14.2.14

ஈழம் - வியாபார சினிமாக்களாக தமிழில் வெளிவருவது சரியா?

முதலில் சினிமா என்பதே இந்தியாவில் வியாபாரம்தான். வியாபாரமற்ற சினிமா இந்தியாவில் எந்த மொழியில் இருக்கிறது? அப்படி இருப்பதாக இருந்தாலும் அதை உற்று அவதானித்தால் அதன் வியாபாரம் வேறு மாதிரியான தளத்தில் இருக்கும். பொதுவாக தற்போதைய தமிழ் சினிமாவிலோ அல்லது இந்திய சினிமாவிலோ வியாபாரமற்று இயங்கும் கலைஞர்கள் அரிது. அரிது என்பதைக் காட்டிலும் இல்லையென்பதே நேர்மையான பதில். ஆனால் வியாபாரமற்று இயங்கவேண்டும் என்று இருப்பவர்களையும், அவர்களது படைப்புக்களையும் நம்மில் எத்தனைப்பேர் இதுவரையில் ஊக்குவித்திருக்கிறோம்? அல்லது அப்பார்வையில் அவர்களை வரவேற்க தயாராகியிருக்கிறோம்?

இங்கு எல்லாமே வணிகமயம்தான். இயற்கையான உணர்ச்சியான பிறர்பால் ஈர்ப்பு உணர்விலிருந்து (காதல்) தொடர்ச்சியான எல்லாமே சந்தைமயப்படுத்தப்பட்டதுதான். எந்தெந்த மொழியையோ பேசுகிறவனெல்லாம் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஆனால், வலுவாயிருந்த காலத்திலாவது தமிழ்நாட்டின் ஊடகங்களையோ, கலைத்துறையையோ தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஈழத்தமிழ்தேசியவாதிகள் எடுத்த முன்னெடுப்புகள் என்ன? விவாதங்களைத் தவிர்த்துப் பார்த்தால் நாம் இதில் மிகவும் பலவீனமாகியிருக்கிறோம்.

தமிழினம் இவ்வளவு வீழ்ச்சியை சந்தித்த இக்காலத்திலேயே இக்கொடுமைகளைப் பற்றிய வீரியமான படைப்புக்கள் உருவாகவில்லையென்றால் பின் எக்காலத்தில் உருவாகப்போகிறது?

எதிர்மறையான விமர்சனங்களை குறைத்துக்கொண்டு அனைத்து படைப்பாளிகளையும் வென்றெடுக்கும் தன்மைக்கு நாம் மாறவேண்டும். சினிமாவிலும், வெகு சன மக்களின் ரசனையான சினிமாவுக்குள்ளேயே இப்பிரச்னைகள் சென்றாலொழிய எந்த படைப்புக்களாலும் யாதொரு பயனும் விளையப்போவதில்லை. ஏதோ நம் பலம் முழுதாய் வளரும்வரையில் அரைகுறைகளாகவாவது இப்படியான படைப்புக்கள் வருவது நல்லதுதான். இல்லையென்றால் காலம் கடக்க கடக்க இந்த மண்ணின் மக்கள் எல்லாவற்றையும் மறந்துபோயிருப்பார்கள்.

"மறந்துகொண்டே இருப்பது மக்களின் இயல்பு. நினைவுபடுத்திக்கொண்டே இருப்பது நம் கடமை"

No comments:

Post a Comment