23-02-2013
சென்னை
இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளை
உள்ளடக்கிய தமிழீழப் பகுதியில் பன்னெடுங்காலமாக வாழ்ந்துவரும் தமிழர்கள் மீது
இனவெறி பிடித்த இலங்கை அரசு பல்வேறு வகைகளில் சொல்லொணா அடக்குமுறைகளை ஏவி
இலங்கையிலிருந்து தமிழர்கள் அனைவரையும் முற்றிலுமாக அழிக்கும் வண்ணம் செயல்பட்டு
வருவதுயாவும் இவ்வுலகம் அறிந்ததே. அதன்
உச்சகட்டமாக 2009 ஆண்டு போர் என்ற பெயரில் குழந்தைகளென்றும், பெண்களென்றும்,
வயதானவர்களென்றும், நோயாளிகளென்றும் பாராமல் ஈவிரக்கமின்றி சுமார் 2 லட்சம்
தமிழர்களையும் அவர்கள்தம் இருப்பிடங்களையும் அழித்தொழித்தது. முன்கூட்டியே
திட்டமிடப்பட்ட இந்த இனப்படுகொலையின் பின்னனியில் காந்தி தேசம் என்று தம்மை உலகில்
அடையாளப்படுத்திக்கொள்ளும் இந்தியாவும் செயல்பட்டதை அறிந்து இந்த நாட்டை எமது
நாடென்று நம்பிக்கொண்டிருக்கும் ஏழு கோடி தமிழர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தோம். எல்லை
தாண்டி வந்ததற்காக ஒரு இலங்கை மீனவர்களைக்கூட இதுவரையில் சுட்டதில்லை இந்திய அரசு.
ஆனால் இதுவரையில் 1000-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கேட்பாரின்றி
சுட்டுக்கொன்றுள்ளது இலங்கை ராணுவம். இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கும் இவ்வாறான
சம்பவங்களை இந்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டதாகவே தெரியவில்லை. மாறாக தமிழர்களைக்
கொன்ற சிங்கள ராணுவத்திற்கு ராணுவப் பயிற்சி கொடுத்தும், அண்டை மாநிலங்களுடனான
பிரச்சனைகளிலும் தமிழர்களை எல்லா வகைகளிலும் மேலும் மேலும் வஞ்சித்துக்கொண்டே
வருகிறது. சமீபத்தில் “சானல்-4” தொலைக்காட்சி வெளியிட்ட 12 வயது சிறுவன்
பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பான போர்க்குற்ற ஆவணப்படம் உலகையே பெரும்
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நமது மாண்புமிகு தமிழக முதல்வர்கூட கடுமையாக இலங்கை
அரசை கண்டித்துள்ளார். மேலும் சிங்கள விளையாட்டு வீர்ர்கள் பங்குபெறும் ஆசிய
தடகளப் போட்டிகள் தமிழர் மண்ணில் நடத்தப்பட்டால் அது தமிழர்களை அவமதிப்பதாகும்
என்ற நியாயமான உணர்வின் அடிப்படையில் அப்போட்டிக்கு தடையும் விதித்துள்ளார். உலகில்
மனித உரிமைகள் பேணும் நாடுகள் யாவும் தற்போது இலங்கைக்கெதிராக திரும்பும்
இவ்வேளையில், இலங்கையின் இனப்படுகொலைக்கு உதவி செய்த இந்தியாவோ ஏழு கோடித்
தமிழர்களையும், இலங்கைக்கு பொருளாதாரத்தடை விதிக்க சட்டமன்றத்தில் தீர்மானம்
இயற்றிய தமிழக அரசையும் கிள்ளுக்கீரையாக நினைத்து மேலும் மேலும் சிங்கள இனவெறிக்கே
ஒத்தூதிக்கொண்டிருக்கிறது. இனப்படுகொலைக் குற்றச்சாட்டிலிருந்தும் உலகின்
பார்வையிலிருந்தும் இலங்கையை தப்பவைக்கும் பொருட்டு அடிக்கடி சிங்கள இனவெறியர்களை
விருந்தினராக அழைத்து சிவப்புக் கம்பளம் விரித்துக்கொண்டிருக்கிறது.
இன்று (23-02-2013) சேப்பாக்கத்தில்
நடக்கவிருக்கும் ஒரு கிரிக்கெட் போட்டிக்கு நடுவராக இனவெறி இலங்கையைச் சேர்ந்த “குமர
தர்ம சேன” என்பவர் அழைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை அறிந்து பெரும்
வேதனையடைந்துள்ளோம். உடனடியாக அவரை தமிழ் மண்ணிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்றும்,
இதற்கு பின்னனியாக இருந்து செயற்பட்டு தமிழக முதல்வர் அவர்களையும் தமிழர்களையும்
அவமதித்த பொறுப்பாளர்களை தண்டிக்க வேண்டுமென்றும் கிரிக்கெட் வாரியத்தையும், தமிழக
அரசையும் கேட்டுக்கொள்கிறோம்.
இவண் :
வடக்கு மண்டல அமைப்பாளர். சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.
செ.குமரன், வி.ஜனார்த்தனன்,
தென்சென்னை மாவட்ட செயலாளர். வடசென்னை மாவட்ட செயலாளர்.
மற்றும்
இயக்க நிர்வாகிகள் & தோழர்கள். தந்தைபெரியார்
திராவிடர் கழகம், சென்னை மாவட்டம்.
No comments:
Post a Comment