அருமையான இயக்கம். நேர்த்தியான ஒளிப்பதிவு. சமகாலத்து தமிழ் இயக்குனர்களில் மிகவும் ஆளுமையான திரைமொழியை கையாளும் இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஒவ்வொரு காட்சிக்கோணத்திற்கும் பெரிதும் உழைத்திருக்கிறார்கள். ஒரு காட்சியை விளக்க போதுமான குறைந்தபட்ச கோணங்களைக் கொண்டு தொய்வில்லாமல் கதை சொல்லியிருப்பது அருமையோ அருமை. அதிலும் ராஜாவின் இசை... ராஜா ராஜாதான். சராசரியான ஒரு தமிழ்ப்படத்தை பார்த்தமாதிரியில்லாமல் வெளிநாட்டு படத்தை பார்த்தமாதிரியான உணர்வு. படம் பார்க்கும்போது எதுவுமே தோன்றாமல் படம் முடிந்து வெளியே வந்ததும் எழுந்த எண்ணங்களில் சில...
குண்டடிபட்டு விழுந்துகிடக்கும் ஒருவனை வேடிக்கை பார்த்துவிட்டு உதவ முயலாமல் செல்பவர்கள் மீது பட ஆரம்பத்தில் வரும் கோபம், பிற்பாடு அவன் ஒரு கொலையாளி எண்டி தெரியவரும்போது அர்த்தமற்றதாகிவிடுகிறது / வண்டியில் சாய்ந்திருக்கும் ஓநாயை தூக்கிப்பிடித்து ஶ்ரீயைப் பார்த்து "நீ டாக்டர்... நீ டாக்டர்..." என சொல்லும் ஒரு பிட்சைக்காரனின் பாத்திர சொருகல் மிகை. அஞ்சாதே-வில் ஒரு பூக்காரி. இது குறையில்லை எனினும் கைத்தட்டலுக்கான, இயக்குனரின் அதீத புத்திசாலித்தன திணிப்பு. அவ்வாறே நடந்தது. / வயிற்றில் ஆபரேஷன் செய்யப்பட்ட ஒருவரால் ஆறேநாளில் சாதாரணமாக இப்படி ஓடமுடியுமா? அந்த ஓநாய் வெறும் அடியாள்தான். தேர்ந்த பயிற்சி பெற்ற தீவிரவாதியோ, போராளியோ அல்ல. ஆபரேஷன் செய்யப்பட்ட பலவீனத்துடன் ரயிலில் இருந்து குதிப்பதும், சாதாரணமாக இருவரை தோளில் சுமந்து செல்வதும் சாத்தியமா என்று தெரியவில்லை / ஒரு மூன்று பேர் காப்பாற்றப்படுவதற்காக இத்தனை போலிஸ்காரர்கள் சகட்டுமேனிக்கு கொல்லப்படுவது நியாயமாகப் படவில்லை. இத்தனைக்கும் அந்த ஓநாயின் பக்கம் பெரிய நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. பட இறுதியில் சொல்லப்படுகிற நியாயமும் எடுபடவில்லை. போலிஸ் அவர்களின் கடமையைத்தான் செய்கிறார்கள். ஓநாய் 40 அ 14 கொலைகள் செய்த குற்றவாளி. ராபின்ஹூட்-ம் கிடையாது. பின் போலிஸ் என்ன செய்வார்கள்? யாரை மையப்படுத்தி கதை நகருகிறதோ அந்த நபர்மீது பார்வையாளனுக்கு கொஞ்சமாவது இரக்கம் வந்திருந்தால், அதாவது ஓநாயின் மீது sympathy ஏற்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றே தோன்றியது. அல்லது அந்த ஓநாய் யாரைக் காப்பாற்ற இவ்வளவு சிரத்தை எடுக்கிறதோ அவர்களைப் பற்றி இன்னமும் மேலும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். (அவர்கள் மூவருமே பார்வையற்றவர்கள் என்பது மட்டும்தான்) ஒவ்வொரு காட்சிக்கும் இவ்வளவு மெனக்கெட்ட இயக்குனர் அந்த ஃப்ளாஷ்பேக்-ஐ இன்னும் காட்சி மொழியில் வலுக்கூட்டியிருக்கலாம். இறுதியில், தன் தரப்பில் எந்த பொது நியாயமும் இல்லாத ஓநாயையும் அவன் செய்யும் செயல்களையும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
வியாபரத்தைப் பற்றி கவலைகொள்ளாமல் தன் பணத்தைப் போட்டு தைரியமாக தானே திறம்பட நடித்து சினிமாவின் மீதான தன் நேர்மையான ஆளுமையை வெளிக்காட்டியிருக்கும் மிஷ்கின் என்ற கலைஞனுக்கு பாராட்டுக்கள்.
தமிழில் வெளிவந்திருக்கும் ஒரு தரமான திரைப்படம். கண்டிப்பாகப் பார்க்கலாம்.
செப் 30, 2013.
No comments:
Post a Comment