"சோளகர் தொட்டி" படித்துமுடித்து ஒரு வாரமாய் வேறெதையும் படிக்கவில்லை. காட்டில் ராஜாக்களாய் வாழ்ந்த அந்த பழங்குடி மக்களின் வாழ்க்கை வெளியாட்களின் அத்துமீறலில் சின்னாபின்னமாகி சிதைந்த வலி நெஞ்சைப் பிசைகிறது. அரசாங்கம் யாருக்கானது என்பதற்கான சரியான பதிவு. உலகெங்கும் அதிகாரமும் மனிதாபிமானமும் ஒன்றுக்கொன்று விரோதமானது என்பது பொதுவிதிதானோ என்னவோ ? செய்தித்தாள்களில் காலை சுவாரஸ்யத்திற்காகப் படிக்கும் சம்பவங்களிலெல்லாம் ஒரு கோரமான வாழ்க்கை இருப்பதை யாரும் அவ்வளவாக கவனிப்பதில்லைதான். அவ்வாறே நம் சம காலத்தில் கன்னட மற்றும் தமிழக அதிரடிப்படைகளால் அப்பாவிகள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரத்தைப் படிக்கையில் நான் எந்த நாட்டில் வாழ்கிறேன்? இலங்கையிலா? என்ற பயம் வந்தது. தாயையும் மகளையும் நிர்வாணப்படுத்தி தலைகீழாக தொங்கவிட்டு அடிக்குமளவுக்கு என்ன குற்றம் செய்தார்கள் அந்த பழங்குடிப் பெண்கள்? உள்ளுக்குள் குற்ற உணர்ச்சி வராதவன்தான் வீரப்பனையோ அல்லது அரசாங்கத்தையோ உயர்த்திப் பிடிக்கிறான். எழுத்தாளருக்கு கைபேசியினூடாக பெரும் நன்றி சொன்னேன். இவ்வளவு நாளாய் ஏன் படிக்காமல் விட்டேன் என்பதற்கு வருத்தமும், குறைந்தபட்சம் என்னைச்சுற்றி நடக்கும் அவலங்களை கண்டும் காணாமலும் வலிய தவிர்த்து எதிர்க்குரலற்று ஓடிக்கொண்டிருக்கும் என் மீது குற்ற உணர்ச்சியும் கொள்கிறேன். ச.பாலமுருகன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் ஈடில்லை. நேர்மையான மனிதாபிமான பதிவு. பழங்குடிகளுடன் வாழ்ந்த உணர்வு.
கண்டிப்பாக எல்லோரும் அவசியம் படியுங்கள்...
No comments:
Post a Comment