மானத்தை காக்க கொலை 24 ஆண்டு சிறை வாழ்க்கையில் மனநலம் பாதித்த பெண் விடுதலை
மானத்தை காக்க கொலை செய்த வழக்கில் கணவனுடன் சிறை சென்று 24 ஆண்டுகளுக்கு பிறகு மனநல பாதிப்புடன் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.திருப்பூரை சேர்ந்தவர் சுப்பிரமணி(65). இவரது மனைவி விஜயா(60). சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தெருவில் நடனமாடி பிழைப்பை நடத்தி வந்த விஜயாவை, பணக்காரரான சுப்பிரமணி காதலித்து கரம் பிடித்தார். குடும்பத்தார் எதிர்ப்பை மீறி நடந்த திருமணத்தால் வீட்டை விட்டு விரட்டப்பட்ட சுப்பிரமணி தனது உறுதியான காதலுக்காக, காதல் மனைவியுடன் தானும் தெருவில் நடனமாடி பிழைப்பை ஓட்டி வந்தார்.பகலில் தெருவில் நடனமாடுவதும், இரவில் கிடைக்கும் இடத்தில் தங்குவதுமாக வாழ்க்கையை ஓட்டி வந்தனர். 24 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் இரவு இவர்கள் வீதியோரம் படுத்திருந்த போது, போதையில் வந்த வாலிபர் ஒருவர், தெருவோர பெண்தானே என்று கருதி, விஜயாவை பணத்தை காட்டி ஆசைக்கு இணங்க மிரட்டினான். மறுத்த விஜயா அவனோடு போராடினார்.
அதைக்கண்ட சுப்பிரமணியும் வாலிபருடன் சண்டை போட்டார். இதில் தவறி கீழே விழுந்த அந்த வாலிபர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். மானத்தை காக்க நடந்த போராட்டத்தில் அந்த சாவு, கொலை வழக்காக மாறியதால் கணவன்&மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர்கள், மேல்முறையீடு செய்யவும், தொடர்ந்து வழக்கை நடத்தி செல்ல வும் முடியாததால் சுப்பிரமணி வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், விஜயா, வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் தண்டனையை அனுபவித்தனர். இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த தகவல் சக கைதிகள் மூலம் வெளியில் கசிய, அவருக்காக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கோர்ட்டில் 2011ல் வழக்கு தொடர்ந்து அதன் மீதான தீர்ப்பில் விஜயாவை கோர்ட் விடுதலை செய்தது.நேற்று காலை சிறையிலிருந்து விடுதலையான விஜயா, தற்போது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், அரியூர் மகளிர் விடுதியில் தஞ்சமடைந்துள்ளார்.
No comments:
Post a Comment