25.2.14

வெளியாரை வெளியேற்ற வேண்டும் ஏன்?

"பன்மை வெளி’ (9047162164) வெளியீடு; ஆசிரியர் கி.வெங்கட்ராமன்; விலை ரூ 20/-

இன்று இப்புத்தகத்தை வாசித்தேன். இப்புத்தகம் 48 பக்கங்கள் கொண்ட ஒரு சிறு புத்தகம். வழக்கறிஞர் துரைசாமி அவர்களின் ‘ராஜீவ் கொலை’ பற்றிய ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் இப்புத்தகத்தை கவனித்தேன். முதலில் இப்புத்தகத்தின் தலைப்பு உங்களைப்போலவே எனக்கும் “இது அநியாயம் / பாசிசம்” என்பதுபோலவேதான் தோன்றியது. சரி இதில் என்னமாதிரியாக சொல்லியிருக்கிறார்கள் என்றுதான் பார்ப்போமே என்று வாங்கினேன். இதனுடன் இன்னும் எட்டு சிறிய புத்தகங்களையும் வாங்கினேன். பொதுவாக நான் மாற்றுக்கருத்தாளர்களை பெரிதும் மதிப்பவன். மாற்றுப் பார்வையிலிருந்து எழும் எந்தக் கருத்துக்களையும் ஆழமாகவே மதிப்புடன் உள்வாங்குவேன். ஏராளமான கட்சிகள், ஏராளமான இயக்கங்கள் இருப்பதே உண்மை சனநாயகமென்றும், எந்தவொரு குறிக்கோளுக்காகவும் நடத்தப்பெறும் அனைத்துவித போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நியாயமானதே என்ற கருத்தும் எனக்குண்டு.  

“யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்று உலகில் வாழும் யாவரையுமே உறவினர்களாய் சொன்ன ஒரு ஆதி இனம், இன்று “வெளியாரை வெளியேற்ற வேண்டும் ஏன்?” என கோரிக்கை வைத்து போராடுவது எதனால்? யாரால்? இது நியாயமா? அநியாயமா? அப்படியென்றால் எங்கெங்கோ வாழும் தமிழர்கள் எல்லாம் ஆங்காங்கேயிருந்து விரட்டி துரத்தப்பட்டால் என்னாகும்? 

யார் வெளியார்?

வெளி மாநிலத்தவர்கள் இல்லாத தமிழகம் சாத்தியமா?

வெளியேற்றப்பட வேண்டியவர்கள் யார்?

இது இனவெறியில்லையா? பிரிவினைவாதமில்லையா?

மார்வாடிகள் என்ன செய்தார்கள்? அவர்களை ஏன் வெளியேற்ற வேண்டும்?

மார்வாடிகள் மட்டும்தான் சுரண்டுகிறார்களா? தமிழ் முதலாளிகள் சுரண்டவில்லையா?

மலையாளிகளை ஏன் வெளியேற்ற வேண்டும்?

அண்டை மாநிலத்தவர்களோடு முரண்பட்டுக் கொண்டிருப்பது சுமுகமான உறவைக் கெடுக்காதா?

வெளியார் ஆக்கிரமிப்பில் அரசின் பங்கு என்ன?

கூலிகளாகவும், நடைபாதை வாசிகளாகவும் இருக்கும் வறுமைப்பட்ட வெளி மாநிலத்தவர்களை வெளியேற்ற வேண்டியது அவசியமா?

தமிழர்கள் கல்வியில் உயர்ந்துள்ளபோது, பல வாய்ப்புக்களை வெளியார் ஆக்கிரமிக்கின்றனர் என்பது சரியா?

வெளியாரை வெளியேற்றினால் தமிழகத்தின் தொழில்வளம் குறையாதா?

வெளியாரை வெளியேற்றினால் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்ளின் கதி என்னாவது?

