28.2.14

ஏற்காடு

நேற்று ஏற்காட்டிலுள்ள "பக்கோடா பாயிண்ட்" என்ற இடத்திற்கு சென்றேன். பிறகு ஏற்காட்டில் வாழும் மலைவாழ் மக்கள் சிலரின் குலதெய்வமான "அண்ணாமலையார் கோயில்" அமைந்திருக்கும் "தலைசோலை" என்ற இடத்திற்கும் சென்றேன். கார்த்திகை தீபத்தின்போது திருவண்ணாமலையைப் போன்றே இங்கேயும் தீபம் ஏற்றப்படுமாம். அதன் பின்பு "மஞ்சக்குட்டை" என்ற இடத்திலுள்ள "சேர்வராயன் கோயில்" அமைந்திருக்கும் இடத்திற்கும் சென்றேன். இது எனது ஆன்மிகப் பயணமல்ல. இங்கே பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்று ஆங்காங்கே சிலரிடம் விசாரித்தபோது அவர்கள் சொன்ன தகவல்களே அங்கெல்லாம் செல்லத் தூண்டின. 

வாழ்வின் சில அனுபவங்களை எழுத்தில் வெளிப்படுத்துவது என்பது எல்லா சமயத்திலும் எனக்கு கைவருவதில்லை. அதற்காக நான் பெரிதாய் ஆர்வமெடுத்துக்கொள்வதுமில்லை. நான் இறந்துபோகும் வரையிலாக இனி என் வாழ்க்கை என்று எதிர்கொள்ளப்போகும் என் எதிர்காலத்தைப் பற்றின ஒரு சிறு நகர்வுக்காக எந்தவித முன்னேற்பாடுமின்றி திடீரெனவேதான் இப்பயணம் தொடங்கியது. சென்னையிலிருந்து என்னுடன் பயணித்து வந்தது குறிப்பிட்டளவு மன அழுத்தமும்கூடத்தான். 

இந்த உலகம்தான் எவ்வளவு விசித்திரமானது...! பரந்தது..! புதிர் நிறைந்தது...! இந்த உலகில் வாழும்; சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு ஜீவனுக்கும் அதனதன் தகுதிக்கேற்ப; தேவைக்கேற்ப ஏதோவொரு வகையில் ஒரு தேடல் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த அத்தனைவிதமான ஒவ்வொரு தேடலுக்கும் இந்த உலகம் பதிலை தெரிவித்தபடியேதான் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் முழுமைக்கும் புரிந்துகொண்டு உள்வாங்கி வாழும் மேன்மை பொருந்திய ஞானம் கொண்டவர்கள் இந்த மலையின் பூர்வீகக் குடிகளாகவும் இருக்கலாம். ஒரு மலையின் உச்சியை தன் வாழ்விடமாகக் கொண்டவனுக்கு இயல்பாகவே இந்த பரந்து விரிந்த வானம் ஏதோவொரு வகையிலும் அல்லது எல்லா வகையிலும் மிகவும் நெருக்கமான ஒன்றாக இருக்கிறது. ஞானத்தின் வாசல்களில் வானமும் முக்கியமானதொன்றுதானே. 

திருப்பத்தூரிலிருந்து சேலம் செல்லும் வழியில் ஊத்தங்கரை, அரூர் தாண்டி சேலத்திற்கு 20 கிமீ முன்னதாகவே குப்பனூர் என்ற இடத்திலிருந்து ஏற்காட்டிற்குச் செல்ல ஒரு நல்ல சாலை இருக்கிறது. இச்சாலையில் பெரும்பாலும் அதிக வாகனங்கள் பயணிப்பதில்லை. இது பிரதான சாலையுமில்லை. இரவு 7 மணிக்கு இவ்வழியாக புறப்பட்டு கும்மிருட்டின் நடுவே மலைமீது பயணித்தபடி வானத்தில் ஒளிர்ந்த நட்சத்திரங்களையும் கீழே வீடுகளில் ஒளிர்ந்த மின் விளக்கு நட்சத்திரங்களையும் ஆச்சர்யத்துடன் கவனித்துக்கொண்டே பயணித்தேன்.

இளம் வயதில், கொல்லையில் பறித்தெடுக்கப்பட்ட வேர்க்கடலைகளை உடனடியாக கொண்டுவராமல் மொத்தமாக சேர்த்து மாட்டு வண்டி கட்டி வீட்டுக்கு எடுத்துவரும் வரையில் அங்கேயே வைத்து இரவெல்லாம் காவல் காப்பார் என் அப்பா திரு. மாசிலாமணி அவர்கள். ஊரிலுள்ள பெரும்பாலானவர்களும் இப்படித்தான். இப்படி என் தந்தையார் இரவுக்காவலுக்கு இருக்கும் அத்தனை நாளும் அவருடனே கொல்லை மேட்டில் நானும் தங்கி உடன் படுத்துக்கொள்வேன். கும்மிருட்டில் தெரியும் வானத்திலுள்ள நட்சத்திரங்களைக் காட்டி என் அப்பா எனக்கு நிறைய கதை சொல்லியிருக்கிறார். பல மறந்துபோய்விட்டது. சில நினைவில் இருக்கிறது. அப்போது அவருக்கு தெரிந்ததை அவர் சொன்னார். அவர் அன்றைக்கு காட்டிய அதே நட்சத்திரங்கள் இன்றைக்கும் அப்படியேதான் இருக்கிறது. என் அப்பா இப்போது இல்லை. இறந்து 14 வருடங்களாகிவிட்டது. இன்று அவர் உயிருடன் இருந்தால் அவர் எனக்கு அறிமுகப்படுத்திய இந்த வானம் பற்றியும், அந்த நட்சத்திரங்கள் பற்றியும் கூடுதலாக நிறைய செய்திகள் சொல்லி ஆச்சர்யப்படுத்தியிருப்பேன். பெற்றோர்களின் மதிப்பை நான் உணர்ந்த பருவத்தில் எனக்கு அவர்கள் வாய்க்கவில்லை. இப்படியாக இந்த ஏற்காட்டிற்கு முதன்முதலாக அமைந்த என் பயணத்தில், இயற்கையின் மாயக்கரங்கள் இந்த வனமெங்கும் பரவி தழுவிக்கிடந்ததை உணர்ந்தேன். 

அண்ணாமலையார் கோயில் அமைந்திருக்கும் இடத்தின் படர்ந்த பாறைகளும் அதன் சுற்றழகும், அங்கு நான் இருந்த சில மணி நேரங்களும் என் வாழ்வின் பசுமையான நினைவுகளில் ஒன்றாகி பதிந்துவிட்டது. 10 வருடங்களுக்கு முன்பு ஜம்முவின் (ஜம்மு காஷ்மீர்) "கட்றா" மலைப்பகுதியிலும் இப்படியாக நான் உணர்ந்திருக்கிறேன்.
இந்த அகங்காரம் மிகுந்த உலக வாழ்க்கையில் நாமெல்லாம் ஒரு மயிரளவுக்குக்கூட ஒப்பில்லை என்பதை அடிக்கடி உணரவாவது இப்படியான மலைவாழ்விடங்களுக்கு சென்று வர வேண்டியது நல்லதொரு சங்கதியாகவே தோன்றுகிறது. 

இதுவரைக்கும் இங்கு செல்லாதவர்கள் ஒருமுறை சென்றுவர முயன்று பாருங்கள்... 

No comments:

Post a Comment