1.2.14

ஆண்ட சாதி எது?

ஆதியில் வரலாற்றை ஆராய்ந்த குறுகிய மனப்பான்மைகொண்ட ஒவ்வொருவரும் அவரவர் சாதிக்கே தமிழர்களின் பழம்பெருமைகளை சொந்தமாக்கினர். பழைய தமிழக மன்னர்களில் பலரையும் இன்று பெரும்பான்மை என்று கூறிக்கொள்ளும் பல சாதியினரும் சொந்தம் கொண்டாடுவது இதன் விளைவே. "பெரும்பான்மையாக இருப்பவர்கள் ஆண்டிருப்பார்கள்" என்ற சமூக பொதுப்புத்தியே இவர்களின் பொய்யை சற்றும் சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்கிறது. அப்படியெனில் வந்தேறிகள் பலரும் இங்கே வந்து பலநூறு வருடங்கள் இந்த மண்ணை அடக்கி ஆண்டது எப்படி? பலநூறு வருடங்களாக இவர்களின் வீரம் என்னானது? இப்படி கூறிக்கொள்ளும் சாதியார்களின் வரலாற்று அறிவுதான் என்ன? சுல்தான்களும் மராட்டியர்களும் சாளுக்கியர்களும் விஜயநகர நாயக்கர்களும் இங்கே நம் மண்ணை நெடுங்காலமாய் அடக்கி ஆண்டபோது "ஆண்டசாதிகள்" / "பெரும்பான்மையினர்" / "வீரச்சாதி" என்று இன்று கூவிக்கொண்டிருப்பவர்கள் எல்லோரின் மூதாதையர்களும் அப்போது என்ன செய்துகொண்டிருந்தார்கள்? பலநூறு வருடங்களாய் பல வேற்று அரசப்படைகளுக்கும் அடியாள் வேலை பார்த்தவர்கள் யார்?

பெரும்பான்மை சமூகத்து இந்த வீரக்கொழுந்துகள்தான், அன்றைக்கு நம்மை ஆண்ட வேற்றுத் தலைமைகளுக்கெல்லாம் சிறந்த அடியாட்களாக இருந்திருக்கிறார்கள். தமிழர்களின் உண்மையான பண்பாடுகளை, நாகரிகங்களை மாற்றானின் தாக்கமின்றி முழுதாய் காக்க முடியாமல் அதைக் கூட்டியும் குறைத்தும் கழித்தும் சேர்த்தும் எதையெதையோ கலப்படம் செய்து தூக்கி சுமந்துகொண்டு இன்றுவரை சாதிப்பெயர்களிலும் அவ்வடிமைத்தனத்தை அடைகாக்கிறார்கள். 

இந்த சுயசாதிப்பெருமை மயக்கத்தால் இன்றைய அரசியல்வரையிலும் இத்தன்மை தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பதை ஆழ்ந்து யோசித்தால் புலப்படும் இன்னும் பல உண்மைகள்.

No comments:

Post a Comment