11.2.14

பாடகர் மாணிக்க விநாயகம் அவர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம்...

இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய தமிழீழப் பகுதியில் பன்னெடுங்காலமாக வாழ்ந்துவரும் தமிழர்கள் மீது இனவெறி பிடித்த இலங்கை அரசு பல்வேறு வகைகளில் சொல்லொணா அடக்குமுறைகளை ஏவி இலங்கையிலிருந்து தமிழர்கள் அனைவரையும் முற்றிலுமாக அழிக்கும் வண்ணம் செயல்பட்டு வருவதுயாவும் இவ்வுலகம் அறிந்ததே. அதன் உச்சகட்டமாக 2009 ஆண்டு போர் என்ற பெயரில் குழந்தைகளென்றும், பெண்களென்றும், வயதானவர்களென்றும், நோயாளிகளென்றும் பாராமல் ஈவிரக்கமின்றி சுமார் 2 லட்சம் தமிழர்களையும் அவர்கள்தம் இருப்பிடங்களையும் அழித்தொழித்தது. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட இந்த இனப்படுகொலையின் பின்னனியில் காந்தி தேசம் என்று தம்மை உலகில் அடையாளப்படுத்திக்கொள்ளும் இந்தியாவும் செயல்பட்டதை அறிந்து இந்த நாட்டை எமது நாடென்று நம்பிக்கொண்டிருக்கும் ஏழு கோடி தமிழர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தோம்.

12 வயது சிறுவன் பாலச்சந்திரனின் படுகொலையைக் கண்டு கொந்தளித்து உலகத் தமிழர்களும், தமிழக அனைத்து மாணவ மாணவியர்களும், தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்களும், தமிழக அரசும் ஓரணியில் நின்று தமிழ்நாட்டில் சிங்கள விளையாட்டு வீர்ர்கள் விளையாடக்கூடாதென்றும், இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாதென்றும், இனப்படுகொலைக்கு நீதி வேண்டியும், தனித் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரியும் போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இம்மாதிரியான போராட்டங்களை வலுவிழக்கச்செய்யும் நோக்கில் இலங்கையில் சகஜநிலை திரும்பிவிட்டதாக ஒட்டுமொத்த உலகையும் ஏமாற்ற தான் போடும் நாடகங்களுக்கு பணத்தாசை பிடித்த சுயநல தமிழர்களையே பகடைகாய்களாக்கி பயன்படுத்தி வருகிறது இனவெறி இலங்கை அரசு. ஓராயிரம் இந்துக்கோவில்களுக்குமேல் இடித்து தரைமட்டமாக்கி மக்களின் மத உரிமையில்கூட இனவெறியை உமிழும் இலங்கை, தற்போது அம்மாதிரியான ஒட்டு வேலைக்கு தமிழீழப்பகுதியான வவுனியாவில் சில தமிழ் துரோகக் குழுக்களால் நடத்தப்பெறும் ஒரு அம்மன் கோவில் விழாவிற்கு சென்று நிகழ்ச்சி நடத்த தமிழகத்தைச் சார்ந்த பிரபல பின்னனி பாடகரான “மாணிக்க விநாயகம்” அவர்கள் செல்லவிருக்கும் செய்தியை அறிந்து உணர்வுள்ள உலகத் தமிழர்கள் அனைவரும் பெரும் வருத்தமடைகிறோம். இலங்கைக்கெதிராக மதுரையில் சாதாரண மேடைக் கலைஞர்கள் வெளிப்படுத்திய தமிழ் உணர்வும், தமிழ்த் திரையுலகம் காட்டிய எதிர்ப்புணர்வும் திரு.மாணிக்க விநாயகம் அவர்களுக்கும் இருக்குமென்று உறுதியாக நம்புகிறோம். உலக அரங்கில் தனிமைப்பட்டு நிற்கும் இலங்கைக்கு ஒத்தூதும் இம்மாதிரியான செயல்களில் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் கலைஞர்கள் பங்கேற்பது தமிழக அரசையும், தமிழக மாணவர்களையும், ஒட்டுமொத்த உலகத் தமிழர்கள் அனைவரையும் அவமானப்படுத்துவதோடு மட்டுமன்றி அவர்களின் இதயத்தில் ஈட்டி பாய்ச்சுவதற்கு ஒப்பாகும். திரு.மாணிக்க விநாயகம் அவர்கள் சானல்-4 தொலைக்காட்சி ஆவணங்களைக் கண்டிருப்பார் என்றும், அவர் உணர்விலும் தமிழராகத்தான் இருப்பார் என்றும் உறுதியாக நம்புகிறோம். எனவே தெரிந்தோ தெரியாமலோ உலகை ஏமாற்றும் இலங்கையின் நிகழ்ச்சி நிரலுக்கு பகடையாகும் இப்பயணத்தை திரு.மாணிக்க விநாயகம் அவர்கள் ரத்து செய்யவேண்டுமென்றும், இனி எதிர்காலத்திலும் இம்மாதிரியான தமிழர் விரோத / துரோக நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கக்கூடாதென்றும் உணர்வுள்ள உலகத் தமிழர்களின் சார்பாகவும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.
        
                      இவண்
           கரு.அண்ணாமலை,
                                               வடக்கு மண்டல அமைப்பாளர்,
                                             தந்தை பெரியார் திராவிடர் கழகம்.

No comments:

Post a Comment