18.1.14

ஒரு அடிதடி பஞ்சாயத்தும் தீர்ப்பும்...


இவனுங்க ரெண்டுபேரும் என் அண்ணனோட பையன்கள். முந்தா நாளு என் அண்ணனுடன் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது பின்னனியில் ஒரு அழுகுரல் கேட்டுக்கொண்டிருந்தது. யார் அழுவது என கேட்டதற்கு 'சின்னவன் பாலா' என்றார். அவனிடம் கைபேசியைக் கொடுக்கச்சொல்லி கேட்டதற்கு "அண்ணன் என்னை அடிச்சிட்டான்..." என்று சொல்லிக்கொண்டே அழுதான். "சரி, அழாதே. இப்ப அவனை கேட்குறேன்.." என சொல்லிவிட்டு கைபேசியை பெரியவனிடம் கொடுக்கச்சொன்னேன். "ஏன்டா தம்பியை அடிச்சே?.." என்று கேட்க, "அவன்தான் என்னை மொதல்ல அடிச்சான்... என்னை எதுக்கு அடிச்சான்? அதான் திருப்பி அடிச்சேன்..." என்றான். மீண்டும் கைபேசியை சின்னவனிடம் கொடுக்கச்சொன்னேன். சின்னவன் சொன்னான், "அவன்தான் என்னை மொதல்ல அடிச்சான்..." என்று அழுதான். "சரி அழாதேடா ஊருக்கு வரும்போது அவனை ஒதைக்கிறேன்..." என்று சொல்லிவிட்டு மீண்டும் கைபேசியை பெரியவனிடம் கொடுக்கச்சொன்னேன். "சித்தப்பா அவன்தான் என்னை மொதல்ல அடிச்சான். நீ வேண்ணா அப்பாவை கேட்டுப்பாரு..." என்று ஆரம்பித்தான். 

பொதுவா இதுல சின்னவன்தான் குரங்குமாதிரி எதாவது சதா பண்ணிக்கிட்டே இருப்பான். எல்லாரையும் அடிச்சிட்டு அடிச்சிட்டு ஓடி ஒளிஞ்சிக்குவான். 

பெரியவன் கொஞ்சம் சாது மாதிரி இருப்பான், ஆனா இதுவரைக்கும் ஒரு நாலைந்து கைபேசியை கன்னாபின்னான்னு நோண்டி கைலாசம் போகவெச்சிட்டான். எவ்வளவுக்குதான் ரீசார்ஜ் பண்ணாலும் ஒரே நாள்ல ஏதேதோ விளையாடி அவ்வளவையும் தீர்த்து முடிச்சிட்டு சம்பந்தமில்லாதமாதிரியே நடிப்பான். 

நேர்ல ரெண்டு பேருமே எனக்கு பயப்படுறமாதிரி பவ்யமா நடிப்பானுங்க. ஆனா கைபேசியில கோவப்பட்டா பட்டுன்னு அணைச்சிட்டு ஓடிடுவானுங்க. மறுபடியும் தொடர்புகொண்டு பேசுனா, 'சிக்னல் ப்ராப்ளம்'னு சமாளிப்பானுங்க. பொதுவாவே பொடிசுங்களை ரொம்ப மெரட்டுனா பயம் போயிடும்னு கண்டுக்காத மாதிரி விட்டுட்டுதான் மரியாதையை காப்பாத்திக்க வேண்டியிருக்கிறது நமக்கு. 

இப்ப இந்த பஞ்சாயத்து தீர்ப்புக்கு வருவோம். மொதல்ல அடிச்சது யாருன்னு இவனுங்க மாத்தி மாத்தி சொன்னதைக் கேட்டு எதையும் சொல்ல முடியாம 'அப்புறம் பேசறேன்'னு சொல்லி வெச்சிட்டேன். இப்படித்தான் சின்ன வயசுல நானும், எங்க அக்காவும், என் தம்பியும் மாத்தி மாத்தி சண்டை போட்டுக்குவோம். எங்க அக்காவும் தம்பியும் ஒரு கோஷ்டி. நான் தனி. அண்ணன் 17 வயசுலயே ராணுவத்துக்கு போயிட்டதால அவரு இந்த கணக்குல வரமாட்டாரு. இருந்தாலும் விடுமுறைக்கு வரும்போதெல்லாம் அவருகூடயும் பயங்கர அடிதடி நடத்தியிருக்கேன். ஆனா எங்க எல்லாருக்கும் எங்கப்பாவைக் கண்டா நடுங்கும். அம்மா பாவம். எனக்கும் என் தம்பிக்கும் அடிக்கடி நடக்கிற சண்டைல, எங்க ரெண்டுபேரையும் நிக்க வெச்சி "யார்றா மொதல்ல அடிச்சது?" என்று எங்கப்பா இப்படித்தான் மாத்தி மாத்தி கேப்பாரு. நாங்களும் இப்படித்தான் மாத்தி மாத்தி பதில் சொல்லுவோம். கடைசியா ரெண்டுபேரையும் மெரட்டி என்னை மட்டும் ரெண்டு தட்டு தட்டி விட்டுருவாரு. 

எங்க சித்தப்பா பையனுங்களும் இப்படித்தான் பண்ணுவானுங்க. 

"மொதல்ல அடிச்சது யாரு?" - உண்மையான விடையேயில்லாத இந்த கேள்விக்கெல்லாம் உண்மையான விடையைத்தேடிக் கண்டுபிடித்து யாரால்தான் அப்படி என்னதான் நியாயமான பஞ்சாயத்து செய்துவிடமுடியும்?

( இந்த மாதிரி பெரிய பெரிய பஞ்சாயத்துக்கெல்லாம் போகாதீங்க. நம்ம தீர்ப்பை காலத்துக்கும் மறக்க மாட்டானுங்க... அப்புறம் நம்ம வயசான காலத்துல ரீவேஞ்ச் எடுக்க 100% வாய்ப்பிருக்கு )

No comments:

Post a Comment