இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளை
உள்ளடக்கிய தமிழீழப் பகுதியில் பன்னெடுங்காலமாக வாழ்ந்துவரும் தமிழர்கள் மீது
இனவெறி பிடித்த இலங்கை அரசு பல்வேறு வகைகளில் சொல்லொணா அடக்குமுறைகளை ஏவி
இலங்கையிலிருந்து தமிழர்கள் அனைவரையும் முற்றிலுமாக அழிக்கும் வண்ணம் செயல்பட்டு
வருவதுயாவும் இவ்வுலகம் அறிந்ததே. அதன்
உச்சகட்டமாக 2009 ஆண்டு போர் என்ற பெயரில் குழந்தைகளென்றும், பெண்களென்றும்,
வயதானவர்களென்றும், நோயாளிகளென்றும் பாராமல் ஈவிரக்கமின்றி சுமார் 2 லட்சம்
தமிழர்களையும் அவர்கள்தம் இருப்பிடங்களையும் அழித்தொழித்தது. முன்கூட்டியே
திட்டமிடப்பட்ட இந்த இனப்படுகொலையின் பின்னனியில் காந்தி தேசம் என்று தம்மை உலகில்
அடையாளப்படுத்திக்கொள்ளும் இந்தியாவும் செயல்பட்டதை அறிந்து இந்த நாட்டை எமது
நாடென்று நம்பிக்கொண்டிருக்கும் ஏழு கோடி தமிழர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தோம். இரண்டு
கேரள மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலியை கண்டிக்கும் மன்மோகன்சிங்கின் மத்திய அரசு,
இதுவரையில் 1000-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கேட்பாரின்றி சுட்டுக்கொன்ற இலங்கை
ராணுவத்திற்கு சிவப்புக் கம்பளம் விரித்து தமிழர்களை கேவலப்படுத்துகிறது. மேலும், அண்டை
மாநிலங்களுடனான எல்லா பிரச்சனைகளிலும் தமிழர்களை வஞ்சித்துக்கொண்டே வருகிறது.
சமீபத்தில் “சானல்-4” தொலைக்காட்சி வெளியிட்ட 12 வயது சிறுவன் பாலச்சந்திரனின்
படுகொலை தொடர்பான இனப்படுகொலை ஆவணப்படம் உலகையே பெரும்
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உலகில் மனித உரிமைகள் பேணும் நாடுகள் யாவும் தற்போது
இலங்கைக்கெதிராக திரும்பும் இவ்வேளையில், இலங்கையின் இனப்படுகொலைக்கு உதவி செய்த
இந்தியாவோ ஏழு கோடித் தமிழர்களையும்,
கிள்ளுக்கீரையாக
நினைத்து மேலும் மேலும் சிங்கள இனவெறி
அரசுக்கே
ஒத்தூதிக்கொண்டிருக்கிறது. இனியும் இது தொடர்வதைக் கண்டித்து...
1. இனப்படுகொலை நடத்திய இனவெறி இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை நடத்தி
நடவடிக்கை எடுக்கவேண்டும்.
2. இலங்கையில் வாழும் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழ் ஈழத்தை
உலக நாடுகள் அங்கீகரிக்க ஆவண செய்யவேண்டும்.
3. அய்.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை
இந்தியாவே முன்மொழிய வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி 16-03-2013
அன்று காலை 10 மணிக்கு காஞ்சி மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக,
தமிழக வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை மற்றும் காஞ்சி மாவட்ட செயலாளர்
மதன்குமார் அவர்கள் தலைமையிலும், காஞ்சி மாவட்ட தலைவர் பரந்தாமன் மற்றும்
அமைப்பாளர் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலையிலும் டாக்டர் அம்பேத்கர் மன்ற
நிர்வாகிகளும் பங்குபெறும் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment