17.3.14

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா பா.ம.க.?

பாமக கட்சியினர் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பாமக என்பது பொதுமக்களிடம் வாக்கு கேட்கும் ஒரு கட்சி. வன்னியர்களை மட்டும் வாக்களிக்கச்சொல்லி பிரச்சாரம் செய்தாலோ, அல்லது வன்னியர்கள் தவிர வேறு எந்த சாதியின் வாக்கும் எங்களுக்கு தேவையில்லை என்று பிரச்சாரம் செய்தாலோ பிறர் அக்கட்சியினை விமர்சனம் செய்வது நியாயமில்லைதான். ஆனால், அதுவொரு சாதிக்கட்சியல்ல, சனநாயகப்பூர்வமான பொதுக்கட்சிதான் என்று பொதுவில் அடையாளப்படுத்தப்படுவதால் என்னை மாதிரியான பிற சமூக ஆட்களின் விமர்சனத்தை எதிர்க்கும் முன்னர் சற்று யோசித்து ஆராயவேண்டும். 

மருத்துவர் ராமதாசு அவர்கள் உங்களுக்கு வேண்டுமானால் ஓராயிரம் நன்மைகள் செய்திருக்கலாம். அதனால் நீங்கள் அவரைக் கொண்டாடலாம். ஆனால் பிற சமூக மக்களுக்கு அவர் செய்தது என்ன? பிற சமூகத்தினர் எதற்காக அவரை ஆதரிக்க வேண்டும்? குறைந்தபட்சம் ஒரு காரணத்தையாவது கூற இயலாது. அப்படியே அவர் செய்துள்ளார் என நீங்கள் எடுத்துக்காட்டினாலும் அதைவிட பொதுசமூகம் பின்னடைவை நோக்கிச் செல்லும்படியான பலநிகழ்வுகள் அவரின் வருகைக்குப் பின்னால் நடந்தேறியிருக்கிறது என்பதை நடுநிலையோடு அலசவேண்டும்.

ராமதாசின் வருகைக்குப் பின்னர், ஒரே கிராமத்தில் பல நூறு வருடங்களாக அண்ணன் தம்பிகளாய் வாழ்ந்துகொண்டிருந்த பல சாதி மக்களுக்கு இடையே ஒரு பெரிய நீண்ட சுவர் எழுந்தது. கிழனிகாட்டிலும், களத்து மேட்டிலும் நடந்தேறும் துயரங்களையும் பொருளாதார நெருக்கடிகளையும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு வாழ்ந்த பல ஊர் மக்கள் கடந்த 25 ஆண்டுகளாக இருவேறு திசைகளாக நிற்கிறார்கள். நாளடைவில் அவர்கள் வேறு, நாம் வேறு என்று ஒட்டுறவில்லாத வெவ்வேறு வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டார்கள். இந்த வன்மத்தை வடமாவட்டங்களில் நடக்கும் ஒவ்வொரு உள்ளாட்சித் தேர்தலிலும் பார்க்கலாம். வட மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமமும் எளிதில் உணரமுடியாத இந்த உருவமில்லா சாதீய அழுத்த நெருக்கடிக்குள் சிக்கி மூழ்கிக்கொண்டிருக்கிறது. ஒரே கிராமத்து மக்களே நிரந்தர பகைவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். இன்ப துன்ப நிகழ்ச்சிகளையும், வீட்டு விசேஷங்களையும் தங்களுக்குள் பகிந்துகொண்ட ஒரே கிராமத்து மக்கள் இரண்டுபடுவதில் யாருக்கு என்ன லாபம்? இரண்டு சாதிகள் இருக்கும் எங்கள் கிராமத்திலும்கூட ஒரு சாதியினரின் திருமண நிகழ்ச்சிக்கும் சாவு சேதிக்கும் பிற சாதியினர் பங்கெடுக்காத கலாச்சாரம் வேரூன்றிப்போய்விட்டது. என் சின்ன வயதில் இப்படியில்லை. யார் எந்த சாதியென்றே அப்போதெல்லாம் தெரியாது. அதுவொரு பெரிய பிரச்னையாகவும் அப்போது இருக்கவில்லை. ஆனால் இப்போது அப்படியில்லை. 

உலகம் தோன்றிய வரலாறு, மனிதன் தோன்றிய வரலாறு, பல்வேறு இனக்குழுக்கள் தோன்றிய வரலாறு, மொழிகள் தோன்றிய வரலாறு, மதங்கள் தோன்றிய வரலாறு, முதலாளித்துவம் தோன்றிய வரலாறு, சாதி சமய சம்பிரதாய சடங்குகள் மற்றும் புராணங்கள் புனையப்பட்ட வரலாறு, இப்படி நம்மை மிரளவைக்கும் புதிர்களோடும் பல சமூக பிரச்னைகளோடும் இந்த புவி இயங்கிக் கொண்டிருக்கையில் தலையிலும் சட்டையிலும் ராமதாசின் / அன்புமணியின் உருவப் படங்களை அணிந்துகொண்டு "நான் சத்ரியன்" என பிற சாதி ஏழை எளிய மக்களிடம் வசனம் பேசுவதால் இதனால் சாதிக்கப்போவது என்ன? நாட்டில் ஆயிரமாயிரம் அநியாயங்கள் நடந்துகொண்டிருக்கிறதுதான், இதையெல்லாம் எதிர்த்து எத்தனை சத்ரியன்கள் போராடி சிறைக்குப்போய் மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறார்கள்? நாட்டில் அநியாயங்களே நடக்கவில்லையா? இல்லை இந்த கிராமத்து சத்ரியன்களுக்கு இது தெரியவில்லையா? எது வீரம்? தண்டகாரண்ய காடுகளில் ஆயுதமேந்திப் போராடுகிறவர்கள் எந்த வீரச்சாதி? 

தோழர் தமிழரசனை உதாரணமாகக் கொண்டு பலருக்கும் தலைமையேற்று கிளர்ந்தெழ வேண்டிய ஒரு இனக்குழு, சொந்த சமூக மக்களை கீறிவிட்டு பிரித்தாள்வது எவ்விதமான பொது அரசியல்? 

எல்லோருக்குமாக போராடும் எல்லா இயக்கங்களையும் எல்லோரும் ஆதரிக்கத்தான் செய்கிறார்கள். தமிழரல்லாதார் தலைமைக்கட்சிகள் எல்லாம் இங்கே நம் சொந்த மண்ணில் ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருக்கும்போது மண்ணின் மைந்தர்களுக்குள்ளே பகை மூட்டும் அரசியல் நியாயமானதா? 

பாமக வேட்பாளர்களில் பிற சாதியினர் ஏன் நிறுத்தப்படவில்லை? இது சாதிக்கட்சி இல்லைதானே? ஏன் பிற சாதியினரிடம் வாக்கு கேட்க வேண்டும்? அது தம் சாதிக்கு இழுக்கு இல்லையா? பிற சாதியினரின் வாக்குகள் எங்களுக்கு தேவையேயில்லை எனும்போது விமர்சனம் எழாது. "யார் எந்த சாதியாக இருந்தாலும் காலில் விழுந்து வாக்கு கேட்க வேண்டும்" என்று பிற சாதியினரின் வக்குகளையும் குறிவைக்கும்போது விமர்சனம் தவிர்க்க முடியாததுதான். இதிலெங்கே வன்மம் இருக்கிறது? 

