17.3.14

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா பா.ம.க.?

பாமக கட்சியினர் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பாமக என்பது பொதுமக்களிடம் வாக்கு கேட்கும் ஒரு கட்சி. வன்னியர்களை மட்டும் வாக்களிக்கச்சொல்லி பிரச்சாரம் செய்தாலோ, அல்லது வன்னியர்கள் தவிர வேறு எந்த சாதியின் வாக்கும் எங்களுக்கு தேவையில்லை என்று பிரச்சாரம் செய்தாலோ பிறர் அக்கட்சியினை விமர்சனம் செய்வது நியாயமில்லைதான். ஆனால், அதுவொரு சாதிக்கட்சியல்ல, சனநாயகப்பூர்வமான பொதுக்கட்சிதான் என்று பொதுவில் அடையாளப்படுத்தப்படுவதால் என்னை மாதிரியான பிற சமூக ஆட்களின் விமர்சனத்தை எதிர்க்கும் முன்னர் சற்று யோசித்து ஆராயவேண்டும். 

மருத்துவர் ராமதாசு அவர்கள் உங்களுக்கு வேண்டுமானால் ஓராயிரம் நன்மைகள் செய்திருக்கலாம். அதனால் நீங்கள் அவரைக் கொண்டாடலாம். ஆனால் பிற சமூக மக்களுக்கு அவர் செய்தது என்ன? பிற சமூகத்தினர் எதற்காக அவரை ஆதரிக்க வேண்டும்? குறைந்தபட்சம் ஒரு காரணத்தையாவது கூற இயலாது. அப்படியே அவர் செய்துள்ளார் என நீங்கள் எடுத்துக்காட்டினாலும் அதைவிட பொதுசமூகம் பின்னடைவை நோக்கிச் செல்லும்படியான பலநிகழ்வுகள் அவரின் வருகைக்குப் பின்னால் நடந்தேறியிருக்கிறது என்பதை நடுநிலையோடு அலசவேண்டும்.

ராமதாசின் வருகைக்குப் பின்னர், ஒரே கிராமத்தில் பல நூறு வருடங்களாக அண்ணன் தம்பிகளாய் வாழ்ந்துகொண்டிருந்த பல சாதி மக்களுக்கு இடையே ஒரு பெரிய நீண்ட சுவர் எழுந்தது. கிழனிகாட்டிலும், களத்து மேட்டிலும் நடந்தேறும் துயரங்களையும் பொருளாதார நெருக்கடிகளையும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு வாழ்ந்த பல ஊர் மக்கள் கடந்த 25 ஆண்டுகளாக இருவேறு திசைகளாக நிற்கிறார்கள். நாளடைவில் அவர்கள் வேறு, நாம் வேறு என்று ஒட்டுறவில்லாத வெவ்வேறு வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டார்கள். இந்த வன்மத்தை வடமாவட்டங்களில் நடக்கும் ஒவ்வொரு உள்ளாட்சித் தேர்தலிலும் பார்க்கலாம். வட மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமமும் எளிதில் உணரமுடியாத இந்த உருவமில்லா சாதீய அழுத்த நெருக்கடிக்குள் சிக்கி மூழ்கிக்கொண்டிருக்கிறது. ஒரே கிராமத்து மக்களே நிரந்தர பகைவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். இன்ப துன்ப நிகழ்ச்சிகளையும், வீட்டு விசேஷங்களையும் தங்களுக்குள் பகிந்துகொண்ட ஒரே கிராமத்து மக்கள் இரண்டுபடுவதில் யாருக்கு என்ன லாபம்? இரண்டு சாதிகள் இருக்கும் எங்கள் கிராமத்திலும்கூட ஒரு சாதியினரின் திருமண நிகழ்ச்சிக்கும் சாவு சேதிக்கும் பிற சாதியினர் பங்கெடுக்காத கலாச்சாரம் வேரூன்றிப்போய்விட்டது. என் சின்ன வயதில் இப்படியில்லை. யார் எந்த சாதியென்றே அப்போதெல்லாம் தெரியாது. அதுவொரு பெரிய பிரச்னையாகவும் அப்போது இருக்கவில்லை. ஆனால் இப்போது அப்படியில்லை. 

