12.3.19

நீட் இல்லாத கல்வி தரமற்றதா?

'12 x 10 = 120 என்று சமச்சீர் கல்வி மாணவர்கள் படித்திருப்பார்கள்.

அதே கணக்கை நீட் தேர்வில்,

0.12 x 10 = ?
0.12 x 0.01 =?
120 / 0.012 =?

என்று கேட்பார்கள். மேலே இருக்கும் கணக்கு 12 x 10 = 120 நேரடியானது.

கீழே கேட்டிருக்கும் கணக்குகள் கொஞ்சம் சுற்றிவிடுவது. மேலே இருக்கும் கணக்குத் தெரிந்தவர்களுக்குக் கீழே இருக்கும் கணக்குத் தெரியாது என்றில்லை. அந்தப் பயிற்சியை அவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள். இந்தக் கீழே உள்ள கணக்கைத்தான் மற்றவர்கள் தரம் தரம் என்கிறார்கள்.

மேலே உள்ள கணக்கைப் புரிந்து கொள்வது அடிப்படை அறிவாகும். கீழே இருக்கும் கணக்கைப் போடுவது ஒரு பயிற்சிதான்.

முதலில் உள்ள கணக்கான 12 x 10 = 120 என்பதைப் புரிந்து கொள்வதுதான் முக்கியம். அதுதான் அடிப்படை.

அந்த அடிப்படையைச் சமச்சீர் கல்விப் புத்தகங்கள் தேவைக்கு அதிகமாகவே கற்றுக் கொடுக்கின்றன.

கீழே உள்ள பயிற்சிமுறை இருக்கிறது பாருங்கள். அதாவது,

0.12 x 10 =?
0.12 x 0.01 =?
120 / 0.012 =?

என்று இருக்கிறதல்லவா? இது மாதிரி கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். யார் ஒருவனையும் இதை வைத்துத் திணறடிக்கலாம்.

பிளஸ் டூ ஃபிஸிக்ஸ் மற்றும் சமச்சீர் கெமிஸ்டரி புத்தகங்களை எடுத்துப் பாருங்கள். இரண்டுமே தலா 500 பக்கங்கள் இருக்கின்றன. சி.பி.எஸ்.ஸி பாடத்தில் உள்ள அனைத்து பாடங்களும் சமச்சீரிலும் இருக்கின்றன.

இவர்களுக்கும் 'நீட்'டுக்கும் உள்ள வித்தியாசம் 'நீட்'டுக்குள்ள பிரத்யோக பயிற்சிதான்.

நீட் தேர்வு இருக்கும் பட்சத்தில் ஒரு மாணவன் அவன் பாடப்புத்தகங்களையும் படிக்க வேண்டும். அதே சமயம் இந்த நீட் பயிற்சியையும் எடுக்க வேண்டும்.

Objective type என்ற choose the best answer வகைக் கேள்விகளுக்கு... அதாவது, நான்கு விடைகளைக் கொடுத்து அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் முறைப் படிப்புக்கு, கடைசிப் பத்து வருட கேள்வித் தாள்கள் இருந்தால் போதும்.

நான் பிளஸ் டூ படிக்கும்போது நுழைவுத் தேர்வு உண்டு. ஒரு கேள்விக்குப் பதில் தெரியாவிட்டால் நான் புத்தகத்தை எடுத்து விளக்கமாகப் படிக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் மற்றவர்கள், இந்தக் கேள்விக்கு இது விடை என்றுதான் படிப்பார்கள். அதுதான் அத்தேர்வுகளை crack செய்யும் முறையும் கூட.

ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

Distillation Process என்று ஒன்று இருக்கிறது. ஒரு குடுவையில் நீரை வைத்து கீழே சூடாக்கினால் அது நீராவியாகி ஒரு குழாய் வழியே போகும். அப்படிப் போகையில் குழாயை குளிர வைக்கும்போது, அது குழாயின் மறுமுனையில் இருக்கும் பாத்திரத்தில் கிருமியில்லாத நன்னீராகச் சென்று விழும்.

இந்தக் கேள்வியை descriptiveவாக, அதாவது நம் பிளஸ் டூ தேர்வு முறையில் எழுதச் சொன்னால் ஒரு மாணவி என்ன செய்வாள்?

பென்சில் ஸ்கேல் வைத்து அதற்கொரு படம் போடுவாள். அதைக் குறிப்பாள். அதற்கான விடை எழுதுவாள். இப்படிச் செய்யும்போது அவள் அடிப்படை அறிவு விரிவடையும் வரும்.

இதே உதாரணத்தில் objective type கேள்வி கேட்டால் எப்படிக் கேட்க முடியும்?

Distillation Processஇல் என்ன நடக்கிறது?
a. திரவம் வாயுவாகிறது.
b. வாயு திரவமாகிறது.
c. வாயுவான திரவம் திரவமாகிறது.
b. மூன்றும் இல்லை.

இங்கே கவனியுங்கள். மேலே descriptiveவாக distillation processஐ நன்றாகப் புரிந்து கொண்டவர்கள் கூட, கீழே உள்ள இந்த objective type தந்திரத்தில் குழம்பி விடுவார்கள்.

இதற்குச் சரியான விடையான 'வாயுவான திரவம் திரவமாகிறது' என்ற விடையைச் சட்டென்று அவர்களால் அடையாளம் காணமுடியாது. உடனே அக்குழந்தைக்கு distillation process தெரியாது என்று அர்த்தமல்ல.