இதுவொரு சனநாயக நாடு, பாமக ஒரு சனநாயக கட்சி எனும்போது, பாமக-வின் செயல்பாடுகள் எனது கிராம சகோதரர்களை என்னிடமிருந்து அந்நியப்படுத்தும்படியாய் பாதிப்பை ஏற்படுத்தும்போது, விமர்சனம் செய்யக்கூடாது என நீங்கள் எதிர்பார்க்க நாமென்ன தலிபான்களுக்கு மத்தியில் ஆப்கானிலா இருக்கிறோம்? இல்லை ரத்தக்காட்டேரி ராஜபக்சேவின் ஆளுகையில்தான் இருக்கிறோமா? யில்லை பாமக-வினர்தான் சிங்களர்களா?

ஓட்டு மட்டும் வேண்டும், விமர்சனம் வேண்டாம் என்பது எந்த ஊரு நியாயம்?

15.3.14

எப்படியாவது சீக்கிரத்துல பணக்காரனாயிடணும்

உயிர் வாழுறது முக்கியமா? மானத்தோட வாழுறது முக்கியமா? முதல்ல உயிர் வாழணும். உயிர் வாழ்ந்தாதான் மானத்தோட வாழுறதப்பத்தி யோசிக்க முடியும். உயிர் வாழவே வழியில்லாதவன் மானத்தைப் பத்தி எப்படி கவலைப்படுவான்? எதுக்கு கவலைப்படணும்? தோற்றமும் தொழிலும் வேவ்வேறாயிருந்தாலும் ஒரு வழிப்பறிக் கொள்ளையனைப் போலவேதான் மும்முரமாய் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு "பிசினெஸ்மேனும்". இவர்களின் கொள்ளைக்கு வெவ்வேறு பெயர்கள். 

"லாபம்" 
"gain" 
"profit"
"Income"

எந்தத் தொழிலாக இருந்தாலும் லட்சியம் ஒன்றுதான் "எப்படியாவது சீக்கிரத்துல பணக்காரனாயிடணும்"

நவீன கால கவிஞர்கள்...(?)

ஒரு கவிஞனின் எல்லா கவிதைகளும் கவிதைகளாய் இருப்பதில்லை. 

நல்ல கவிதையொன்றினால் அவன் கவிஞன் என அங்கீகரிக்கப்பட, பின்னர் கவிஞன் என்றான காரணத்தால் எழுதுவதெல்லாம் கவிதையென்றாக்கப்படுகிறது. 

நீளவாக்கில் எழுதப்படும் சொற்றொடர்களை மேலும் கீழுமாய் போட்டு எழுதினால் கவிதையென்று சொன்ன "கவிதை ஞானி" எவனோ?

மிடில... சத்தியமா மிடில...

பதவி வெறி சுகம்

தேர்தலில் நின்று மக்களிடம் ஓட்டு வாங்கி வென்று சட்டசபைக்கே போகாமல் இருக்கும் "தலைவர்களின்" நோக்கம்தான் என்ன? அதிகாரம் கையிலிருந்தால்தான் சட்டசபைக்குப் போவேன் என்றால் பொறுப்பை உதறிவிட வேண்டுயதுதானே. அந்தத் தொகுதியில் ஓட்டு போட்டவனுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதைதான் என்ன? மீண்டும் அடுத்த தேர்தலில் ஓட்டு கேட்க மக்கள் முன்னால் இந்தத் "தரித்திர தலைவர்கள்" வருகிறார்களென்றால் மக்களைப் பற்றிய இவர்களின் மதிப்பீடுதான் என்ன? 

ஆளுங்கட்சியின் குறைகளை சட்டசபைக்குச் சென்று தட்டிக்கேட்க துப்பில்லாமல் மீண்டும் ஓட்டுப்போட்ட மக்களிடமே வந்து பிரச்சாரம் என்ற பேரில் சொல்லிக்கொண்டிருப்பதற்கு ஒரு 'கட்சியும், தலைவன்' என்ற தகுதியும் எதற்கு வீணாய்?

14.3.14

பேசிப்பேசியே பெரியாளாகிவிட்டார்களா?

ஈழத்தைப் பற்றி திரைப்படம் எடுத்து பணம் குவித்து பணக்காரர்கள் ஆனது யார் இங்கே? ஈழத்தைப் பற்றி பேசி அரசியலில் வலுவாகி அரியணை ஏறி அதிகாரத்தைப் பிடித்தது யார் இங்கே? ஈழத்தைப் பற்றிப் பேசினால் பணம் வரும் என்றால் எல்லோருமே பேசி பெற்றுக்கொள்ளவேண்டியதுதானே? 

ஈழத்தைப் பற்றி பேசி பேசி போராடி இப்படி இங்கே அவப்பெயர் எடுத்தவர்கள்தான் ஏராளம். ஏதோ பேசிக்கொண்டிருக்கிற இவர்களாவது இல்லாமல் போயிருந்தால் பல உண்மைகள் இங்கே முற்றிலுமாக நாதியற்றுப் போயிருக்கும் என்பதே உண்மை. 

வைகோ மற்றும் சீமானால் இங்கே பல சூழல்கள் மாறியிருக்கிறது. 

எப்போதுமே 'இவர்கள் பேசிப்பேசியே பெரியாளாகிவிட்டார்கள்' என்று பிதற்றுவதே "அறிவாளிகள்" என்று தம்மை வெளிக்காட்டிக்கொள்பவர்களின் கருத்தாய் இருக்கிறது. 

பேசாமலேயே இங்கே யார்? எதை சாதித்தார்கள்? என்பதை இந்தத் "தமிழ் தியாகிகள்" விவரம் சொன்னால் நல்லது.

13.3.14

என் மனைவி எனக்கு என்ன முறை?

ஆதாம் ஏவாளிலிருந்துதான்
இந்த உலகம் ஆரம்பமென்றால்
என் மனைவி எனக்கு
என்ன முறை?

(திரு கே.பாக்யராஜ் அவர்களின் கேள்வி பதில் ஒன்றில் படித்தது)

12.3.14

"பெத்தவன்" - இமையம்

இன்று எழுத்தாளர் இமையம் அவர்களின் "பெத்தவன்" எந்த நெடுங்கதையைப் படித்தேன். ஏறக்குறைய அந்தக் கதாபாத்திரங்களின் பேச்சு வழக்குகள் எங்கள் பகுதிகளிலும் உள்ளதுதான். ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பன் தன் சுயசாதிக்காரர்களின் மிரட்டலுக்கும் / கௌரவத்திற்காகவும், ஒரு தாழ்த்தப்பட்டவனை விரும்பும் தன் பெண்ணின் விருப்பத்திற்காகவும் ஊர்க்காரர்களால் தொடர்ச்சியான அவமானங்களை சந்திக்கும் கதை. கதையை படித்து முடிக்கும்போது கண்ணீர் அரும்பிவிட்டது. தர்மபுரி சம்பவத்திற்கு முன்பாக எழுதி வெளியிடப்பட்ட கதை. பின்னாளில் இக்கதைப்படியே சம்பவங்கள் அரங்கேறியது ஆச்சர்யம். வடமாவட்டங்களில் ஆதிக்க சாதியால் நடத்தப்பட்ட கௌரவக்கொலைகளைப் பற்றியும் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர். நல்ல படைப்பாளுமை.

