(வழக்கறிஞர் துரைசாமி, விகடன் வெளியீடு, விலை ரூ. 115/-)
இன்று இப்புத்தகத்தை படித்தேன். இப்புத்தக ஆசிரியர் வழக்கறிஞர் திரு. S.துரைசாமி அவர்கள் தன் இளம் பருவத்தில் தந்தை பெரியார் அவர்களுக்காகவும் வழக்காடியுள்ளார். ராஜிவ் கொலை வழக்கில் பொய் குற்றம் சுமத்தப்பட்ட அப்பாவி நிரபராதிகள் 26 பேரில் 19 பேரை 8 ஆண்டுகள் வழக்காடி விடுதலை பெற்றுத் தந்தவரும் இவரே.
இந்த வழக்கு நடத்தப்பட்ட விதத்தையும், சாட்சிகளாக விசாரிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களையும் கவனிக்கும்போது, இதெல்லாம் CBI -ன் கையாலாகதத்தனமா? இல்லை வேண்டுமென்றே உண்மையான குற்றவாளிகளை மறைத்து தப்பிக்க வைக்க CBI செயல்பட்டுள்ளதா எனவும் யோசிக்கவைக்கிறது.
அனைத்து சாட்சிகளின் வாக்குமூலங்களும் இப்புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. சிறிதும் தொடர்பே இல்லாதவர்களும் இக்கொலை வழக்குடன் இணைக்கப்பட்ட விதம், இந்த நாட்டில் மக்களாட்சிதான் உண்மையாக நடந்துகொண்டிருக்கிறதா என்றும் சட்டத்தை காப்பாற்றுவதாக சொல்லிக்கொண்டிருக்கும் இந்நாட்டு காவற்துறையும் நீதிமன்றமும் வலுவுள்ளவர்களுக்கு அடியாள் வேலையும் சேர்த்தே பார்த்துக் கொண்டிருக்கிறதோ என்றும் நம்மை அச்சப்படுத்துகிறது.
சாதி பலமோ, அரசியல் பலமோ, பண பலமோ, அதிகார பலமோ இல்லாமல் இனி உலகில்; குறிப்பாக இந்தியாவில் வாழமுடியாது என்ற நிலைமைக்கு இந்த நாடு மாறி நெடுங்காலமாகிவிட்டது போலும்.
இந்த ராஜீவ் கொலை வழக்கும் அதில் 8 ஆண்டுகள் கடுமையான சிறைவாசம் அனுபவித்துவிட்டு பிறகு வெளியே வந்து மன உளைச்சலாலும் நோயாலும் இறந்துபோன அப்பாவிகளின் மரணத்திற்கும், குடும்பத்திற்கும், இழப்பீடாய் CBI-யும் இந்த நீதித்துறையும் என்ன தந்தது? தந்துவிடப்போகிறது?
வலுவில்லாதவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சட்டத்தின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி சீரழியும் நிலையில்தான் தற்போதைய நடைமுறைகள் இருந்துகொண்டிருப்பதே நிதர்சனம். உண்மையில் அரசால் பாதிக்கப்படும் ஒரு சாமானியன் தன்னை குற்றமற்றவன் என்று நிரூபிக்கும் நடைமுறை அவ்வளவு எளிமையாய் இருக்கிறதா?
ஆங்கிலேயனின் ஆட்சியில் இயற்றப்பட்ட பல கொடுமையான சட்டங்களைவிடவும் இன்றைய நடைமுறை சட்டங்கள் மிக மோசமானதாக உள்ளது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஒப்பிட்டால் வெள்ளைக்காரனே பல சட்டங்களில் மனித உரிமைகளை கடைப்பிடித்திருக்கிறான் என்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. உதாரணம் ரௌலட் சட்ட எதிர்ப்பும், பின்னான மிசா, தடா, பொடா, தேசிய பாதுகாப்புச் சட்டம், மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பயன்பாட்டில் இருக்கும் சிறப்பு ஆயுதச் சட்டம் போன்றவைகள்.
நிரூபிக்க வலுவின்றி பொய்க்குற்றச்சாட்டின்பேரில் சிறைக் கொட்டடிகளில் வாழ்வின் கனவுகளை புதைத்துக் கொண்டிருக்கும் அப்பாவிகளுக்கு "மீட்பு" தரப்போவது எந்த கடவுள்?
இப்புத்தகத்திலிருந்து சில வரிகள்...
“வெடிகுண்டு செய்தவன் நிரபராதி. வெறும் பேட்டரி வாங்கிக் கொடுத்தவனுக்கு தூக்குத் தண்டனை”
“கட்சிக்காரர்கள் யாரும் தங்களது வாகனங்களை தர மறுக்க ராஜீவின் உடல் சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்கு போலிஸ் லாரியில் கொண்டு செல்லப்பட்டது”
“பெரும்புதூர் கூட்டத்தில் ராஜிவ் கொல்லப்படவில்லை என்றால் அன்றிரவு அவரை பெரும்புதூரிலேயே தங்கவைத்து கதையை முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்படி அவரை தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்ட இடம் 'தரம்சந்த்' என்ற ஒரு வட மாநில வட்டிக்கடைக்காரனின் வீடு”
“குற்றவாளிகளை, வான்வழியாக விடுதலைப்புலிகள் வந்து எல்லோரையும் வானூர்தியில் தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள் என்று சிறையிலுள்ள திறந்த வெளியின் மேல் கூரையையும் முழுவதுமாக அடைத்துவிட்டார்கள். இதன்மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் மிகப் பயங்கரமானவர்கள் என வெளியுலகிற்கு காட்டவேண்டும் என்பது CBI-ன் ஆசை”
“ராஜீவின் சுற்றுப்பயணத்தை இறுதிப்படுத்தியது ‘மார்க்கரெட் ஆல்வா’தான். சிவராசன் மற்றும் குழுவினர் பெங்களூருவில் பதுங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் அஞ்சனப்பாவின் அண்ணன் அஸ்வத் ராமைய்யா என்பவர் ‘மார்க்கரெட் ஆல்வா’வின் நெருங்கிய நண்பர் மற்றும் தனிச்செயலர். இரண்டு வாரத்திற்கு மேல் அவர்களை தன் இடத்தில் ஏன் மறைத்து வைத்திருக்க வேண்டும்?”
“கர்நாடக போலிஸ் இல்லையென்றால் CBI-னால் சிவராசனை கண்டுபிடித்திருக்கவே முடியாது”
“1991 மே 12-ம் தேதியன்று மத்தியப்பிரதேசம் போபாலில் நடந்த ராஜீவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ‘சுரேஷ் பச்சோரி’ என்பவர் சிவராசனையும் சுபாவையும் “அய்யர் & மிசஸ் அய்யர்” என்றும் சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் என்றும் பலருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்”
இன்னும் முக்கியமான பல தகவல்களால் / கேள்விகளால் தலை சுற்றுகிறது.
தன்னைக் கொல்ல திட்டம் தீட்டிய உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டிக்க வழியில்லாத / அப்படி செய்யாத / அவ்வாறு துளியும் முயற்சிக்காத ஒரு கட்சிக்கும் நாட்டுக்கும் தலைவனாக இருந்த ஒரு துர்பாக்கியசாலிதான் இந்த ‘ராஜீவ்காந்தி’ என்பதை நினைக்கையில் படுகேவலமாய் இருக்கிறது.
No comments:
Post a Comment