17.5.14

மோடி, லேடி, கேடி, பேடி எவருக்கும் என் வாக்கு கிடையாது.. - மே 17 திருமுருகன் காந்தி


பாஜக, காங்கிரஸ்,திமுக எனும் பகைவரை வீழ்த்த அதிமுக என்றுமே ஆயுதமாக எனக்கு தோன்றியதில்லை. 

கடந்த தேர்தலில் அதிமுக நமது எதிர்ப்பினை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டினையே அது தொடர்ச்சியாக எடுத்தது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதே கிடையாது. மாறாக தமிழின ஆதரவாளர்கள் மீது தொடர்ச்சியாக அடக்குமுறைகள் நடத்தப்படவே செய்தன. கடந்த வருடம் மே மாத இனப்படுகொலை நினைவேந்தல் தமிழகத்தில் எங்குமே நடத்த அனுமதிக்கப்படவில்லை.. 

இலங்கை மீது பொருளாதாரத்தடை , சிறப்பு சித்திரவதை முகாம் அகற்றல் என எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை... ஆனால் பிரபாகரன் படம் வைக்கப்படக் கூடாது என்பது முதல் முல்லைப்பெரியாற்று போராட்டத்தில் தாக்குதல், இடிந்தகரை மக்கள் மீதான தாக்குதல், பரமகுடி கொலைகள், கெயில் குழாய் எதிர்ப்பு மக்கள் மீது தாக்குதல் 

மற்றும் மீத்தேன் எதிர்ப்பில் “மக்கள் அச்சம்” என்றே பேசுகிறார், கூடன்குளம் போன்று “ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது, அதில் எம்.எஸ் சாமிநாதன் உள்ளிட்டவர்கள் இருக்கிறார்கள். நியூட்ரினோ திட்டம் குறித்தான நிலைப்பாடு எதிராகவே இருக்கிறது. இவ்வாறு தமிழின வாழ்வுரிமைக்கு எதிரான நிலைப்பாடுடனேயே அதிமுக (திமுகவும்) இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்தே பல்வேறு விடயங்களில் தமிழினக் கோரிக்கைக்கு செவி சாய்ப்பது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்துகிறார். 

கரசேவையில் இருந்து, மதமாற்ற தடுப்புச் சட்டம், இடஒதுக்கீடு எதிர்ப்பு என பெரும்பாலனவற்றில் பாஜகவிற்கு இணையாக இருக்கிறது அதிமுகவின் நிலைப்பாடு. இந்துத்துவத்திற்கும் அதிமுகவிற்கும் வித்தியாசம் இருப்பதாக அவர்கள் என்றுமே காட்டியது கிடையாது. 

வேறொரு கோணத்தில் பார்க்கும் பொழுது, காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கும், அதிமுகவிற்கும் எதிரியாக இருக்கிறது. மைய அரசிற்கும், மாநில அரசிற்கும் முரண் இருக்கும் பொழுது, மாநில அரசானது, ’மக்கள் சார்ந்து’ நிற்பதாக கட்டிக்கொள்கிறது. ஆனால் இக்கட்சிகள் மாநிலம்-மத்திய அரசில் அதிகாரம் பெறும் பொழுது ’இந்திய தேசிய’ நலனே மாநில மக்கள் மீது திணிக்கப்படுகிறது. ஏனெனில் மத்திய அரசின் கொள்கையே மாநில அரசின் கொள்கையாகவும் மாறுகிறது. தமிழர் விரோத மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் ஊடாக நடைமுறைப்படுத்துகிறது. 

இதையே 2009இல் திமுக அரசின் வழியாக பார்க்க முடியும். 2009இல் இருந்த மத்திய அரசு என்பது காங்கிரஸ் அரசு என்பது மட்டுமல்ல அது ’திமுக’வின் அரசும் கூட. அதனாலேயே காங்கிரஸ் அரசின் இனப்படுகொலை திட்டத்தினை நடைமுறைப்படுத்த திமுகவின் தமிழக அரசு தமிழர்களை ஒடுக்கியது. திமுகவின் துரோகத்தின் புள்ளிகள் இங்கே இணைகின்றன. 