இதற்கு பின்னூட்டமாக கணேஷன் குருநாதன் என்பவர் இக்கதை பக்கச்சார்பான புனைவு என்று பின்வரும் சுட்டியைப் படிக்கச்சொல்லி என் முகநூலில் கருத்து தெரிவித்திருந்தார். 

http://achamillai1998.blogspot.in/2013/04/17.html

http://achamillai1998.blogspot.in/2014/02/blog-post_716.html

http://achamillai1998.blogspot.in/2013/04/blog-post.html?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

அனைத்தையும் படித்துவிட்டு நான் எழுதிய பதில்கள் இதோ :

அனைத்து சுட்டிகளையும் படித்தேன். விவரங்களுக்கு நன்றி. இதைப் படித்த பின்பு எழுத்தாளரின் பக்கச்சார்பான போக்கு புரிகிறது. தலித்துகளே இல்லாத / இம்மாதிரியான பிரச்னைகளே இல்லாத எங்கள் கிராமங்களிலும், வன்னியர் சங்கம் மற்றும் பாமக-வின் இளம் சிறுவர்களிலிருந்து வெளி உலகம் தெரிந்தவர்கள்வரை நடந்துகொள்ளும் விதம்தான் சமூகத்தின் பொதுப்புத்தியில் வன்னியர்களைப் பற்றி இவ்விதம் நம்பவைக்கிறது என்று நினைக்கிறேன்.

http://edhir.blogspot.in/2014/02/blog-post_9823.html


பல உள்ளூர் பாமக தலைமைகளே இதற்கு காரணம். அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்து வென்றெடுப்பதே அதிகாரத்தைப் பிடிக்கும் வழியென்பதை அவர்களுக்கு விளங்கவைக்க வேண்டும். எளிமையான மாற்றத்தை சிக்கலாக்குவது இவர்களே என்பது எனது கருத்து.

இதற்கான அவரது பதில் 

விநாயகமூர்த்தி, உங்கள் 'காதல்... கத்தரிக்காய்... கல்யாணம்...' என்ற கட்டுரை மிகச்சிறந்த பார்வையை வெளிப்படுத்துகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி. இதே தான் என்னுடைய பார்வையாகவும் இருக்கிறது. // பொதுப்புத்தியில் வன்னியர்களைப் பற்றி நம்பவைக்கிறது'...// ம்... சில விஷயங்களில் மாறவேண்டும் என்பதை மறுக்கவில்லை. பொதுவாகவே தலைமைப் பண்பு தமிழர்களிடம் குறைவு. மனோபாவம் சார்ந்த விஷயங்களில் செழுமையான பயிற்சி தேவை. இதற்கு உள்ளூர் பாமக தலைமைகள் மட்டுமல்ல, எல்லா தலைமைகளும் தற்போதைய சூழலில் விதிவிலக்கல்ல என்றே கருதுகிறேன்

10.3.14

மதிப்பிற்குரிய எனது அம்மா ஆதிலட்சுமி...


எல்லா அம்மாக்களையும்போல எங்களையும் பாசத்தோடு வளர்த்த என் அம்மா ஆதிலட்சுமி-யின் நினைவு நாள் இன்று. (01-11-2013)

2009 ம் ஆண்டு மறைந்து போனார். தன் ஆயுசு முழுக்க மாடுமேய்த்து எங்களை படிக்க வைத்து ஆளாக்கியதில் என் தந்தையைவிட என் தாயே பெரும்பங்கு வகித்தார். கிராமத்தில் ஒரு புது வீடு கட்டி அவரை மட்டும் தனியாக இருக்கவிட்டு திசைக்கொன்றாய் நாங்கள் இருந்ததில் மனநலம் பாதிக்கப்பட்டு கடைசிக்காலத்தில் சொல்லொணா துயரத்தோடு வாழ்ந்து மறைந்த என் அம்மாவின் படத்தை பார்க்கிறபோதெல்லாம் கட்டுக்கடங்காமல் எழும் குற்ற உணர்ச்சிக்கு அஞ்சி அடிக்கடி அல்லாமல் அவ்வப்போதாக எடுத்து பார்த்துக்கொள்வேன்.

இளையராஜா பாடுவதைப்போல சாகும்வரையிலும் என் அம்மாவுக்கு ஒரு சேலைகூட எடுத்துக்கொடுக்காத துர்பாக்கியவான் நானும்கூட. அவளும் எதையுமே கேட்டதில்லை.

பணிபுரிந்துகொண்டிருந்த படப்பிடிப்பின் இடைவெளியில் ஊருக்குச்சென்ற ஒருநாள் வெந்நீரில் குளிக்கவைத்து தோளில் சாய்த்து தூக்கிவந்து கட்டிலில் அமர்த்தியபோது உயிர் பிரிந்துகிடந்தது. அப்பாவின் மரணமோ, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோவில் அண்ணனின் மடியில் நிகழ்ந்தது. அதற்குமுன்பு வரையில் யாருடைய மரணத்தையும் இவ்வளவு அருகாமையில் பார்த்ததில்லை.

2009 ம் ஆண்டு, ஏற்கெனவே தமிழீழ மக்களின் போர் துயரத்தில் - நிர்வாணத்தோடு நிறுத்தப்பட்டு கண்களையும் கைகளையும் கட்டி சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகளின் கடுமையான அழுத்தத்தோடு பாதிக்கப்பட்டுக்கிடந்த என் மனதில் என் அம்மாவின் மரணம் ஏற்படுத்திய வலியும் கடுமையானது. என்னிடம் எந்த பலனும் எதிர்பாராமல் நான் சுயமாக சிந்திக்க கற்றுக்கொள்ள என்னைத் தயார்படுத்திய என் தாய்க்கு இனி என்ன செய்துவிட முடியுமென தெரியவில்லை, கண்ணீரைத்தவிர.

வாங்க ஒருக்கா சிறைய பார்த்துட்டு வரலாம்...


இந்த நாட்டில் சனநாயகமும் கருத்து சுதந்திரமும் இருக்கிறதென்று நிறையபேர் சொல்கிறார்கள். அப்படி இருந்தும் வெளியில் மேடையில்தான் பேசமுடியவில்லை என்றாலும் இங்கே முகநூலில் தைரியமாக தன் கருத்தை எழுதக்கூட பலபேர் பயப்படுகிறார்கள். கருத்துரிமையை காப்பாற்றிக்கொள்ளக்கூட யாரும் தயாராகயில்லை. அப்படி எழுதுகிறவர்களையும் பயமுறுத்திப் பேச பலர். 

எதிர்க்கட்சியாக இருக்கும்போது பொங்குகிறவர்களெல்லாம் ஆளுங்கட்சியாக மாறியதும் அதே அநியாயத்தை செய்வதும், ஆளுங்கட்சியா இருக்கும்போது பொங்குகிறவர்களெல்லாம் எதிர்க்கட்சியாக மாறும்போது இருக்கும் இடம் தெரியாமல் அடங்கிக்கிடப்பதும் வாடிக்கையாகிவிட்டது. 

நன்றாக கவனித்தீர்கள் என்றால், எளிய மக்களைவிடவும் இந்த மெத்தப் படித்த அறிவாளிகளின் போர்வையில் இருக்கிறவர்கள்தான் பெரும்பாலும் பயந்த மனநிலை கொண்டவர்களாக இருக்கிறார்கள். 

"இப்ப என்னா சொல்றேன்னா, எல்லாரும் வாங்க ஒருக்கா சிறைய பார்த்துட்டு வரலாம்..!"

எதிர் முகாம் நண்பருக்கான பதிலொன்று

"100 பூக்கள் மலருட்டும் - மாவோ" சோலையென்றால் 100 பூக்கள் மலர்வதும் பொதுவெளியென்றால் பல மாற்றுக்கருத்துக்கள் வெளிப்படுவதும் இயல்பானது. முதலில் ஏதோ அறிவாளியாக காட்டிக்கொள்ள முகநூலில் எழுதுவதாக சொல்லும் உங்கள் புத்திஜீவி நினைப்பை மாற்றுங்கள். சமூக வலைத்தளத்தில் எழுதிவிடுவதாலேயே ஒருவன் அறிவாளியாக தெரிகிறான் என்பதை இங்கே எந்த முட்டாளும் நினைப்பதில்லை. சமூக வலைக்குள் வரும்போது இப்படியான முட்டாள்தனப் பார்வை இருக்கவே கூடாது. பிறர் நம்மை அறிவாளி என்று கருதிவிடுவதால் என்ன சாதித்துவிட முடியுமென நினைக்கிறீர்கள்? இதுவொரு வளர்ச்சியடைந்த டீக்கடை பெஞ்சு. 