அதே சமயம் நீட் தேர்வுக்கென்று பயிற்சி எடுத்த மாணவி இக்கேள்வி patternஇல் நிறையக் கேள்விகளைப் பார்த்து வரும்போது அவள் சட்டென்று பதில் எழுதிவிடுவாள். அதில் மார்க் எடுக்கும்போது அவள் அறிவாளி என்பது மாதிரி ஆகிவிடுகிறது.

ஒருவேளை choose the best answer இல்லாமல் விரித்து எழுதும் தேர்வு இருந்தால், தமிழக மாணவர்கள் நிச்சயம் பலரைவிட நன்றாகவே மிளிர்ந்திருப்பார்கள்.

உங்களுக்கு இப்போது கேள்வி வரலாம்.

நீட் தேர்வு என்பது objective type தந்திரம் என்கிறாய்... இந்தத் தந்திரத்தை தமிழ்நாடு அரசே சொல்லிக் கொடுத்து விடவேண்டியதுதானே என்று சந்தேகம் எழலாம்.

ஏன் இந்த objective type தந்திரம் நீட்டுக்கு அதரவு கொடுக்கக் கூடாதென்றால்...

1. Objective type தந்திரத்துக்கு எல்லையே கிடையாது. கேள்வி கேட்பவரின் அறிவு சைக்கோதனத்துக்கு ஏற்றால்போல் அதைச் சுற்றிச் சுற்றி கேட்கலாம். பிளஸ் டூ தமிழ்நாடு என்டிரன்ஸில், அண்ணா பல்கலைக்கழகக் கணித பேப்பர் அப்படித்தான் இருக்கும். அங்கேதான் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கணித வாத்தியார்கள் தங்கள் அறிவை மெனக்கெட்டு காட்டி சுற்றி சுற்றி கேள்வி கேட்டிருப்பார்கள். சரியான பயிற்சி எடுக்காத 80 சதவிகித கிராமப்புற மாணவர்களால் அதை நெருங்க கூட முடியாது. நான் ஒரு Mechnanical Engineer. என்னிடம் ஒரு நீட் கொஸ்டின் பேப்பர் எடுக்கச் சொன்னால் இந்தியாவில் எந்தப் பயிற்சி பள்ளியில் படித்தவனாலும் நல்ல மார்க் எடுக்க முடியாத கொஸ்டினை எடுக்க முடியும். இதைச் சவாலாகவே சொல்கிறேன்.

2. ஆக நீட் தேர்வு வருடா வருடம் போகப் போக இந்த objective type தந்திரம் கூடிக்கொண்டே போகும். மாணவர்கள் சப்ஜக்டை விரித்துப் படிப்பதில் இருந்து விலகி objective type ஸ்டைலிலேயே படிப்பார்கள். முற்றிலும் விஞ்ஞானத்தில் இருந்து விலகி இருப்பார்கள்.

3. கல்வியை ரசனையாக ரசித்துப் படிக்க முடியாத சூழல் வரும். Diagrams, figures சுத்தமாகப் படிக்க மாட்டார்கள். ஒரு படம் வரைவதையே மாணவன் கடுப்பாக நினைப்பான். எப்படிப் பிளஸ் டூ மாணவன் தமிழ் மனப்பாடப் பகுதியை படிக்காமல் இருக்கிறானோ அப்படி அவன் விரித்து எழுதுவதில் வந்து சேரும் அறிவை நிராகரிப்பான்.

4.நீட் தேர்வு பயிற்சி வகுப்பை கிராமப்புறத்துக்கு எடுத்துச் சென்று அது செட் ஆக எடுக்கும் நான்கு ஆண்டுகளில் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

5.Objective type விடைகளைத் திருத்த எளிது என்பதற்தாக அதை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் அது கேடான முறைதான்.

இதை ஏன் எழுதுகிறேன் என்றால், சமச்சீரில் நல்ல மார்க் எடுத்தவர்கள், நீட்டில் மார்க் குறைவு என்றதும், சமச்சீரில் தரமில்லை என்று உங்கள் மூளை நினைத்துவிடக் கூடாதே என்று சொல்கிறேன்.

சமச்சீர் சரியில்லை என்று சமச்சீர் எடுக்கும் ஆசிரியர்களே நினைத்து விடக் கூடாதே என்று எழுதுகிறேன்.

இதையெல்லாம் தாண்டி அனிதாவின் மனதை நினைத்து நேற்றிரவு ஒருமாதிரி இருந்தது.

நீட் தேர்வு எழுதி வரும்போது அந்தப் பிள்ளைக்கு 'நாம அறிவுல குறைந்துவிட்டோமோ, நல்லா எழுதலியே' என்று கலங்கியிருக்கும் பாருங்கள். நீட் மார்க் வரும்போது அவளுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை வந்திருக்கும் பாருங்கள். அந்த விநாடி அனிதாவின் மனதைப் பாருங்கள். எப்படி அவள் மனது பிசைந்திருக்கும்.

ஒரு திறமைசாலியை ஒரு தந்திரத்தைக் காட்டி 'நீ திறமைசாலி இல்லை... புத்திசாலி இல்லை...' என்று பொய்யாக நிருபித்து , அவளையே 'நாம் சரியில்லையோ' என்று நினைக்க வைப்பது எவ்வளவு பெரிய கொடுமை.

அனிதாவின் மனம் நடுங்கிருக்கும்தானே...

பெருமூச்சு...'
 
- Vijay Bhaskarvijay
 
செப்டம்பர் 02, 2017
 
 

No comments:

Post a Comment