2.2.14

ஏன் தமிழர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?



சிங்களர்கள் தமிழர்களை உயிரோடு கொளுத்தினார்கள், வெட்டினார்கள், கற்பழித்தார்கள், ஊனமாக்கினார்கள், அனாதைகளாக்கினார்கள், மனநோயாளிகளாக்கினார்கள், மண்ணைவிட்டு துரத்தி அடித்தார்கள், இந்தியப் பகுதியிலும் வந்து சுட்டுத் தள்ளினார்கள். கேட்க யாருமில்லை. போதாக்குறைக்கு இந்தி(க்கார) ராணுவமும் ஏராளமான நம் தமிழ் இளம் பெண்களையும், தாய்மார்களையும் வேட்டையாடி சீரழித்தது. கேட்க யாருமில்லை. காவிரிப் பிரச்னைக்காக நம் தமிழ் சகோதரர்களை கன்னடர்கள் அடித்தார்கள், வெட்டினார்கள், துரத்தினார்கள். கேட்க யாருமில்லை. உச்சநீதிமன்றத்தையே துச்சமாய் மதித்த அவர்களை எந்த மத்திய அரசும் ஒப்புக்குக்குக்கூட கண்டிக்கவில்லை. பாலாறுப் பிரச்னையை தமிழ்நாட்டில் பேசக்கூட ஆளில்லாமல் செய்துவிட்டார்கள். அக்கறைப்பட யாருமில்லை. கொத்துக்கொத்தாய் குண்டுபோட்டு சாகடித்தார்கள், கற்பழித்தார்கள். கேட்க யாருமில்லை. முன்பு முல்லைத்தீவு, இன்று முல்லைப்பெரியாறு. வழக்கு நடக்கும்போதே ஆய்வு செய்கிறார்கள் மலையாளிகள். உச்சநீதிமன்றத்தை துச்சமாய் மதிக்கும் இவர்களையும் எந்த மத்திய அரசும் ஒப்புக்குக்குக்கூட கண்டிக்கவில்லை. ஏனெனில் தமிழர்களுக்காக குரல் கொடுக்க யாருமேயில்லை... வெளியுறவு கன்னடன்களிடத்தில், ராணுவம் மலையாளிகளிடத்தில், ராஜபக்சேக்களுடன் கை குலுக்காமல் வேறென்ன செய்வார்கள். தமிழர்கள் கூட்டமாக அழியவேண்டுமென்பதையே செயல்திட்டமாக்கி திட்டமிட்டு தமிழ்நாட்டில் அணு உலையை நிறுவுகிறார்கள். கடந்த 35 ஆண்டுகளாக அமெரிக்காவில் அணு உலைகள் தொடங்கப்படவே இல்லை. இன்றும் தினந்தோறும் நம் தமிழ் இளம்பெண்களை சிங்கள ராணுவம் மிரட்டி மிரட்டி வன்புணர்வு செய்வதுமென இன்னும் எவ்வளவோ பிரச்னைகள். நமக்காக குரல் கொடுக்க ஒரு வலுவான தலைமை இல்லாததும், இலங்கைப் போரின் கோரமான முடிவும் எல்லா தமிழ் இளைஞர்கள் மற்றும் உணர்வாளர்கள் மத்தியிலும் ஒரு விரக்தியான தோல்வி மனப்பான்மையை விதைத்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும், நாட்டிலும் இப்படி ஒரு இன மக்களை அரசியல் கட்சிகளும் ஆட்சியாளர்களும் ராணுவமும் அனாதைகளாக விடவில்லை. அரசியல் கட்சிகளின் சம்பிரதாயமான போராட்டங்களும், முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகளின் பேச்சுகளும் இந்த உளவியல் ரீதியான உணர்வுகளுக்கு மருந்தாக முடியவில்லை. மொழியின் மீதும், மண்ணின் மீதும் அக்கறை கொண்ட ஒரு ஆண்மையான தலைமை தோன்றினாலொழிய இந்த தற்கொலைகள் இத்தோடு முடியப்போவது இல்லை. தற்கொலை செய்துகொள்கிறவர்கள் சில ஒன்றுக்கும் உதவா அறிவுஜீவிகள் விமர்சிப்பதைப்போல முட்டாள்கள் அல்ல. அவர்கள் எல்லோரையும்விட அதிகமாய் இந்தச் செய்திகளின் மேல் கவனம் வைக்கிறார்கள், அக்கறைப் படுகிறார்கள். உணர்வுள்ள இத்தமிழர்கள், தண்டகாரண்யப் பகுதிகளில் பிறந்திருந்தால் மாவோயிஸ்டுகளாகியிருப்பார்கள். இங்கே எதிர்ப்பை வெளிப்படுத்த வலுவில்லாத காரணத்தால் குற்ற உணர்ச்சியின் விரக்தியில் தங்களையே மாய்த்துக்கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment