18.1.14

ஒரு ஆச்சர்ய செய்தி...

வெளிநாடு செல்லவேண்டி கடவுச்சீட்டுக்காக சமீபத்தில்தான் விண்ணப்பித்தேன். எனது +2 மதிப்பெண் சான்றிதழில் எனது பெயர் M. VINAYAGAMOORTHY என்பதற்கு பதிலாக M. VINAYAGAMURTHY என்று பதிவாகியிருந்ததை இதுவரையில் நான் கவனிக்கவில்லை. ஆனால் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் சரியாகவே இருந்தது. பின் எல்லா அடையாள சான்றுகளிலும் சரியாகவே இருந்தும் +2 மதிப்பெண் சான்றிதழின் பிழையை திருத்தம் செய்து வந்தாலொழிய கடவுச்சீட்டு வழங்க இயலாது என தலைமை கடவுச்சீட்டு அலுவலகத்திலும் சொல்லிவிட்டார்கள்.

பின்னர் கடுமையான மன உளைச்சலுடன் "மேல்நிலைக் கல்வி அரசுத்தேர்வாணைய அலுவலகம்" (DPI எழும்பூர்) சென்று இதைப் பற்றி விசாரித்ததற்கு யாரும் பொறுப்பாக பதில் சொல்லவேயில்லை. இரண்டு மூல மதிப்பெண் சான்றிதழ்களோடு ஒரு மனு எழுதிக் கொடுத்துவிட்டு செல்லுங்கள். ஆனால் பெயர் திருத்தம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்று கிடைக்க மூன்று மாதமும் ஆகலாம் ஆறு மாதமும் ஆகலாம் என்றார்கள். அவசரம் என்று கேட்டும், "உன் அவசரத்துக்கெல்லாம் நாங்க வேலை பார்க்க முடியாது..." என்று சொல்லிவிட்டார்கள். மேலும் ஒருவர் 2000 ரூபாய் கொடுத்தால் 20 நாளில் கிடைக்க முயற்சி செய்கிறேன் என்றும் ஆனால் அதற்காக அடிக்கடி வந்து கேட்கக்கூடாது என்றும் முன்தொகை கொடுத்துவிட்டு செல்லுமாறும் சொன்னார். எதுவும் பதில் சொல்லாமல் வேண்டுகோள் மட்டும் வைத்துவிட்டு கொடுத்த மனுவை ஒரு ஒளிநகல் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.

தமிழ்நாடு முழுதும் இதுவரையில் படித்த எல்லா மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களும் வைக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்ன அந்த பழைய கட்டிடத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். இப்படியான எல்லா புகார்களையும் சேர்த்து எடுத்துக்கொண்டு மாதத்திற்கு ஒருமுறை மட்டும்தான் தேவையானவைகளை தேடி எடுத்து ஆராய்ந்து புதிதாக அச்சிட்டு தபாலில் அனுப்புவார்களாம். எடுக்கும்போதே பழைய சான்றுகள் எல்லாம் அப்பளம் போல் நொறுங்கிவிடுமாம். தெரிந்தவர்கள் மூலமாக விரைவாக கிடைக்க ஏதேனும் முயற்சிக்கலாம் என நினைத்து பின் அப்படி எதுவும் முயற்சிக்காமல் ஒரு வாரம் அமைதியாக இருந்துவிட்டேன்.

பின்னர் ஒரு யோசனை தோன்ற அவ்வாறே செய்தேன். என் கடந்த காலத்தில் நான் ஏற்கெனவே இப்படி பலமுறை பல பொதுப்பிரச்சனைகளுக்கு எதிராக செயல்பட்டிருக்கிறேன். இப்படியிருக்க,

இன்று காலை ஊரிலிருந்து தொலைபேசியில் அழைத்த என் அண்ணன் சொன்னார், பெயர் திருத்தம் செய்யப்பட்ட +2 மதிப்பெண் சான்று அஞ்சலில் வீட்டுக்கு வந்திருப்பதாக. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. 2000 ரூபாயும் கொடுக்கவில்லை, தெரிந்தவர்கள் மூலமாகவும் முயற்சிக்கவில்லை.

நான் செய்த செயல் என்னவென்றால் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக ஒரு விண்ணப்பம் அனுப்பியதுதான். அனுப்பிய ஐந்து நாட்களுக்குள் எனக்கு வேலையை முடித்து அனுப்பிவிட்டார்கள். அந்த விண்ணப்பத்தில் நான் கேட்ட கேள்விகள் இதுதான்.

பெறுநர் :

உயர்திரு. பொதுத்தகவல் அலுவலர் அவர்கள்,
கூடுதல் செயலாளர் அலுவலகம்,
மேல்நிலைக்கல்வி அரசுத்தேர்வுத்துறை,
சென்னை – 600006.