உலகம் தோன்றிய வரலாறு, மனிதன் தோன்றிய வரலாறு, பல்வேறு இனக்குழுக்கள் தோன்றிய வரலாறு, மொழிகள் தோன்றிய வரலாறு, மதங்கள் தோன்றிய வரலாறு, முதலாளித்துவம் தோன்றிய வரலாறு, சாதி சமய சம்பிரதாய சடங்குகள் மற்றும் புராணங்கள் புனையப்பட்ட வரலாறு, இப்படி நம்மை மிரளவைக்கும் புதிர்களோடும் பல சமூக பிரச்னைகளோடும் இந்த புவி இயங்கிக் கொண்டிருக்கையில் தலையிலும் சட்டையிலும் ராமதாசின் / அன்புமணியின் உருவப் படங்களை அணிந்துகொண்டு "நான் சத்ரியன்" என பிற சாதி ஏழை எளிய மக்களிடம் வசனம் பேசுவதால் இதனால் சாதிக்கப்போவது என்ன? நாட்டில் ஆயிரமாயிரம் அநியாயங்கள் நடந்துகொண்டிருக்கிறதுதான், இதையெல்லாம் எதிர்த்து எத்தனை சத்ரியன்கள் போராடி சிறைக்குப்போய் மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறார்கள்? நாட்டில் அநியாயங்களே நடக்கவில்லையா? இல்லை இந்த கிராமத்து சத்ரியன்களுக்கு இது தெரியவில்லையா? எது வீரம்? தண்டகாரண்ய காடுகளில் ஆயுதமேந்திப் போராடுகிறவர்கள் எந்த வீரச்சாதி? 

தோழர் தமிழரசனை உதாரணமாகக் கொண்டு பலருக்கும் தலைமையேற்று கிளர்ந்தெழ வேண்டிய ஒரு இனக்குழு, சொந்த சமூக மக்களை கீறிவிட்டு பிரித்தாள்வது எவ்விதமான பொது அரசியல்? 

எல்லோருக்குமாக போராடும் எல்லா இயக்கங்களையும் எல்லோரும் ஆதரிக்கத்தான் செய்கிறார்கள். தமிழரல்லாதார் தலைமைக்கட்சிகள் எல்லாம் இங்கே நம் சொந்த மண்ணில் ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருக்கும்போது மண்ணின் மைந்தர்களுக்குள்ளே பகை மூட்டும் அரசியல் நியாயமானதா? 

பாமக வேட்பாளர்களில் பிற சாதியினர் ஏன் நிறுத்தப்படவில்லை? இது சாதிக்கட்சி இல்லைதானே? ஏன் பிற சாதியினரிடம் வாக்கு கேட்க வேண்டும்? அது தம் சாதிக்கு இழுக்கு இல்லையா? பிற சாதியினரின் வாக்குகள் எங்களுக்கு தேவையேயில்லை எனும்போது விமர்சனம் எழாது. "யார் எந்த சாதியாக இருந்தாலும் காலில் விழுந்து வாக்கு கேட்க வேண்டும்" என்று பிற சாதியினரின் வக்குகளையும் குறிவைக்கும்போது விமர்சனம் தவிர்க்க முடியாததுதான். இதிலெங்கே வன்மம் இருக்கிறது? 

இதுவொரு சனநாயக நாடு, பாமக ஒரு சனநாயக கட்சி எனும்போது, பாமக-வின் செயல்பாடுகள் எனது கிராம சகோதரர்களை என்னிடமிருந்து அந்நியப்படுத்தும்படியாய் பாதிப்பை ஏற்படுத்தும்போது, விமர்சனம் செய்யக்கூடாது என நீங்கள் எதிர்பார்க்க நாமென்ன தலிபான்களுக்கு மத்தியில் ஆப்கானிலா இருக்கிறோம்? இல்லை ரத்தக்காட்டேரி ராஜபக்சேவின் ஆளுகையில்தான் இருக்கிறோமா? யில்லை பாமக-வினர்தான் சிங்களர்களா?

ஓட்டு மட்டும் வேண்டும், விமர்சனம் வேண்டாம் என்பது எந்த ஊரு நியாயம்?

1 comment:

  1. /* விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா பா.ம.க.? */ - இதுக்கு மட்டும் இப்போதைக்கு பதில் சொல்றன்.

    ஆழ உழபடும் நிலம்தான் அதிக விளைச்சல் தரும். அதிகம் விமர்சிக்கப்படும் கட்சிதான் அரசியலில் நிலை பெறும். பா.ம.க மீதான் அனைவரது விமர்சனத்தையும் வரவேற்கிறேன். ஆனால், தனி மனித தாக்குதல்களையும், அவதூறுகளையும் அல்ல.

    ReplyDelete