தமிழர்களும் முன்னேற வேண்டியதுதானே, வெளியாரைப் பார்த்து பொறாமைப் படலாமா?

தொழிலாளர்களை வெளியேற்றுவது நியாயமா?

இது சட்ட விரோதமில்லையா?

தமிழகத்துக்குள்ளே வேறு மாவட்டத்தில் பணிபுரிபவர்களும் வெளியார்தானே? 

வெளியாரை வெளியேற்றுவோம் என்பது நடைமுறைக்கு சாத்தியமா?

- இப்படியான எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்கிறது இச்சிறு புத்தகம். இப்புத்தகத்திலிருந்து சில வரிகள்.....

"சிபிஎம் கட்சியின் அன்றைய கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் அம்மாநில அரசின் வேலைவாய்ப்பில் மலையாளிகளுக்கே முன்னுரிமை என அறிவித்தார்"

"ஹிந்தி மாநிலமான மத்தியப் பிரதேச முதலமைச்சர் சவ்ஹான் தமது மாநிலத்திற்குள் அளவுக்கதிகமாக பீகாரிகள் நுழைந்துவிட்டார்கள் என்று கூறி, இனி மத்தியப்பிரதேச மக்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை என அறிவித்தார்"

"ஹிந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து போய் காசுமீரிலோ, நாகலாந்திலோ யாரும் குடியுரிமை பெற்றிட முடியாது. சொத்து வாங்கிடவும் முடியாது. இதற்கான சட்டப் பாதுகாப்பு ஏற்கெனவே அம்மாநிலங்களுக்கு இருக்கிறது"

"ஹிந்திய அரசு அசாம் மக்கள் மீது ராணுவத்தை ஏவியது. பலர் கொல்லப்பட்டனர். இறுதியில் மக்களுக்கே வெற்றி கிட்டியது. 1971 மார்ச் 25-க்குப் பிறகு அசாமில் குடியேறியவர்களை வெளியேற்றுவோம் என்று பிரதமர் ராஜீவ்காந்தி 1985 ஆகஸ்ட் 15 அன்று அசாம் மாணவர் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். இப்பொழுது அசாமில் போய் வெளிமாநிலத்தவர் குடியுரிமை பெற்றிட முடியாது"

"எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்தபோது கார்நாடக காங்கிரசு ஆட்சி, அம்மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள் விளைநிலம் வாங்குவதையும், அடமானமாகப் பெறுவதையும், குத்தகைக்குச் சாகுபடிச் செய்வதையும் தடை செய்து ஆணை பிறப்பித்தது"

"1997-ல் மே.வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு, வங்க தேசத்திலிருந்து வந்த பீகாரி முஸ்லீம் அகதிகளை அனுமதிக்க மறுத்தார்" 

"தமிழகமெங்கும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட்டிக் கடைகள் நடத்தி ஆண்டுதோறும் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மார்வாடி; குஜராத்து சேட்டுகள் தமிழர்களிடமிருந்து சுரண்டுகிறார்கள். விருதுநகர் தானிய மொத்த வணிகம், ஈரோடு மஞ்சள் வணிகம், துணி மொத்த வணிகம், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி, தங்க வைர நகை வணிகம், சிவகாசி அச்சு மை வணிகம், எழுதுபொருள் மொத்த வணிகம், மருந்துப்பொருள் மொத்த வணிகம் போன்ற அனைத்தும் இன்று சேட்டுகளின் பிடியில் சிக்கிவிட்டன. தமிழர்கள் மெதுமெதுவாக ஓரங்கட்டப்பட்டுவிட்டனர். மதுரையில் புகழ்வாய்ந்த மீனாட்சி மில், பரவை மில், கஸ்தூரி மில் ஆகிய துணி ஆலைகள் இன்று சேட்டுகளின் கைக்கு மாறிவிட்டன. செயற்கை இழை தயாரிக்கும் சிறுமுகை விஸ்கோஸ் தொழிற்சாலை இன்று மார்வாடி பிர்லாவின் கையில். தமிழக சிமெண்ட் தொழிற்சாலையை சிங்கானியா கைப்பற்றியுள்ளார். நீலகிரி தேயிலைத் தோட்டங்கள் சேட்டுகளின் கைக்கு மாறிவருகின்றன. பாரம்பரிய உப்பும் “அயோடின் உப்பு” என வடவர் பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் இயக்கப்படும் பெரும்பாலான தனியார் லாரி, ஆட்டோ, வாடகை கார் போன்ற வாகனங்களில் 90 சதவீதம் சேட்டுகளின் கடன் பிடியில் இருப்பவைகளே. தமிழர்களால் அடகு வைக்கப்படும் நகைகளை அரசு வங்கிகளில் குறைந்த வட்டிக்கும், விவசாயக் கடன்களைப்போலவும் அடகு வைத்து வட்டியாலும், கடன் தள்ளுபடியாலும் பெரும் லாபம் சம்பாதிக்கின்றனர்"