ரஷ்யாவை உதாரணம் சொல்லும் நீங்கள் உலகில் சின்ன சின்ன நாடுகள் எல்லாம் சுதந்திரமான இறைமையுடன் நல்லபடியாக இல்லவேயில்லை என்கிறீர்களா? உங்கள் பிரச்னைகளை அடுத்தவன் வந்துதான் தீர்ப்பான் என்று எண்ணுவது மடமையா யில்லை ஆயிரம் பிரச்சனை வந்தாலும் சொந்தக்காலில் நிற்கப் பழக முயலும் எண்ணம் மடமையா? 

"தமிழர்களின் பிரச்சனையில் தமிழரல்லாதார் முடிவெடுக்கும் முறைமை ஒழிக்கப்பட வேண்டும்" என்றார் பெரியார். 

முடியுமா முடியாதா என்பதல்ல பிரச்னை. எது சரியாய் இருக்கமுடியும் என்பதே. 

யாரோ ஒரு அரசியல்வாதி பேசியதாலேயே இந்த எண்ணம் எனக்கு வந்தது என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பது உங்கள் பிஜேபி மூளை. நான் நிச்சயம் அவ்வாறான முட்டாளில்லை. 

சமூக வலைதளம் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிப்பதாக நீங்கள் உணர்ந்தால் அதை மூடிவிட்டு உங்கள் வேலையை தொடரலாமே. 

இங்கே ஒரு சராசரி காங்கிரசுக்காரனுக்கே உங்கள் அளவு இந்த பார்வையும், இந்த தேசிய அறிவும் இருக்கிறது. நீங்கள் புதியதாக சொல்ல முயன்றால் யோசிக்கலாம். 

நண்பரே, யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நீங்கள் செய்துவரும் மங்கள்யான் ஆராய்ச்சிக்கு நடுவே இங்கே வந்து பொன்னான நேரத்தை பயன்படுத்தி பதில் எழுதுவதற்கு மிக்க நன்றி.

24 ஆண்டு சிறை வாழ்க்கையில் மனநலம் பாதித்த பெண்



மானத்தை காக்க கொலை 24 ஆண்டு சிறை வாழ்க்கையில் மனநலம் பாதித்த பெண் விடுதலை

மானத்தை காக்க கொலை செய்த வழக்கில் கணவனுடன் சிறை சென்று 24 ஆண்டுகளுக்கு பிறகு மனநல பாதிப்புடன் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.திருப்பூரை சேர்ந்தவர் சுப்பிரமணி(65). இவரது மனைவி விஜயா(60). சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தெருவில் நடனமாடி பிழைப்பை நடத்தி வந்த விஜயாவை, பணக்காரரான சுப்பிரமணி காதலித்து கரம் பிடித்தார். குடும்பத்தார் எதிர்ப்பை மீறி நடந்த திருமணத்தால் வீட்டை விட்டு விரட்டப்பட்ட சுப்பிரமணி தனது உறுதியான காதலுக்காக, காதல் மனைவியுடன் தானும் தெருவில் நடனமாடி பிழைப்பை ஓட்டி வந்தார்.பகலில் தெருவில் நடனமாடுவதும், இரவில் கிடைக்கும் இடத்தில் தங்குவதுமாக வாழ்க்கையை ஓட்டி வந்தனர். 24 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் இரவு இவர்கள் வீதியோரம் படுத்திருந்த போது, போதையில் வந்த வாலிபர் ஒருவர், தெருவோர பெண்தானே என்று கருதி, விஜயாவை பணத்தை காட்டி ஆசைக்கு இணங்க மிரட்டினான். மறுத்த விஜயா அவனோடு போராடினார். 

அதைக்கண்ட சுப்பிரமணியும் வாலிபருடன் சண்டை போட்டார். இதில் தவறி கீழே விழுந்த அந்த வாலிபர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். மானத்தை காக்க நடந்த போராட்டத்தில் அந்த சாவு, கொலை வழக்காக மாறியதால் கணவன்&மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர்கள், மேல்முறையீடு செய்யவும், தொடர்ந்து வழக்கை நடத்தி செல்ல வும் முடியாததால் சுப்பிரமணி வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், விஜயா, வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் தண்டனையை அனுபவித்தனர். இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த தகவல் சக கைதிகள் மூலம் வெளியில் கசிய, அவருக்காக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கோர்ட்டில் 2011ல் வழக்கு தொடர்ந்து அதன் மீதான தீர்ப்பில் விஜயாவை கோர்ட் விடுதலை செய்தது.நேற்று காலை சிறையிலிருந்து விடுதலையான விஜயா, தற்போது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், அரியூர் மகளிர் விடுதியில் தஞ்சமடைந்துள்ளார்.


சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்...

(சுய அறிமுகத்துக்குப் பின், பேச ஆரம்பித்த கொஞ்ச நாள்ல..)

1. உன்ன நா எப்டி கூப்பிட்றது??

அதாவது முழுப்பேர் சொல்லியா? இல்ல சுருக்கமாவா? இல்ல வேற ஏதாவது செல்லப் பேர் சொல்லிக் கூப்பிட்றதா?“னு அர்த்தம். உரிமையா பேச ஆரம்பிக்கிறதுக்கான முதல் படி இது தான். “உங்க இஷ்டம்“னு பதில் வந்தா, செல்லம்.. புஜ்ஜி.. குட்டி“னு ஏதாவது பேர் வச்சு கூப்பிட ஆரம்பிப்பாங்க. (எங்க வீட்ல ஒரு குட்டிப்பாப்பா இருக்கு, இல்ல பூனைக்குட்டி இருக்கு.. அத இப்டி தான் கூப்டுவேன்.. சோ க்யூட்..“னு உளறுவாங்க)

2. டி“போட்டு பேச ஆரம்பிப்பாங்க..

ஏதாவது பேசிகிட்டு இருக்கும்போது மறந்த மாதிரி “போடி“னு சொல்வாங்க. உடனே “ஸாரி ஸாரி தெரியாம சொல்லிட்டேன்பா..னு பதறிகிட்டு மன்னிப்பு கேப்பாங்க. நாளுக்கு நாள், வேணும்னே சீண்டுறதுக்காக சொல்ல ஆரம்பிச்சு பின் அதுவே பழக்கமாய்டும்.

3. உனக்கு நா யாரு?

இது அடிப்படை உள்நோக்கத்துல கேக்கப்படுது.. சாதாரணமா பேசிகிட்டு இருக்கும்போது திடீருனு “ஏம்பா, உனக்கு நா என்ன வேணும்? ஜஸ்ட் ப்ரெண்டா? க்ளோஸ் ப்ரெண்டா?“ங்குற மாதிரி போட்டு வாங்குவானுக.

4. உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்றேன்..

சாயந்திரம் ஆறு மணிக்கு ஆன்லைன் வரலாம்னு பேசிருப்பாங்க. ஆனா 5 மணிக்கே வந்து வெயிட் பண்ணேன்னு சீன் போடுவாங்க. ரெண்டு நிமிசம் லேட்டா வந்தாலும் ஓவரா கோவிச்சு, “உன்ன ரொம்ம்ம்ப மிஸ் பண்ணேன்“னு சொல்வாங்க.

5. உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்..

கொஞ்ச நாள் பேசுனதுக்கப்புறம் இந்த வசனத்த அடிக்கடி சொல்வாங்க. ஆனா என்னானு சொல்ல மாட்டாங்க. இப்ப வேணாம்.. ஆனா கண்டிப்பா சொல்றேன்னு சொல்வாங்க. எதிர்பார்ப்ப தூண்ட்றாங்களாம்.

6. பசிக்கவே மாட்டீங்குது.. உன்கூட பேசினா போதும்..

ஏற்கனவே வயிறுமுட்ட திண்ணுட்டு தான் வந்திருப்பாங்க. ஆனா இப்படி சொல்றதுனால, எதிர்தரப்புல இருக்குறவங்க ”ப்ளீஸ் சாப்பிட்டு வா, உடம்ப கெடுத்துக்காத“னு அக்கறையா பேசுவாங்க.

7. நா ரொம்ம்ம்ம்ப பொறுப்பான பருப்பு..

படிக்குற காலத்துல எந்நூறு அரியர்ஸ் வச்சிருப்பான், ஊர் சுத்திகிட்டு வெட்டியா இருப்பான். ஆனா ச்சாட்டிங்னு வந்துட்டா போதும்... அக்கறையும் அட்வைசும் பொங்கிட்டு வரும். “நல்லா படி, அப்பா அம்மாவுக்கு மரியாதை குடு, மத்தவங்க பெருமைப்பட்ற மாதிரி நட, எதையாவது சாதிக்கணும், தன்னம்பிக்கைய வளத்துக்க“ .. அப்படி இப்படினு வீராவேசமா பேசுவாங்க. அப்பதான் இவங்கள பொறுப்பானவன்“னு அந்தப் பொண்ணு மெச்சிக்குமாம்.

8. நா பெரிய அப்பாடக்கராக்கும்..

இவுனுகளுக்கு வேலை வெட்டியே இருக்காது.. ஆனா நா பெரிய அப்பாடக்கர், சமூக சேவை பண்றேன், கண் தானம் பண்ணிருக்கேன், இரத்தம் குடுத்தேன், ஏழைக் குழந்தைகளுக்கு உதவி பண்றேன்“னு ஓவரா அளந்து விடுவானுங்க.

9. கொசுவத்தி சுத்துவானுக..

நா ஒரு பொண்ண உயிருக்கு உயிரா காதலிச்சேன்.. ஆனா அவ என்ன வேணாம்னு உதறிட்டுப் போய்ட்டா“னு ஒப்பாறி வைக்காத குறையா கொசுவத்தி சுத்துவானுக. How unlucky she is?’னு ஃபீல் பண்ணி ஆறுதல் சொல்லணுமாம்... சென்டிமென்டா டச் பண்றாய்ங்கப்பா..

10. இந்த அளவுக்கு நா யார்கிட்டயும் பேசினதில்ல..

எந்தப் பொண்ணுகிட்ட ச்சாட் பண்ணினாலும் இந்த டைலாக் மறக்காம வந்திடும். ஒரே நேரத்துல நாலு பொண்ணுகூட ச்சாட் பண்ணுவான்.. இதே டைலாக்க நாலுபேர்கிட்டயும் சொல்லுவான். தனக்கு முக்கியத்துவம் குடுக்குறான்னு அந்தப் பொண்ணு நெனைக்கணுமாம்.

11. அப்புறம்.. சொல்லு..

இந்த ரெண்டு வார்த்தைகள் இல்லாம ச்சாட்டிங்கே இருக்காது. நடு ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் ச்சாட் பண்ணிட்டு குட் நைட் சொல்லுவாங்க.. ஸ்வீட் ட்ரீம்ஸ்“னு சொல்லிட்டு “அப்புறம்.. சொல்லு“னு திரும்ப ஆரம்பிப்பாங்க. உன் கூட பேசினா டைம் போறதே தெரில“னு வேற அப்பப்ப சொல்லிக்குவாங்க.

12. உன் ப்ரெண்ட்ஷிப் கிடைக்க குடுத்துவச்சிருக்கணும்.

சாதாரண விஷயத்தப் பத்தி பேசினாகூட, பொண்ணுங்கள புகழ்ந்து தள்ளிடுவாங்க. உதாரணத்துக்கு, பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபா பிச்சை போட்டேன்“னு அந்தப் பொண்ணு சொன்னாகூட, “ச்சே.. எவ்ளோ பரந்த மனசு உனக்கு? உன்ன மாதிரி இரக்க குணம் உள்ள பொண்ண நா பாத்த்தேயில்ல.. இந்தக் காலத்துல இதெல்லாம் ரொம்ப பெரிய்ய்ய விஷயம்.. உன்ன என் ஃப்ரெண்ட்னு சொல்றதுக்கே பெருமையா இருக்கு, உனக்கு வரப்போற புருஷன் ரொம்ம்ம்ப குடுத்து வச்சவன்“னு புகழ்ந்து தள்ளிடுவாய்ங்க.

13. கல்யாணப் பேச்சு..

என் வீட்ல பொண்ணு பாக்க ஆரம்பிக்கிறாங்க“னு பேச்ச ஆரம்பிப்பாங்க. பொண்ணு எப்படியிருக்கனும்னு எதிர்பார்க்குறீங்க“னு கேட்டுட்டா போதும். “உன்ன மாதிரி அமைதியா, உன்ன மாதிரி அழகா, உன்ன மாதிரி அக்கறையா இருக்கணும்“னு வரிசையா அடுக்கிகிட்டே போவாங்க. அந்தப் பொண்ணுக்கு கோவம் வந்துடுச்சுனா உடனே “ஐயோ.. நா உன்ன மாதிரினு தான் சொன்னேன். உன்னைனு சொல்லல“னு சமாளிப்பானுக.

14. என்னையெல்லாம் யாருக்குப் பிடிக்கப்போகுது??

எனக்கு யாருமே இல்லாத மாதிரி தோணுது, என்னைய எந்தப் பொண்ணு கல்யாணம் பண்ணிக்குவா? என்னைய யாருக்குப் பிடிக்கப்போகுது, வாழ்க்கைல ஒரு பிடிப்பே இல்ல“னு ஓவரா விரக்தியா பேசுவாங்க. அப்ப தானே பதிலுக்கு ”நா இருக்கேன்ல”னு அந்தப் பொண்ணு சொல்லும்..

15. உனக்குப் பிடிக்கலேனா யூரின் கூட போக மாட்டேன்..

பேச்சுவாக்குல அந்தப் பொண்ணு எதையாவது தனக்குப் பிடிக்கலேனு சொல்லிட்டாப் போதும்.. உடனே “இனிமே நா அத பண்ணி மாட்டேன், உன்ன விட எனக்கு எதுவும் முக்கியமில்ல“னு பிலிம் போடுவாங்க. உதாரணத்துக்கு ஃப்ரெண்ட்ஸ் கூட சினிமாவுக்குப் போறேன்“னு சும்மா போட்டு வாங்குவானுக. என் கூட ச்சாட் பண்ண மாட்டியா?“னு அவ கேட்டுட்டா போதும். உடனே, சரி நா கேன்சல் பண்ணிட்றேன். எனக்கு ப்ரெண்ட்ச விட, எனக்கு உன் கூட பேசுறதுதான் முக்கியம்னு சொல்வாங்க.

16. நா ரொம்ப நல்லவனாக்கும்..

உன் கூட பேச ஆரம்பிச்சதுக்கப்புறம் வேற எந்த பொண்ணையும் பாக்க தோணல. அம்மாகிட்ட கூட கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டேன் தெரியுமா??? உன் ப்ரெண்ட்ஷிப் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, உன் கூட பேசிகிட்டே இப்படியே இருந்திட்றேன்“னு சொல்வாங்க.

17. எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு..

இது கொஞ்சம் பழைய டெக்னிக் தான். இருந்தாலும் விட மாட்டிங்குறாய்ங்க. “உன் போட்டோவ பாத்தேன், எங்கயோ பாத்த மாதிரியிருக்குப்பா, ரொம்ப நெருங்குன சொந்தமா தெரியுற, அந்நியமாவே பாக்கத் தோணல தெரியுமா..“னு ரீல் விடுவாங்க. அதே மாதிரி தங்களோட போட்டேவ அனுப்பும்போது, உடற்கட்டு, கை, மார்பு தெரியுற மாதிரியான போட்டோவ பெரும்பாலும் அனுப்புவாங்க. ஆண்மையா இருக்கேன்னு காட்றாங்களாம்.

18. உன்கிட்ட உண்மைய மட்டும் தான் பேசுவேன்..

வெளிப்படையா இருக்காங்களாம்.. எட்டு முறை லூஸ் மோசன் போனதைக் கூட சொல்லுவாங்க.. அந்த அளவுக்கு தன்கிட்ட எல்லாத்தையும் ஓபனா சொல்றாங்களேனு பொண்ணுங்க ஆச்சர்யப்படணுமாம்.

19. பொசசிவ்வை கிளறுவாங்க..

கஸ்டமர்கேர்“ல இருந்து ஒரு பொண்ணு பேசுச்சு.. வாய்ஸ் நல்லாயிருந்துச்சுப்பா..னு சொல்லி பொண்ணுங்களோட அடிப்படை பொசசிவ் குணத்தை கிளறுவாங்க. திட்டு வாங்கினதுக்கப்புறம், “ஏய் சும்மா சொன்னேன்பா.. உன்குரலுக்கு ஈடு எதுவுமில்ல“னு வழிவானுக.

20. என் மேல நம்பிக்கை இல்லேனா....

“எனக்கு நெட் ப்ராப்ளம், நா ஊருக்கு போறேன்.. அதுனால ச்சாட்டிங் வர முடியாது, உன் நம்பர்ல இருந்து SMS பண்றியா? என் மேல நம்பிக்கை இல்லேனா காய்ன் போன்ல இருந்து கூட பேசுப்பா..“ இது அவர்களின் உச்சகட்ட ஆயுதம். நம்பிக்கை இல்லையா?னு கேக்குறதுல தான் பல பொண்ணுங்களோட போன் நம்பர்கள் வாங்கப்படுது.. அப்புறம் என்ன? ச்சாட்டிங் குறைந்து எஸ்எம்எஸ் ஆரம்பிச்சுடுவாங்க. அப்புறம்... வேறென்ன?? அப்படியே போக வேண்டியதுதான்.

நா இங்க சொல்லிருக்குற யுத்திகள் பாதிதான். சொல்லிகிட்டேபோனா ஒரு பதிவு பத்தாது. இது மாதிரியான ச்சாட்டிங் மன்மதர்கள், பொண்ணுங்ககிட்ட எப்படி பேசினா, என்ன பதில் வரும்னு தெளிவா தெரிஞ்சு வச்சுக்குறாங்க. அதுக்கேத்தாப்புல தான் வலை விரிக்குறாங்க. உஷாரா இருக்குற பொண்ணுங்க சாமர்த்தியமா தப்பிச்சுக்குவாங்க. பக்குவமில்லாதவர்கள் சிக்கிக்குறாங்க.

இதையெல்லாம் படிச்சுட்டு ஆண்கள் மட்டும் தான் இப்படி ச்சாட் பண்றாங்களா? பொண்ணுங்க மேல தப்பே இல்லையா?னு சண்டை போடலாம். அதப்பத்தின சர்வே இன்னும் முடியல. அதுனால இன்னொரு பதிவுல அதைப்பற்றி பார்க்கலாம்.

(நன்றி : Rajini Mahes Sinnathamby முகநூல் பக்கத்திலிருந்து...)

தமிழில் ஓரெழுத்துக்களின் பொருள்





தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்...



                         -               எட்டு
                        -               பசு
                          -               கொடு, பறக்கும் பூச்சி
                         -               சிவன்
                        -               தசை, இறைச்சி
                          -               அம்பு
                          -               ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
                         -               வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா                         -               சோலை, காத்தல்
கூ                         -               பூமி, கூவுதல்
கை                       -               கரம், உறுப்பு
கோ                       -               அரசன், தலைவன், இறைவன்
சா                         -               இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ                            -               இகழ்ச்சி, திருமகள்
சே                         -               எருது, அழிஞ்சில் மரம்
சோ                        -               மதில்
தா                         -               கொடு, கேட்பது
தீ                           -               நெருப்பு
து                          -               கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ                         -               வெண்மை, தூய்மை
தே                        -               நாயகன், தெய்வம்
தை                        -               மாதம்
நா                         -               நாக்கு
நீ                            -               நின்னை
நே                         -               அன்பு, நேயம்
நை                       -               வருந்து, நைதல்
நொ                       -               நொண்டி, துன்பம்
நோ                        -               நோவு, வருத்தம்
நௌ                     -               மரக்கலம்
பா                         -               பாட்டு, நிழல், அழகு
பூ                           -               மலர்
பே                         -               மேகம், நுரை, அழகு
பை                       -               பாம்புப் படம், பசுமை, உறை
போ                      -               செல்
மா                        -               மாமரம், பெரிய, விலங்கு
மீ                           -               ஆகாயம், மேலே, உயரம்
மு                         -               மூப்பு
மூ                         -               மூன்று
மே                        -               மேன்மை, மேல்
மை                      -               அஞ்சனம், கண்மை, இருள்
மோ                     -               முகர்தல், மோதல்
யா                        -               அகலம், மரம்
வா                        -               அழைத்தல்
வீ                          -               பறவை, பூ, அழகு
வை                      -               வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ                   -               கௌவுதல், கொள்ளை அடித்த

அமிர்தலிங்கம் கொலையின் பின்னணி என்ன?





(சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு)

பிரேமதாசாவும் விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தைத் தொடங்கியதை குலைத்து பிரேமதாசாவுக்கு கடும் நெருக்கடிகளை உருவாக்க திட்டமிட்டது இந்திய உளவுத் துறை! தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இருவரும் 1989 ஜூலை 13 ஆம் தேதி கொழும்பில் அமிர்தலிங்கம் வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். அமிர்தலிங்கம் அவர்களோ, யோகேஸ்வரனோ, ஆயுதம் தாங்கிய போராளிகள் அல்ல. காந்திய வழியைப் பின்பற்றியவர் அமிர்தலிங்கம். அவர் செய்த ஒரே தவறு, இந்திய உளவுத் துறையை முழுமையாக நம்பியதுதான். தமிழ் ஈழ விடுதலையை இந்தியா மீட்டெடுத்து, தன்னிடம் ஒப்படைக்கும் என்று அவர் மலை போன்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தார். ஆனால் நடந்ததோ வேறு.

அமிர்தலிங்கம் - யோகேஸ்வரன் ஆகிய இரு தலைவர்களையும், அவரது வீட்டில் சுட்டுவிட்டு தப்பி வெளியே ஓடி வந்த 3 பேரை அமிர்தலிங்கம் வீட்டில் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட காவலர்கள் சுட்டுக் கொன்றனர். இந்தக் கொலைப் படைக்கு தலைமை தாங்கி காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டவர் விசு, அலாய்சியஸ், விக்னம் ஆகிய மூன்று பேர். இதில் விசு - யார்? மாத்தையாவின் வலதுகரமாக செயல்பட்டவர்.

இந்திய உளவுத் துறையின் வலையில் சிக்கியிருந்த மாத்தையா - பிரேமதாசாவுடன் புலிகள் பேச்சுவார்த்தையைக் குழப்பிட இந்திய உளவுத் துறையின் திட்டத்தை ஏற்று நடத்திய கொலைதான் இது! இதைச் செய்தது யார் என்பது பற்றி பத்திரிகைகளிலே குழப்பமான செய்திகள் வந்தன. ‘வீரகேசரி’ நாளேடு விடுதலைப் புலிகள், அமிர்தலிங்கத்தைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுவிட்டதாக செய்தி வெளியிட்டது. அதே நாளில் கொழும்பிலிருந்து வெளிவந்த ஆங்கில நாளேடுகள், இந்தக் கொலையில் தங்களுக்கு தொடர்பில்லை என்று புலிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர் என்று செய்தி வெளியிட்டன. ஒரே நாளிலேயே இரண்டு செய்திகளும் வெளி வந்ததுதான் வேடிக்கை.

“விடுதலைப் புலிகள் தமிழர்களைக் கொல்லும் சக்தியுடனேயே இருக்கிறார்கள். இலங்கை அரசால் விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, இந்திய ராணுவம் வடக்கு - கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேறுவது ஆபத்து” என்ற கருத்தை உருவாக்குவதே உளவு நிறுவனங்களின் திட்டம். இந்தத் திட்டத்தை அப்படியே ஜே.என். தீட்சத்தும் தனது நூலில் (Assignment in Colombo) வழிமொழிந்து அமிர்தலிங்கம் கொலையை நடத்தியது விடுதலைப் புலிகளே என்று எழுதினார்.

“இலங்கைத் தமிழர்களை ஜனநாயகப் பாதைக்கு அமிர்தலிங்கம், திருப்பி விடுவார் என்ற அச்சத்தின் காரணமாகவே விடுதலைப் புலிகள் அமிர்தலிங்கத்தைக் கொலை செய்தார்கள்” என்று ஜே.என். தீட்சத் உண்மையை மறைத்து எழுதினார். கொன்றது விடுதலைப் புலிகள் அல்ல; இந்திய உளவு நிறுவனம் - மாத்தையாவைப் பயன்படுத்தி நடத்திய சதி என்பது தெரிந்திருந்தும் புலிகள் மீதே பழி போடும் நோக்கத்தையே பிரதிபலித்தார்.

அமிர்தலிங்கத்தைச் சுட்ட 3 பேரும் தப்பி வந்தபோது, அமிர்தலிங்கத்தின் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதும், அவர்கள் மாத்தையாவின் ஆட்கள் என்பதும் உண்மை. இது பற்றி மற்றொரு ஆதாரத்தை நான் முன் வைக்க விரும்புகிறேன். தமிழ் ஈழத்திலே நடந்த அரசியல் படுகொலைகள் பலவற்றுக்கும் காரணமாக இருந்த இந்திய உளவுத் துறை, அத்தனை பழிகளையும் விடுதலைப் புலிகள் மீதே போட்டதும், இங்கே பார்ப்பன ஊடகங்கள் அதையே மீண்டும் மீண்டும் எழுதி, உண்மையாக உறுதி செய்ததும், பாமர மக்களை நம்பச் செய்ததும், எவ்வளவு மோசமான பார்ப்பன சூழ்ச்சி என்பதை, நாம் புரிந்து கொள்ள வேண்டும். ராஜீவ் சர்மாவும் கூசாமல் இந்த நூலில் அதே பழியைத்தான் போடுகிறார்!

ஒரு மகத்தான விடுதலை இயக்கத்தின் மீது, இப்படி புழுதிவாரி தூற்றி, களங்கப்படுத்திய இந்த கயமைப் பிரச்சாரங்களுக்கு பதில் கூறுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றே கருதுகிறேன். அவர்களோ விடுதலைப் புலிகள் மீது எந்த ஆதாரமும் இல்லாமல் அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள். அதே வழியில் எந்த ஆதாரங்களும் இல்லாமல், ஏதோ, உணர்வுகளின் அடிப்படையில் நாம் அவற்றை மறுக்கவில்லை. மாறாக, மறுப்புகளை உரிய ஆதாரங்கள் தரவுகளுடன் தான் மறுக்கிறோம். அமிர்தலிங்கத்தை விடுதலைப் புலிகள் ஏன் கொலை செய்ய வேண்டும்? தீட்சத் கூறுவதுபோல் ஈழத் தமிழர்களின் கருத்துகளை அப்படியே தன் பக்கம் திருப்பிவிடக் கூடிய செல்வாக்குள்ள தலைவராகத் தான் அமிர்தலிங்கம் இருந்தாரா?

அந்தக் காலக்கட்டத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் முழுமையாக விடுதலைப் புலிகளிடமே தங்கியிருந்தது என்ற உண்மை சிறு குழந்தைகளுக்குக்கூட தெரியுமே! அமிர்தலிங்கத்தையும், யோகேஸ்வரனையும் விடுதலைப் புலிகள் கொல்வதற்கு ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறியாக வேண்டிய கட்டாயம் - உளவு நிறுவனத்துக்கும், ஜெ.என். தீட்சத்துக்கும் இருந்தது. எனவே சொத்தையான எவருமே ஏற்றுக் கொள்ள முடியாத காரணத்தை ஜே.என். தீட்சத் முன் வைக்கிறார்; அவ்வளவுதான்.

அமிர்தலிங்கத்தை சுட்டுக் கொன்றவர்கள் பற்றிய விவரங்களை அமிர்தலிங்கத்தின் வரலாற்றை எழுதிய டி.சபாரத்தினம் விளக்கிக் கூறியுள்ளார். டி.சபா ரத்தினம், 1996 ஆம் ஆண்டு, அமிர்தலிங்கத்தின் வரலாற்றை எழுதி ‘The Murder of a Moderate’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். அதில் அமிர்தலிங்கம் கொலை பற்றி எழுதப்பட்டுள்ளது. என்ன?

“அமிர்தலிங்கத்தைக் கொன்றவர்கள், எந்த அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதில் பெரும் குழப்பமே நீடிக்கிறது. இதில் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. அமிர்தலிங்கத்தை சுட்ட விசு, வவுனியாவுக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுக்கு தலைவராக இருந்தவர். அதுவரை அந்தப் பதவியில் இருந்த தினேஷ் என்பவர் காணாமல் போன பிறகு நியமிக்கப்பட்ட விசு, அதன் பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி விட்டதாகக் கூறுகிறார்கள். வேறு சிலர், “இல்லை, விசு, அப்போதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில்தான் இருந்தார்” என்றார்கள். லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் தலைமையகம் அமிர்தலிங்கம் கொலையில், விடுதலைப் புலிகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிக்கையே வெளியிட்டது. புலிகளின் அந்த அறிக்கை அமிர்தலிங்கம், கொலையைக் கண்டித்தது. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையை விரும்பாத சக்திகளே, இந்தக் கொலையை செய்து, விடுதலைப் புலிகள் மீது பழிபோட்டு, களங்கம் கற்பிக்கின்றன என்றும் அந்த அறிக்கை குற்றம் சாட்டியது. அத்துடன், “தமிழர் அய்க்கிய விடுதலை முன்னணி தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரின் மறைவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் ஆழ்ந்த கவலையுடன் துயரத்தை வெளிப்படுத்திக் கொள்கிறது. சில ஈவிரக்கமற்ற கொடூர சக்திகள் விடுதலைப் புலிகளை களங்கப்படுத்தி, அரசுக்கும் புலிகளுக்குமிடையே நடக்கும் பேச்சு வார்த்தையை சீர்குலைக்க திட்டமிடுவதாகவே சந்தேகிக்கிறோம்.”

