2.2.14

என்னுடைய அப்பா மதிப்பிற்குரிய மாசிலாமணி அவர்கள்....

 

வெறும் மூன்று மாடுகளை மட்டுமே வைத்துக்கொண்டு, அதன் வரும்படியில் நான்கு குழந்தைகளை படிக்க வைத்து, எங்களுக்கு அறிவையும் கல்வியையும் மட்டுமே சொத்தாய் வைத்துச் சென்ற எம் தந்தையார் "து.மாசிலாமணி" அவர்களின் நினைவு நாள் இன்று. 12 வருடங்களுக்கு முன்னர் 20-11-2000 அன்று காலை 7:30 மணியளவில் உயிர் நீத்தார். இதே நவம்பர் மாதத்தில், மூன்று வருடங்களுக்கு முன்னர் 01-11-2009 அன்று எம் தாயார் ஆதிலட்சுமி அவர்களும் உடல்நலமின்றி இறந்துபோனார்.

இந்த நாளில் கண்ணீரோடு எம் தாய்,தந்தையரை எண்ணிப் பார்க்கிறேன்.

எங்கள் கிராமத்தில், எங்கள் சமூக மக்களின் எல்லா பிரச்சனைகளும் எம் தந்தையிடம் பஞ்சாயத்துக்கு வரும். பெரிய படிப்போ, வசதியோ ஒன்றுமில்லை. அந்தக்காலத்து ஆறாம் வகுப்பு. அம்மாவுக்கு படிப்பு வாசனையே கிடையாது. மிக மிக கண்டிப்பானவர். சிறு தவறு என்றாலும்கூட பயங்கரமாக கோபப்படுவார். இன்றைக்கும்கூட எங்கள் கிராமத்தில் பலர், "உங்கப்பா இருந்திருந்தா இந்தப் பிரச்சனை எப்பவோ தீர்ந்திருக்கும்" என்று பலர் பேசும்போது கண்ணீரோடு நினைத்துப் பார்ப்பேன். மாசிலாமணிப் பசங்க என்று எங்கள் ஊரில் பிறர் சொல்வதுதான் எங்களுக்கு இன்றும் பெருமையாக இருக்கிறது. தம்பியின் கல்யாணத்தின் போது வெளியூர் உறவுக்காரர்களுக்கெல்லாம் நான்தான் பத்திரிகை கொடுக்கச் சென்றேன். அவரவர்களின் பல பிரச்சனைகளையும் தீர்க்கக்கூட என் அப்பா உதவியிருப்பது அவர்கள் சொல்லித்தான் எனக்கு தெரியவந்தது. என் 19 வயதில் இறந்துபோன என் அப்பாவிடமிருந்து நான் கற்றுக்கொண்டது என் எளிமையும், நேர்மையும்.

அண்ணன் மிலிட்டரி எஞ்சினியர். தம்பி Msc MTech முடித்து சிங்கப்பூரில் வேலைபார்க்கிறான். நான் சினிமாவுக்கு வந்து........

என் தந்தை எனக்கு கடைசியாக எழுதிய கடிதத்தை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அதில் என்னைப்பற்றிய கவலைகளே அவருக்கு அதிகமிருக்கிறது. ரத்தப் புற்றுநோய் வந்து மருத்துவம் பார்க்க வசதியின்றி கடன் பிரச்சனைகளின் கவலைகளாலும் சுழன்ற அவரின் கடைசிக்காலத்தில் என்னைப் பற்றிய கவலைகளும் கொன்றிருக்கிறது.

என் தந்தையின் சாயலில் யாரையாவது எங்கேயாவது பார்த்தால் ஒரு கணம் பெருத்த அமைதியடைவேன். எனக்காக கவலைப்பட்ட அவருக்காக நான் எதுவுமே செய்யவில்லை, இன்று வரையிலும் கூட. இப்போதைக்கு எங்கள் கிராமத்தில் நடக்கும் நாலு நல்லது கெட்டதுகளில் பங்கெடுக்கும் குடும்பங்களில் நாங்களும் ஒன்றாய் இருப்பதுதான் அவர் வாழ்க்கைக்கு நாங்கள் செய்த மரியாதை.

எதிர்காலத்தில் என் பெற்றோர் பெயரில் என் சொந்த பணத்தில் பலருக்கு படிக்கவும், தொழில்செய்ய உதவியும் செய்யவேண்டுமென்பதே என் கனவில் இருக்கிறது. கண்டிப்பாக இது நடக்குமென்றே நம்புகிறேன்...

No comments:

Post a Comment