத்த தெளிவே அல்ல. கடும் உள்நோக்கத்துடன் வழக்கிற்கு உயிர்கொடுக்க புலனாய்வுத்துறை செய்த முயற்சி இது.

32. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி. ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? 'ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை' என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன் கொலை செய்ய வேண்டும்?

33. இந்தியா மற்றும் தமிழகத்தில் தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையா பிரபாகரன் செய்தார்?

34. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?

35. ஸ்ரீபெம்புதூருக்கு செல்லும் முன் இரண்டு தெருமுனைக் கூட்டங்களில் பேசினார் ராஜீவ். அந்தக் கூட்டங்களில் மேடை வரை உடன் வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் ஏன் தொலை தூரம் தள்ளிப்போனார்?

36. அப்பாவிப் பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ராஜீவுடன் உயிரிழந்தார்கள். ஆனால் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் இலேசான காயம் கூட இல்லையே. அது ஏன்?

37. தணு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்பட வில்லை?

38. பிரபாகரன், சிவராசன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய படத்தை வைத்துக் கொண்டு பிரபாகரனுக்கு இதில் தொடர்பு உண்டு என்று எப்படிச் சொல்லலாம்?

39. தணு, சுபா, சிவராசன் மூவரும் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, மேற்கத்திய, ஐரோப்பா, இந்தியா கூலிப்படையின் கையாட்களாக ஏன் ஆகியிருக்கக்கூடாது?

40. மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?

41. சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி மூவருக்கும் இந்த வழக்கில் ஏதாவது தொடர்பு உண்டா என்கிற கோணத்தில் விசாரணை நடந்ததா?

42. புலிகள் இந்தக் கொலையை செய்ததின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த ஆதாயம் என்ன? அமெரிக்கா போன்ற மிகப் பெரிய வல்லரசுகள், சி.ஐ.ஏ. மூலமாக, ஏராளமான ஆயுத உதவிகளும் செய்து இந்தக் காரியத்தை செய்ய வைத்தார்களா?

43. யாரோ சிலரைப் பிடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.யும், விசேஷ புலனாய்வுத் துறையும் எதற்கு? தீர்ப்பு விரைவில் வெளிவரப் போகிறது. குறிப்பாக ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையைத் தொடர்ந்து சட்ட வல்லுநர்கள் இந்தத் தீர்ப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி பல கேள்விகள் சிறப்பு புலனாய்வுத் துறையின் விசாரணையைப் பற்றி எழுந்திருக்கிறது. கேள்விகள் எல்லாம் உண்மைகள் ஆகிவிடாது. ஆனால் பல சந்தேகங்கள் களையப்படாவிட்டால் உண்மைக் குற்றவாளிகள் பலம் வாய்ந்த சக்திகளுக்குப் பின்னால் ஒழிந்து கொண்டு விடுவார்கள். மறைந்து நிற்கும் அவர்களால் பலம் வாய்ந்த இந்திய தலைவக்களுக்குத் தான் ஆபத்து. விசேஷப் புலனாய்வுத் துறை விசாரித்ததா, அல்லது வெறும் விசாரணை அறிக்கை தயார் செய்ததா?' என்கிற பில்லியன் டாலர் கேள்விக்கான விடை நிச்சயம் ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரியவேண்டும்

நவம்பர் 19, 1997-ல் தமிழன் எக்ஸ்பிரசில் சுதாங்கன் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. அந்த கட்டுரை மீண்டும் உங்கள் பார்வைக்கு

ஏன் தமிழர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?



சிங்களர்கள் தமிழர்களை உயிரோடு கொளுத்தினார்கள், வெட்டினார்கள், கற்பழித்தார்கள், ஊனமாக்கினார்கள், அனாதைகளாக்கினார்கள், மனநோயாளிகளாக்கினார்கள், மண்ணைவிட்டு துரத்தி அடித்தார்கள், இந்தியப் பகுதியிலும் வந்து சுட்டுத் தள்ளினார்கள். கேட்க யாருமில்லை. போதாக்குறைக்கு இந்தி(க்கார) ராணுவமும் ஏராளமான நம் தமிழ் இளம் பெண்களையும், தாய்மார்களையும் வேட்டையாடி சீரழித்தது. கேட்க யாருமில்லை. காவிரிப் பிரச்னைக்காக நம் தமிழ் சகோதரர்களை கன்னடர்கள் அடித்தார்கள், வெட்டினார்கள், துரத்தினார்கள். கேட்க யாருமில்லை. உச்சநீதிமன்றத்தையே துச்சமாய் மதித்த அவர்களை எந்த மத்திய அரசும் ஒப்புக்குக்குக்கூட கண்டிக்கவில்லை. பாலாறுப் பிரச்னையை தமிழ்நாட்டில் பேசக்கூட ஆளில்லாமல் செய்துவிட்டார்கள். அக்கறைப்பட யாருமில்லை. கொத்துக்கொத்தாய் குண்டுபோட்டு சாகடித்தார்கள், கற்பழித்தார்கள். கேட்க யாருமில்லை. முன்பு முல்லைத்தீவு, இன்று முல்லைப்பெரியாறு. வழக்கு நடக்கும்போதே ஆய்வு செய்கிறார்கள் மலையாளிகள். உச்சநீதிமன்றத்தை துச்சமாய் மதிக்கும் இவர்களையும் எந்த மத்திய அரசும் ஒப்புக்குக்குக்கூட கண்டிக்கவில்லை. ஏனெனில் தமிழர்களுக்காக குரல் கொடுக்க யாருமேயில்லை... வெளியுறவு கன்னடன்களிடத்தில், ராணுவம் மலையாளிகளிடத்தில், ராஜபக்சேக்களுடன் கை குலுக்காமல் வேறென்ன செய்வார்கள். தமிழர்கள் கூட்டமாக அழியவேண்டுமென்பதையே செயல்திட்டமாக்கி திட்டமிட்டு தமிழ்நாட்டில் அணு உலையை நிறுவுகிறார்கள். கடந்த 35 ஆண்டுகளாக அமெரிக்காவில் அணு உலைகள் தொடங்கப்படவே இல்லை. இன்றும் தினந்தோறும் நம் தமிழ் இளம்பெண்களை சிங்கள ராணுவம் மிரட்டி மிரட்டி வன்புணர்வு செய்வதுமென இன்னும் எவ்வளவோ பிரச்னைகள். நமக்காக குரல் கொடுக்க ஒரு வலுவான தலைமை இல்லாததும், இலங்கைப் போரின் கோரமான முடிவும் எல்லா தமிழ் இளைஞர்கள் மற்றும் உணர்வாளர்கள் மத்தியிலும் ஒரு விரக்தியான தோல்வி மனப்பான்மையை விதைத்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும், நாட்டிலும் இப்படி ஒரு இன மக்களை அரசியல் கட்சிகளும் ஆட்சியாளர்களும் ராணுவமும் அனாதைகளாக விடவில்லை. அரசியல் கட்சிகளின் சம்பிரதாயமான போராட்டங்களும், முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகளின் பேச்சுகளும் இந்த உளவியல் ரீதியான உணர்வுகளுக்கு மருந்தாக முடியவில்லை. மொழியின் மீதும், மண்ணின் மீதும் அக்கறை கொண்ட ஒரு ஆண்மையான தலைமை தோன்றினாலொழிய இந்த தற்கொலைகள் இத்தோடு முடியப்போவது இல்லை. தற்கொலை செய்துகொள்கிறவர்கள் சில ஒன்றுக்கும் உதவா அறிவுஜீவிகள் விமர்சிப்பதைப்போல முட்டாள்கள் அல்ல. அவர்கள் எல்லோரையும்விட அதிகமாய் இந்தச் செய்திகளின் மேல் கவனம் வைக்கிறார்கள், அக்கறைப் படுகிறார்கள். உணர்வுள்ள இத்தமிழர்கள், தண்டகாரண்யப் பகுதிகளில் பிறந்திருந்தால் மாவோயிஸ்டுகளாகியிருப்பார்கள். இங்கே எதிர்ப்பை வெளிப்படுத்த வலுவில்லாத காரணத்தால் குற்ற உணர்ச்சியின் விரக்தியில் தங்களையே மாய்த்துக்கொள்கிறார்கள்.

1.2.14

ஆண்ட சாதி எது?