மத்திய-மாநில ஆட்சிகளுக்கு இடையேயான முரண்கள் முடிவிற்கு வரும் பொழுது ஒடுக்கப்படுவது தமிழக மக்களே.. திமுகவிற்கும், அதிமுகவிற்கும் பெரிதும் வித்தியாசம் கிடையாது. பெரும் வணிக கட்சிகளாக மாறி நிற்கும் இவைகள் தனது அடிப்படை மக்கள் விரோத்தன்மையிலிருந்து மாறிவிடாது. 

தேர்தலில் வாக்களிப்பது ’முழுமையான மாற்றத்தினை’ கொண்டுவரும் என்கிற எண்ணத்தினை விட்டு வெளியே வரவேண்டும். கொள்கை திட்டங்கள் ஏதும் மாறப்போவதில்லை. இது ஒருவகையான பழிவாங்கல் என்பதைத் தாண்டி நாம் பெரிதும் சாதித்துக்கொள்வது ஏதும் இல்லை.. ஏனெனில் திமுக. அதிமுகவிற்கு நன்கு தெரியும், தம்மைத் தவிர வேறெருவரும் மாற்றுகிடையாது என்று. இந்தச் சக்கரம் உடைக்கப்படவேண்டும். 

தேர்தல் முடிந்தபிறகு நிபுணர் குழு அறிக்கையைக் கொண்டு மீத்தேன் திட்டம் அமுலுக்கு வரும் பட்சத்தில் முல்லைபெரியாறு-கூடன்குளத்தில் நிகழ்ந்ததைப் போன்ற ஒடுக்குமுறை தஞ்சையில் நிகழும் பட்சத்தில் பெரும்பான்மையான பலத்தினைக் கொண்டிருக்கும் அதிமுக நம்மை ஜனநாயகமாக கையாளும் எனக் கருதமுடியாது. 

நீங்கள் வாக்களிக்கவேண்டுமென்று முடிவெடுத்தால், பெரியக் கட்சிகளைத் தாண்டி வேறு ஏதேனும் மாற்று வேட்பாளர், எளியவர், மக்கள் போராளி உங்கள் தொகுதியில் இருந்தால் வாக்களியுங்கள். அப்படியாரும் இல்லையெனில், நீங்கள் வாக்களிக்காமல் போவதால் ஏதும் குடிமுழுகிப் போய்விடாது.. 

’மாற்றம்’ வேண்டுமெனில் போராட்டக்களத்திற்கு வாருங்கள். தேர்தல் தலைவலிக்கு மட்டுமே மருந்து, மூளைக்காய்ச்சலுக்கு அல்ல...
ஏனெனில் இந்தியாவை நடத்துவது கட்சிகள் அல்ல, 6000க்கும் அதிகமான உயர்சாதி அதிகாரிகள். இவர்களின் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்களே பெரிய கட்சிகளாக மாற அனுமதிக்கப்படுகிறது. அவர்களே வெற்றி பெறவும் முடிகிறது. இயன்றவரை பெரிய கட்சிகள் எவரும் பெரும்பான்மை இல்லாத நிலையை ஏற்படுத்துங்கள்

இவர்கள் அனைவரும் நாளை அவசியப்பட்டால் பாஜக, அல்லது காங்கிரஸுடன் கூட்டணி வைக்கவே செய்வார்கள்... அதற்கான வாய்ப்புடனேயே அதிமுக இருக்கிறது.. 

வலிமையான திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக சாமானிய மக்களை ஒடுக்கும். மக்களுக்கான அவசர காலத்தில் நேரில் சந்திக்க இயலாத தலைவர்கள் வெற்றி பெற்றால் என்ன? தோற்றால் தான் என்ன?

இப்பெரிய கட்சிகள் பலமற்று இருக்கும் பொழுதுதான் நாம் வலிமை பெருகிறோம். 

தோல்வி வைத்தியம் ’டி.ஆர்.பாலு’வில் இருந்து துவங்கட்டும் ...,

No comments:

Post a Comment