"கோவையைப் பொறுத்தமட்டில் ஒரு மலையாளி வீட்டுப்பிள்ளை மழலையர் கல்வி முதல் உயர்நுட்பக் கல்விவரை மலையாளிகளின் கல்வி நிலையங்களிலேயே கற்றுவிட முடியும். தமிழ் அவர்களுக்கு துளிகூட தேவையற்றது. ஊர்தோறும் ஐயப்பன் கோவில்களைக் கட்டுவதும், ஐயப்பன் விழாக்களை மலையாளப் பண்பாட்டு திருவிழாக்களாக மாற்றும் முயற்சியும் ஆண்டுதோறும் வளர்முகத்தில் உள்ளது. இன்று தமிழக முந்திரி ஏற்றுமதித் தொழில் முழுதும் மலையாளிகளிடமே உள்ளது. சென்னை எம்.ஆர்.எஃப். ஏற்கெனவே அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது பழைய செய்தி. தமிழ்நாட்டு அனைத்து ஊடகங்களிந் அதிகார மையத்திலும் பரவிக்கிடப்பவர்கள் மலையாளிகளே. ஆலுக்காஸ், கல்யாண் நகைக்கடைகள் தமிழ்நாட்டில் பெருகிவந்து கொண்டிருக்கிறது. முத்தூட், மணப்புரம் வட்டித்தொழில் திசையெங்கும் கொடிகட்டிப் பறக்கிறது. சென்னை தி.நகரின் சில்லறை வணிகத்தில் மலையாளிகளே ஆதிக்கம் செலுத்துவது யாவரும் அறிந்ததே. தென்காசி, திருநெல்வேலி, தேனி, கம்பம், பரமக்குடி பகுதிகளில் விளைநிலங்களையும் வீட்டுமனைகளையும், கோவை நகரின் முக்கிய கட்டிடங்களையும் மனைகளையும் கொத்து கொத்தாக மலையாளிகள் வாங்கிக் குவிக்கின்றனர். கோவையின் அடையாளமே மாறிக்கொண்டிருக்கிறது. வேளாங்கண்ணி மலையாளிமயமாகி வருவதைப் பார்க்கிறோம். மயிலாப்பூர் மறைமாவட்ட கத்தோலிக்க திருச்சபையை இரண்டாகப் பிரித்து தங்களுக்கு தனியாக மறை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை வாழ் மலையாளிகள் வன்முறையில் இறங்கியதைப் பார்த்து தமிழகமே திகைத்தது"

"தமிழீழத்தில் துப்பாக்கி முனையில் சிங்களமயம் செய்ததை உலகமயத்தோடு இணைந்து ஹிந்திய மயம் தமிழ்நாட்டில் செய்துகொண்டிருக்கிறது" 

(இக்கருத்துக்கள் உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் இப்பதிவை பகிருங்கள்)

No comments:

Post a Comment