ஆதியில் வரலாற்றை ஆராய்ந்த குறுகிய மனப்பான்மைகொண்ட ஒவ்வொருவரும் அவரவர் சாதிக்கே தமிழர்களின் பழம்பெருமைகளை சொந்தமாக்கினர். பழைய தமிழக மன்னர்களில் பலரையும் இன்று பெரும்பான்மை என்று கூறிக்கொள்ளும் பல சாதியினரும் சொந்தம் கொண்டாடுவது இதன் விளைவே. "பெரும்பான்மையாக இருப்பவர்கள் ஆண்டிருப்பார்கள்" என்ற சமூக பொதுப்புத்தியே இவர்களின் பொய்யை சற்றும் சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்கிறது. அப்படியெனில் வந்தேறிகள் பலரும் இங்கே வந்து பலநூறு வருடங்கள் இந்த மண்ணை அடக்கி ஆண்டது எப்படி? பலநூறு வருடங்களாக இவர்களின் வீரம் என்னானது? இப்படி கூறிக்கொள்ளும் சாதியார்களின் வரலாற்று அறிவுதான் என்ன? சுல்தான்களும் மராட்டியர்களும் சாளுக்கியர்களும் விஜயநகர நாயக்கர்களும் இங்கே நம் மண்ணை நெடுங்காலமாய் அடக்கி ஆண்டபோது "ஆண்டசாதிகள்" / "பெரும்பான்மையினர்" / "வீரச்சாதி" என்று இன்று கூவிக்கொண்டிருப்பவர்கள் எல்லோரின் மூதாதையர்களும் அப்போது என்ன செய்துகொண்டிருந்தார்கள்? பலநூறு வருடங்களாய் பல வேற்று அரசப்படைகளுக்கும் அடியாள் வேலை பார்த்தவர்கள் யார்?

பெரும்பான்மை சமூகத்து இந்த வீரக்கொழுந்துகள்தான், அன்றைக்கு நம்மை ஆண்ட வேற்றுத் தலைமைகளுக்கெல்லாம் சிறந்த அடியாட்களாக இருந்திருக்கிறார்கள். தமிழர்களின் உண்மையான பண்பாடுகளை, நாகரிகங்களை மாற்றானின் தாக்கமின்றி முழுதாய் காக்க முடியாமல் அதைக் கூட்டியும் குறைத்தும் கழித்தும் சேர்த்தும் எதையெதையோ கலப்படம் செய்து தூக்கி சுமந்துகொண்டு இன்றுவரை சாதிப்பெயர்களிலும் அவ்வடிமைத்தனத்தை அடைகாக்கிறார்கள். 

இந்த சுயசாதிப்பெருமை மயக்கத்தால் இன்றைய அரசியல்வரையிலும் இத்தன்மை தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பதை ஆழ்ந்து யோசித்தால் புலப்படும் இன்னும் பல உண்மைகள்.

29.1.14

பெரியாரை தடைசெய்ய வேண்டுமா?

இஸ்லாமுக்கு எதிரான சல்மான் ருஷ்டியின் புத்தகங்கள் ஹிந்தியாவில் தடை செய்யப்பட்டதுபோல, ஹிந்து மதத்திற்கு எதிரான பெரியாரின் கருத்துக்களடங்கிய புத்தகங்களையும் தடை செய்யக்கோரி வழக்கு தொடரப்போவதாக தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஒரு "அப்பாவி தமிழ்க்காரனுக்கு" தெரிவித்திருந்த எனது பதில்...

முதலில் மாற்றுக்கருத்தாளர்களை வரவேற்று நிதானமான அறிவுடன் அலசுங்கள். அறிவுத்தேடலுடன் பெரியாரை அணுகிப்பாருங்கள். அவரது சிந்தனைக்குமுன் நீங்கள் பெரிதாய் நினைத்துக்கொண்டிருக்கிற எந்தவொருவரின் பிம்பமும் மிகவும் சிறியதாகிவிடும். நீங்கள் பெரியாரிஸ்டுகளைக் கொண்டு பெரியாரை அளந்துகொண்டிருக்கிறீர்கள். எல்லா புராணங்களையும் தெரிந்துகொண்டுதான் பிற்பாடு பெரியார் எதிர்த்தார். முதலில் பெரியாரை பாதியளவாவது தெரிந்துகொண்டு விமர்சியுங்கள்.

