11.2.14

"சமற்கிருதத்தின் தாய்மொழி தமிழே" - ம.சோ.விக்டர்



(அருமையான புத்தகம். தமிழ் உணர்வாளர்கள் கண்டிப்பாக ஒருமுறை வாங்கிப் படியுங்கள். போதி பதிப்பு வெளி, 8939200377, விலை ரூ.175/-)

தொல்காப்பியர் சமஸ்கிருத மொழியைக் கற்றார் என்பதும், சமஸ்கிருத மொழி இலக்கண முறைகளையே தொல்காப்பியமாக எழுதினார் என்பதும், மெய்ப்பிக்க இயலாத செய்திகளாகும். தொல்காப்பியரை ஆரியர் என்று காட்டுவதற்கான கூறுகள் ஒன்றுகூட இல்லாத நிலையில், கி.பி. 10ம் நூற்றாண்டுகளில் இணைக்கப்பட்ட இடைச்செருகல்கள், தொல்காப்பியரை ஆரியராகக் காட்ட முற்பட்டன.

தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் அறியப்படவில்லை. தொல்காப்பியத்தில் ஒருசொல்கூட சமஸ்கிருதச் சொல் இல்லை. சமஸ்கிருதம் என்ற சொல்லை தொல்காப்பியர் பயன்படுத்தவேயில்லை. சங்க இலக்கியங்களும்கூடச் சுட்டிக் காட்டவில்லை.

இந்திய மொழிகளை ஆராய்ச்சி செய்த ஐரோப்பியர்கள், சமஸ்கிருதத்தை மட்டுமே ஆராய்ந்தனர். தமிழைப் பற்றி ஆராயவில்லை. இந்திய மக்கள் அனைவரும் சமஸ்கிருதத்தையே பேசிவருவதாக ஒரு மாயத்தோற்றத்தை ஒரு சில ஐரோப்பியர்கள் தோற்றுவித்தனர்.

சமஸ்கிருத மொழியே, தமிழை சுருக்கியும் திரித்தும் கொண்ட மொழியாகும். தமிழில் உள்ள உயிர் எழுத்துக்களே சமஸ்கிருதத்திற்கும் உயிர் எழுத்துக்களாக இருப்பது கவனிக்கத்தக்கது. தமிழ் நெடுங்கணக்கு முறையையும், சமஸ்கிருத நெடுங்கணக்கு முறையையும் ஆய்வு செய்தால் தமிழினின்றே சமஸ்கிருத ஒலிகள் பெறப்பட்டுள்ளன என்பது விளங்கும்.

தொடக்கத்தில் புத்த சமயத்தினரும், சமண சமயத்தினரும் சமஸ்கிருத மொழியைக் கையாண்டனர் என்பதும், இறுதிக்காலத்திலேயே ஆரியர்கள் சமஸ்கிருதத்தைக் கையிலெடுத்தனர் என்பதும் வரலாற்று உண்மையாகும். அதனை Prof. E.B.Cowell and Prof. Neil போன்ற பேராசிரியர்களின் கூற்று உறுதிப்படுத்துகிறது.

ஆரியர்கள் எக்காலத்திலும் போரிட்டதாகவோ, இந்தியப் பகுதிகளை ஆண்டதாகவோ அவர்களது குறிப்புகளே தெரிவிக்கவில்லை.

ரிக் வேதத்தில் மக்களை நெறிப்படுத்தும் அறிவுரைகளோ மொழியை வளப்படுத்தும் இலக்கியச் செறிவுகளோ, இலக்கண நெறிமுறைகளோ எவையும் காணப்படவில்லை. சிறுவர்களை மகிழ்விக்கும் பாட்டிக் கதைகளைப் போன்றே பல்வேறு இடங்களில் தொடர்பில்லாத செய்திகளாகவே அவ்வேதம் உள்ளது. இவ்வேதங்களை மக்கள் அறிந்திருந்தனரா என்ற செய்தியுமில்லை. ஆனால் வேதங்கள் இயற்றப்பட்டபோது வட இந்தியா முழுவதும் ஒரு மறுமலர்ச்சி தோன்றியதாக ஒரு மாயத்தோற்றத்தை பிற்காலத்தில் உருவாக்கிவிட்டனர். வேதப் பாடல்கள் இயற்றப்பட்டதாய் சொல்லப்படும் காலத்தில் சமஸ்கிருத மொழிக்கு எழுத்து வடிவமே இருந்திருக்கவில்லை. நான்கு வேதங்களும் கிறித்து பிறப்புக்குப் பின்னரே தொகுக்கப்பட்டன என்பதை ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

தொல்காப்பியம் கூறும் நான்மறை என்பதை, ஆரிய வேதங்களே என தவறாக உரையெழுதிவிட்டனர். தவறாக எழுதப்பட்டது என்பதைவிட வலிந்தே திரித்து எழுதப்பட்டது என்பதே உண்மை. நான்மறையென்று தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் செய்திகள், தமிழகத்தின் நான்கு னில வழிபாட்டு அடிப்படைகளாகக் கொண்டவையே. பாவணரின் கருத்துப்படி அதர்வ வேதம் கி.பி.4-ம் நூற்றாண்டுக்குப் பிறகே எழுதப்பட்டிருக்க வேண்டும்.

தமிழே உலக மொழிகளின் தாய்மொழி;

தமிழே ஆரிய மொழிக்கும் தாய்;

தமிழே திராவிட மொழிகளுக்கும் தாய்;

No comments:

Post a Comment