ஐயா,
வணக்கம். இந்திய பொதுத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி கீழ்க்காணும் தகவல்களை அளிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

1. எனது மேல்நிலை இரண்டாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழில் தவறாக அச்சாகியுள்ள எனது பெயரின் எழுத்துப் பிழையை திருத்தம் செய்யக்கோரி 20-12-2013 அன்று தங்கள் அலுவலகத்தில் நான் நேரில் ஒரு மனு அளித்திருந்தேன். அம்மனுவுடன் எனது பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு Original மதிப்பெண் சான்றிதழ்களையும் இணைத்துள்ளேன். (அம்மனுவின் ஒளிப்பட நகலை இம்மனுவுடன் இணைத்துள்ளேன்). நான் அளித்த மனு தங்களின் பார்வைக்கு எந்த தேதியில் கிடைக்கப்பெற்றது?

2. இவ்வாறான மனுக்கள் மீது எவ்வாறான நடவடிக்கைகள் எத்தனை நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற அரசாணையின் விவரத்தை வழங்கவும். அதற்கான அரசாணையின் ஒளிப்பட நகலையும் வழங்கவும்.

3. எனது மனுவின் மீது தாங்கள் இதுவரையில் எடுத்த நடவடிக்கைகள் பற்றிய விவரம் வழங்கவும்.

4. பெயர் திருத்தம் செய்யப்பட்ட பனிரெண்டாம் வகுப்பு மாற்று மதிப்பெண் சான்றிதழ் எனக்கு எப்போது கிடைக்கும்?

5. எனது பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் தவறாக பெயர் அச்சாகியிருப்பதற்கு யார் காரணம்? இத்தவறை செய்த அரசு அலுவலர்கள் யார்? அவரைப் பற்றிய தற்போதைய பதவி, அலுவலக விவரம் ஆகியவற்றை வழங்கவும்.

6. இதனால் எனக்கு ஏற்படும் நட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அலுவலரிடமிருந்து நட்ட ஈடு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதா?

அ) ஆம் எனில் அதன் முழு விவரத்தையும் அதற்கான அரசாணையின் ஒளிநகலையும் வழங்கவும்.

ஆ) இல்லை எனில் இது தொடர்பாக அடுத்ததாக நான் முறையிடவேண்டிய அரசு அலுவலகம் / அரசு அலுவலர் பற்றிய முழு விவரங்களையும் வழிமுறைகளையும் தெரிவிக்கவும்.

7. பெயர் திருத்தம் செய்யப்பட்ட எனது மதிப்பெண் சான்றிதழ் உரிய காலத்திற்குள் எனக்கு கிடைக்கத் தவறினால் இது தொடர்பாக அடுத்ததாக நான் புகார் தெரிவிக்கவேண்டிய அரசு அலுவலகம் / அரசு அலுவலர் பற்றிய முழு விவரங்களையும் வழிமுறைகளையும் தெரிவிக்கவும்.

8. பெயர் திருத்தம் செய்யப்பட்ட எனது மதிப்பெண் சான்றிதழ் உரிய காலத்திற்குள் எனக்கு கிடைக்கத் தவறினால் இதனால் எனக்கு ஏற்படும் நட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அலுவலரிடமிருந்து நட்ட ஈடு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதா?

அ) ஆம் எனில் அதன் முழு விவரத்தையும் அதற்கான அரசாணையின் ஒளிநகலையும் வழங்கவும்.

ஆ) இல்லை எனில் இது தொடர்பாக அடுத்ததாக நான் முறையிடவேண்டிய அரசு அலுவலகம் / அரசு அலுவலர் பற்றிய முழு விவரங்களையும் வழிமுறைகளையும் தெரிவிக்கவும்.

எனது இந்த விண்ணப்பத்திற்கான கட்டணமாக இந்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன்படி இம்மனுவில் ரூபாய் 10/-க்கான நீதிமன்ற கட்டணவில்லை ஒட்டப்பட்டுள்ளது.

(Please handle this application under sec.6(3) of the RTI act., if any informations are not available in your office)

பின் இணைப்பு :
1. நான் 20-12-2013 தேதியில் தங்களுக்கு அளித்த மனுவின் ஒளிநகல்.
2. எனது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் ஒளிநகல்.
3. எனது பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் ஒளிநகல்.
4. எனது பனிரெண்டாம் வகுப்பு மாற்றுச் சான்றிதழின் ஒளிநகல்.

நாள் : 28-12-2013. 
இடம் : சென்னை

இப்படிக்கு ( M.Vinayagamoorthy )
(Jan 03-201)

No comments:

Post a Comment