ஆபாசமான கதைகளையெல்லாம் புனிதம் என பொய்சொல்லி, பெரியாரின் ஒளி படாது மிச்சம் இருக்கிற சொச்சம் முட்டாள்களையும் அப்படியே இருக்கவைத்து, கடவுளையும் மதத்தையும் வாழ்நாள் மூலதனமாக்கி ஏமாற்றிப் பிழைக்கும் அதே கூட்டம் அரசியலுக்கும் அதை அப்படியே பயன்படுத்தி, மதத்தின் பெருமையென்று கண்டதையெல்லாம் சொல்லி ஏமாற்றும்போது அதே மதத்தின் கேவலமான கருமங்களையெல்லாம் சொல்லி கேள்வி எழுப்புவது எப்படி தவறானதாகும்?

சல்மான் ருஷ்டி என்ன சமூகப் போராளியா? சீர்திருத்தவாதியா? பெரியாருக்கிருந்த நோக்கம்தான் அவரது நோக்கமுமா? அடிப்படை புரிதலில்லாமல் மேலோட்டமாக ஒப்பிட்டு எழுதப்பட்ட பதிவு இது. ஒரு உண்மையான மதவாதி பெரியாரின் கேள்விகளுக்கு நியாயமான பதிலையே வழங்க முயலவேண்டும். அவரை மூடி மறைக்க முயலும் நோக்கம் ஒன்றே அவர் கருத்துக்களின் மீதான மதவாதிகளின் பயத்தைக் காட்டுகிறது. 

கடவுளையும் இந்து மதத்தையும் ஏன் எதிர்க்கிறேன்? என்ற அவரது விளக்கத்தை படித்து சிந்தியுங்கள். முகமது நபிகளையும் பயங்கரமாக விமர்சித்துள்ளார். தேடிப்படியுங்கள். இந்து மதத்தைத் தவிர உலகில் வேறெந்த மதத்தில் மனிதனை இழிவானவனென்றும், தீண்டத்தகுதியில்லாதவன் என்றும் ஒதுக்கிவைக்கிறார்கள்? ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்தும், அறிவியல் வளர்ந்தும், இன்னும் கட்டுக்கதைகளையே நம்பிக்கொண்டிருப்பதால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? இன்று இந்து மதத்தின் பேரால் வழங்கப்படும் பல விஷயங்கள் ஆதிகால தமிழர் சமய பண்பாடுகள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 

எல்லாவித கேள்விகளுக்கும் பெரியார் பதில் பேசியிருக்கிறார். கிணற்றுத்தவளைகளைப் போன்ற அறிவோடே இன்னும் அவரை கொஞ்சமும் தெரிந்துகொள்ள முயற்சிக்காமலே விமர்சித்துக்கொண்டிருப்பது என்ன நியாயம்?

நான் ஒரு இந்து. "பகவான் கிருஷ்ணர்" என் சாதியில் பிறந்ததாகச் சொல்கிறார்கள். நாங்கள் யாரும் பூணூல் அணிவதில்லை. அவருக்கு யார் போட்டது? எப்படி வந்தது? இந்துவாகிய நான் ஏன் நான் வணங்கும் கோயில் கருவறைக்குள் வரக்கூடாது?

வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் / மக்கள் மத்தியில் நல்லபடி வாழ்ந்து மறைந்தவர்கள் / இவர்களே தமிழர் பண்பாட்டில் தெய்வமாக வணங்கப்பட்டார்கள். வன்முறை / பாலியல் வன்முறை / துரோகம் / அகால மரணம் / குறை ஆயுள் / என பலதரப்பட்ட மரணங்களால் மாண்ட மக்களால் மதிக்கப்பட்ட நல்லோர்களே பிற்காலங்களில் கிராம காவல் தெய்வங்களாக்கப்பட்டார்கள். இதுவே தமிழர்களின் வழிபாட்டுமுறை. வரலாற்றை தெளிவாய் புரட்டுங்கள். தமிழர்களுக்கும் இந்து மதத்திற்கும் யாதொரு தொடர்புமேயில்லை.

பெரியார் மீதான எல்லா அரைகுறை பார்வைகளுக்கும் பதில் எப்போதோ பலராலும் வழங்கப்பட்டுவிட்டது. தேடிப்பாருங்கள்...