- “The LTTE learned with deep distress the tragic demise of the T.U.L.F. leaders, Amirthalingam and Yogeswaran. We suspect that diabolical forces are at work to discredit the organization and to disrupt the current peace talks between the LTTE and the government of Sri Lanka” - என்று அந்த அறிக்கை கூறியது.

ஆக, அமிர்தலிங்கம் வரலாற்றை எழுதியவறே புலிகள் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்யவில்லை. இத்தகைய ராணுவ ரீதியான நடவடிக்கைகளை புலிகள் மேற்கொண்டால் அவர்கள் அதை மறுக்கும் வழக்கமுமில்லை என்பது புலிகள் வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

- இந்திய ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற விடுதலைப் புலிகள் நியாயமான கோரிக்கைக்கு இலங்கை அரசே ஆதரவு தந்து போர் நிறுத்தம் செய்து புலிகள் சம்மதத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்த ஒரு நல்ல வாய்ப்புச் சூழலில் கிடைத்த நல்ல வாய்ப்பை விடுதலைப் புலிகளே குலைப்பார்களா என்பதை நடுநிலையில் சிந்திக்கும் எவருமே புரிந்து கொள்ள முடியும்.

இந்த உளவு நிறுவன சதியை அன்றைய பிரேமதாசா அரசும் நன்றாகவே புரிந்து கொண்டது. இலங்கை அரசாங்கமே நடத்தும் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகை இது பற்றி வெளியிட்ட செய்தியே (1989 ஜுலை 14) என்ன தெரியுமா?

“அமிர்தலிங்கம் கொலையை நடத்தியதே விடுதலைப் புலிகள்தான் என்று தவறாக, புலிகள் மீது பழிபோடும் முயற்சிகள் நடக்கின்றன. இத்தகைய முயற்சிகள் பற்றி, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்” - இதுதான் இலங்கை அரசின் அதிகாரபூர்வ பத்திரிகை வெளியிட்ட செய்தி.

ஈழப் போராட்டத்தின் தொடக்கக் காலத்திலிருந்து உன்னிப்பாக ஆராய்ந்து ஜெயரத்தினம் வில்சன் என்ற ஆய்வாளர் ‘Break-up of Srilanka’ என்ற நூலை எழுதியுள்ளார். அதில் 1983-86 ஆம் ஆண்டுகளின் நிலையை இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“எனக்கு தெரிந்தவரை இலங்கையில் தங்களின் தலையீட்டுக்காகவே இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் திட்டங்களை உருவாக்கி வெவ்வேறு கட்டங்களில் அமுல்படுத்தி வந்துள்ளனர். இந்தியாவின் இத் திட்டத்தால் தமிழர் அய்க்கிய முன்னணி தலைவர்களும், போராளி இயக்கங்களும் நம்பிக்கை பெற்றன. தமிழர் தலைவர்களை ஏமாற்றி திசை திருப்புவதுதான் இந்தியாவின் நோக்கம் என்ற கருத்து ஊகமாகக்கூட இருக்கலாம். ஆனால் - ஒன்று மட்டும் உண்மை. தமிழ் தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் இந்தியா இந்த உதவிகளை செய்ததன் மூலம் அவர்கள் அனைவரும், இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டார்கள்” என்று எழுதும் ஜெயரத்தனம் வில்சன், மேலும் எழுதுகிறார்:

“இந்தியாவின் ‘ரா’ (RAW) உளவு நிறுவனம், இந்தக் கருத்தை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டது. ‘ரா’வின் ஏஜெண்டுகள் தமிழ் போராளி குழுக்களிடையே ஊடுருவினார்கள். அவர்களிடமிருந்து பல முக்கிய ரகசிய தகவல்களை சேகரித்ததோடு, போராளிகள் குழுக்களிடையே பிளவுகளை உருவாக்கி, ஒரு குழு, மற்ற குழுவை அடக்கிடும் வலிமை பெற்று விடாமல், சமநிலையில் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர். இந்த முயற்சியில் முதல் கூட்டத்தில் ‘ரா’ உளவு நிறுவனம் வெற்றிப் பெற்றது என்பது உண்மைதான். ஆனால், கடைசியாக விடுதலைப் புலிகள், வலிமை பெற்று உயர்ந்து நின்றதைத் தடுக்க முடியாமல் ‘ரா’ அவர்களிடம் தோற்றுப் போய் விட்டது” - என்று எழுதுகிறார். ஆக -

• அமிர்தலிங்கத்தை சுட்டவர்கள் - மாத்தையாவின் ஆட்கள்.

• அமிர்தலிங்கம் மரணத்தைக் கண்டித்த - புலிகள் இயக்கம். அவரைக் கொன்றவர்கள் பேச்சுவார்த்தையை குலைக்க விரும்பும் சக்திகள் என்று பகிரங்க அறிக்கை விடுத்தது.

• அமிர்தலிங்கம் வரலாற்றை எழுதியவரே கொலையில் உறுதியான முடிவுக்கு வரவில்லை.

• இலங்கை அரசே, அமிர்தலிங்கம் கொலையில் புலிகள் தொடர்பை மறுத்தது.

• அமிர்தலிங்கத்தை கொலை செய்யக் கூடிய தேவையோ, அரசியல் சூழலோ புலிகளுக்கு இல்லை - இவ்வளவுக்குப் பிறகு ராஜீவ் சர்மா, அமிர்தலிங்கத்தைக் கொன்றது புலிகள் தான் என்று பழிபோட்டு விடுகிறார்.

ஒரு காலத்தில் ஈழத்தில் தமிழர்களின் செல்வாக்கு மிக்க தலைவராக உயர்ந்து நின்ற அமிர்தலிங்கம், 1981க்குப் பிறகு இந்தியாவை நம்பினார். இந்திரா காந்தி தமிழ் ஈழத்தை வென்று, தம்மிடம் ஒப்படைப்பார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால், 1984 இல் இந்திரா, சீக்கியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டவுடன் அவரது கனவு தகர்ந்தது.

அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர் 5 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அந்த 5 ஆண்டுகாலமும் தற்காலிகமாக தமிழ்நாட்டில் அரசு பாதுகாப்போடு தங்கியிருந்தார். இந்திய உளவு நிறுவனத்தோடு அமிர்தலிங்கம் மேற்கொண்ட ரகசிய உடன்பாடுகள் இலங்கை நாடாளுமன்றத்துக்கு வந்த அமிர்தலிங்கம் வழியாக அம்பலமாகிவிடுமோ என்ற அச்சம், ‘ரா’ உளவு நிறுவனத்துக்கு வந்திருக்கக் கூடும். தாங்கள் வகுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கும் ரகசிய திட்டங்கள் அம்பலமாவதற்கு உளவுத் துறை எப்போதுமே வாய்ப்புகளைத் தருவதில்லை, இது உளவுத் துறையின் செயல்பாடுகளை அவதானிப்போருக்கு நன்றாகவே தெரியும். அந்த சதிக்கே அமிர்தலிங்கம் பலியானார்.

இதேபோல், 1985 ஆம்ஆண்டில் யாழ்ப்பாணத்தில், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான வி.தர்மலிங்கம், எம். ஆலால சுந்தரம் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டபோது அந்தப் பழியும் விடுதலைப் புலிகள் மீது தான் போடப்பட்டது. அது உண்மை தானா? அதையும் தான் பார்த்து விடுவோமே!


நன்றி கீற்று இணையம்