வேதங்களை படித்த இந்துக்கள் எத்தனைப்பேர்? உங்களுக்குப் பிடித்த அல்லது மனிதன் வாழ்க்கைக்கு மிகவும் உகந்த ஒரு சுலோகத்தை அதிலிருந்து சொல்லுங்களேன் பார்ப்போம். ஒரு இசுலாமியன் குர்ஆன் படிக்க நிர்பந்திக்கப்படுகிறான். ஒரு கிறித்தவன் பைபிளைப் படிக்க நிர்பந்திக்கப்படுகிறான். ஏன் ஒரு இந்து வேதங்களை படிக்க அனுமதிக்கப்படுவதில்லை? குப்பைகள் வெளியே தெரிந்துவிடும் என்பதாலா?

எனக்கு சோதிடக் கணக்குகள் ஓரளவுக்குத் தெரியும். வானவியலுடன் ஒத்துப்போகும் அதன் சில உண்மையும், அதில் இந்து மதம் கலந்த பொய்யையும் தெளிவாய் விளக்குவேன். 10 வருடங்களுக்கு முன்பு தீவிர ஆன்மீகவாதியாக இருந்தவன். பெரும்பாலான வட ஹிந்திய புண்ணியஸ்தலங்களுக்குப் போயிருக்கிறேன், ஜம்முவின் வைஷ்ணவிதேவி மாதா கோயில் உட்பட. எங்கள் கிராமத்தில் ஆர் எஸ் எஸ் ஷாகா வகுப்பை துவங்கினேன். ஹிந்து மதத்தில் எல்லா புராணக்குப்பைகளையும் படித்திருக்கிறேன். ஒருமுறை பெரியாரை ஆழ்ந்து வாசித்தேன். கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்ததெல்லாம் எவ்வளவு முட்டாள்தனமாய் ஏமாற்றப்படுகிறது என்று பலவற்றிலும் கேள்வி எழுப்பிக்கொண்டேன். ஹிந்து மதம் இருக்கிறவரையில் பெரியாரும் இருப்பார் என்பது எந்தக்கொம்பனாலும் மறுக்க முடியாத உண்மை.

இந்த மதவாதிகளில் பெரும்பான்மையோர் ஹிந்திக்கு பல்லக்கு பிடிக்கிறவர்களாகவே இருக்கிறார்கள். உங்கள் தாய் ஏதேனும் பலவீனமாக இருந்தால் முதலில் அதை பலப்படுத்த முயலுங்கள். உங்களுக்கு தேவையென்றால் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளுங்கள். இதனால் மற்றவன் உங்களை அடிமைப்படுத்த முயலும்போது எதிர்த்து நில்லுங்கள். உங்கள் பார்வையை மாற்றுங்கள். தமிழைவிட எந்தவிதத்திலும் ஹிந்தியும் சமஸ்கிருதமும் மேலானதல்ல. எனக்குத் தேவைப்பட்டபோது ஹிந்தி எழுதப்படிக்க கற்றுக்கொண்டேன். அது வெகு சுலபமானது. இவ்வாறே தேவை ஏற்படின் தெலுகு, மலையாளமும் கற்பேன். ஆனால் இந்த மண்ணில் ஒருபோதும் வேற்று மொழி திணிப்பை ஏற்க மாட்டேன். உலகில் 5 நாடுகளில் தமிழ் ஆட்சி மொழி என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஹிந்தி படித்தால் வேலை கிடைக்குமென்றால் பானிபூரி, பஞ்சு மிட்டாய், பேல்பூரி விற்க இங்கே வருபவர்கள் யார்? உங்கள் தாய்மொழியை பலப்படுத்துங்கள். ஒருபோதும் முட்டாள்களின் மொழி வாதத்திற்கு துணை நில்லாதீர்...

"நாத்திகம்" என்பது இந்தியர்களை, இந்துக்களை இழிவுப்படுத்த, ஆங்கிலேய கைக்கூலிகள் இந்தியாவுக்கு கொண்டுவந்த நடைமுறை - என எச்ச. ராஜா (பிஜேபி) சொல்கிறார். உண்மை என்னவெனில் "ஆத்திகம்" என்பது தமிழர்களை, அவர்கள்தம் வாழ்ந்து மறைந்த முன்னோர் (கிராம தெய்வங்கள்) வழிபாட்டு முறையை இழிவுபடுத்த, வந்தேறி (எச்ச.ராஜா முன்னோர்) கைக்கூலிகளால் தமிழ்மண்ணில் திணிக்கப்பட்ட நடைமுறை....